நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/நினைத்ததும் நடந்ததும்

விக்கிமூலம் இலிருந்து

134. நினைத்ததும் நடந்ததும்

பால்காரன் வீசி எறிந்து விட்டுச் சென்ற கடிதத்தை எடுத்துப் பிரித்தான் ரகுநாதன். கடிதம், அவன் எதிர்பார்த்தது போலவே, அவன் மாமாவிடமிருந்து வந்திருந்தது. பொழுது விடிந்தால், அவருக்கு வேறு வேலையே கிடையாது போலிருக்கிறது. கலியாணம்! கலியாணம்!... கடிதம் தவறாமல் அதே பல்லவிதான்.

கடிதத்தைப் படித்ததும், அசட்டையாக அதை மேஜை மேல் வீசியெறிந்து விட்டு, ஈஸிசேரில் சாய்ந்தான் ரகுநாதன். மேஜையில், கடிதம் விரித்தவாறே கிடந்தது.

கீழத்தேரூர்

அன்புள்ள ரகுநாதன்!

நீ இங்கிருந்து போனபின், இதுவரை கடிதமே எழுதவில்லை. இப்படி நீ நடந்து கொள்ளும்படியாக நான் என்ன தவறு செய்து விட்டேன்? நாள் தவறாமல் உன் கடிதம் வரும் வருமென்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த நிலையில், இன்று இக்கடிதத்தை எழுதுகிறேன். நீ வந்திருந்த போது உன்னிடம் நேரில் கூறியவாறு வருகின்ற சித்திரையில் கலியாணத்தை முடித்து விடவேண்டும். நீயுந்தான் எத்தனை நாள் பம்பாயில், இப்படி ஓரியாகக் கடத்த முடியும். இது விஷயமாக நீ ஏன் தயக்கப் படுகிறாய் என்பதுதான் எனக்குப் புரிய முடியாத ஒன்றாக இருக்கிறது. காரணம் கேட்டதற்கு ‘ஏதோ மேலே படிக்கப் போகிறேன் என்றும், பிரைவேட்டாக எம்.ஏ. எழுதப் போகிறேன்’ என்றும் சொன்னாய்! மாலதி உன்னுடன், உன் பக்கத்தில் இருப்பது உன் படிப்புக்குத் தடையாக இருக்குமென்ற எண்ணமா? அப்படியானால், அது வீண் பிரமை என்பதை உனக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். உங்கள் மாமி வீட்டிற்கு வந்த இரண்டு வருடங்கள் கழித்துச் சட்டக் கல்லூரியில் பி.எல். பரீட்சையில் முதல் வகுப்பில் தேறியிருக்கிறேன் நான். கடிதம் வளர்ந்து விட்டது. விவரமாகப் பதில் எழுது. கல்யாண விஷயமாக உன் பதில் அனுகூலமாக இருக்குமென்று நினைக்கிறேன்,

உன் மாமா,
வைத்தியநாதன்

இளமையில் தாய், தந்தையரை இழந்த ரகுநாதன், மாமாவிடமே வளர்ந்தவன். திண்ணைப் பள்ளிக்கூடத்திலிருந்து சென்னையில் கல்லூரிப் படிப்பு வரை அவருடைய ஆதரவினால் படித்தவன் அவன். தம் ஒரே மகளாகிய மாலதியையும், அவனையும் இரண்டு கண்மணிகளாகப் போற்றிப் பேணி வந்தார் வக்கீல் வைத்தியநாதன். தம்முடைய வக்கீல் வாழ்க்கையில் பேரும், புகழும், செல்வமும் மிகுதியாகப் பெற்றிருந்தும், சில ஆண்டுகளிலேயே அந்த வாழ்க்கை அவருக்கு வெறுத்துப் போய் விட்டது. கீழத்தேரூரில் காவிரிப் பாசனத்தில் ஒரு சிறு மிராசுதாரராக வாழ்வதற்கு வேண்டிய நிலபுலன்கள் அவருக்கு இருந்தன. வக்இல் தொழிலில் வெறுப்புத் தட்டியதும் திருச்சியிலிருந்து கீழத்தேரூரில் தமது பழைய வீட்டைச் செப்பனிட்டுவிட்டுக் குடியேறினார். திருச்சியில் ஐந்து ஆண்டுகள் நடத்திய வக்கீல் தொழிலில் அவருக்கு ஒரு நொடிகூட அமைதி கிடைக்கவில்லை. காவிரித் கரையில் பசுமை சூழ விளங்கும் கீழத்தேரூர் வாழ்வை அவர் மனம் நாடியதுதான் அவர் அங்கே செல்லக் காரணம். மனைவி, மகள், ரகு இவர்கள் சகிதம் கீழத்தேரூரில் குடியேறிய வைத்தியநாதன் நிலங்களை மேற்பார்ப்பதிலும் தமக்குரிய இரண்டொரு தென்னந்தோப்புக்களைக் கம்பி வேலியிட்டுப் பாதுகாப்பதிலுமாகப் பொழுதைக் கழித்து வந்தார். விரைவில் அவர் வேண்டுகோளின்படி ரகுநாதன் சென்னைக்குக் கல்லூரிப்படிப்புக்குச் சென்றான்.திருச்சியிலுள்ளபோதே அவன் எஸ்.எஸ்.எல்.வியை முடித்திருந்தான்.மாலதியை நான்காம் பாரத்தோடு நிறுத்திவிட்டார் வைத்தியநாதன் நாட்கள் வேகமாக ஒடி வாரங்களாய், மாதங்களாய், வருடங்களாய்க் கழிந்து கொண்டே இருந்தன. ரகுநாதன் பி.ஏ. படித்துக்கொண்டிருந்தான். கீழத்தேரூரில் வைத்தியநாதன் இந்த மூன்று வருடங்களில் எவ்வளவோ வேலைகளைச் செய்திருந்தார். திருச்சியில் வக்கீலாக இருந்தபோது பல பெரிய மனிதர்கள், அரசியல் தலைவர்கள் இவர்களோடு நல்ல அறிமுகம் பெற்றிருந்த அவர் இந்த வேலைகளைச் செய்ததில் வியப்பில்லை. ஊரார் தனி மதிப்புடன் அவரைப் போற்றி வந்தனர். தபாலாபீஸ், செகண்டரி பள்ளிக்கூடம்,மின்சார வசதி முதலியவைகளைக் கீழத்தேரூர் அவரால் பெற்றது. பொதுத் தொண்டுகளுடன் இவ்வாறு அமைதியாகக் கழிந்து வந்தது அவருடைய வாழ்வு.

பி.ஏ. பாஸ் செய்ததும் ஊரோடு நிலபுலன்களை மேற்பார்த்துக்கொண்டு இருக்கும்படியாகச் சொன்னார் வைத்தியநாதன். ரகுநாதன் எங்கேயாவது வேலை பார்க்க விரும்பினான். வைத்தியநாதன் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. கடைசியில் பம்பாயில் தென்னிந்தியர் ஹைஸ்கூல் ஒன்றிற்கு ‘அஸிஸ்டெண்டாக’ வந்து சேர்ந்தான். மாலதிக்கும் அவனுக்கும் கலியாணத்தை முடித்து ஊரோடு கட்டிப்போட்டு விடலாம் என்று எண்ணிய வைத்தியநாதனுக்குப் பெரிய ஏமாற்றமாகப் போயிற்று. அதற்கு மேல் மறுத்துச் சொல்ல அவருக்குத் தெரியவில்லை. சரி போகட்டும் அவன் போக்கில் விட்டுப் பிடிப்போம் என்று இருந்துவிட்டார்.

மாமாவின் வேண்டுகோளைத் தவிர்க்கமுடியாமல் விடுமுறைகளுக்கு வந்து போய்க்கொண்டிருந்தான் ரகுநாதன். இப்போது மாலதிக்கு வயது பதினைந்து. கொடிபோல வளர்ந்திருந்தாள். காலம் தான் வளர்ந்தது போலவே அவள் உடலும் அழகின் பொலிவு பெற்று வளருமாறு செய்திருந்தது. குதிகால்வரை தொங்கும் சாட்டைப்பின்னலுடன், அதன் நுனியில் குஞ்சலங்கள் ஆட, அவள் நடந்து செல்லும் காட்சி ஒரு பெரிய காவியம், காதில் புதிதாக அழகான முத்துச் சிமிக்கிகளை வாங்கி அணியச் செய்திருந்தார் தந்தை நீண்ட நாசியும் அதன் கீழ் ரோஜா இதழ்களின் விரிவும்,மாம்பழக்கன்னங்களுமாக-கன்னிப்பருவத்து அழகு பூர்ணமுற்று விளங்கின. கண்களில் ஏதோ ஒரு புதிய குறுகுறுப்பு. அந்தக் குறு குறுப்பை வெளியேற விட்டுவிடாது காப்பது போன்ற, கட்டும் வரிசையும் குலையாத இமையும் புருவமும் தனிச் சோபை பெற்றிருந்தன. வாய்க்கு வாய் ‘ஏண்டா ரகு கலியாணத்தை வருகிற வைகாசியில் வைத்துக் கொள்வோமாடா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார் வைத்தியநாதன். அப்படிக் கேட்ட ஒரு சந்தர்ப்பத்திலேதான் பிரைவேட்டாக எம்.ஏ. எழுதப்போவதாகவும் அதற்குப் படிக்கவேண்டுமென்றும் கூறிவைத்தான் ரகுநாதன். அதற்கு மேல் வைத்தியநாதனும்அவனைக் கிண்டிக் கிளறி வற்புறுத்தவில்லை. "கிணற்று நீரை ஆற்று வெள்ளமா அடித்துக்கொண்டு போகப்போகிறது. தானாகச் சம்மதிக்கிறான்!” என்று இருந்துவிட்டார். ஆனால், ஒன்றுமட்டும் அவருக்குப் புரியாமலே இருந்தது. தங்கப்பதுமைபோல வளைய வளைய வரும் மாலதியை ஏன் பாராமுகமாக இருக்கிறான் ரகு? இந்தப் புதிரை விடுவிக்க அவரால் முடியவில்லை. இதற்குள் ஒருவழியாக விடுமுறை முடிந்து ரகுநாதன் பம்பாய் கிளம்பினான்.மாமாவும் மாலதியும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள். நூறு தரமாவது உடம்பைக் கவனித்துக் கொள்ளும்படியாகச் சொல்லியிருப்பார் மாமா. கண்ணிர்த்துளிகள் உருண்டு திரண்டு கொண்டிருந்த மாலதியின் கூரிய விழிகளின் கோணக்கடை நோக்கு ரகுநாதன் நெஞ்சை ஊடுருவ முயன்று கொண்டிருந்தது. வண்டி ஒரு முறை கூவிவிட்டுக் கிளம்பியது! ரகுநாதனின் கண்களும் அவள் பார்வையைச் சந்தித்தன. ஆனால், அந்தச் சந்திப்பில் அவள் மேல் அவனுக்கு அனுதாபம் ஏற்பட்டதேயன்றி, ஆர்வமில்லை, அவாவில்லை. நூற்றி ஒன்றாவது தடவையாக மாமா உடம்பைக் கவனித்துக் கொள்ளும்படியும் அடிக்கடி கடிதம் போடும்படியும் சொல்லி விடை கொடுத்தார். வண்டித்தொடர் வேகமாக மறைந்துகொண்டே வந்தது, வாழ்வின் நியதித் தொடர்போல.

தாதரில் இறங்கிய ரகுநாதனை ஒரு ஜோடி மலர்விழிகள் தேடிக் கண்டு கொண்டன. வண்டியிலிருந்து இறங்கிய அவனைக் கைலாகு கொடுத்து இறக்கினாள் அந்த யுவதி.“சரோ! நீ ஸ்டேஷனுக்கு வருவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றான் ரகுநாதன். “அப்படியானால் இன்று வருகிறேன் என்று ஏன் கடிதம் போட்டீர்களாம்?” குறும்புப் புன்னகை ஒன்றை இதழ்க் கடையிலே நெளிய விட்டுக் கொண்டே கேட்டாள்.அந்த யுவதி “சூரியன் மலர்ந்துவிடு என்று சொல்லி அனுப்பியா தாமரை மலர்கிறது” என்று பதிலளித்தவாறே அவள் தயாராகக் கொண்டுவந்து நிறுத்தியிருந்த காரில் ஏறினான் ரகுநாதன். அவள் டிரைவர் ஸ்தானத்தில் அமர்ந்துகொண்டாள்.ஸ்டியரிங்கைப் பிடித்து வளைத்தவாறே “ஏது பெரிய கவியாகி விடுவீர்கள் போலிருக்கிறதே?” என்றாள் அவள். அதன் பிறகு ஏதேதோ பேசினார்கள். வேகமாகத் தார் ரோட்டைக் கடந்து செல்லும் காரைப்போலத் தொடர்ந்து மேற்சென்று கொண்டிருந்தது அவர்கள் பேச்சு. இது காதலர்கள் விஷயம்! இதில் இதற்கு மேல் தலையிடுவது நியாயமில்லை. எனவே, கதாசிரியனாகிய என்மேல் நேயர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. உங்கள் கோபத்தைப் பொறுத்துக் கொண்டாலும் பொறுத்துக் கொள்ளலாம். ரகுவும் சரோஜாவும் இப்படி நாகரிகமில்லாமல் நடந்து கொண்டதற்காக என்னைக் கோபித்துக்கொண்டால் அது பொறுத்துக்கொள்ள முடியாதது.ஆகையால்,இப்போது இந்த நிலையில் அவர்களை இப்படியே விட்டு விடுகிறேன்.

ரகுநாதன் பம்பாய் வந்து மூன்று, நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. மாமாவிடமிருந்து வாரம் தவறாமல் கடிதம் வந்துவிடும். கலியாண விஷயத்தைப் பற்றியும் குறிப்பிடத் தவறியிருக்காது. பதில் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துக்கடிதத்தை எடுப்பான் ரகு உடனே ஏதாவது நினைவில் அப்புறம்பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிடுவான். மலபார்ஹில்ஸ் பார்க்கில் சரோஜாவுடன் சுற்றி வருவதற்கே அவனுக்கு நேரம் காண்பதில்லை. இந்த அசட்டையில் மூன்று மாதங்களாக மாமா எழுதியிருந்த கடிதங்களுக்குப் பதிலே போடவில்லை அவன். அந்த நிலையில்தான் அன்று அக்கடிதம் வந்தது. ரகுநாதன் துணிவடைந்தான். இனியும் மாமாவை ஏமாற்றுவதில் பயனில்லை. கலியாண விஷயமாக அவருக்குத் தெளிவாக எழுதிவிடவேண்டும். சரோஜாவுக்குத் தன் உள்ளத்தை ஒப்படைத்திருக்கும் செய்தியை மாமாவுக்கு எழுதிவிட வேண்டுமென்றுதான் அவன் முடிவு செய்தான். ஆனால், உடனடியாக என்னவோ எழுதத் தோன்றவில்லை. சோர்வுடன் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டிருந்தான்.அப்போது ‘வாய்ஸ் ஆப் இந்தியா’ ஆசிரியர் சோமநாத சர்மாவின் கார் டிரைவர் உள்ளே நுழைந்தான். “ஐயா உங்களைக் கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்! ஏதோ முக்கிய விஷயமாகப் பேசவேண்டுமாம், ஆபீஸில்தான் இருக்கிறார்கள்- என்று கூறி முடித்துவிட்டு நின்றான் வந்தவன். ரகுநாதன் கடிதத்தை மடித்து உள்ளே வைத்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு கிளம்பினான். அவன் முகத்தோற்றத்தில் பலவித உணர்ச்சிகளுக்கு ஒரே நேரத்தில் அவன் ஆட்பட்டிருக்கவேண்டும் என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது. “சரோஜாவின் தகப்பனார் இப்படித்திடீரென்று கூப்பிடுவதற்குக் காரணம்? அவள் ஏதாவது சொல்லி அப்பாவைக் கணிய வைத்திருக்க வேண்டும். அல்லது கண்டித்து அனுப்பத்தான் கூப்பிட்டிருக்கிறாரோ? சிந்தனை, காரின் வேகத்தோடு போட்டியிடுவதுபோல வளர்ந்து கொண்டிருந்தது. கார் ‘வாய்ஸ் ஆப் இந்தியா’ காரியாலயத்தின் வாசலில் வந்து நின்றது. பம்பாயிலிருந்து வெளிவரும் ஆங்கிலத் தினசரிகளில் முன்னணி இடத்தைப் பெற்றது வாய்ஸ் ஆப் இந்தியா. அதன் காரியாலயமும் முன்னணிப் பெருமைக்கு ஏற்றதுபோல வானளாவ அமைந்திருந்தது. டாக்டர் எஸ்.என்.சர்மா எம்.ஏ.பி.எச்டி என்ற போர்டு தொங்கிக் கொண்டிருந்த ஓர் விசாலமான அறை வாசலில் வந்து நின்றான் ரகுநாதன். வெளியே இருந்த பியூனிடம் சொல்லி அனுப்பினான். உள்ளே சென்ற பியூனுடன் சர்மாவும் வந்தார்.

"வா! வா. உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் ரகு, டிரைவரைக் காருடன் அனுப்பியிருந்தேனே! வந்தானோ?...”

"ஆமாம்! அவன் வந்து சொன்னான்.உடனே வந்தேன்.முக்கியமான விஷயமாகப் பேசவேண்டுமென்று சொன்னதாகச் சொன்னான்.” ரகு நிறுத்தினான். சர்மாவின் முகத்தில் என்றுமில்லாத குறுகுறுப்பான புன்னகை தவழக் கண்டான் ரகுநாதன். இருவரும் நாற்காலிகளில் எதிரும் புதிருமாக அமர்ந்தனர்.

"ஆமாம் மிஸ்டர் ரகுநாதன்! உங்களை என் பெண்ணுக்கு டியூஷன் மட்டும்தானே சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். அதற்கு ஏற்ற பீஸும் கொடுத்துவிட்டேன். நீர் என்னைக் கேட்காமலே என் பெண்ணின் மனத்தைத் திருடிக் கொண்டது பெரிய குற்றம் அல்லவா?’அதே குறுகுறுத்த புன்னகையுடன் சர்மா பேசினார். ரகுநாதன் ஆடு திருடின கள்ளன் போல விழித்துக் கொண்டிருந்தான்.

“எல்லாம் சரோஜா சொன்னாள் போகிறது; நீர் ஒரு புதிய பில்ஹணியம் நடத்திவிட்டீர். இந்தப் பள்ளிக்கூடத்து வேலைக்கு ஒரு முழுக்குப்போட்டுவிட்டு இங்கே என்னோடு வந்து விடும்.அடுத்த மாதம் சரோஜா பி.ஏ. எழுதியானதும் உங்கள் திருமணத்தை முடித்துவிடலாமென்றிருக்கிறேன். ஒய்! சும்மா கூச்சப் படாதேயும்! பேசுங்கள், மாப்பிள்ளை ஸார்!” சர்மா கிண்டலும் கேலியுமாக ரகுநாதனைத் திகைக்க வைத்தார். யாரோ தன் தலையில் அமுதத்தை மழையாகப் பொழிந்தது போலிருந்தது ரகுநாதனுக்கு. சோமநாதசர்மா இவ்வளவு பரந்த உள்ளம் உடைத்தவராக இருப்பாரென்று ரகுநாதன் கனவில்கூட நினைத்திருக்க மாட்டான். எதிர்பாராத மகிழ்ச்சியில் அதிர்ச்சியடைந்து, சிலைபோலக் குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்து கொண்டிருந்த அவனைப் பார்த்து, சர்மாவே மீண்டும் பேசினார். பேச்சில் அதே குறுகுறுப்பும் கேலியும் இருந்தது.

“சரி மாப்பிள்ளை. இப்பொழுது நீர் போய் வரலாம். எனக்கு ஒரு முக்கியமான தலையங்கம் எழுத வேண்டியிருக்கிறது. தவிர சரோவும் வீட்டில் உம்மைத் தேடிப் போயிருக்கலாம். அவளுடைய ஏமாற்றத்தை நான் சம்பாதித்துக் கொள்வானேன்?கூடிய சீக்கிரம் இப்படி நீங்கள் ஒருவரை ஒருவர் தேடிப் போகாதபடி பார்த்துக்கொள்ள வழிசெய்துவிடுகிறேன்.” கூறியவாறு சர்மாவாய்விட்டுச் சிரித்தார். கூச்சமும் நாணமும் மேலிட்டதனால் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலே விடைபெற்றுக் கொண்டான் ரகுநாதன்.

வீட்டிற்கு வந்தரகுநாதன் திடீர் மகிழ்ச்சியால் பித்தனாகி விடுவான் போலிருந்தது. டிராயரைத் திறந்த அவன் அவசரமாக அதனுள் திணித்திருந்த கீழத் தேரூரிலிருந்து வந்த கடிதம் மேலாகக் கிடக்கக் கண்டான்.

மீண்டும் ஒரு முறை அதைப் படித்த பின் அவன் மனம் ஒரு பெரிய போராட்டத்தில் இறங்கியது. பிள்ளைப் பருவத்திலிருந்து தாயாகவும் தந்தையாகவும் இருந்த மாமாவின் வேண்டுகோளுக்கு என்ன விடை சொல்வது? சரோஜாவின் உயிர்க் காதல், அவள் தந்தை சர்மாவின் பரந்த அன்பு, ‘வாய்ஸ் ஆப் இந்தியா’ வின் துணையாசிரியர் பதவி. இவ்வளவும் அவனுக்காக இங்கே காத்திருந்தன. இந்த வாழ்க்கை எதிர்காலக் கனவாக அவனிடம் ஊறிப் போய் இருந்தது. இதை விட்டுவிட்டுக் கீழத் தேரூரின் இருட்டு நிறைந்த சூனிய வாழ்வை நினைத்தால் அவனுக்கு எங்கோ மயானத்திற்குப் போவது போல இருந்தது. மாமா நன்றி செலுத்தத் தகுந்தவர்தான். அதற்காகப் பேரும் புகழுமாக வாழும் இந்த பம்பாய் வாழ்வும் அகில உலகப் புகழ் பெற்ற ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் பதவியும் பலியிடப்படத்தான் வேண்டுமா? அப்படியே எல்லாம் செய்துவிட்டாலும், சரோவை மறந்து அவனும், அவனை மறந்து சரோவும் வாழ முடியாது என்ற நிலை இருக்கும்போது, அவன் எப்படி மாலதியை எண்ண முடியும்? ரகு சிந்தித்துக் கொண்டே இருந்தான்.

இறுதியில் அவன் மனம் கல்லாகி விட்டது.நன்றி உணர்ச்சி, உறவு முதலியயாவும் இறுகி மரத்துப்போன நிலையில் அவன் தன்னை இருக்கச் செய்துகொண்டான். அதோடு இருந்திருந்தாலும் பரவாயில்லை. தன்னைப் பற்றி தன் மாமாவும் கீழத் தேரூரும் சற்றும் நினைவே கொள்ள முடியாதபடி ஏதாவது செய்ய விரும்பினான். எவ்வளவோ பெரிய பெரிய திட்டங்கள் அவன் மனத்தில் உருவாயின. இறுதியில் ஏதோ முடிவிற்கு வந்தவன்போல் தபாலாபீஸிலிருந்து தந்தி பாரம் ஒன்றை வாங்கி வருமாறு கீழே இருந்த பையன் ஒருவனை அனுப்பினான். பையன் தந்தி பாரத்துடன் வந்தான்.

தந்தி பாரத்தில் ரகு எழுதியவை இவைதான். தன்னுடைய நண்பன் ஒருவன் கொடுத்திருப்பதாக அத்தந்தியை அமைத்து, ‘ஒரு வாரத்திற்கு முன்பு, தாதரிலிருந்து வரும் வழியில் மின்சார ரயில் விபத்தில் சிக்கி, ரகு இறந்து விட்டான்' என்பதாய்ச் செய்தியை நண்பனுக்காக அனுதாபப்பட்டு எழுதுவதுபோல எழுதிக்கொண்டான். இதை எழுதும்போது அவன் கைகள் நடுங்கின. எழுத்தில் தன்னைக் கொன்று கொண்டாலும் நடுக்கம் நடுக்கம்தானே? இதிலுள்ள அசட்டுத்தனத்தைப்பற்றிச் சிந்திக்க நேரமில்லை அவனுக்கு. எவ்வளவோ நாள் எப்படியெல்லாமோ இருக்கும் மனநிலைகள் சூழ்நிலைக்கு ஏற்ப வருகின்ற முடிவுகளுக்கு அடிபணிந்துவிடுகிறது.

ரகுநாதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? தந்தியை நண்பன் கொடுத்திருப்ப தாக அமைத்துள்ளமையினால், அந்த நண்பன் எந்தப் போஸ்டாபீஸிலிருந்து அதைக் கொடுக்க முடியுமோ, அங்கிருந்து கொடுப்பதற்காக எழுந்தான் ரகு.

மின்சார ரயிலில் ஏறிய அவன் தந்தி பாரம், பணம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான். இரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அவன் குறிப்பிட்ட போஸ்டாபீஸ் உள்ள இடத்தில் இறங்கிக் ‘காரியத்தை’ முடித்து விடுவான். அதற்குப் பின் ஏதோ கீழத் தேரூரில் நிகழும் நிகழ்ச்சிகளைப் பற்றிய கற்பனைகள், இங்கே தானும் சரோவும். இப்படி ஒடிக்கொண்டிருந்தது அவனுடைய நினைவு.

சடசடவென்று ஆயிரம் பேரிடிகள் இடித்தாற்போல ஒரு பேரோசை ஒரு பெரிய விபத்து. பலர் தூக்கி எறியப்பட்டனர். முன் ஸீட்டில் அமர்ந்திருந்த ரகு சரியாக இரண்டு இரயில்களுக்கும் நடுவே தூக்கி வீழ்த்தப்பட்டான்.

இரும்புச் சட்டங்களுக்கு இடையே நொறுங்கிக் கொண்டிருந்தது அவன் உடல், மோதிய வேகத்தில் அதிர்ச்சி தாங்காது எதிர்ப்புறமாக வந்த வண்டி ஒன்று சரியாக அவனை நோக்கிக் குடை சாய்ந்து கொண்டிருந்தது. சட்டைப் பையிலிருந்து பிதுங்கி வெளியே தெரிந்தது அவன் எழுதிய தந்தி பாரம் தான் சுமந்திருக்கும் செய்திகளை உண்மையாக்கிய மகிழ்ச்சியில் அவனைப் பார்த்து நகைப்பது போலிருந்தது அதன் தோற்றம்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிய ரகுநாதனின் நண்பன் தந்தி பாரத்துடன் அதே போஸ்டாபீஸை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அந்தப் பாரத்தில் எழுதிய செய்திகள் ரகுநாதன் ஏற்கனவே எழுதியபடி எழுத்துக்கு எழுத்து வித்தியாசமின்றி அமைந்திருந்தன. சோமநாத சர்மாவுக்கோ சரோஜாவுக்கோ இதுவரை விஷயம் தெரியாது. தந்தியை முன் அனுப்பிவிட்டு நேரில் ஆறுதல் அளிக்க அடுத்த வண்டியில் கீழத் தேருக்குப் புறப்பட்டான் ரகுவின் நண்பன்.

(1978-க்கு முன்)