நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/மனப்பான்மை
97. மனப்பான்மை
‘அமராவதி ஆட்டோமொபைல்ஸ்’ உரிமையாளர் ஆராவமுதன் - அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பிச் சில நாட்களே ஆகியிருந்தன. ‘டெட்ராய்ட்’ நகரிலுள்ள மாபெரும் மோட்டார்த் தொழிற்சாலைகளையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பியிருந்தார் அவர். வரவேற்பு உபசாரங்கள், ‘அமெரிக்காவில் என் அனுபவங்கள்’ என்ற பெயரிலே ஏதோ ஒரு பத்திரிகையில் வழக்கமான கட்டுரைத் தொடர் – ‘அமெரிக்காவில் நான்’ என்ற பொருளில் பல பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும், ரோடரி கிளப்பிலும் சொற்பொழிவுகள் எல்லாம் அவர் ஊர் திரும்பியது முதல் தடபுடல்பட்டுக் கொண்டிருந்தன. பக்கத்து நகரத்திற்குப் போய்த் திரும்பக் கூடப் பண வசதியில்லாத ஏழைகள் நிறைந்த இந்தத் தேசத்தில் - செளகரியமுள்ள சிலர் ஆறாயிரம் மைலுக்கப்பாலும், பத்தாயிரம் மைலுக்கப்பாலும் பறந்து போய் விட்டுத் திரும்பி வந்து - சொர்க்க பூமிக்கே போய்த் திரும்பியவர்களைப் போலப் பூமியில் கால் பாவாமல் (பறந்து வந்த ஞாபகத்திலேயே) இங்கு மிதப்பதும், அவர்களைப் பார்த்து வசதியில்லாத மற்றவர்கள் பிரமிப்பதும் ஒருவகை அநாகரிகமான பரம்பரைச் சமுதாய அவமானமாக நிலவி வருவது இந்தத் தேசத்தில்தான் ஒன்றும் புதுமையில்லையே? ஆராவமுதனும் அப்படித்தான். இந்திய முதலாளிகளால் சநாதன சொர்க்க பூமியாகப் பாவிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்ற அமெரிக்காவிற்குப் போய் விட்டு வந்த பெருமையில் மிதந்துக் கொண்டிருந்தார். தம்முடைய தொழிற்சாலை ஊழியர்களாகிய எண்ணூறு பாட்டாளிப் பெருமக்கள் அடங்கிய கூட்டமொன்றில் அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த மறுநாள் கீழ்க்கண்டவாறு சொற்பொழிவாற்றியிருந்தார் :-
“நான் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த மோட்டார்த் தொழிற்சாலையின் தொழிலாளிகளில் நூற்றுக்கு எண்பது சதவிகிதத்தினர் சொந்தமாகக் கார் வைத்திருக்கிறார்கள். சாதாரண ஃபிட்டர், கார்ப்பெண்டர், எலெக்ட்ரீஷியன் கூடத் தன்னுடைய சொந்தக் காரைத் தானே சாரத்தியம் செய்து கொண்டு தொழிற்சாலை வாயிலில் வந்து இறங்குகிறான். ஒரு தொழிலாளியும், அவனுடைய முதலாளியும் பக்கத்தில் பக்கத்தில் தங்களுடைய சொந்தக் கார்களை நிறுத்திக் கீழிறங்கிச் சந்தித்ததும் பரஸ்பரம் வணங்கிக் கொள்கிறார்கள். தொழிலாளி தன்னுடைய முதலாளியை, “மிஸ்டர் ஹென்றி குட்மார்னிங்” என்று பெயர் சொல்லி அழைத்து ‘குட்மார்னிங்’ கூறி வணங்குகிற அளவுக்கு உரிமையும் தாராள மனப்பான்மையும் பெருகியிருக்கிறது அங்கே. நம்முடைய நாட்டில் கார் வைத்திருப்பது ஒரு ‘ஸ்டேட்டஸ்’ ஆகவும் அந்தஸ்தாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கா போன்ற பொருள் வளமுள்ளநாடுகளிலோ நேரத்தைக் குறைத்து வேலையைப் பெருக்கி அதிகம் பாடுபடுவதற்காக வாகனம் ஒரு கருவியாகக் கருதப்படுகிறதே ஒழிய ‘ஸ்டேட்டஸ்’ ஆகக் கருதப்படுவதில்லை.அதை வைத்து மனிதனுடைய மதிப்புக் கணிக்கப்படுவதும் இல்லை.”
என்று அவர் ஆற்றிய சொற்பொழிவைச் செவிமடுத்த அமராவதி ஆட்டோமொபைல்ஸ் தொழிலாளர்கள் எண்ணுாறு பேரில் எலெக்ட்ரீஷியன் துரைராஜாவும் ஒருவன். தன் முதலாளியைப் பற்றி நீண்டநாட்களாக அவன் வைத்திருந்த ஓர் அபிப்பிராயம் இந்தச் சொற்பொழிவைக் கேட்டதனால் மாறியது. துரைராஜுவின் குடும்பம் பெரியது. துரைராஜூவின் தகப்பனார் - மூன்று தம்பிகள், ஒரு பெரிய தமையன் எல்லாருமே உழைப்பாளிகள். துரைராஜூ அமராவதி ஆட்டோமொபைல்ஸில் ஆட்டோ எலெக்ட்ரிஷியனாக வேலை பார்ப்பது தவிர - அவன் தம்பிகளும், மூத்த தமையனுமாகச் சேர்ந்து மெயின்ரோடில் ஒரு பிரைவேட் ‘ஆட்டோ எலெக்ட்ரிகல் ஒர்க்ஷாப்’ வைத்து நடத்திக் கொண்டிருந்தார்கள். குடும்பம் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் இருந்ததனால் வருமானம் தாராளமாக இருந்தது. எனவே கையிலும் கொஞ்சம் கணிசமான தொகை சேர்ந்திருந்தது. குடும்பம் முழுவதும் கார் சம்பந்தமான தொழிலேயே பழகியிருந்ததனால் கார்களை வாங்கவும், விற்கவும், உதவுகிற தரகர்கள் பலர் துரைராஜூவுக்கு நண்பர்களாகியிருந்தனர். ஒரு சமயம், அப்படி நண்பராகியிருந்த தரகர் ஒருவருடைய சிபாரிசின் காரணமாக, துரைராஜு கொஞ்சம் மலிவான விலைக்கு வந்த பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கும்படி நேர்ந்தது. ஒரு காரை வைத்து ஆள வேண்டுமென்ற கெளவரத்துக்காகவோ, பெருமைக்காகவோ ஆசைப்பட்டுத் துரைராஜ் அந்தக் காரை வாங்கி விடவில்லை. நல்ல கண்டிஷனில் இருந்தும், மிக மலிவான விலைக்குக் கிடைத்ததனால் அதை அவன் வாங்க நேர்ந்தது. வாங்கிய பின்போ, விற்க மனம் வரவில்லை. அதன் அவசியமும், இன்றியமையாமையும், உபயோகமும் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. அவன் வேலை பார்த்த அமராவதி ஆட்டோமொபைல்ஸ் தொழிற்சாலையிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவிலும், தம்பிமார்களும், தமையனும், வைத்திருந்த ஒர்க்ஷாப்பிலிருந்து பத்து மைல் தொலைவிலுமாக அந்தப் பெரிய நகரத்தின் மற்றொரு கோடியில் இருந்தது அவர்கள் குடியிருந்த வீடு. எனவே அவ்வப்போது வீட்டுக்குப் போகத் திரும்ப என்று சிக்கனமாகப் பெட்ரோலை உபயோகித்துக் காரை வைத்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள் சகோதரர்கள். தம்பிகளும், தமையனும் வைத்திருந்த ஒர்க்ஷாப்பில் மாதம் சராசரி ஆயிரத்து முந்நூறு ரூபாயும், துரைராஜுவின் அமராவதி ஆட்டோமொபைல்ஸ் சம்பளம் இருநூறு ரூபாயுமாக ஐந்து சகோதரர்களுக்கும் சேர்த்து ஆயிரத்தைந்நூறு ரூபாய் கிடைத்துக் கொண்டிருத்தனால், அவசியத்துக்காகவும், செளகரியத்துக்காகவும் அந்தப் பழைய காரைப் பராமரிப்பது ஒரு பாரமாக அவர்களுக்குத் தோன்றவில்லை. மூத்த தமையனைத் தவிர மற்றவர்கள் எவருக்கும் திருமணமாகாததனால், குடும்ப பாரமும் அதிகமில்லை. சகோதரர்கள் ஐவருக்கும் கார் டிரைவிங் கை வந்த கலை. அதனால் யாரும் எப்போதும் எங்கும் தயங்காமல் காரை எடுத்துக் கொண்டு புறப்பட முடியும். சின்ன ரிப்பேர் முதல் பெரிய ரிப்பேர் வரை எதுவானாலும், வெளியார் ஒர்க் ஷாப்பில் கொண்டு போய் விட்டுச் செலவு வைக்காமல் ரிப்பேரைத் தாங்களே பார்த்துச் சரி செய்து விடுவார்கள். மேற்படி காரணங்களால் மிகவும் சிக்கனமாக மாதம் நூற்றைம்பது- அல்லது அதிகமாகப் போனால், இருநூறு ரூபாய்க்குள் அந்தக் காரை அவர்களால் பராமரிக்க முடிந்தது. துரைராஜூ வேலை பார்த்த அமராவதி ஆட்டோமொபைல்ஸ் கார்த் தொழிற்சாலை - சகோதரர்களின் சொந்த ஒர்க் ஷாப்பிற்கு அப்பாலும் இரண்டு மைல் தள்ளி இருந்ததனால், தினசரி காலையில் சகோதரர்கள் ஐவரும் வீட்டிலிருந்து புறப்பட்டால் ,துரைராஜு மற்ற நால்வரையும் சொந்த ஒர்க் ஷாப்பில் இறக்கி விட்டு விட்டுக் காரைத் தன்னுடைய அமராவதி ஆட்டோமொபைல்ஸ் தொழிற்சாலையின் அருகே காம்பவுண்டுக்கு வெளியே எங்காவது பார்க் செய்து பூட்டிக் கொண்டு வேலைக்குப் போய் விடுவது வழக்கம். திரும்பும் போது மாலையில் சொந்த ஒர்க் ஷாப்பிற்கு வந்து கொஞ்ச நேரம் காத்திருந்து சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்புவான் துரைராஜ். இப்படித் தாராளத்திலும் ஒற்றுமை - சிக்கனத்திலும் ஒற்றுமை - என்று அந்தத் தொழிலாளிக் குடும்பம் நிம்மதியாக வாழ்ந்து வந்தாலும், சகோதரர்கள் காரில் வருவதும் போவதும் பலர் கண்களை உறுத்தியது. செளகரியமாகப் போய் வருவது - இவர்களை ஒத்த மற்ற உழைப்பாளிகளாலேயே அசூயைக் கண் கொண்டு பார்க்கப்பட்டது. இவர்கள் நிலைக்கு மேற்பட்ட பணக்கார வர்க்கத்தினரால் கேலி செய்து எள்ளி நகையாடப்பட்டது. இவ்வளவுக்கும் அவர்கள் வைத்திருந்த பழைய கார் பார்ப்பதற்குப் பளீரென்று கூட இராது. அங்கங்கே பெயிண்ட் உதிர்ந்து உள்ளே ‘ஸீட்டுக்கள்’ கிழிந்து அழுக்கடைந்து போயிருக்கும். ஆனால் உடம்புக்கு உள்ளே மனிதனுடைய ஆத்மாவைப் போல், அந்த ஓட்டைக் காருக்குள்ளே என்ஜின் மட்டும் பரம சுத்தமாக ஓடும். துரைராஜு உலகியல் தெரிந்தவன்.கார் வாங்கிய தினத்திலிருந்து ஒரு நாள் கூட அவன் அமராவதி ஆட்டோமொபைல்ஸ் தொழிற்சாலை கேட் அருகே தன் காரைக் கொண்டு போய் நிறுத்தி இறங்கியதில்லை. சராசரி இந்திய மனப்பான்மையின்படி ஏழையானாலும் சரி, பணக்காரனானாலும் சரி - இன்னொருவன் கொஞ்சம் அதிக செளகரியமுள்ளவனாயிருப்பதைப் பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ தயாராயிருக்க மாட்டார்கள். ஒன்று அதிகமாகக் கேலி செய்வார்கள், அல்லது அதிகமாகப் பொறாமைப்படுவார்கள். மேடைகளில் எல்லோரும் சமதையான செல்வம் அடைய வேண்டுமென்று பேசுவார்கள். நடைமுறையில் தொழிலாளி வெள்ளையாக உடுத்தினால், முதலாளிக்குப் பிடிக்காது. வேலைக்காரன் தலை நிமிர்ந்து நடந்தால் எஜமானனுக்குக் கோபம் வருகிற தேசம் இது. அமராவதி ஆட்டோமொபைல்ஸ் முதலாளி ஆராவமுதன் எப்படி நினைப்பாரோ என்ன சொல்வாரோ என்று பயந்துதான் எலெக்ட்ரிஷியன் துரைராஜு காரைப் பார்க் செய்வதற்கென்று தொழிற்சாலைக்குள் இருந்த இடத்திற்குத் தன் காரைக் கொண்டு வராமல் வெளியில் எங்கெங்கோ நிறுத்தி விட்டு, நடந்து வந்து கொண்டிருந்தான். அப்படி வெளியில் கண்ட கண்ட இடத்தில் நிறுத்தி விட்டு வருவதனால் காருக்குப் பல தொல்லைகள் வந்தன. கதவின் மேல் விடலைச் சிறுவர்கள் எதையாவது கீறிக் கிறுக்கி விடுவார்கள். எவனாவது குறும்புக்காரன் டயரில் காற்றைப் பிடுங்கிவிட்டுப் போய் விட்டிருப்பான்.
இப்படியெல்லாம் தொல்லைகள் இருந்தும் தொழிற்சாலைக்குள் பாதுகாப்பான இடத்தில் காரைக் கொண்டு வந்து நிறுத்தத் தயங்கி வெளியிலேயே நிறுத்திக் கொண்டிருந்த துரைராஜு, இன்று அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பிய தன் முதலாளி செய்த சொற்பொழிவைக் கேட்டு மனம் மாறினான். 'டெட்ராய்ட்’ மோட்டார்த் தொழிற்சாலையில், தொழிலாளியும், முதலாளியும் அருகருகே காரில் வந்து இறங்குவதாக அவர் தம் சொற்பொழிவில் வருணித்த காட்சியைக் கேட்டுத்தான் அவனுடைய மனத்தில் இந்த மாறுதல் ஏற்பட்டிருந்தது. ‘தொழிற்சாலைக்குள்தான் கார்களைப் பார்க் செய்வதற்கென்று ஏரளமான பகுதி இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதே? முதலாளியோ முன்பு எப்படி இருந்தாலும், இப்போது இந்த அமெரிக்கச் சுற்றுப் பயணத்திற்குப் பின்பு பரந்த மனமுள்ளவராக மாறியிருப்பார்’ என்றெல்லாம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான் துரைராஜு.
‘அமராவதி ஆட்டோமொபைல்ஸ்’ தொழிற்சாலையில் உள்ளே கார் பார்க் செய்வதற்குரிய பிரதேசத்தில் நாலு கார்களை பார்க் செய்வதற்கு வெள்ளைக் கோடுகளால் அடையாளம் போட்டிருக்கும். ஆனால் அங்கு நிறுத்தப்படுவதென்னவோ முதலாளி ஆராவமுதனின் ‘காடிலாக்’ கார் ஒன்று மட்டும்தான். வேறு உயர் அதிகாரிகளை நாலைந்து பேரை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கும், ஆபீஸுக்கு அழைத்துக் கொண்டு வருவதற்குமாக ஒரு ‘ஆபிஸ் வான்’ உண்டு. அதைக் கூடக் காம்பவுண்டினுள்ளே எங்காவது ஒரு மூலையில்தான் நிறுத்துவார்களே ஒழியக் ‘கார் பார்க்’கில் முதலாளியின் ‘காடிலாக்’ நிற்கிற இடத்தில் அதனோடு சேர்த்து நிறுத்துவது வழக்கமில்லை.
முதலாளி அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பியதும், தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்காகச் சொற்பொழிவு செய்த மறுதினமே தைரியமாகவும், பெருமிதமாகவும், தனது பழைய காரைத் தொழிற்சாலைக் கார் பார்க் வரை கொண்டு வந்து நிறுத்தி விட்டு அப்புறம் உள்ளே வேலைக்குப் போனான் எலெக்ட்ரிஷியன் துரைராஜ். அவன் காரை நிறுத்தும் போது, கேட் அருகே இருந்து கவனித்துக் கொண்டிருந்த கூர்க்கா, ஆத்திரத்தோடு பரபரப்பாக ஓடிவந்து “இங்கே வேறெந்தக் காரையும் நிறுத்தக் கூடாது. ‘படா ஸாப் கி காடி’ (பெரிய ஐயாவின் கார்) நிற்கிற இடம் இது.” என்று தடுத்துப் பார்த்தான். ஆனால் துரைராஜூ அவன் தடுத்ததை ஒப்புக் கொள்ளாமல் பெரிய ஐயா முதல் நாள் அமெரிக்கா அனுபவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை மனத்தில் கொண்டு, “பெரிய ஐயா கேட்டால் நான் வந்து பதில் சொல்லிக் கொள்கிறேன். நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்று திமிராகப் பதில் சொல்லி விட்டான். அதன் பிறகு அவன் தன் வேலைக்குப் போய்ச் சேர்ந்தான். தன் துணிவைப் பெரிய ஐயா பெருந்தன்மையாகப் பாராட்டினாலும் பாராட்டுவார் என்று துரைராஜுவின் மனம் கற்பனை செய்தது. அமெரிக்க மோட்டார்த் தொழிற்சாலைத் தொழிலாளிகளில் பெரும்பாலோர் சொந்தமாகவே கார் வைத்திருக்கிறதைப் பற்றியும், தொழிலாளி ஜான் முதலாளி ஹென்றியின் காருக்கருகே தன் காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கீழிறங்கி, ‘குட்மார்னிங் மிஸ்டர் ஹென்றி!’ என்று முதலாளியைப் பெயர் சொல்லி அழைத்து ‘குட்மார்னிங்’ போடுவதைப் பற்றியும் ஆராவமுதன் ஆற்றிய சொற்பொழிவைப் பற்றியே துரைராஜுவின் மனம் நினைத்துப் பூரித்துக்கொண்டிருந்தது.
ஆனால் நடந்ததென்னவோ முற்றிலும் நேர் மாறான காரியங்களாக இருந்தன. பகல் சாப்பாட்டுக்காக விடப்படும் இடைவேளையின் போது துரைராஜு வெளியில் வந்து பார்த்தால் அவனுடைய பழைய காரை நிறுத்தியிருந்த இடத்தில் காணவில்லை. அந்தப் பிரதேசம் முழுவதும் ஏக சக்ராபதிபதிபோல ஒற்றைக்கொரு தனிக்காராக - முதலாளி ஆராவமுதனின் ‘காடிலாக்’ மட்டும் பளீரென்று மின்னும் ஒளியுடன் கொலு வீற்றிருந்தது. சாவி தன் கையில் இருக்கும் போது தன் பழைய காரை, யார் எதற்காக வெளியே எடுத்துக் கொண்டு போயிருக்க முடியுமென்று புரியாமல் துரைராஜு மலைத்து நின்ற போது. முதலாளியின் ‘காடிலாக்’ டிரைவர் ஓடிவந்து துரைராஜுவை நோக்கி இரைந்தான் :
“உன் ஓட்டைவண்டியை இங்கே பார்க் பண்ணச் சொல்லி, யார் உன்னே உள்ளார நுழைய விட்டாங்க? பெரிய ஐயா பார்த்ததும் கன்னா பின்னான்னு இரைய ஆரமிச்சாரு விசாரிச்சதிலே வண்டி உன்னிதுன்னு தெரிஞ்சிது. அவர் கையிலே சொன்னேன்.
“சோத்துக்கு வழியில்லாத பசங்கள்ளாம் காரு வச்சுக்கணுமின்னு ஆசைப்படறதிலே கொறைச்சல் இல்லை.”ன்னு கோபமாகக் கத்தினாரு. அப்புறம் என்னைத் தனியே கூப்பிட்டு, “நீயும் கூர்க்கா ஆளுங்களுமாகச் சேர்ந்து இந்தத் தள்ளு மாடல் ஒட்டைக் காரை உடனே காம்பவுண்டுக்கு வெளியிலே போயி நிக்கிற மாதிரித் தள்ளிட்டுப் போயிடணும். நான் திரும்பி லஞ்ச் டயத்திலே வீட்டுக்குப் போறத்துக்காக வர்றப்போ இது இங்கே நின்னுதோ, நெருப்பை வச்சுப்பிடுவேன் நெருப்பை”ன்னு கூச்சல் போட்டாரு. நல்ல வேளையா நீ வண்டியை கியர்லே போடாமே நியூட்ரல்லே விட்டிருந்தே. அதுனாலே உன் வண்டியை வெளியிலே கொண்டு போய்த் தள்ளி நிறுத்தியிருக்கிறோம்” என்றான் காடிலாக் டிரைவர். இதைக் கேட்ட துரைராஜ் பெருமூச்சு விட்டபடியே கீழே தரையில் தனது கார் தள்ளிக் கொண்டு போகப்பட்டதன் அடையாளமான டயர் தடயங்களைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் தயங்கி நின்றான். பின்பு தைரியமாகத் தலை நிமிர்நது நின்று தனக்குள் நினைக்கலானன்.
'மனிசனோட அனுபவம் வேறே, மனப்பான்மை வேறே. அபிப்பிராயம் வேறே, நடைமுறை வேறே. இந்தத் தேசத்துலே தலைமுறை தலைமுறையா வெறும் உபதேசம் பண்ணுறவங்களாகவே பெருகிப் போயிட்டாங்க. மனப்பான்மை வளராததுக்கு இது ஒரு காரணம். உபதேசப்படி வாழ்ந்து காட்ட ஆள் இல்லாதப் போன காரணம் எல்லாருமே உபதேசம் பண்ணுறதிலேயே கவனமாயிருந்திட்டதுதான். அமெரிக்காவுக்குப் போனா என்ன? ஐரோப்பாவுக்குப் போனா என்ன? இந்திய முதலாளித்துவ மனப்பான்மையிங்கறது, ஒரே மாதிரித்தான் இருக்குது. 'தான் அனுபவிக்கிற செளகரியங்கள் தன்னிடம் ஊழியம் புரிய வருகிறவர்களுக்கு எட்டாததாக இருக்க வேண்டும்’ என்று நினைக்கிற மனப்பான்மை இந்த நாட்டு முதலாளிகளின் பிறப்புரிமை. அதை இன்னொரு நாட்டுப் பிரயாண அனுபவம் கூட மாற்றி விட முடியாதுதான்’ என்று நினைத்தபடியே, சர்வ சுதந்திரமாக நடந்து காம்பவுண்டுக்கு வெளியே போய்த் தன் காரை ஸ்டார்ட் செய்து, சகோதரர்களின் ஒர்க் ஷாப்புக்குச் சென்று அவர்களோடு சேர்ந்து பகலுணவை முடித்துக் கொண்டு திரும்பவும் அமராவதி ஆட்டோமொபைல்ஸ் வாசலுக்கு வந்து ஞாபகமாகக் காரைக் காம்பவுண்டுக்கு வெளியிலேயே விட்ட பின், மகா தீரனாக நடந்தபடி உள்ளே போனான்.
ஆமாம்! அவனால் இதற்கெல்லாம் கவலைப்படமுடியாது! ஏனென்றால் நாளைய உலகம் அவனுடையதுதான்! இனி நாளைய வெற்றியும் அவனுடையதுதான்.
(தாமரை, டிசம்பர், 1964)