நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/19. மரபு என்னும் மூலிகை

விக்கிமூலம் இலிருந்து

19. மரபு என்னும் மூலிகை

ந்த மலைச் சாரலில் சிலம்பாற்றின் கரையில், பொழுது புலர்வது மிக மிக அழகாயிருந்தது. பசுமைச் செறிவினிடையே பல்லாயிரம் பல்லாயிரம் இரத்தினங்களைக் கீழ்த் திசையிலிருந்து தூவினாற் போலக் கதிரவனின் ஒளி வீச்சுக்கள் நுழைந்தன. பிரம்ம முகூர்த்தமாகிய மங்கல வைகறை வேளையிலேயே, மதுராபதி வித்தகர் துயில் எழுந்து புறப்பட்டு விட்டார். அவரைப் பொறுத்த வரை ஆழ்ந்த உறக்கம் என்பதை நீத்துப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன. பாண்டிய குலத்தை மறுபடி அரியணை ஏற்றுகிற வரை அவரால் உறங்க முடியாது போலிருந்தது. எப்போதும் எதையாவது சிந்தித்துத் திட்டமிட்டுக் கொண்டே இருந்ததால், அவர் உறங்குவது போல் உடலை மான் தோலில் கிடத்தியிருந்தாலும் அது அறிதுயிலாகவே அமைந்தது. அந்த அறிதுயிலில், நினைப்புகள் உண்டு. செயல்களைப் பற்றிய எதிர்காலச் சிந்தனைகள் உண்டு. தவங்களும் உண்டு. ஆனால், துயில்தான் கிடையாது.

முந்திய இரவில் திருமோகூர்க் கொல்லன் மாறோகவள நாட்டுக் கொற்கைப் பெருஞ்சித்திரனைக் கொற்றவைக் கோயிலில் சந்தித்துத் திருமால் குன்றத்துக்கு அழைத்து வந்ததையும், நவநித்திலங்களைக் கொண்டு வந்து சேர்த்ததையும், புதிய நல்லடையாளச் சொல்லை நியமித்து அனுப்பியதையும், இனி விளைய இருக்கும் மேல் விளைவுகளையும் சிந்தித்தபடியே, சிலம்பாற்றில் நீராடச் சென்று கொண்டிருந்தார் அவர். நிழல் போல் அவரைப் பாதுகாத்துப் பின் தொடரும் ஆபத்துதவிகள் இருவர், ஒரு பனைத் தூரம் பின்னால் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

அவர் சிலம்பாற்றின் கரையை அடைந்த போது வேறொரு திசையிலிருந்து எதிர்ப்பட்ட முனையெதிர் மோகர் படை வீரர்கள் இருவர் அவரிடம் ஏதோ சொல்ல வந்தவர்கள் போல வணங்கி நின்றனர். அவர்கள் கூற வந்ததைக் கேட்கக் கருதி அவருடைய விரைந்த நடை தயங்கியது. இந்த மூப்பிலும் அவர் நடை, மற்றவர்களால் உடன் தொடர முடியாத அளவு வேகமாக இருக்கும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் விரையும், அந்த நடையைத் தொடர முடியாமல், காராளரும், கொல்லனும், பிற வீரர்களும் பலமுறை சிரமப் பட்டிருக்கிறார்கள். நடையைப் போலவே பலவற்றில் அவரைப் பின் தொடர முடியாதவர்களாகவே இருந்தார்கள் அவர்கள்.

அவரை எதிர் கொண்டு வந்த முனையெதிர் மோகர் படை வீரர்கள், பணிந்த குரலில் கைxகட்டி நின்று கூறலாயினர்:-

“ஐயா! நேற்றிரவு திருமோகூர்க் கொல்லன் இங்கு அழைத்து வந்த கொற்கை நகரப் பிள்ளையாண்டான் இன்னும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார். எழுப்பலாமா, கூடாதா என்றும் தெரியவில்லை. நேற்று இரவு எங்களிடம் ஒப்படைக்கும் போது, ‘காலையில் அந்தப் பிள்ளை தங்களைக் காண வேண்டியிருக்கும்’ என்று கூறி உறங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி அழைத்து வருகிறோம்...”

“வேண்டியதில்லை! அவன் உறங்கட்டும். நன்றாக உறங்கட்டும். அவனைப் போன்றவர்கள் உறங்கினாலும், விழித்திருந்தாலும் ஒன்றுதான்!” அவருடைய மறு மொழி கிடைத்ததும் விரைந்து திரும்பினார்கள் அவர்கள். ஏதோ சொல்ல நினைத்தவர் போல், அவர்களில் ஒருவனை மீண்டும் கை தட்டி அழைத்தார் அவர். இருவரில் ஒருவன் அவரருகே வந்தான். குரலை முதலில் தணித்து, அவன் காதருகே ஏதோ கூறிய பின்,

“ஞாபகம் வைத்துக் கொள் மறந்து விடாதே. மீண்டும் என்னிடம் வந்து தெரிவிக்க வேண்டும்” என்று எதையோ உரத்த குரலில் சொல்லி அவனை அனுப்பினார். ஏதோ ஒரு சக்தி வாய்ந்த வேரினால் தந்த சுத்தி[1] செய்து முடித்தார் அவர். வயதிலும் கட்டுவிடாமல் வரிசையாக மின்னிய வெண் பற்கள் அவருடைய தவம், உடலைப் பாதுகாத்திருக்கும் பான்மையைக் காட்டியது. சிலம்பாற்று நீர் படிகம் போல் இருந்ததனாலும், தெளிவின் காரணமாகவும், ஆழம் கண்டு பிடிக்க இயலாததாயிருந்தது. முழங்காலளவு கூட ஆழம் இராதோ என்று தோன்றிய நீரில் அவர் இறங்கி நின்றபின் அவருடைய உயரத்துக்கே மார்பளவு மூழ்கியது. தவத்தினால் மல மாசுகளைச் சுட்டெரித்த அந்தச் செம்பொன் மேனி நீர் நடுவே பெரிய செந்தாமரைப் பூ ஒன்று பூத்து நிற்பது போல் காட்சி அளித்தது.

ஆற்று நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்து, கிழக்கு நோக்கிக் கதிரவனை வணங்கி, நியமங்களைச் செய்த போது அவர் விழிகளில் தெய்வீக ஒளி மின்னியது. குளிர்ந்த நீரில் அமிர்தத்தைப் போல், உடலை நித்திய இளமையுடன் வாழ வைக்கும் ஆற்றல் இருக்கிறது என்று நம்பினார் அவர். தமிழில் நீர்மை என்ற பதத்துக்குக் குணம், பண்பு என்றெல்லாம் கூடப் பொருள் இருப்பதைப் பலமுறை சிந்தித்து வியந்திருக்கிறார் அவர். குணங்களின் உருவகமே பழகும் தண்ணீரின் மகத்துவத்தினால்தான் அமைகிறதோ என்று கூட அவர் நினைத்ததுண்டு. சிலம்பாற்று நீரோ மேனியில் மிருதுவான பட்டு ஒழுகுவது போல் படும் தன்மையை உடையது. பட்டுப் போன்ற பனி நீர் அவரை அதிக நேரம் விரும்பி நீராடச் செய்தது அன்று. ‘கொல்லன் இந்நேரத்திற்குள் வையைக் கரையில் திருமருத முன்துறைக்குப் போய் அங்கே புதிய நல்லடையாளச் சொல் பற்றிய செய்தி பரவச் செய்து விட்டு உடனே விடிவதற்குள் திருமோகூர் திரும்பிக் கொண்டிருப்பான்’ என்று நினைத்துக் கொண்டார் அவர். இந்தப் புதிய நல்லடையாளச் சொல் போய்ச் சேருவதற்குள், பழைய நல்லடையாளச் சொல்லை வைத்து எதிரிகள் எதுவும் குழப்பங்கள் புரிந்திருப்பார்களோ என்ற தயக்கமும் ஒரு கணம் அவர் மனத்தில் உண்டாயிற்று அப்போது. அப்படிக் குழப்பங்கள் நடந்திருக்க முடியாது என்பதும் அடுத்தகணமே அவருடைய மாசுமறுவற்ற மனத்தில் தெளிவாகத் தோன்றியது.

நீராடிக் கரையேறி மீண்டும் தம்முடைய தனி இடத்துக்குத் திரும்பி அவர் வழிபாட்டையும், நியமங்களையும் முடித்துக் கொண்டு எழுந்தபோது, காலையில் சந்தித்த முனையெதிர் மோகர்களில் ஒருவன் திரும்பி வந்து அவரைக் காணக் காத்திருந்தான்.

‘என்ன?’ என்று பார்வையாலேயே அவனை வினாவினார் அவர். அந்தக் கூரிய பார்வையில் உள்ளடங்கி நிற்கும் கேள்வியும், குறிப்பும் வந்தவனுக்குப் புரிந்தன. அவன் மெல்லிய குரலில் அருகே நெருங்கிக் கூறினான்:-

“ஐயா! இன்னும் கூட அந்தக் கொற்கை நகர்ப் பிள்ளையாண்டான் எழுந்திருக்கவில்லை. தாங்கள் கூறியனுப்பிய படி அவனுடைய வலது தோளின் மேற்பகுதியைப் பார்த்தேன். அங்கே சங்கு முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. தங்கள் கட்டளையின்படியே இதைத் தங்களிடம் தெரிவித்து விட்டுப் போகவே வந்தேன்.”

“நல்லது! அவன் உறங்கி எழுந்ததும், நீராடிப் பசியாறிய பின், அவனை நீயே இங்கு என்னிடம் அழைத்து வர வேண்டும். இப்போது நீ போகலாம்” என்று அவனிடம் ஆணையிட்டு அனுப்பினார் மதுராபதி வித்தகர். அவன் புறப்பட்டுச் சென்ற பின்பும் சிறிது நேரம் வரை அவர் ஏதோ சிந்தனையில் இலயித்தவராக அங்கேயே நின்று கொண்டிருந் தார். வலிமையும் கம்பீரமும் வாய்ந்த சிங்கம் ஒன்று, காட்டில் தனியே நின்று கொண்டிருப்பது போல் அந்த நிலையில் அவர் காட்சியளித்தார். நேர் எதிரே அம்பு பாய்வது போல் பார்க்கின்ற அந்தப் பார்வையும், சூழ இருந்த மலையின் பசுமை அடர்த்தியும், பாறைப் பிளவாகிய குகை வாயிலும் சேர்ந்து, அப்போது அவரைச் சிங்கத்தோடு ஒப்பிடுவதற்கு மிகவும் பொருத்தம் அளித்தன.

சிறிது நேரத்திற்குப் பின் உள்ளே திரும்பி, பாறைப் பிளவில் மிகவும் பத்திரமாக மறைத்து வைத்திருந்த ஒலைப் பெட்டியை எடுத்து, அதில் முடிச்சுப் போல் தென்பட்ட பட்டுத் துணிப் பொதியை அவிழ்த்து ஒன்பது முத்துகளையும் கூர்ந்து கவனித்தார். உருண்டு திரண்டு அளவில் சற்றே பெரியனவாகவும், நிலவின் ஒளியை உமிழ்வது போல் குளிர்ந்த கதிர் விரிப்பனவாகவும் இருந்த அந்த வெண்முத்துகளை என்ன காரணத்தாலோ, நெடுநேரம் கண்களை இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். பார்த்து முடித்ததும், மீண்டும் அந்த முத்துகளை, அவை இருந்த பட்டுத் துணியிலேயே கவனமாக முடிந்து வைத்தார். பின்பு அதே ஒலைப் பேழையினுள் இருந்து சில தாமிரத் தகடுகளையும், ஒலைச் சுவடிகளையும் எடுத்துத் தனித் தனியே பார்த்தார். பாண்டிய குலத்தின் அரச வம்சாவளியைப் பற்றியும், களப்பிரர்கள் கைப்பற்றி ஆளத் தொடங்கிய பின் அந்தப் பழைய பாண்டிய வம்சத்தின் கடைசிக் கொழுந்துகள் எப்படி, எங்கே யார், யாராக எஞ்சியிருக்கின்றனர் என்ற குறிப்புகள் பற்றியும் அந்தச் செப்பேடுகளிலும், ஒலைச் சுவடிகளிலும், மதுராபதி வித்தகரின் தந்தையார், பாட்டனார், முப்பாட்டனார் காலத்துக் கணக்குகள் எழுதப்பட்டிருந்தன.

அவற்றைப் பரிசீலனை செய்து பரிசோதனை பார்த்த பின், கைவசம் இருந்த வெற்று ஒலைகளில் எழுத்தாணியால் ஏதேதோ குறித்து, ஒரு கணக்குப் பார்த்தார் மதுராபதி வித்தகர். நாள், நட்சத்திரம், திதி உட்படப் பல பிறப்புக் கணிதக் குறிப்புகள் அந்த ஒலைகளிலே இருந்தன. சில கணிப்புகளை எழுதிய போது மேலே எழுதத் தோன்றாமல் அவர் கையும் தயங்கி நடுங்கியது. முகமும் இலேசாக இருண்டது. வேறு சில குறிப்புகளை எழுதும் போது அவர் கை விரைந்து உற்சாகமாக எழுதியது. முகத்திலும் கண்களிலும், ஒளியும், மகிழ்ச்சியும் மெல்லிய சாயல்களாகத் தென்பட்டன. களப்பிரர் கொடுங்கோலாட்சி ஒழிந்து, மீண்டும் பாண்டியர் பேரரசு தழைப்பதற்கான சாத்திய, அசாத்தியங்களை நாள்களாலும், கோள்களாலும் கணித்துப் பார்க்க முயன்றார் அவர். அவர் முகத்தில் மாறி,மாறி இருளும், ஒளியும் தெரிந்தன. சில நாழிகை நேரம் இந்தக் கணிப்பில் கழிந்தது.

அரும் பெரும் மூலிகை ஒன்றைப் பத்திரமாகச் சேகரித்து வைப்பது போல் அந்த மாபெரும் இரகசியங்களை இத்தனை காலமாகக் கட்டிக் காத்து வந்திருக்கிறார் அவர். பாண்டியர் மரபில் தோன்றிய மீதமிருந்த ஐவரில், இருவர் களப்பிரர்களால் கொலை செய்யப்பட்ட காலங்களையும் எண்ணிப் பார்த்தார் அவர். சுவடிகளில் அந்த இருவரின் பிறப்பு, வளர்ப்பு, நாள் கோள்களைப் பற்றிப் படித்தவுடன், அது தொடர்பான கழிவிரக்க நினைவுகளையும், துயரங்களையும் அவர் மனம் அடைந்தது. இறந்து விட்டவர்களைக் கழித்து, மீதியிருக்கும் மூவரைக் கணக்கிட்ட போது மூன்று முனைகளை உடைய ஒரு திரிசூலம்தான் அவருக்கு உருவகமாக நினைவில் தோன்றியது. அந்தத் திரிசூலத்திலும், ஒரு முனை மிகவும் மருங்கிக் குன்றிப் போயிருந்தது போல் பட்டது. தென்னவன் சிறுமலை மாறனும், திருக்கானப்பேர்ப் பாண்டியர் குல விழுப்பரையரின் பேரன் இளையநம்பியும், எவ்வளவிற்குக் கூர்மையாகவும், எதிரிகளைப் பாய்ந்து அழிக்கும் வல்லமை உடையவர்களாகவும் இருந்தார்களோ, அவ்வளவிற்கு மூன்றாமவனாகிய கொற்கைப் பெருஞ்சித்திரன் எதற்கும் பயனற்ற மந்தத் தன்மை உடையவனாக இருந்தான். பெரியவர் மதுராபதி வித்தகருக்கு இது முன்பே தெரியும் என்றாலும், இளையநம்பியையும், தென்னவன் மாறனையும் பற்றிய நம்பிக்கையில் இந்த மூன்றாமவனைப் பற்றிய பலவீனத்தை மறந்திருந்தார் அவர். எங்கெங்கோ மறைந்து வளர்ந்து வந்த இந்த மூவருமே, இப்போது பாண்டியர் கோநகரை நெருங்கி வந்திருக்கிறார்கள் என்பது அவருக்கு நம்பிக்கையை அளித்திருந்தது. பொருளுக்கு உரிமையும் உடமையும் கொண்டாட வேண்டியவர்கள் அதன் மிக அருகே நெருக்கமாக வந்து விட்டார்கள் என்பது பொருள் நிச்சயம் மீட்கப்படும் என்று நம்புவதற்கு இடம் கொடுத்தது. ஒலைப் பேழையை மூடிப் பட்டுக் கயிற்றால் கட்டி, மீண்டும் அதனைப் பாறைப் பிளவில் மறைத்து வைத்து விட்டு அவர் திரும்பி நிமிர்ந்த போது முனையெதிர் மோகர் படையின் அந்த வீரன், கொற்கைப் பிள்ளையாண்டானோடு அங்கே உள்ளே வந்து கொண்டிருப்பதைக் கண்டார்.

  1. பல் விளக்குதல்