உள்ளடக்கத்துக்குச் செல்

நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/22. களப்பிரர் கபடம்

விக்கிமூலம் இலிருந்து



22. களப்பிரர் கபடம்

கொல்லன் திருமருத முன்துறையில் இருந்து மோகூர் திரும்பித் தன் உலைக் களத்தில் சிறது நேரம் தங்கிய பின், விடிவதற்குச் சிறிது நாழிகைக்கு முன்புதான் காராளர் மாளிகைக்குச் சென்றான். அவன் செல்வதற்கு முன்பே, காராளர் பள்ளி எழுந்து கழனிகளைச் சுற்றிப் பார்த்து வருவதற்காக மாளிகையிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். கொல்லனைக் கண்டதும், “நேற்றைக்கு நள்ளிரவே பூத பயங்கரப் படை அறவே மோகூரிலிருந்து திரும்பிச் சென்று விட்டது. இனி நமக்கு எந்தக் கவலையும் இல்லை! எனக்கும் என் மாளிகையைச் சேர்ந்தவர்களுக்கும், இந்தச் சில நாட்களில் பூத பயங்கரப் படையினரால் நேர்ந்த பரிசோதனைகளையும், காவல்களையும் மறந்து எப்போதும் போல் அரண்மனையோடும் நல்லுறவும், நட்பும் கொண்டிருக்க வேண்டும்-என்று அரண்மனையிலிருந்து எனக்குச் சொல்லி அனுப்பி விட்டார்கள்!” என்று காராளர் அவனிடம் கூறினார். இதைக் கேட்டவுடனே கொல்லன் எவ்வளவு உற்சாகத்தை அடைவான் என்று காராளர் எதிர்பார்த்திருந்தாரோ, அவ்வளவு உற்சாகத்தை அவன் அடையவில்லை. அவர் கூறியதற்கு, அவனுடைய பதில் உணர்வு என்ன என்பதே அவருக்குப் புரியவில்லை. அது அவருக்கு வியப்பை அளித்தது. மேலும் வெளிப்படையாக வலிந்து அவனிடம் அவரே கேட்டார்:

“இது பற்றி நீ என்ன நினைக்கிறாய்? திருமோகூரைப் பற்றியும், என்னைப் பற்றியும் களப்பிரர்களுக்கு ஏற்பட் டிருந்த சந்தேகங்கள் தீர்ந்து விட்டன என்று எனக்குத் தோன்றுகிறது..." “பொறுத்தருள வேண்டும் ஐயா! எனக்கு அப்படித் தோன்றவில்லை. இதில் ஏதோ கபடம் இருக்கக் கூடும் என்றே நான் நினைக்கிறேன். இங்கிருந்துதான் நம்முடைய மிகப் பெரிய அந்தரங்கமான நல்லடையாளச் சொல் அவர்களுக்கு எட்டியிருக்கிறது. இங்கேயிருந்துதான் தென்னவன் மாறனையும், அறக் கோட்டது மல்லனையும் அவர்கள் சிறைப் பிடித்திருக்கிறார்கள். உங்களையும் சில நாட்கள் இந்த மாளிகை எல்லைக்குள்ளேயே காவலில் இருக்கச் செய்து வெளியேற விடாமல் தடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே என்னிடமே ஒரு பூத பயங்கரப் படை வீரன் தேடி வந்து, நம் நல்லடையாளச் சொல்லைக் கூறிப் பதிலுக்கு நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதைப் பரிசோதித்து விட்டான். பெரியவருடைய எச்சரிக்கை மனத்தில் இருந்ததால், நான் சாதுரியமாக அந்தப் பரிசோதனையில் தப்பினேன். இல்லாவிட்டால் களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருக்க நேர்ந்திருக்கும். முன்பு சிறைப்பட்டவர்களையே களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது. இப்போது புதிதாக நானும் மாட்டிக் கொண்டிருந்தால் என்ன ஆவது?”

இங்கே இப்படி, அவன் அவரைக் கேட்டுக் கொண்டிருந்த போதுதான் மாளிகையின் உட்பகுதியிலிருந்து காராளர் மனைவியும், மகளும் வருவது தெரிந்தது. ஆனால் காராளர் அதற்குள், “வா! பேசிக் கொண்டே உலாவி விட்டு வரலாம்” என்று அவனையும் அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டார். அவனும் அவரைப் பின் தொடர்ந்து, வெளியேறிச் செல்ல வேண்டியதாயிற்று. ஒரு சில காரணங்களை முன்னிட்டுப் புதிய நல்லடையாளச் சொல் பற்றிய செய்தியை அவரிடம் தனிமையில் கூற விரும்பினான் அவன். அதனால் அவர் அங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்று கூறிய போது, அவனும் அதை விரும்பி உடன் சென்றான். மாளிகையிலிருந்து வெளியேறிச் சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே, “பெரியவர் மதுராபதி வித்தகர் எங்கே, எந்தத் திசையில், எவ்வளவு தொலைவில், எப்படித் தங்கியிருக்கிறார்கள்?” என்பதைத் தமக்கு உடனே கூறச் சொல்லி, இரண்டு மூன்று முறை கொல்லனை வற்புறுத்தி விட்டார் அவர். தன்னை விட உயர்ந்தவரும், தன்னைப் போன்றவர்களின் செஞ்சோற்றுக் கடனுக்கும், நன்றிக்கும் உரியவரும் ஆகிய காராளரிடம், “தயை செய்து அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள்!” என எப்படிக் கடுமையாக மறுத்துச் சொல்வது என்று புரியாமல் திகைத்தான் கொல்லன். திகைப்பு ஒரு புறமிருந்தாலும், முள்ளிலிருந்து மேலாடையை எடுப்பவன், முள்ளும் குத்தி விடாமல், ஆடையும் கிழிந்து விடாமல் மிக மிகக் கவனமாக ஆடையை எடுப்பது போல், அவர் மனமும் புண்படாமல், தன் உணர்வும் பலவீனப்பட்டுப் போகாமல், மிக மிகச் சாதுரியமாக அவருக்கு மறுமொழி கூறினான் கொல்லன்:-

“ஐயா! தாங்கள் இப்போது என்னிடம் வற்புறுத்திக் கேட்பதை விடப் பெரிய செய்தி ஒன்றைத் தங்களிடம் கூறுவதற்காகவே, பெரியவர் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார். நமது பழைய நல்லடையாளச் சொல் எப்படியோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது. உடனே அந்தச் சொல்லை மாற்றிப் புதிய சொல்லை நியமிக்கா விட்டால் ஏற்படும் அபாயங்களை உணர்ந்து புதிய சொல்லை நியமித்து அனுப்பி இருக்கிறார், அவர். அதைத் தங்களிடமும் தங்கள் மூலமாக வேறு சிலரிடமும் அறிவிக்கவே, அடியேன் இவ்வளவு அவசரமாக இங்கே வந்தேன்.”

“என்ன சொல் அது? மற்றப் பகுதிகளுக்கும் அதைச் சொல்லி அனுப்பியாயிற்றா, இல்லையா?”

காராளரின் இந்த வினாவுக்கு அதற்கு முன் பேசியது போல், உரத்த குரலில் மறுமொழி கூறாமல் அவர் காதருகே நெருங்கி, அவருக்கு மட்டுமே கேட்கிற இரகசியக் குரலில் மறுமொழி கூறினான் கொல்லன். அவரும் அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார்.

“நீ எச்சரிப்பதைப் பார்த்தால், இந்தப் புதிய நல்லடையாளச் சொல்லை எல்லாருக்கும் கூற வேண்டாம் என்றல்லவா அர்த்தப் படுகிறது?” “ஆம், ஐயா! அப்போதுதான் இதனுடைய இரகசியத்தைக் காப்பாற்ற முடியும்! சிலரிடம் ‘பழைய நல்லடையாளச் சொல்லை, எங்கும், எவர் முன்னிலையிலும் திருப்பிக் கூறக் கூடாது; அது களப்பிரர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்து விட்டது' -என்ற எச்சரிக்கையை மட்டும் செய்தால் போதுமானது. புதியதைச் சொல்லவே வேண்டியதில்லை. புதிய நல்லடையாளச் சொல்லையும் மாற்றும் நிலை வரக் கூடாதென்பதற்காகவே இந்த ஏற்பாடு.”

“இந்த ஏற்பாடு பாராட்டத் தக்கதுதான்! ஆனால், பெரியவர் இங்கே என்னருகில் இல்லாமல் போனால், எந்த ஏற்பாடும் சிறப்பாக நடைபெறாது. அவரை வணங்குவதாலும், வழிபடுவதாலுமே நான் ஆயிரம் யானையின் பலத்தை அடைந்து வந்தேன். சில நாட்களாக, அந்தச் சுடரொளி முக மண்டலத்தைக் காணாமல் எனக்குப் பித்துப் பிடித்து விடும் போலாகி விட்டது. என்னுடைய இந்த மன நிலையை நீயாவது உணர முடியும் என்று நான் நம்புகிறேன். நானாகத் தேடிப் போய் அவரைக் காண, அவரது இருப்பிடத்தை நீ எனக்குச் சொல்ல மாட்டேன் என்கிறாய். அவராக மீண்டும் நான் நாள் தோறும் காணும் படி, இங்கு வந்து தங்கவும் வழி இல்லை என்கிறாய். அவர் தங்கியிருந்த அந்த மாபெரும் ஆலமரத்தையும், அவர் நீராடி எழும் தாமரைப் பொய்கையையும் பார்க்கும் போதெல்லாம் நான் கண்களில் நீர் நெகிழ மெளனமாக அழுவது போல் ஆகி விடுகின்றேன். தேர்ந்த வழிகாட்டியைக் கிடைப்பதற்கு அரிய குருவை, என்னிடமிருந்து விலக்கிக் கொண்டு போய் விட்டு, நல்லடையாளச் சொல்லை மட்டும் நீ வந்து எனக்குக் கூறுவதில் பயன் என்ன?”

காராளரின் உணர்ச்சிகளில் இருந்த வேதனை, அவனுக்குப் புரிந்தது. ஆயினும், அவனால் அது தொடர்பாக அவருக்கு எந்த உதவியையும் புரிய முடியவில்லை.

“நீங்கள் மதிக்கிற அதே பெரியவரை நானும் மதிப்பதால்தான், அவருடைய இருப்பிடத்தை உங்களுக்குக் கூற முடியவில்லை ஐயா!" “ஏன் அப்படி? நான் என்னப்பா பாவம் செய்தேன்?”

“அதில் பாவ,புண்ணியம் எதுவும் இல்லை. நீங்கள் எங்கே சென்றாலும், பூத பயங்கரப் படை உங்களைப் பின் தொடரும் என்பது இன்னும் கூட உறுதி தான் ஐயா! திருமோகூரை விட்டு நீங்கள் வெளியேறினால் உங்களைப் பின் தொடர்ந்து கண்காணிப்பதற்கு, நான்கு திசைப் பாதைகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள். இங்கிருந்து அறவே வெளியேறி விட்டதாக, நீங்கள் கூறும் பூத பயங்கரப்படை நம் ஊரைச் சுற்றிலுமுள்ள எல்லாக் காடுகளிலும் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிந்து மறைவாகத் தங்கியிருக்கிறது. இதை நீங்கள் அறிய மாட்டீர்கள். இப்படி எல்லாம் நீங்கள் அறியவோ, அநுமானம் செய்யவோ கூடாதென்று, உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விடுவதற்குத்தான் களப்பிரர்கள் உங்களைப் பாராட்டி, நல்லுறவும் நட்பும் நீடிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். அந்த வலையில் நீங்கள் விழாமல் இருக்க வேண்டும். என்னைப் போன்றவர்கள், எப்படியும் தப்பி விடுவோம். ஆனால் நீங்கள் பெரிய வேளாளர். அரசருடைய களஞ்சியங்களுக்கே நெல்லளிப்பவர். எங்கே புறப்பட்டுப் பயணம் செய்தாலும், ஒரு சிறு நில மன்னர் உலாப் புறப்படுவது போல் பல்லாக்கு, சிறு படை எல்லாம் உங்களோடு உடன் வரும். அப்படி நீங்கள் செல்வதால் பெரியவருக்கு ஆபத்துகள் அதிகமாகும் என்று தெரிந்தே, உங்களிடமும், கோநகரில் உள்ளவர்களிடமும் இப்போது தாம் இருக்கும் இடத்தைக் கூற வேண்டாம் என்று பெரியவர் தடுத்திருக்கிறார். இது நியாயமானது என்றே நானும் கருதுகிறேன். தவிர, உங்களிடம் பெருந்தயக்கத் தோடு இன்னொரு வேண்டுகோளையும் இப்போது சொல்ல ஆசை!”

“என்ன அது? சொல்லேன்.”

“தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?”

“தவறாக எடுத்துக் கொள்ள இதில் என்ன இருக்கப் போகிறது? ஒரு பொது நோக்கத்திற்காக நாம் யாவரும் சேர்ந்து உழைக்கிறோம். கவலைப்படுகிறோம். கட்டுப்படுகிறோம்.”

காராளர் இவ்வளவு மனம் விட்டுக் கூறிய பின்பும் கொல்லன் தயங்கினான். தலை குனிந்தான். காராளருக்கும் அது அப்படி என்ன விநோத வேண்டுகோளாக இருக்கும் என்பது புரியவில்லை. அவர் கொல்லனின் முகத்தைப் பார்த்தார்.