நித்திலவல்லி/முதல் பாகம்/1. நல்லடையாளச் சொல்

விக்கிமூலம் இலிருந்து

1. நல்லடையாளச் சொல்

திருக்கானப்பேர்க் காட்டிலிருந்து மதுரை மாநகருக்குப் போகிற வழியில், மோகூரில் மதுராபதி வித்தகரைச் சந்தித்து விட்டுப் போக வேண்டும் என்று புறப்படும் போது பாட்டனார் கூறியிருந்ததை நினைத்துக் கொண்டான் இளையநம்பி. அவன் வாதவூர் எல்லையைக் கடக்கும் போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று. மருத நிலத்தின் அழகுகள் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும், சோலைகளும், நந்தவனங்களும், மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து வளர்ந்த மேடுகளுமாக நிறைந்திருந்தன. கூட்டையும், பறவைகளின் பல்வேறு விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன.

தோட்கோப்பாக வலது தோளில் தொங்க விட்டுக் கொண்டிருந்த கட்டுச் சோற்று மூட்டையைக் கரையில் கழற்றி வைத்து விட்டு, ஒரு தாமரைப் பொய்கையில் இறங்கி முழங்காலளவு நீரில் நின்று முகத்தையும், கைகளையும் கழுவிக் கொண்டு அமுதம் போன்ற அந்தப் பொய்கை நீரைத் தாகம் தீரக் குடித்தான் இளையநம்பி. குளிர்ந்த நீர் பட்டதும், வழி நடையால் களைத்திருந்த உடலுக்கு இதமாக இருந்தது. சூடேறியிருந்த கண்களில், சில்லென்று தண்ணீர் நனைந்ததும் பரம சுகமாயிருந்தது.

இருட்டுவதற்குள் மோகூரை அடைந்து விட வேண்டும் என்பது அவன் திட்டம். மோகூரில் மதுராபதி வித்தகர் இருக்கும் இடத்தைக் கேட்டறிய வேண்டும். களப்பிரர்களின் கொடுமைக்கு அஞ்சி இப்போதெல்லாம் அவர் ஒரே இடத்தில் இருப்பதில்லையாம். பல ஆண்டுகளாக ஆட்சியுரிமையைப் பெற்றிருந்தும் கொள்ளையடித்தவர்கள் தாங்கள் கொள்ளை கொண்ட பொருளுக்கு உண்மையிலேயே உரியவன் எப்போதாவது அவற்றைத் தேடி வந்து மீட்பானோ என்ற பயத்துடனேயே இருப்பதுபோல்தான் களப்பிரர்களும் பாண்டிய நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.

மறுபடி பாண்டியர்குலம் தலையெடுக்க யார் யார் உதவுகிறார்கள் என்று சந்தேகப்பட்டாலும் அப்படிச் சந்தேகத்துக்கு உரியவர்களை ஈவிரக்கமின்றி துன்பப்படுத்தியும், கொலை செய்தும், சிறை பிடித்தும், சித்திரவதைகள் செய்தும் கொடுமை இழைக்கக் களப்பிரர்கள் தயங்கியதில்லை.

பாண்டிய மன்னர்களுக்கு அரச தந்திரங்களையும், உபாயங்களையும் சொல்லும் மதி மந்திரிகளின் பரம்பரையில் தமிழ்ப் புலவர் மரபில் வந்தவர் மதுராபதி வித்தகர். அந்தப் பரம்பரையின் கடைசிக் கொழுந்தையும்கூடக் கிள்ளிவிடக் களப்பிரர்களுக்கும் ஆசைதான். ஆனால், அது அவர்களால் முடியாத காரியமாயிருந்தது. மூத்துத் தளர்ந்து போயிருந்தாலும் மதி நுட்பத்திலும், தந்திர உபாயங்களாலும் சிறிதளவு கூடத் தளராமல் மங்கலப் பாண்டிவள நாட்டின் பல்வேறு ஊர்களிலும் மறுபடி பாண்டியராட்சி மலர்வதற்கு ஒர் இரகசிய இயக்கத்தையே கட்டி வளர்த்து உருவாக்கிக் கொண்டிருந்தார் மதுராபதி வித்தகர். மதுராபதி வித்தகரைப் பற்றிப் பாட்டனார் சொல்லியிருந்ததெல்லாம் இளைய நம்பிக்கு ஒவ்வொன்றாக நினைவு வந்தன. கொள்ளைக் காரர்களைப்போல் வந்து பாண்டிய நாட்டைப் பிடித்து ஆண்டுகொண்டிருக்கும் களப்பிரர்களிடமிருந்து அதை மீட்க முயன்று கொண்டிருக்கும் ஓர் இணையற்ற இராஜதந்திரியைச் சந்திப்பதற்குப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது அவனுக்குப் பெருமிதமாக இருந்தது. அவரை எப்படி வணங்குவது, எந்த முதல் வாக்கியத்தினால் அவரோடு பேசத் தொடங்குவது, தான் இன்னான் என்று எப்படி அவரிடம்  உறவு சொல்லிக் கொள்வது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே மோகூரில் நுழைந்தான் இளையநம்பி.

கணீரென்ற மறை ஒலிகள் ஏறியும் இறங்கியும் சுருதி பிறழாமல் ஒலித்துக் கொண்டிருந்த அந்தணர் வீதியில் நுழைந்து எதிர்ப்பட்ட முதியவர் ஒருவரிடம்-

“ஐயா, பெரியவரே! நான் மதுராபதி வித்தகரைக் காணவேண்டும். அருள்கூர்ந்து இப்போது அவர் எங்கே தங்கி இருக்கிறார் என்பதைக் கூறினால் பேருதவியாக இருக்கும்” என்று தணிந்த குரலில் வினவினான் அவன். தான் இவ்வாறு வினவியதும் அந்த முதியவர் நடந்து கொண்ட விதம் அவனுக்குப் புதிராக இருந்தது. அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஒருகணம் தயங்கியபின் சிரித்துக்கொண்டே போய்விட்டார் அவர். இளையநம்பிக்குக் கடுஞ் சினம் மூண்டது. அடுத்து எதிர்ப்பட்ட மற்றொருவரை வினாவிய போதும் அவரும் அவனை ஏறிட்டுப் பார்த்து ஒருகணம் தயங்கியபின் வேகமாக நடந்து விட்டார்.

எதிர்ப்படுகிறவர்கள் கண்டு பேசத் தயங்கும்படி தன் முகத்தில் அப்படி என்ன மாறுதல் நேர்ந்திருக்க முடியும் என்பது அவனுக்குப் புரியவில்லை. கதைகளில் வருகிற அசுரர்கள் முகம் போல் திடீரென்று தன் கடைவாய்ப் புறங்களில் சிங்கப் பற்களோ, அல்லது முன் தலையில் எம கிங்கரர்களின் கொம்புகள் போல் கோரத் தோற்றமோ உண்டாகிவிட்டதோ என்று கூடச் சந்தேகமாயிருந்தது. பாட்டனாரோ --

“மோகூரில் போய்த்தான் வித்தகர் இருக்குமிடத்தை நீ அறிந்துகொள்ள முடியும்! பெரியவர் மோகூர் வட்டத்தில் இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். நீ வரப் போகிறாய் என்பதையும், உன்னை எப்படி எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் அவருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் சொல்லியனுப்பியிருக்கிறேன். கவனமாக நடந்துகொள்! எங்கு பார்த்தாலும் களப்பிரர்களின் ‘பூதபயங்கரப்படை’ நம் போன்றவர்களைப் பிடித்துக் கொண்டுபோகக் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு திரிகிறது. நீயோமுரட்டுப்பிள்ளை, எங்கும் எதற்கும் உணர்ச்சிவசப்பட்டு உன்னை வெளிப்படுத்திக் கொண்டு விடாதே. பாண்டவர்கள்கூட வனவாசமும் அஞ்சாத வாசமும் செய்திருக்கிறார்கள். நாமும் இப்போது ஏறக்குறைய பாண்டவர்களின் நிலையில்தான் இருக்கிறோம்” என்று அறிவுரை கூறியிருந்தார். அப்படி அவர் அறிவுரை கூறுகையில், “பாண்டவர்கள் கெளரவர்களோடு சூதாடினார்கள். நாட்டை இழந்தார்கள். நாம் யாரோடும் சூதாடவில்லையே தாத்தா?” --என்று பதிலுக்குத் தான் கேட்டதும், “சூதாடாமலே களப்பிரர்களுக்கு நாட்டைத் தோற்று விட்டோம் நாம்! இப்படி அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளை என்னிடம் கேட்பது போல் மதுராபதி வித்தகரிடம் தவறிப்போய்க் கூடக் கேட்காதே. அவர் வார்த்தைகளைப் பொன்னுக்கு மாற்று உறைத்துப் பார்ப்பது போல் பார்க்கிறவர். சொற்களை எண்ணிச் செலவழிக்கிறவர். எதிராளியின் சொற்களை எண்ணி நிறுத்துப் பார்க்கிறவர்"-- என்பதாகப் பாட்டனார் அப்போது தனக்கு மறுமொழி கூறியிருந்ததும் இளையநம்பிக்கு ஞாபகம் வந்தன. நினைக்கும் போது அவனுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மதுராபதி வித்தகர்தான் வார்த்தைகளை எண்ணிச் செலவழிப்பவர் என்று பாட்டனார் சொன்னார். அந்தப் பெரியவரைப் பார்க்க முடிவதற்கு முன்பே வார்த்தைகளைச் செலவழிக்கவே விரும்பாதவர்கள் ஒவ்வொருவராக எதிர்ப்படுவது போலிருந்தது. கேட்கிறவர்கள் எல்லாம் தனக்கு ஏன் மறுமொழி சொல்லாமல் போகிறார்கள் என்பது அவனுக்கு விளங்காத மர்மமாக இருந்தது. உலகைச் சூழும் மாலை இருள் அவன் மனத்தையும் சூழ்ந்தது.

அடுத்து அவன் நுழைந்த வேளாண் மக்கள் தெருவில் கலப்பைக்குக் கொழு அடிக்க இரும்பைக் காய்ச்சிக் கொண்டிருந்த ஒரு கொல்லனின் உலைக்களம் எதிர்ப்பட்டது. செங்கீற்றாக மின்னிப் பளபளக்கும் காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்த அந்தக் கொல்லனின் கண்கள் சிவந்து கழன்று விழுந்து விடுவது போல் உலை ஒளிபட்டு மின்னின. வைரம் பாய்ந்த கருந்தேக்கு மரத்தில் செதுக்கி எடுத்து எண்ணெய் பூசினாற் போல் மின்னும் அவனுடைய அகன்ற மார்பையும் திரண்ட தோள்களையும் கண்டபோது--

“பாண்டி மண்டலத்தின் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் நிறைந்திருக்கும் இப்படிப்பட்ட வலிமை வாய்ந்த உழைப்பாளிகளின் பயனை எல்லாம் எங்கிருந்தோ வந்த அந்நியரான களப்பிரர்கள் அல்லவா அநுபவிக்கிறார்கள்” என்று கழிவிரக்கத்தோடு நினைந்து நெட்டுயிர்த்தான் இளையநம்பி.

“கரும்பொற் கொல்லரே! மதுராபதிப் பெரியவரைப் பார்க்க வேண்டும்... அவர் இருக்கும் இடத்தைப் பற்றி வினாவைத் தொடங்கினாலே இந்த ஊரில் எல்லாரும் ஊமைகளாகி விடுகிறார்கள்.”

“கேட்க வேண்டியதைச் சொல்ல வேண்டிய வார்த்தையால் கேட்டால் பதில் சொல்வார்கள்"--

“நான் என்ன பாலிமொழியிலா கேட்கிறேன்? தமிழில் தானே கேட்கிறேன்?” .

‘பாலியில் கேட்டால் பதில் கிடைக்காது...இதுதான் கிடைக்கும்” -என்று சம்மட்டியால் பழுக்கக் காய்ந்த கொழுமுனையை மறுபடி ஓங்கி ஓங்கி அறையத் தொடங்கினான் கொல்லன். .

“ஐயா! நான் பேசியதைத் தவறாகக் கொள்ளக்கூடாது. களப்பிரர்கள் பாண்டி நாட்டில் தமிழ் வழக்கை அழித்துப் பாலிமொழியைப் புகுத்துவதை என்னைப் போலவே நீங்களும் வெறுக்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் என்னை நம்ப வேண்டும்"--

“சொல்ல வேண்டிய வார்த்தையைச் சொன்னால் நம்பலாம்." இப்படி மீண்டும் அந்தக் கொல்லன் புதிராகிவிடவே இளையநம்பிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தனக்கு மறுமொழி கிடைக்கவில்லையே என்று ஆத்திரமாக இருந்தாலும் களப்பிரர்களையும், பாலிமொழியைப் பாண்டிய நாட்டில் வலிந்து புகுத்த முயலும் அவர்கள் கொடுமையையும் தன்னைப் போலவே அவனும் எதிர்ப்பது இளையநம்பிக்கு ஆறுதலளிக்கக் கூடியதாயிருந்தது. களப்பிரரை வெறுக்கும் தோள் வலிமை வாய்ந்த வினை வல்லான் ஒருவனை முதல் முதலாகச் சந்தித்துவிட்ட மகிழ்ச்சியோடு நடந்தான் அவன்.

இன்னும் அவன் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கான வழியை அறிந்துகொள்ள முடியவில்லை. மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தை அறிவதில் இவ்வளவு இடர்ப்பாடுகள் வரும் என்பது அவன் முற்றிலும் எதிர்பாராதது. நடந்துகொண்டே இருந்தவன் வீதியில் தனக்கு முன்னால் இரண்டு பாக தூரத்தில் ஒரு பெண் கையில் திருவிளக்கு ஏந்திச் செல்வதைக் கண்டான்.

அவள் காலணிகளின் பரல்கள் எழுப்பிய ஒலி அந்த வீதியின் தனியான சங்கீதமாயிருந்தது. மேகலையிட்டுக் கட்டியிருந்ததாலோ என்னவோ அவளது இடை இல்லையோ உண்டோ என்று நினைக்கும்படி சிறிதாகத் தோன்றியது. பூச்சூடிய கருங்குழலும், விளக்கேந்திய கையுமாக அவள் நடந்து சென்ற பின்னலங்காரத்தில் ஒரு கணம் மயங்கி அடுத்தகணமே தன்னுணர்வு பெற்று அவளைக் கை தட்டிக் கூப்பிடலாமா, அல்லது அருகே சென்று கேட்கலாமா என்று சிந்தித்தான். இருள் மயங்கும் வேளையில் தெருவில் தனியே செல்லும் இளம் பெண்ணைத் தன்னைப்போல் ஊருக்குப் புதிய இளைஞன் கைதட்டிக் கூப்பிடுவது நயத்தக்க நாகரிகமாக இராதென்றும் தோன்றியது. படமெடுத்த நிலையில் அரச நாகம் ஒன்று நடந்து செல்வதுபோல் மேகலைக்குக்கீழே அவள் நடையின் பின்னலங்காரத்தைக் கண்டபடியே எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து போகலா மென்று கூடத் தோன்றியது. நன்றாக இருட்டுவதற்குள் பெரியவரைச் சந்தித்துவிட வேண்டு மென்ற முனைப்பினால் அவன் கால்கள் விரைந்தன.

மிக அருகே யாரோ ஆண்பிள்ளை விரைவாக நடந்து வரவே அவள் திரும்பினாள். தான் நினைத்துக் கற்பனை செய்திருந்ததைவிட அவள் பேரழகியாக இருந்ததைக் கண்டு அந்த வியப்பில் பேசவேண்டிய உரையாடலுக்கு வார்த்தைகள் பிறவாமல் அவள் முகத்தைப் பார்த்தபடியே நின்றுவிட்டான் இளையநம்பி. ‘ஒரு தங்க நாணயம் எல்லாப் பக்கங்களிலும் பிரகாசமாகத்தான் இருக்க முடியும்’-- என்று தனக்குள் வியப்போடு சொல்லிக்கொண்டான் அவன். பின்பு அவளை அணுகி வினவினான்:--

“பெண்ணே! எனக்கு ஒர் உதவி செய்யவேண்டும்! மதுராபதி வித்தகரின் இருப்பிடம் தெரிய வேண்டுமென்று அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்வூரில் ஒருவராவது அதைச் சொல்லமாட்டேன் என்கிறார்கள்...”

அவனுக்கு மறுமொழி கூறாமல் புன்முறுவல் பூத்தாள் அந்தப் பெண். விளக்கொளியில் அந்தப் புன்னகையின் அதே வசீகரம் அவள் கண்களிலும், கன்னங்களிலும் பரவினாற் போல் அத்தனை அழகாயிருந்ததை இளையநம்பி கண்டான். சிரிப்பு என்ற வசீகர வனப்பைக் கண்களிலும், கன்னங் களிலும்கூட நிறைத்துக் கொண்டு நிற்பதுபோல் எதிரே நின்றாள் அவள். சிரிக்கும்போது தானே புன்னகையாக மலர்வதுபோன்ற அவள் தோற்றமும் வனப்பும் இளைய நம்பிக்கும் பிடித்திருந்தாலும் தன்னுடைய வினாவுக்கு அவள் இன்னும் மறுமொழி கூறவில்லை என்பது வருத்தத்தை அளித்தது. சற்றே சினமும் மூண்டது.

“அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது.”

“முன்பின் தெரியாத அந்நிய ஆடவர்களுக்கு வழி காட்டுவதற்காகத்தான் மோகூரில் அழகிய பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு யாராவது சொல்லியிருந்தார்களா, என்ன?”

“அப்படியில்லை! கையில் விளக்குள்ளவர்கள் வழி காட்டாவிட்டால் வேறு யார்தான் வழிகாட்டப் போகிறார்கள்?”

‘'சாதுரியமான பேச்சு!”

‘'சாதுரியம் யாருடைய பேச்சில் அதிகமென்றுதான் புரியவில்லை. இந்த விநாடி என்னுடைய வினாவுக்கு நீ பதில் சொல்லாததுதான் மிகப் பெரிய சாதுரியம் பெண்ணே!”

“.......?”

மறுபடி அவள் சிரித்தாள். மெளனமானாள். அவன் சினத்தோடு தொடங்கினான்:

“உரையாடல் என்பது எதிரே நிற்பவரும் கலந்து கொள்ள வேண்டியது. சொல்லுக்கு ஒரு நாகரிகம் உண்டு. நாகரிகமுள்ள எல்லார்க்கும் அது தெரிந்திருக்க வேண்டும்.”

“ஐயா! நீர் பெரிய வம்புக்காரராக இருக்கிறீர். பேசினால் கேட்கக்கூடாததைக் கேட்டு மெளனமாக்குகிறீர். மெளனமாயிருந்தால் பேசச் சொல்லி வற்புறுத்துகிறீர். இனிமேல் நாகரிகத்துக்கு உம்மைக் கொண்டுதான் புது இலக்கணமே எழுதுவிக்க வேண்டும் போலிருக்கிறது.”--

சற்றே கோபத்துடன் அவள் இதைச் சொல்லியது போல் இளையநம்பிக்குத் தோன்றவே, ‘இவளோடு நயமாக இன்னும் பேச்சு வளர்த்து உண்மையை அறிவது’ என்று கருதி மேலும் அவளோடு உரையாடத் தொடங்கினான். அவன் வினாவியவர்களில் ஒருவர்கூட, ‘மதுராபதி வித்தகர் இருக்கு மிடம் எனக்குத் தெரியாதே'--என்று மறுமொழி கூறவில்லை. தெரிந்து கொண்டிருந்தும் தன்னிடம் அவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை.

‘கேட்கக் கூடாததைக் கேட்டு மெளனமாக்குகிறீர்'-- என்று இவள் கூறுவதிலிருந்து இவளுக்கும் அந்த இடம் தெரியும் என்பதை அவன் அநுமானம் செய்ய முடிந்தது. சிறிது பேச்சுக் கொடுத்தால் இவளிடமிருந்து தெரிந்து கொள்ள முடியுமென்று அவனுள் நம்பிக்கை பிறந்தது. சிறிய நேரப் பேச்சிலேயே அவள் ஊர்க் கோடியில் உள்ள கொற்றவை கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றச் செல்கிறாள் என்று அறிய முடிந்தது. அவனுக்கு எது வேண்டுமோ அதைத் தவிர மற்றவற்றை எல்லாம் பேசினாள் அந்தப் பெண்.

“ஒரு மண்டலத்துக்குக் கொற்றவை கோவிலில் நெய் விளக்கு ஏற்றுவதாக வேண்டுதல்” என்று அவள் கூறிய போது அவன் சிரித்துக்கொண்டே அவளைக் கேட்டான்;

“பெண்ணே! நான்கூட உங்கள் ஊர்க் கொற்றவையிடம் ஒரு வேண்டுதல் செய்து கொள்ளலாம் என்று பார்க்கிறேன்! வேண்டிக்கொள்ளட்டுமா?”

“என்ன வேண்டுதலோ அது?”

“வழிதெரியாமல் மயங்குகிறவர்களுக்கு வழி சொல்லும் நல்லறிவை இந்த ஊர்க்காரர்களுக்குக் கொடு என்று வேண்டிக் கொள்ளப் போகிறேன்.”

‘'நல்லறிவு இந்த ஊராருக்கு வேண்டிய மட்டும் இருக்கிறது. சொல்லப் போனால் உங்களுக்குத்தான் இப்போது அது இருப்பதாகத் தெரியவில்லை.”

இந்த மறுமொழிக்குப் பின் அவன் அவளோடு உரையாடலை நிறுத்தி விட்டான். அவன் முகத்தில் மலர்ச்சி மறைந்து விட்டதை அவளும் கண்டு கொண்டாள். இதன்பின் கொற்றவை கோவில்வரை அவர்கள் பேசிக் கொள்ள வில்லை. அவள் நெய் விளக்கு ஏற்றினாள். அவன் கொற்றவையை வணங்கினான். அந்த வணக்கத்துக்கு உடனே பயன் கிடைத்தது. அவன் மேல் அவளுக்கு இரக்கம் வந்திருக்க வேண்டும். அவள் அவனைக் கேட்டாள்:

“இப்போது இந்த இடத்தில் கொற்றவை சாட்சியாக எனக்கு ஒரு வாக்குக் கொடுத்தால் உங்களுடைய வினாவுக்கு நான் மறுமொழி கூறலாம்.”

“என்ன வாக்கு அது?” “மதுராபதி வித்தகருடைய இருப்பிடத்தை அறிய விரும்பும் நீங்கள் ஐயப்பாட்டுக்கு இடமில்லாத நல்லெண்ணத்தோடு தான் அதைக் கேட்கிறீர்கள் என்று உங்கள் குலதெய்வத்தின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்ய வேண்டும்! செய்வீர்களா?”

“துரோகிகள் செய்ய வேண்டிய சத்தியத்தைப் பாண்டிய குலம் ஒளி பெற பாடுபடும் நல்லவன் ஒருவனையே செய்யச் சொல்கிறாய் நீ. ஆனாலும் நான் அதைச் செய்கிறேன்! எனக்குக் காரியம் ஆக வேண்டும்.”

அவன் அவள் கூறியபடி சத்தியம் செய்ததும் அவள் கூறினாள்: .

“நீங்களும், நானும், இவ்வூராரும் எல்லாருமே பாண்டிய குலம் ஒளி பெறத்தான் பாடுபடுகிறோம். இப்படிப் பாடுபடுகிறவர்களை அவர்கள் எங்கிருந்தாலும் தேடித் தேடிக் கொல்வதற்காகவே களப்பிரர்கள் பூத பயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மீண்டும் பாண்டியராட்சி மலரப் பாடுபடுகிறவர்களின் இருப்பிடத்தை ஒற்றறிவது, பாண்டியருடைய குலத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்கள் அகப்பட்டால் எந்த நீதி விசாரணையும் இன்றி அவர்களை உடனே கொன்று விடுவது ஆகிய காரியங்களைச் செய்வதற்காகவே பூத பயங்கரப் படை உண்டாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படையிலும் உங்களைப்போல் வலிமையும் வனப்பும் வாய்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களும் மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தைத் தேடி அலைகிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவரா, நம்மவர்களில் ஒருவரா என்று தெரியாத பட்சத்தில் இந்த ஊரில் யாரும் உங்களுக்குப் பதில் சொல்லியிருக்க மாட்டார்கள். நான் துணிந்து பதில் சொல்லிப் பெரியவர் இருக்கும் இடத்துக்கு வழியும் சொல்ல முன் வந்திருப்பதற்குக் காரணம் உண்டு...”

“என்ன காரணமோ?” “நீங்கள் பூத பயங்கரப் படையைச் சேர்ந்தவராக இருந்தால் உங்களால் இவ்வளவு செம்மையாகத் தமிழில் உரையாட முடியாது. அப்படியே உரையாடக் கற்றிருந்தாலும் சாதுரியமும் நயங்களும் அந்த உரையாடலில் இருக்க இயலாது. ஒரு மொழியை அவசியத்துக்காக யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் நயங்களையும், சமத்காரங்களையும் உண்டாக்கி அணி நலம்பட எழுதவோ பேசவோ அதைத் தாய் மொழியாகக் கொண்டவனால்தான் முடியும்.”

“ஆகா என்ன சாதனை? இவ்வளவு நேரம் சிரமப்பட்டு நான் களப்பிரன் அல்லன், தமிழன்தான் என்பதைக் கண்டு பிடித்து விட்டாய்...”

“ஏளனம் வேண்டாம். உங்களிடம் இன்னும் என்னென்ன கண்டுபிடித்திருக்கிறேன் என்பதைச் சமயம் வரும்போது பேசலாம். நன்றாக இருட்டுவதற்குள் நீங்கள் பெரியவரைக் காணச் செல்ல வேண்டும். இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம், நம்மவர்கள் தங்களை இனம் கண்டு கொள்வதற்காகச் சந்தித்தவுடன் சொல்லிக் கொள்ளும் நல்லடையாளச் சொல்லை இன்னும் நீங்கள் கூறவில்லை.”

“அதென்ன நல்லடையாளச் சொல்?”

“அதைச் சொல்வதற்காகவே உங்களைச் சத்தியம் செய்யச் சொன்னேன். மதுராபதி வித்தகரின் ஆதரவாளர்கள் சந்தித்துக் கொள்ளும்போது ‘கயல்’ என்று சொல்லிக் கொள்ள வேண்டும். நீங்கள் அந்நியர் என்று சந்தேகப் பட்டால் உங்களிடமிருந்து முதலில் அந்த வார்த்தை வருகிறதா என்பதைத்தான் மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்களிடமிருந்து அந்த நல்லடையாளச் சொல் கிடைக்கா விட்டால் அவர்கள் பின்பு வாய்திறப்பது அரிது. ‘கயல்’ என்ற சொல்லால் தான் இங்கே வழிகளையும் கதவுகளையும் பிறர் வாய்களையும் திறக்கச் செய்யமுடியும். இது நன்றாக நினைவிருக்கட்டும்.”

அவள் இவ்வாறு கூறியதும் சற்று முன் அந்தக் கரும் பொற்கொல்லன், ‘சொல்ல வேண்டிய வார்த்தையால் கேட்டால் பதில் சொல்வார்கள்'-என்று பேசியிருந்த பேச்சின் புதிர் இளைய நம்பிக்கு இப்போது விளங்கிற்று.

“பெண்ணே! உனக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் இப்போது சொல்ல முடியும். அந்த உதவியைச் செய்ததற்காகக் காலம் உள்ள அளவும் நீ பெருமைப்பட முடியும்...”

இளைய நம்பியின் இந்த நன்றியைக் கேட்டு அவள் புன் முறுவல் பூத்தாள். இந்தப் புன்முறுவலின் அழகு பாதாதி கேசபரியந்தம் விரைந்து பரவி நிறைவதைப்போல் தெரியும் இனிய பிரமையிலிருந்து அவன் விடுபடச் சில கணங்கள் ஆயிற்று.

பதிலுக்குப் புன் முறுவல் பூத்தபடி, ‘கயல்’ என்று தொடங்கி ஒரு கணம் நிறுத்தித் தன் குரலைத் தணித்து, “உன் கண்களைச் சொல்லவில்லை? எனக்கு வழி பிறக்கும் நல்லடையாளச் சொல்லைத்தான் கூறுகிறேன்” என்றான். இதைக் கேட்டு அவள் முகத்தில் நாணம் நிறைந்தது.

“நேர் எதிரே தெரியும் ஒற்றையடிப் பாதையில் கால் நாழிகைத் தொலைவு சென்றால் ஒரு பெரிய ஆலமரம் வரும். அங்கே அவரைக் காணலாம். ஆனால் அந்த இடத்தை அடை கிறவரை நல்லடையாளச் சொல் பலமுறை உங்களுக்குத் தேவைப்படும்” என்று கூறி விட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றாள் அந்தப் பெண்.