நித்திலவல்லி/முதல் பாகம்/27. ஊமை நாட்கள்

விக்கிமூலம் இலிருந்து



27. ஊமை நாட்கள்

ஆறாக்கனல்போல் சீறி மேலெழும் அடக்க முடியாத சினத் தோடு வெளியேறுவதற்கு இருந்த இளையநம்பியைக் கைகூப்பி வழி மறித்தாள் இரத்தினமாலை. சற்று முன் அவனுக்குக் கடுமையாக மறுமொழி கூறிச் சாடி அவனைக் குத்திக் காட்டிப் பேசிய போது எவ்வளவுக்கு அவள் பெண் புலியாகக் காட்சியளித்தாளோ அவ்வளவுக்கு அவ்வளவு இப்போது ஒரு பேதையாகி இறைஞ்சி அவனை மன்றாடினாள் அவள்.

“கருணை கூர்ந்து நான் பேசியதில் ஏதாவது பிழையிருந்தால் தாங்கள் பொறுத்தருள வேண்டும். இந்த வீட்டிலோ இந்த வீதியிலோ நீங்கள் கோபப்பட்டுப் பயனில்லை. ஆண்களின் கோபமோ, பிடிவாதமோ வெற்றி பெற முடியாத வீதி இது. பெண்கள் புன்னகைகளாலும் பார்வைகளாலும், நிரந்தரமாக வென்று கொண்டிருக்கும் போர்க்களம் இது ஒருவகைப் பிரியத்தாலும், உரிமையாலும் நான் உங்களிடம் கூறிவிட்ட சில சொற்களைப் பெரிதாக நினைத்து நீங்கள் வைரம் பாராட்டக் கூடாது. உங்கள் அடிமை அழகாகப் பேசி நன்றாக விவாதித்தால் அதில் உங்களுக்குப் பெருமை இல்லையா?”

“தலைவனாக இருப்பவன்தான் யார் யார் தன் அடிமைகள் என்பதை முடிவு செய்ய வேண்டும். இங்கோ அடிமைகளே தங்கள்தலைவன் யார் என்பதையும் கூட முடிவு செய்கிற அளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்...”

“தலைவன் பெருந்தன்மை உடையவனாக இருந்தால் அடிமைகளும்கூடச் சுதந்திரமாய் இருக்கமுடியுமே!”

இந்தச் சொற்களைக் கேட்டு அவளைச் சுட்டெறித்து விடுவதுபோல் ஏறெடுத்துப் பார்த்தான் இளையநம்பி. அவளை அவனால் வெறுக்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. அவன் வழியின் குறுக்கே அவள் நின்றாள். துணிவாகவும், வாதத் திறமையுடனும், நேருக்கு நேர் நின்று பேசிவிட்டாள் என்பதற்காக ஒருத்தியை வெறுப்பது நியாயமில்லை என்று அவன் மனத்திற்கே புரிந்தாலும், சுளீரென்று அறைந்தாற் போல் அவள் கூறிய வார்த்தைகளின் சூடு இன்னும் ஆறாமல் அவன் செவிகளில் இருக்கத்தான் செய்தது. அதை அவனால் மறக்கவே முடியவில்லை.

அவள் பேசியிருந்த வார்த்தைகள் அவனுடைய நெஞ்சின் மென்மையிலே இன்னும் உறுத்திக் கொண்டிருந்தன. அவள் கண்களின் பார்வையும், சிரிப்பின் நளினமும் அவனைச் சினம் அடைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அவள் அவன் முன் மண்டியிட்டு மன்றாடத் தொடங்கியிருந்தாள்.

கடைந்தெடுத்துத் திரட்டிய வெண்ணெயாற் செய்தது போன்ற மென்மையும், குளிர்ச்சியும் வாய்ந்த இரத்தினமாலையின் கைவிரல்களைத் தன் பாதங்களின் மேல் உணர்ந்தான் அவன். வாதிடுவதில் இருந்த உறுதி வணங்குவதிலும் இருந்ததைக் கண்டு, ஒரு கணம் அவன் அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தயங்கினான். தன்னுடைய வார்த்தைகளுக்குப் பதில் வார்த்தைகள் சொல்லி, உடனே குத்திக் காட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் அவள் இப்படிப் பேசியிருந்தாலும், இப்படிப் பேசுவதற்கு முன் அவள் தனக்காகச் சாதித்துக் கொண்டு வந்திருந்த சாதனைகளை அவனும் மதித்தே ஆக வேண்டியிருந்தது. சாதனைகள் மறுக்க முடியாமல் இருந்தன.

இறுதியில் வெற்றி பெற்றது அவள்தான். கால்களைப் பற்றிக் கொண்டு, அவனிடம் மன்றாடி அவன் அங்கிருந்து வெளியேற முடியாதபடி தடுத்து விட்டாள் அவள். ஒரு கணிகையிடம் இருந்தே தீர வேண்டிய திறமைகள் அவளிடம் குறைவின்றி இருப்பதை இப்போது அவனால் நன்றாக விளங்கிக் கொள்ள முடிந்தது. பிறரை மயக்குவதும், மனத்தை மாற்றுவதும், வசப்படுத்திக் கொள்வதும், ஆண் பிள்ளையின் பிடிவாதங்களை வெல்வதுமே ஒரு கணிகையின் திறமைகளானால், அவை அவளிடமும் இருந்தன.

தன்னை அறியாமலே, தான் அவளிடம் மயங்கியிருப்பதும், மாறியிருப்பதும், வசப்பட்டிருப்பதும், பிடிவாதத்தைத் தோற்றிருப்பதும் மெல்ல மெல்ல அவனுக்கே புரியத் தொடங்கியது. ஒரு கணிகையின் மாளிகையில் ஒருநாள் தங்கியதிலேயே இப்படியாகுமானால், இன்னும் நாட் கணக்கில் இங்கே மறைந்து வசிக்க நேரிடுகையில் என்னென்ன ஆகுமோ என்று தயக்கமாக இருந்தது அவனுக்கு. அன்று பிற்பகல் வரை இளையநம்பி அழகன் பெருமாளுடனோ, குறளனுடனோ கூடப் பேசவில்லை. அவர்களும் அவனிடம் எதையும் கேட்க வரவில்லை. இரத்தினமாலை மட்டும் அவனை அளவுக்கும் அதிகமாகவே விநயமும் விருப்பமும் தெரிய ஓடியாடி உபசரித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய முகமலர்ச்சியையோ, பாராட்டையோ பெறாத ஒருதலைப் பட்சத்துக்குக் கைக்கிளைப் பிரியமாயிருந்தன அந்த உபசாரங்கள். அந்த கைக்கிளைப் பிரியத்தையே இரு பக்கத்து அன்பும் கலக்கும் பிரியமாக மாற்றலாம் என்ற நம்பிக்கை இரத்தினமாலைக்கு இருப்பதாகத் தோன்றியது. அவள் அயராமல் உபசரித்தாள்.

இதே நிலைமையில் சில தினங்கள் கழிந்தன. எவ்வளவு தான் உபசாரங்கள் இருந்தாலும் சிறை வைக்கப்பட்டு விட்டது போல், ஒரு மாளிகையின் உள்ளே இருக்க நேர்ந்தது குறையாகவே தோன்றியது அவனுக்கு.

‘இப்படி முடங்கிக் கிடப்பதற்காகவா திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தேன்? களப்பிரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பாண்டிய நாட்டை மீட்டுக் கொள்வதற்குச் செயலாற்ற முடியாமல், யாழிசையையும் அபிநயங்களையும், சந்தன நறுமணத்தையும் அனுபவித்துக் கொண்டு, கூடல் மாநகரின் கணிகையர் வீதியில் ஓர் இல்லத்தில் இப்படி அகப்பட்டுப் போகவா என் தலையில் எழுதியிருக்கிறது? எதற்காக, யாருக்காக பயந்து நான் இங்கே அடைந்து கிடக்கவேண்டும்? ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. இந்த நாட்டுப் பண்பாடு, சாவை வாழ்வின் முடிவாக ஒப்புக் கொள்வதில்லை. ஒரு வாழ்வின் முடிவுதான் மரணம் என்றால், இன்னொரு வாழ்வின் தொடக்கம்தான் சாவு. உடலும் ஆன்மாவும் சேர்ந்து உலகை அனுபவிப்பது ஒருவிதமான வாழ்க்கை என்றால், உடலை இழந்து ஆன்மாவினால் மட்டும் உலகை அனுபவிப்பதும்கூட மற்றொரு வகையாகத் தான் இருக்கவேண்டும்! அப்படிப் பட்ட வாழ்வைக் களப்பிரர் கூட்டத்துக்குத் தரவேண்டும். முடியாவிட்டால் நானே அடையவேண்டும்’ என்று எண்ணினான் அவன். நாட்கள் கழியக் கழிய அந்த மாளிகையின் இசை ஒலி சலிப்பூட்டியது. பகலும் இரவும் அர்த்தமில்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தன. அழகன் பெருமாளும் அவனும் பேசுவதற்குப் பொதுவாக எந்த விஷயமும் இல்லை. அவனோடு எதைப் பேசினாலும் அது ஒரு விவாதத்துக்குத் தோற்றுவாயாகவே முடிவது வழக்கமாகி இருந்தது. குறளன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தனத்தை அரைத்துக் குவித்து அந்த மாளிகையையே மணக்கச் செய்து கொண்டிருந்தான். நாட்கள் பேச்சற்ற ஊமைகளாய் இயக்கமற்று, முடம் பட்ட பொழுதுகளை உடையவையாய்க் கழிந்து கொண்டிருந்தன. ஒருநாள் அந்த மாளிகையின் மற்றொரு பகுதியில் அடுக்கியிருந்த தமிழ் ஏட்டுச் சுவடிகளை அவனுக்குக் காண்பித்தாள் இரத்தின மாலை. பழந்தமிழ் இலக்கியங்கள் அடங்கிய அந்தச் சுவடி களைப் பார்த்ததும் அவனுக்கு நான்மாடக்கூடல் நகரத்தின் புகழ்பெற்ற தமிழ்ச் சங்கம் நினைவு வந்தது. களப்பிரர் ஆட்சியில் தமிழ் மொழியும், தமிழ்ப் புலவர்களும், தமிழ் நாகரிகமும், தமிழ்ச் சங்கமும் பொலிவுடனோ, புகழுடனோ இராதென்று தானே கணித்துக்கொள்ள முடிந்தாலும் கோநகரிலேயே வாழும் கணிகை இரத்தினமாலையிடம் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளக் கருதி அவளை வினவினான் இளையநம்பி:

“களப்பிரர் ஆட்சியில் தமிழ்ச் சங்கத்தாரும், சங்கமும், புலவர்களும் என்ன ஆனார்கள்? நான் கோநகருக்கு வந்த பின்பு உன்னிடமோ, அழகன் பெருமாளிடமோ சங்கத்தைப் பற்றியும் அதன் புகழ்பெற்ற புலவர்களைப் பற்றியும் இதுவரை இங்கே எதுவுமே கேள்விப்படவில்லை!”

“ஏதாவது இருந்தால் அல்லவா கேள்விப்படுவதற்கு? கபாடபுரத்திலும், தென் மதுரையிலும் இருந்த புகழ் பெற்ற தமிழ்ச் சங்கங்களை எல்லாம் கடல்கோள் அழித்தது என்றால், இதைக் களப்பிரர் ஆட்சியே அழித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு புலவர்கள் அமர்ந்திருந்த மண்டபங்களில், களப்பிரர்கள் இப்போது தங்கள் குதிரைகளைக் கட்டி இருக்கிறார்கள். ஏடுகளும், சுவடிகளும் குவித்திருந்த இடங்களில் எல்லாம் வாள்களையும் வேல்களையும் குவித்து விட்டார்கள். ஓலைகளில் எழுத்தாணிகள் கீறிய ஒலிகள் கேட்ட இடமெல்லாம் பாலிமொழி இன்று ஒலிக்கத் தொடங்கி விட்டது.”

"ஆயிரங்காலத்து மொழி அழியும்போது, அதை ஒட்டி வளர்ந்த எல்லா நாகரிகமும் நலியத்தான் வேண்டும் போலிருக்கிறது.”

“நலிந்தாலும், வளர்ந்தாலும் அது எதிர்காலத்திற்கு வரலாறு ஆகிறது. தமிழ் நாகரிக வரலாற்றில், தங்கள் காலத்தின் அடிமை முத்திரையாகக் களப்பிரர்கள் இருளைப் பூசியிருக்கிறார்கள்.”

“இரத்தினமாலை! இருளை எப்போதும் நான் முடிந்த முடிவாக ஒப்புக் கொண்டு ஏற்பதில்லை. ஒவ்வோர் இருட்டுக்குப் பின்பும் ஒரு வைகறை உண்டு என்று திடமாக நம்புகிறவன் நான்."

“நீங்கள் மட்டு மின்றி எல்லாருமே அப்படித்தான் நம்புகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக வெளியே இரவும் பகலும் என்னென்ன நடைபெறுகின்றன என்பதைக்கூட அறிய முடியாமல் நாம் இங்கே முடங்க நேரிட்டதே ? யாரிடமிருந்தும் எந்தச் செய்தியும் தெரியவில்லை. காரி, கழற்சிங்கன், சாத்தன், தேனூர் மாந்திரீகன் செங்கணான் ஆகிய நம் நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரிய வில்லையே?” என்று கேட்டுக்கொண்டே சற்று முன்பு அங்கு வந்திருந்த அழகன் பெருமாள் காரியக் கவலையோடு பேசினான். அந்த மாளிகையில் கழிந்த ஊமை நாட்களில் முதன் முதலாக அழகன் பெருமாள் தன்னிடம் மெளனத்தைக் கலைத்துக்கொண்டு பேசவந்திருப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. சில நாட்களாக அவனுக்குத் தன் மீது ஏற்பட்டிருந்த மனத்தாங்கல் மாறித் தன்னோடு மேலே என்ன செய்வது என்பது பற்றிப் பேச முன்வரும் நிலைமை இயல்பாக ஏற்பட்டிருப்பதை இளையநம்பி வரவேற்றான் என்றாலும் அழகன் பெருமாளின் வினா அவனுள் கோபமூட்டியது:

“காரி, கழற்சிங்கன் முதலிய நண்பர்களைத் தேடவும், உயிருக்கு ஆபத்தின்றிப் பாதுகாக்கவும் நாம் விரைந்து ஆவன செய்யவேண்டும் என்று கோட்டைக் கதவுகள் அடைக்கப் பட்டபோதிலிருந்து நான் விடாமல் உன்னிடம் வற்புறுத்தி வருகிறேன் அழகன் பெருமாள்! அப்போதிருந்து நீதான் அவர்களைப் பற்றிக் கவலைக்கு இடமின்றி மறுமொழி கூறியிருக்கிறாய். ‘அவர்கள் எவ்விதத்திலும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பிவந்து விடுவார்கள்'- என்று உறுதியளித்திருக்கிறாய். உன்னுடைய அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை எனக்கே வியப்பை அளித்திருக்கிறது. இப்போதோ நீயே என்னிடம் வந்து வேறுவிதமாகக் கேட்கிறாய். நான் என்ன மறுமொழி கூறுவது உனக்கு?” -என்று சிறிது சினத்துடனேயே அழகன் பெருமாளைக்கேட்டான் இளையநம்பி.