நித்திலவல்லி/முதல் பாகம்/3. காராளர் வீட்டு விருந்து

விக்கிமூலம் இலிருந்து

3. காராளர் விட்டு விருந்து

“ஐயா!. இது என்ன கோரம்?” என்று கேட்க நினைத்து நா எழாமல் அவன் மருண்டிருப்பதைப் பார்த்துத் தம்முடைய வெண்பற்கள் தெரியச் சிரித்தார் அவர். அந்த அகன்ற நெற்றியில் உணர்ச்சிகளைப் படிக்கமுடியாமல் திகைத்தான் அவன்.

“நீ பயப்படுவாய் என்று எனக்குத் தெரியும்! தங்கத்தைப் புடம் போடுவதுபோல் இந்த உடலைப் புடம் போட்டு எடுத்திருக்கிறேன். எனக்கு எதுவும் கெடுதல் வரமுடியாது."

அவருடைய கழுத்திலும் தோள்களிலும் முழங்கால்களிலும் கன்னங்கரிய நாகசர்ப்பங்கள் நெளிந்து கொண்டிருந்தன. அருகிலிருந்த புற்றின் துவாரங்களிலே மேலும் சில சர்ப்பங்கள் இருள் வழிவது போன்ற நிறத்தில் நெளிந்து கொண்டிருந்தன. கொடிய நஞ்சு அடங்கியது என்று கருதப்படும் காஞ்சிரங்காய் ஒன்றைக் கடித்துத் தின்று கொண்டிருந்தார் அவர்.

எரிகின்ற தழல் போன்ற திறத்தைக் கொண்டிருந்த மேனியில் கரிய சர்ப்பங்களையும் சேர்த்துப் பார்த்தபோது ஓர் அசைப்பில் முதல் நாள் தோன்றியது போலவே ஆலமர் கடவுளின் கோலம் இளைய நம்பியின் கண்களுக்குத் தெரிந்தது. காலங்கள் செய்யும் மூப்புக்களை வென்று காலங்களையே மூப்படையச் செய்யும் வைரம் பாய்ந்த அந்த மேனியின் இரகசியம் அவனுக்கு இப்போது ஒரளவு புரிந்தது.

பாட்டனார் சொல்லியிருந்த பெரியவரின் வயதிலிருந்து அவர் மூத்துத் தளர்ந்து போயிருக்கக்கூடும் என்று திரு மோகூரில் நுழைந்த வேளையில் தனக்குத் தானே செய்து கொண்ட அநுமானம் எவ்வளவு பிழையானது என்பதை இப்போது இளைய நம்பி உணர்ந்தான். அந்த உடலில் மூப்பின் சாயல் தெரிந்தது; ஆனால் தளர்ச்சியின் சாயல் கூடத் தெரியவில்லை.

“ஐயா! ‘சுடச் சுடரும் பொன்போல் ஒளிரும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு’ -என்று நம்முடைய செந்நாப்போதர் கூறியருளியிருக்கும் குறளுக்கு இப்போது அடியேனுக்கு நன்றாகப் பொருள் புரிகிறது. இத்தனை மூப்பிலும் தங்கள் திருமேனி பொன் தழலாக மின்னுவது பெரிய சித்தி ஐயா!”

“என்னுடைய மூப்பைப் பற்றி நினைக்க எனக்கு நேரமில்லை தம்பி! புகழ்கிறவர்கள்தான் எனக்கு அதை நினைவூட்டவே செய்கிறார்கள். நான் ஏன் இப்படி விநோதமான வழக்கங்களை உடையவனாக இருக்கிறேன் என்பது உன் ஐயப்பாடாக இருக்கலாம். கபாடங்களில் முத்துக்கள் ஒளிரும் மதுரைக் கோட்டையில் மறுபடி பாண்டியர்களின் புகழ் பெற்ற மீனக் கொடி பறக்கிறவரை நான் சாகக் கூடாது என்று எனக்குள் நானே உறுதி செய்து கொண்டிருக்கிறேன். காடுகளிலும், மலைகளிலும், ஊர்ப்புறமான தோட்டங்களிலும் மறைந்து வாழும் எனக்கு நச்சுப் பிராணிகளாலும், கொடிய விலங்குகளாலும் எதுவும் நேர முடியாதபடி என் சரீரத்தைப் பழைய முனிவர்களின் மருந்து முறைப்படி புடம் போட்டு வைத்திருக்கிறேன். இதோ என் கையிலிருக்கிறதே காஞ்சிரங்காய்; இதில் அணுப்பிரமாணம் நீ தின்றாலும் உன் சரீரம் அடுத்த சில விநாடிகளில் நீலம் பாய்ந்து மூச்சுத் திணறி நீ இறந்து விடுவாய். ஆனால் எனக்கோ இது மாங்காய் தின்பது போல் விருப்பமான காரியம். பாண்டியர்களின் அடையாளப் பூவைத் தருவது என்பதாலோ என்னவோ எனக்கு வேப்பங் கொழுந்து என்றால் கொள்ளை ஆசை. வேப்பங்கொழுந்தை மையாய் அரைத்து வெண்ணெய் போல் மிருதுவாகும்படி செய்து இரண்டு மாங்காய் அளவு உண்பேன். இந்திரியங்களை வற்றச் செய்து இப்படிப் புடம்போட்டு இந்த உடலை நான் காப்பதெல்லாம் எதற்குத் தெரியுமா?”

“தெரியும் ஐயா! அதற்காகப் பாண்டிய மரபின் கடைசித்துளி இரத்தமும் உங்களுக்கு நன்றியுடையதாக இருக்கும்! ‘நான் உண்ணும் உணவுகள் பிறருக்குக் கசப்பானவை’ என்று நேற்றிரவு தாங்கள் கூறியதன் பொருள் இப்போது புரிந்தது.”

“அதனால் உலகோர் உண்ணும் பிற உணவுகளை நான் வெறுக்கிறேன் என்று பொருளில்லை. அவற்றையும் நான் உண்பது உண்டு. ஆனால் எதை எதை நான் உண்ணலாம் என்பதற்கும், எதை எதை நான் உண்ணக்கூடாது என்பதற்கும் கடுமையான நியமங்கள் வைத்துக் கொண்டிருக்கிறேன்.”

அவனிடம் பேசிக் கொண்டே சர்ப்பங்களை ஒவ்வொன்றாகப் புற்று வாயில் எடுத்து விட்டார் அவர். கருமை ஒழுகுவது போல் படமும் உடலும் மின்னும் ஒவ்வொரு சர்ப்பமும் கொடியாய் வழிந்து அவர் கையிலிருந்து புற்றில் இறங்கும் காட்சி மீண்டும் அவனைப் புல்லரிக்கச் செய்தது.

‘'நீ போய்த் தாமரைப் பொய்கையில் நீராடி வரலாம் இளையநம்பீ! இங்குள்ள மிகப்பெரிய தாமரைப் பொய்கை நேர் மேற்கே மூங்கில் தோப்புக்களின் நடுவே இருக்கிறது. உன்னுடைய உணவு வசதிகளைப் பற்றிக் கவலைப்படாதே. திருமோகூர்ப் பெரியகாராளர் மனையில் நெய்யும் மிளகும் கமகமவென்று மணக்க உனக்கு விருந்து கிடைக்கப் போகிறது. இன்னும் சிறிது நேரத்தில் பெரிய காராளர் உன்னை அழைத்துப் போக இங்கு வருவார். உங்கள் திருக்கானப்பேர் நகரம் முல்லை நிலம் சூழ்ந்திருப்பதாலும் பசுக்கள் மிகுந்திருப்பதாலும் நன்றாக உறையிட்ட தயிருக்கு அது புகழ் பெற்றிருக்கிறது. இந்த ஊர்ப் பெரியகாராளர் வீட்டு வெண் பொங்கலும், மோர்க் குழம்பும், நெய் அதிரசங்களும் இணையிலாச் சுவையுடையனவாக இருக்கும். நீ கொடுத்து வைத்தவன்.”

“ஐயா! தலைநகருக்கு அடியேன் எப்போது புறப்பட வேண்டியிருக்கும்?”

“போய் நீராடிவிட்டு வா... உன்னுடைய பயணமும் பெரியகாராளர் இங்கு வந்த பின்புதான் முடிவாகும்!”

அவன் மரப் பொந்திலிருந்து வெளியேறி இரண்டுபாக தூரம்கூட நடந்திருக்க மாட்டான், பின்புறமிருந்து அவருடைய குரல்; “தம்பீ! இதையும் கேட்டு விட்டுப் போ” -என்று மீண்டும் கூப்பிடவே அவன் விரைந்து திரும்பி அவரை நோக்கி நடந்தான்.

“உன்னிடம் ஒர் எச்சரிக்கை; உன்னுடைய வலது தோளின் மேற்புறம் சங்குபோல் ஒரு தழும்பு இருக்கிறதில்லையா, அந்தச் சங்குத் தழும்பை இன்றோ, இனி எதிர்காலத்திலோ நீ நீராடும் போதோ மேலங்கியைக் களைந்து ஒய்வு கொள்ளும்போதோ அந்நியர் எவரேனும் வெறித்துப் பார்த்தால் எச்சரிக்கையாயிரு! அது உன் வாழ்வுக்கு அபாயத்தைத் தேடி வரலாம்."

“ஐயா! அது தங்களுக்கு எப்படித் தெரியும்? “இந்தப் பிள்ளையின் எதிர்க்கால நன்மைக்காக” என்று சிறுவயதில் யாரோ ஒரு பெரியவர் அந்த அடையாளத்தை நெருப்பில் காய்ச்சி இட்டதாக என் பாட்டனார் சொல்லியிருக்கிறார். நீங்களோ இப்போது அதனால்தான் எனக்கு அபாயங்களே வரும் என்கிறீர்கள்?”

“உனக்கும், இன்னும் வேறு நான்கு குழந்தைகளுக்கும் தாமிரத்தில் சிறிய அழகிய வலம்புரிச் சங்குபோல வார்த்து அதை நெருப்பில் காய்ச்சி அந்த முத்திரையை இட்டதே நான்தான். ஐந்து குழந்தைகளுக்கு நான் அந்த முத்திரையை இட்டேன். அவர்கள் ஐவருமே இன்று உயிரோடிருந்தால் உன்னைப்போல் சுந்தர வாலிபர்களாயிருப்பார்கள். இரண்டு பேரைக் களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்று விட்டார்கள். இன்னும் மூன்று பேர் மீதியிருக்கிறீர்கள். நான் இட்ட மங்கல முத்திரையின் நற்பயனை இவர்கள் மூவருமாவது அடைய வேண்டும் என்பது என் விருப்பம்.”

“மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள் ஐயா?”

“இப்போது நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை தம்பீ! நீங்கள் மூவரும் சந்தித்துக் கொள்ள ஒரு சமயம் வரும். அப்போது பார்க்கலாம்.”

இந்த விஷயம் அவனுக்குப் பெரும் புதிராக இருந்தும் இதைப் பற்றி அவரிடம் மேலும் மேலும் வினாவிக் கொண்டிருப்பது நன்றாயிராதென்று எண்ணி, அவருடைய எச்சரிக்கையை மட்டும் அப்படியே ஏற்றுக்கொண்டு நீராடிவர நடந்தான் இளையநம்பி.

வயல் வெளிகளில் இளங்காற்றில் ஆடும் பசும் பயிர்ப்பரப்பிலும், குளங்களில் மலர்ந்த தாமரைப் பூக்களிலும், பனித்துளி முத்துக் கோத்த புல் நுனிகளிலும் சிவந்து கொண்டிருந்த கீழ் வானத்திலும் வைகறையின் அழகுகள் சிதறியிருந்தன. தண்ணீர் நிரம்பியிருக்கும் இடமெல்லாம் தாமரை பூத்திருந்த அந்த ஊரின் வளமும் செழிப்பும் அவனுக்கு உள்ளக் கிளர்ச்சியை அளித்தன. அந்த ஊரை அவன் மிகவும் விரும்பினான்.

பொய்கைக் கரையில் நீராடுவதற்காக மேலங்கியைக் கழற்றியபோது வலது தோளின் செழிப்பான சிவந்த மேற் புறத்தில் மைக்கோடுகளாய் விளங்கிய சங்கு முத்திரையை அவன் தானே ஒரு புதுமையைப் பார்ப்பதுபோல் இன்று பார்த்துக் கொண்டான். அவன் மறந்திருந்த ஒன்றை அதிகம் ஞாபகத்துக்குரியதாகச் செய்துவிட்டார் மதுராபதி வித்தகர். சிறிய வயதில் யாரோ ஒரு பெரியவர் செய்த மங்கல நல்லாசி என்று அவன் மறந்திருந்த ஒன்றை இன்று நிகழ்கால அபாயத்துக்குரியதாகவும் எதிர்கால நன்மைக்குரியதாகவும் பாதுகாக்க வேண்டியதாய்ப் புரிந்துகொள்ள நேர்ந்து விட்டது. ‘இந்த முத்திரையை உடைய ஐவரில் இருவரை ஏன் களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்றார்கள்? மீதமிருக்கும் தன்னையுள்ளிட்ட மூவருக்கும் இதனால் அபாயங்கள் நேரிடலாம் என்று பெரியவர் கூறுவதற்குக் காரணம் என்ன?’ என்பதை எல்லாம் அவனால் உடனே விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. அவர் கூறியவை யாவும் தனக்கும், அரசிழந்து ஒடுக்கப்பட்டு நலிந்து கிடக்கும் பாண்டியர் பெருமரபிற்கும் நன்மை செய்யக் கூடியனவாகவே இருக்கும் என்பதை நம்பி அவைகளைப் பற்றி மேலும் மேலும் நினைத்து மனத்தைத் குழப்பிக் கொள்வதைத் தவிர்த்தான் இளைய நம்பி.

ஆடைகளை உலர்த்தி அணிந்து கொண்டு அவன் ஆலமரத்திற்குத் திரும்பியபோது மதுராபதி வித்தகரிடம் அவருடைய உயரத்திற்கு சரிபாதி உயரம்கூட இல்லாத சற்றே பருத்த ஒரு நடுத்தர வயது மனிதர் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்தான் திருமோகூர்ப் பெரிய காராளராயிருக்க வேண்டும் என்று அவன் புரிந்து கொண்டான். அவன் உள்ளே நுழைந்ததும் அந்தப் புதிய மனிதர் அவனை நோக்கி முகம் மலர்ந்து கைகூப்பி வணங்கினார். உயர்ந்த குடிப் பிறப்பின் கம்பீரம் அந்த முகத்தில் தெரிந்தது. கண்களில் கருணை

மயமான சாயலைக் காண முடிந்தது. இளையநம்பி அவரைப் பதிலுக்கு வணங்கினான்.

“தம்பி! இவரை நீ தெரிந்துகொள்ள வேண்டும். என்னை நிழல்போல் நீங்காமல் பாதுகாத்துவரும் முனையெதிர்மோகர் படை இளைஞர்களுக்கும், தென்னவன் ஆபத்துதவிகளுக்கும் வயிறு வாடாமல் சோறளித்துக் காக்கும் திருமோகூர்ப் பெரியகாராளர் இவர்தான். இவருடைய செந்நெற் கழனிகளில் விளையும் நெல்லெல்லாம் இந்தப் பகுதியிலும், சுற்றுப் புறங்களிலும் மறைந்திருக்கும் நம்மவர்களுக்குப் பயன்படுகின்றன. மறுபடி பாண்டியராட்சி மலர வேண்டும் என்று அக்கறை காட்டும் நல்லவர்களில் இவர் முதன்மையானவர். அரசியல் காரணங்களுக்காகவும், தான் செய்துவரும் உதவிகள் களப்பிரர்களால் தடுக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காகவும் அந்தரங்கமாகவும் தந்திரமாகவும் இவர் அதைச்செய்து வருகிறார். இன்று நண்பகலில் இவர் நீ தலைநகரை அடைவதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார். ஒரு மண்டலம் நீ அகநகரிலும் சுற்றுப் புறங்களிலும் அலைந்து நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன என்று அறிந்து வர வேண்டும். நீ போகிற இடங்களில் எல்லாம் நம்மவர்கள் நிறைய இருக்கிறார்கள். நம்மைத் தொலைத்துப் பூண்டோடு கருவறுத்து அழித்துவிட நினைப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள். இரு தரப்பாரையும் நீ இனங்கண்டு கொள்ள வேண்டும். ‘வாயிலிருக்கிறது வழி’ என்ற பழமொழி ஞாபகம் இருக்கட்டும். உன்னுடைய நல்லடையாளச் சொல்லுக்கு எந்த இடத்தில் மறுமொழி கிடைக்க வில்லையோ அங்கே சந்தேகம் எழ இடமின்றி உடனே பாலியில் பேசிவிடு. நம்முடைய காரியங்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக உனக்கு ஓரளவு பாலிமொழியும் கற்பித்திருப்பதாக உன் பாட்டனார் திருக்கானப்பேர் விழுப்பரையர் ஏற்கெனவே முன்னொரு சமயம் எனக்குச் சொல்லியனுப்பியிருந்தார். தங்களை எதிர்ப்பதற்கு எந்தக் கலகத்தை யார் செய்தாலும் அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும் சாதனங்களை உடையவர்களாகவும் இருக்கக்

கூடாது என்பதற்காகக் களப்பிரர், குதிரைகள், யானைகள், தேர்கள், படைக்கலங்கள் போன்றவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி செய்து விட்டார்கள். அதை நாம் பொருட்படுத்தாவிட்டாலும் நம்மிடையே நாம் பயன்படுத்துவதற்குக் குதிரைகளும், யானைகளும், தேர்களும், படைக்கலங்களும் இன்று அதிகம் இல்லை.”

“நாம் நினைத்தால் அவற்றைப் படைத்துக் கொள்ள முடியும் ஐயா! அதற்கு வேண்டிய ஆட்களை நாம் மிக எளிமையாகத் தேடிவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தத் திருமோகூர் வேளாளர் தெருவில் ஒரு வலிமை வாய்ந்த கொல்லனை நேற்று நான் சந்தித்தேன். மீண்டும் பாண்டியராட்சி மலர்வதற்காக அவன் எந்த ஒத்துழைப்பையும் அளிக்க ஆயத்தமாயிருப்பான்.”

“தம்பீ! நீ நேற்று மட்டும்தான் அவனைச் சந்தித்தாய். நானும் காராளரும் நாள் தவறாமல் அவனைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அவன் நம்மவர்களில் ஒருவன்தான். ஆனாலும் அவன் தன்னுடைய உலைக்களத்தில் வாளும், வேலும், ஈட்டியும் செய்யக்கூடாதென்பது உனக்குத் தெரியுமா? கலப்பைக்குக் கொழு அடிப்பதை மட்டும்தான் களப்பிரர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.”

“இவ்வளவு பயங்கரமான அடிமைத்தனத்தில் இந்த மங்கலப் பாண்டிவள நாடு முன்பு எந்தக் காலத்திலும் வாழ்ந்திருக்க முடியாது ஐயா!”

“கவலைப்படாதே தம்பீ! மக்களின் நியாயமான நல்லுணர்ச்சிகளை ஒடுக்கும் எந்தக் கொடுங்கோல் ஆட்சியும் நிலைக்க முடியாது. அழ அழக் கொள்ளையடித்த செல்வங்கள் எல்லாம் அழ வைத்துவிட்டே நீங்கும். அடிமைப்படுத்துகிற ஒவ்வொருவரும் தன் பிடி இறுக இறுக அதே வேகத்தில் சுதந்திர உணர்ச்சி வளர முடியும் என்பதை மறந்து விடுவது வழக்கம். களப்பிரர்களுக்கும் இன்று அந்த மறதி வந்து விட்டது. இந்த ஆண்டிற் குளித்த கொற்கைத் துறை முத்துக்கள் எல்லாவற்றையும் சோனர்களுக்கு ஏற்றுமதி

செய்துவிட்டு அதற்கு விலையாக குதிரைகள் பெற ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். சோனகா நாட்டிலிருந்து வரும் இந்தக்குதிரைக் கப்பல் கொற்கைத் துறையை வந்தடையும் நாளையும், துறைமுகத்திலிருந்து அவற்றைத் தலைநகருக்குக் கொண்டுவர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள், எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள் என்பதை எல்லாம் நீ தெரிந்து சொல்லியனுப்ப வேண்டும். இவற்றை உன்னிடமிருந்து தெரிந்து எனக்கு வந்து சொல்லவும், என்னிடமிருந்து தெரிவனவற்றை உனக்கு வந்து சொல்லவும் உரியவர்கள் மதுரை மாநகரில் அவ்வப்போது உன்னைச் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இப்போது நீ புறப்படலாம். காராளர் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். மற்ற விவரங்களைப் போகும் போதே அவர் உன்னிடம் சொல்வார்.”

பெரியவரை வணங்கி ஆசி பெற்றுப் புறப்பட்டான் இளையநம்பி.