உள்ளடக்கத்துக்குச் செல்

நித்திலவல்லி/முதல் பாகம்/36. பெரியவர் பேசுகிறார்

விக்கிமூலம் இலிருந்து

36. பெரியவர் பேசுகிறார்

‘திருக்கானப்பேர் பாண்டிய குல விழுப்பரையர் தவப்பேரன் இளையநம்பி காணவிடுக்கும் ஓலை. இந்த ஓலையை நான் எங்கிருந்து எழுதுகிறேன் என்பதைவிட எதற்காக எழுதுகிறேன் என்பதையே இதைப் படிக்கத் தொடங்கும்போது நீ சிந்திக்க வேண்டும். இவ்வோலை உன்னை நலனோடும் திடனோடும் கூடிய நிலையில் காண வாழ்த்துகிறேன். பல நாட்களுக்கு முன்பாக யான் அந்துவன் மூலம் உனக்கு அறிவிக்கச் சொல்லியிருந்த மூன்று குறிப்புகள் இதற்குள் உனக்கு அறிவிக்கப்பட்டனவா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. களப்பிரர்களின் கொடுமை அதிகரிப்பதால் அகநகருக்கும் நமக்கும் தொடர்புகள் பெரும்பாலும் அற்றுவிட்டன. எதுவும் தெரியவில்லை. எதையும் தெரிவிக்கவும் முடியவில்லை. சிற்றூர்கள் தோறும் தங்கள் எதிரிகளைத் தேடிக் கருவறுக்கக் களப்பிரர்கள் பூதபயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள். முறையோ, நியாயமோ, நீதியோ இன்றிச் சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவும், சிறைப் பிடிக்கவும் செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நம்மைச் சேர்ந்தவர்களில் மிகவும் சாதுரியமுள்ளவனும், உடல் வலிமை மிக்கவனும் ஆகிய திருமோகூர்க் கரும்பொற்கொல்லன் மூலமாக இந்த ஓலையை உனக்குக் கொடுத்துவிட எண்ணியுள்ளேன். ‘நானும், காராளரும், மற்றவர்களும் நினைத்துத் திட்டமிட்டதும், எதிர்பார்த்ததும் வேறு; நடந்திருப்பது வேறு. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போய்விட்டது. உனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று யானைப் பாகன் அந்துவன் மூலம் ஏற்கெனவே தெரிவித்தவற்றை இந்த ஓலை மூலம் மேலும் விளக்குவதுதான் என் நோக்கம். பொதுவாக நான் எழுத்தாணி பிடித்து ஓலைகள் எழுதுவதில்லை. எழுதினாலும் நீண்ட வார்த்தைகளால் பெரிதாக எழுதுவது வழக்கமில்லை. அதிக வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். திருமோகூர்ப் பெரியகாராளர்கள் என் அருகே இல்லாததால், நானே எழுத வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதிகம் எழுத வேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை.

‘அன்று பெரியகாராளர் மகள் செல்வப் பூங்கோதையின் சித்திரவண்டிகளின் பூங்குவியலில் மறைந்து நீ கோநகருக்குள் நுழைந்த போது எல்லாம் சோதனை இன்றி முடிந்து விட்டதாகவே நீயும் பிறரும் நினைக்கிறீர்கள். அப்போது உங்கள் வண்டிகளைச் சோதித்த இரு பூதபயங்கரப்படை வீரர்களின் ஒருவனின் ஐயப்பாட்டாலும், வெள்ளியம்பலத்தருகே அடுத்தடுத்துப் பிடிபட்ட இருவராலும் எல்லாத் திட்டமும் பாழாகி விட்டது. பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்ட போதே கோநகரின் கோட்டை மதில்களுக்குள்ளிருந்து நமது வலிமையும் அகற்றப் பட்டுவிட்டது. பிடிபட்ட ஒற்றர்களிடம் ஆயுதங்கள் இருந்திருக்கும். களப்பிரர்கள் அவர்களை யாத்திரீகர்கள் என்று நம்புவதற்கும், ஒப்புக்கொள்வதற்கும் அந்த ஆயுதங்களே தடையாகியிருக்கும். புறத்தே வெளிப்பட்டுத் தெரியாததும், அங்கியிலும் இடுப்புக் கச்சையிலும் மறைந்துவிடக் கூடியதுமான, சிறுசிறு வாள்கள் ஒவ்வொரு யாத்திரீகனிடமும் இருக்கலாம். நல்ல வேளை சூழ்நிலை பொருந்தி வரவில்லை என்றால் யாத்திரீகர்களாகவே உள்ளே நுழைந்தது போல் யாத்திரீகர்களாகவே கோட்டைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்திகள் எல்லாம் ஒரு நிலைமை வரை உனக்கே தெரிய வேண்டாம் என்று நானும், காராளரும், பிறகும் நினைத்தோம். அழகன்பெருமாள்கூடச் சொல்லியிருக்க மாட்டான். ஆண்டாண்டுகளாகத் திட்டமிட்ட பூசலில் வெற்றி அடைந்த பின், அந்த வெற்றியை உனக்கு அறிவித்து உன்னை மகிழச் செய்யலாம் என்றிருந்தோம். அப்படிச் செய்ய இயலாமல் போய்விட்டது. இதற்காக அழகன் பெருமாளைக் கோபித்துக் கொள்ளாதே. அவனைப் போல் நம்பிக்கையும், பாண்டிய மரபின்மேல் அரச விசுவாசமும் உள்ள ஓர் ஊழியனை ஈரேழு பதினான்கு புவனங்களிலும் தேடினால் கூட நீகாணமுடியாது.’

இந்த இடத்தில் ஓரிரு கணங்கள் ஓலையைப் படிப்பதிலிருந்து சிந்தனை விலகி, முந்திய தினம் முன்னிரவில் தான் உறங்கிவிட்டதாக எண்ணிக் கொண்டு அழகன் பெருமாளும், தேனூர் மாந்திரீகன் செங்கணானும் தங்களுக்குள் உரையாடிய வார்த்தைகளை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் இளையநம்பி. அந்த உரையாடலின் பொருள் இப்போது அவனுக்குத் தெளிவாக விளங்கத் தொடங்கியது. மேலே ஓலையைப் படிக்கத் தொடங்கினான் அவன்.

‘வெள்ளியம்பலத்தருகே நம்மவர்கள் பிடிபட்ட செய்தி யானைப் பாகன் அந்துவனால் என்க்குக் கூறியனுப்பப்பட்ட நாளன்றுதான் தென்னவன் சிறுமலை மாறன் என்னும் பாண்டியகுல வேளாளன் என்னைச் சந்திக்க மோகூர் வந்திருந்தான். இந்தத் தென்னவன் மாறன் யார் என்பதை நீ தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. பின்பொரு சமயம் நீ இவனைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது அதற்காகக் கவலைப்படாதே! இந்தப் பிள்ளையாண்டான் என்னைச் சந்திக்க வந்த தினத்தன்று நள்ளிரவில்தான் சோதனைகள் மோகூரிலும் வந்து சேர்ந்தன. திடீரென்று தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் போல் பல நூறு பூதபயங்கரப் படை வீரர்கள் இருளோடு இருளாகப் பெரியகாராளரின் மாளிகையையும், அறக்கோட்டத்தையும் வந்து வளைத்துக் கொண் டார்கள். பெரியகாராளரின் விருந்தினனாகத் தங்கியிருந்த தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானும், அறக்கோட்டத்து மல்லனும் தந்திரமாக நடந்து கொள்ளத் தோன்றாமல் களப்பிரப் பூதபயங்கரப் படையினரை எதிர்த்து, உணர்ச்சி வசப்பட்டுப் போரிட முயன்றதால், எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டார்கள். காராளரும் அவர் குடும்பத்தினரும் மாளிகையோடு சிறை வைக்கப்பட்டது போல், முடக்கப்பட்டு விட்டார்கள். உடனே இரவோடு இரவாக நானும் ஆபத்துதவிகளும் முனையெதிர் மோகர் படையினரும் மோகூரிலிருந்து வேறு திசையில் புறப்பட்டுக் குடி பெயர்ந்து விட்டோம். காராளரின் நிலைமைதான் இரங்கத்தக்கதாகி இருக்கிறது; பாண்டியகுலம் தலையெடுக்க உதவிய அந்த உபகாரிக்குச் சோதனை நேர்ந்திருக்கிறது. அவருடைய களஞ்சியங்களிலிருந்து அரண்மனைக்கு நெல் எடுத்துச் செல்லும் வண்டிகளைக் கூட இப்போது களப்பிரர்களே கோட்டைக்குள் ஒட்டிச் செல்கிறார்களாம். அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லனுப்புகிறவர் என்பதனால் அவர் மேல் களப்பிரர்களுக்கு இருந்த அன்பும், பிரியமும் கூட மாறி விட்டதாம். ஆனாலும் இவ்வளவு நாள் தங்களுக்கு வேண்டிய போதெல்லாம் வரையாமல் வாரி வழங்கிய ஒரு வள்ளலைத் திடீரென்று கடுமையாகத் தண்டிக்கவும் மனம் வராமல் மாளிகையை விட்டு வெளியேற முடியாமல் கண்காணிக்கிறார்களாம். இந்த நிலையில் எனக்கும், அவருக்கும் நடுவே அறியவும் அறிவிக்கவும் பயன்படும் ஒரே பொது மனிதன்தான் திருமோகூரில் எஞ்சியிருக்கிறான். உழவர்களின் கலப்பைக்குக் கொழு அடிக்கும் அந்தக் கொல்லன் தன் மேல் களப்பிரர்களின் கண்கள் சந்தேகமுற்று விடாதபடி மிக மிகச் சாதுரியமாக இருக்கிறான். இப்போது நான் இருக்கும் புதிய இடத்திற்கு அவனை வரவழைத்து, அவனிடம் இந்த ஓலைகளைக் கொடுத்து, முதலில் காராளரை இதைப் படிக்கச் செய்துவிட்டுப் பின்பு அவரிடமிருந்து மீண்டும் வாங்கி, உன்னிடம் இதைக் கொண்டு வந்து சேர்க்கச் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித் தனியே எழுத என்னால் முடியவில்லை. உன்னை விளித்து எழுதப் பட்டிருக்கும் இந்த ஓலையை நீ உரிய காலத்தில் அடைவாயானால் உனக்கு முன்பே இதைப் பெரிய காராளரும், இந்த ஓலையைக் கொண்டுவரும் கொல்லனும் படித்திருப்பார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும். நீ இதனைப் படித்தபின் அழகன்பெருமாளும், இரத்தின மாலையும் இதைப் படிக்குமாறு செய்யவேண்டியதும் உன் கடமை.

‘உங்கள் அனைவருக்கும் என்னுடைய புதிய இருப்பிடத்தை அறிவிக்காமல் இதை எழுதுவதற்குக் காரணம் உண்டு. ஒருவேளை இந்த ஓலை உங்களுக்கு வந்து சேராமல் அசம்பாவிதங்கள் நேருமானால் அபாயம் எங்கள் இருப்பிடத்தையும் தேடி வராமல் தடுப்பதுதான் என் நோக்கம். என் இருப்பிடம் தெரிந்தால் ஆர்வத்தை அடக்க முடியாமல் உங்களில் யாராவது காண வந்து என்னையோ, உங்களையோ அபாயத்துக்கு ஆளாக்கிக் கொள்வதையும் இப்போதுள்ள சூழ்நிலையில் நான் விரும்பவில்லை. ஆலவாய் அண்ணல் திருவருள் இன்னும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. அது கிடைக்கும் வரை நாம் விழிப்பாகவே இருக்க வேண்டும். குறிப்பாய் நீ மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இளையநம்பி! விதை நெல்லை அழித்து விட்டால் அப்புறம் பயிரிட முடியாமற் போய்விடும். எனவே, இப்போது உங்களை என் சார்பில் தேடி வந்திருக்கும் திருமோகூர்க் கரும்பொற்கொல்லனை அவன் அறிந்திருக்கக் கூடும் என்ற காரணத்தினால் நான் தங்கியிருக்கும் இடத்தைக் கூறுமாறு உங்களில் எவரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. இது என் கடுமையான கட்டளை. இதை நீங்கள் மீறினால் நம்மைச்சுற்றி தப்ப முடியாத பயங்கர விளைவுகள் ஏற்பட்டு விடும்.

என்னுடைய மூன்று கட்டளைகளில்-அதாவது அந்துவன் மூலம் நான் தெரிவித்தவற்றில்-முதற் கட்டளை எல்லாருக்குமே பொருந்தும். என்னை நீங்கள் எல்லாருமோ, உங்களில் ஒருவரோ வந்து காணவேண்டிய காலத்தையும் இடத்தையும் நானே அறிவிப்பேன். அதுவரை நீங்கள் தேடவோ, ஆர்வம் காட்டவோ கூடாது. இரண்டாவது கட்டளையை அழகன் பெருமாளும் அவனைச் சேர்ந்தவர்களுமே நிறைவேற்ற வேண்டும். தென்னவர் மாறனையும், மல்லனையும் சிறை மீட்கும் முயற்சியில் இளையநம்பி ஈடுபடக்கூடாது. மூன்றாவது கட்டளைக்கு எல்லாருமே பொறுப்பாவார்கள். கணிகை இரத்தினமாலை, அழகன் பெருமாள், பிறர், அனைவருமே திருக்கானப்பேர் நம்பியைப் பாதுகாக்க வேண்டும். இவற்றை என் ஆணையாக அனைவரும் மதிக்க வேண்டுகிறேன்.’ ஓலையின் ஒவ்வொரு சொல்லும் பெரியவரே எதிர் நின்று பேசுவன போலிருந்தன.

இவ்வளவில் ஓலைகள் முடிந்து அடையாள இலச்சினை பொறித்திருந்தது. அந்த ஓலைகளை அடுத்துப் படிக்க வேண்டிய முறைப்படி அழகன்பெருமாளிடம் உடனே கொடுத்து விட்டு மிகவும் ஞாபகமாக,

“எங்கே? அந்த மற்றோர் ஒலை?” - என்று கொல்லனை நோக்கிக் கை நீட்டினான் இளையநம்பி.

கொல்லன் மீண்டும் தயங்கினான். அந்த ஓலையை அவர்கள் அனைவருக்கும் நடுவில் அவன் இளையநம்பியின் கையில் எடுத்துத் தரத் தயங்குவதாகத் தெரிந்தது.