உள்ளடக்கத்துக்குச் செல்

நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/12. எதிர்பாராத அழைப்பு

விக்கிமூலம் இலிருந்து

12. எதிர்பாராத அழைப்பு

புறத்தே பெய்த புது மழையைப் போல், இதயத்திலும் ஒரு புதுமழை பெய்தாற் போன்ற மகிழ்ச்சி நிலவியதை அடுத்து, முற்றிலும் எதிர்பாராத விதமாய் மின்னலைப் போல் வந்து தோன்றிய கொல்லன், இளையநம்பியின் அந்த ஓலையைக் கொடுத்து விட்டுப் போகவே, செல்வப் பூங்கோதையின் உவகை கட்டுக்கட்ங்காத பூரிப்பாகப் பெருகியது. பல நாள் வெம்மையைப் புறத்தே போக்கி விட்ட அந்தப் புது மழையைப் போல், தன் இதயத்தின் கோபதாபங்கள் எல்லாமே உடன் மறைந்து விட்டாற் போலிருந்தது அவளுக்கு. காத்தற் கடவுளாகிய, இருந்த வளமுடைய பெருமாளே, தன் துயரங்களுக்கு இரங்கி அருள் புரிந்து விட்டதாக அவள் உணர்ந்தாள். தானே உருகி உருகி ஒலைகளை எழுதிக் கொண்டிருந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, அவரிடம் இருந்தும் ஓர் ஒலை தனக்கு மறுமொழியாகக் கிடைத்ததைத் திருவிழாக் கொண்டாடி வரவேற்கலாம் போலிருந்தது. அதை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்வதற்கு ஏற்ற தனிமையை நாடி, மாளிகையின் பின்புறமிருந்த மலர் வனத்திற்குச் சென்றாள் அவள். மாலை வேளையின் இதமான சூழ்நிலையும், அவளுடைய உல்லாசத்திற்குத் துணை புரிவதாயிருந்தது. தாயின் கண்காணிப்பிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமான உற்சாகத்தோடு, அந்த ஒலையைப் படிக்க விரும்பினாள் அவள்.

“என்மேல் அன்பு செய்வதையே ஒரு நோன்பாக இயற்றி வரும் ஆருயிர்க் காதலை உடைய செல்வப் பூங்கோதைக்கு இளைய நம்பி வரையும் மடல்: சூழ்நிலை இயைந்து வராத காரணத்தால், நீ ஆறுதலடையும்படி என் கைப்பட இதுவரை நான் எதுவும் உனக்கு எழுத முடியவில்லை. என் பக்கம் அது ஒரு குறைதான். ஆனால் அந்தக் குறை நீ எனக்குக் ‘கடுங்கோன்’ என்று குரூரமாகவும், கோபமாகவும் பெயர் சூட்டிச் சபிக்கும் அளவிற்குப் பெரியது என்பதை அண்மையில் நீ எழுதியதைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். ஆருயிர்க் காதலனுக்குச் சாபம் கொடுக்கும் அளவிற்கு, அன்பில் உரிமையும், அதிகாரமும் உள்ள பெண்கள் திருமோகூரில்தான் பிறக்க முடியும் என்று தெரிகிறது. காராளர் குடும்பம், பாண்டிய அரச வம்சத்துக்கு இணையான பெருமை உடையது. அந்தக் குடும்பத்து இளம்பெண் ஒருத்திக்குத் தன் காதலன் மேற் சாபம் விடும் அளவு கோபம் கூட இருக்கலாம்தான். ஆனால், உன் கோபத்தில் திரும்பத் திரும்ப நீ சுமத்தியிருக்கும் ஒரு குற்றத்தை நான் மறுக்க முடியும். நான் ஏதோ உன்னை அடியோடு மறந்து போய்விட்டது போலவும், நீ மட்டுமே என்னை நினைத்துத் தவித்துக் கொணடிருப்பது போலவும் எழுதுகிறாய். நான் மறந்ததை நீ எப்படி அறிய முடியும்? நீ என்னை மறவாமல் நினைந்துருகுவதை நிரூபிக்க நான் எல்லாவற்றையுமே மறந்து விட்டதைப் போல, ஒரு குற்றத்தை என் தலையில் சுமத்த வேண்டியது அவசியம்தானா? நியாயம்தானா? நீ கொற்றவைக் கோயிலுக்கு ஒரு மண்டலம் நெய் விளக்குப் போட்டதும், இருந்த வளமுடையாரை ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களால் அர்ச்சித்ததும் ஒரு போதும் வீண் போகாது. என் பிரிவு உன்னை மெய்யாகவே ஊமையாக்கி விட்டதாக இரண்டு ஓலைகளிலுமே திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறாய்! பேச்சுத்தான் ஊமையாகி இருக்கிறதே ஒழிய, உன் கோபதாபங்கள் இன்னும் ஊமையானதாகத் தெரியவில்லை. கொற்றவைக் கோயிலுக்கு நெய் விளக்கு வேண்டுதல், இருந்த வளமுடையாருக்கு ஆயிரத்தெட்டுத் தாமரை மலர் அர்ச்சனை, ஆகியவை போதாதென்று இப்போது தாய் தந்தையுடன் தீர்த்த யாத்திரை வேறு சென்று விட்டு வந்திருக்கிறாய். இவ்வளவு புண்ணியப் பயன்களைப் படைகள் போல் ஒன்று சேர்த்துத் திரட்டி வைத்துக் கொண்டிருக்கிற நீ வெற்றி பெறாமல், வேறு யார் வெற்றி பெறப் போகிறார்கள் செல்வப்பூங்கோதை? உன் அன்புக்குப் புண்ணியப் பயன் இருக்கும் போது நீ பயப்படுவானேன்? இங்கிதமான குரலில் கடுமையான வார்த்தையைச் சொன்னாலும், இனிமையாகத்தான் இருக்கும். அதுபோல் பிரியத்திற்குரிய நீ என்னைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கிறாய். ஆனால், இன்று இந்த விநாடியில் இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, வேறு ஒருவருக்கும் நான் கடுங்கோன் ஆகிவிட்டேன். என்னை இத்தனை காலம் இந்த மதுரை மாநகரில் மறைந்திருக்க இடம் அளித்து அன்போடு பேணி உபசரித்துக் கண்ணை இமை காப்பது போல் காத்த ஒருவருக்கு உண்மையிலேயே நான் கடுங்கோனாக நேர்ந்து விட்டது. இங்கே நான் கடுங்கோனாக நேர்ந்ததே உனக்குக் கடுங் கோனாகக் கூடாது என்பதனால்தான். இதை நீ இப்போது விளங்கிக் கொள்ள இயலாவிடினும், எப்போதாவது நானே உன்னிடம் விளக்கிச் சொல்லுவேன். உன் வெற்றியில், இங்கே என்னருகிலுள்ள இன்னொருவருடைய தியாகம் அடங்கப் போகிறது.

நான் உன்னை நினைக்கவே இல்லை என்று நீ என் மேல் குற்றம் சுமத்தும் போது எனக்கு, இளமையில் திருக்கானப்பேரில் நான் கல்வி கற்ற காலத்து நிகழ்ச்சி ஒன்று நினைவு வருகிறது பெண்ணே! என்னோடு ஒரு சாலை மாணவனாகக் கற்ற இளைஞன் ஒருவன், தான் காதலித்த பெண்ணை அடையமுடியாத ஏமாற்றத்தில் பித்துப் பிடித்து மடலேறும்[1] நிலைக்குப் போய் எக்காலமும் அவள் பெயரையே கூவி அரற்றிக் கொண்டு, தெருக்களில் திரிந்தான். திருமோகூரில் உன் தந்தையோடு அமர்ந்து விருந்துண்ண மாளிகைக்குள் வந்த போது, அன்று முதன்முதலாக நீயும், உன் தாயும் என்னை மங்கல ஆரத்தி எடுத்து வரவேற்றீர்கள். அப்போது, நீ என்னை நோக்கிச் சிரித்த சிரிப்பைக் கண்டு, எனக்கு அந்தத் திருக்கானப்பேர்ப் பித்தனின் காதல்தான் நினைவு வந்தது. உன் சிரிப்பில் எங்கே நான் பித்தனாகி விடுவேனோ என்று கூட அஞ்சினேன். அந்தத் திருக்கானப் பேர்ப் பித்தனைப் போல் நான் தெருவில் எல்லாம், உன்னைப் பெயர் சொல்லிக் கூவித் திரிந்தால்தான் எனக்கு உன் ஞாபகம் இருப்பதாய் நீ நம்புவாய் போலிருக்கிறது. அழகிய பெண்ணின் புன்சிரிப்பில், எதிரே நிற்கிற இளைஞன் கவியாகிறான் என்பார்கள். நீ அந்த திருக்கானப்பேர்ப் பித்தனைப் போல், என்னையும் கவியாக்கி விட்டாய். மொழியின் நயங்களையும், பொருள் நுணுக்கங்களையும், தேர்ந்த கை மலர் தொடுப்பது போல், பதங்களை இணைக்கும் இங்கிதங்களையும் அறியாத பாமரனைக் கூட ஒர் அழகிய பெண் கவிஞன் ஆக்கி விடுகிறாள். நான் பாமரன் இல்லை. ஆனால் என்னையும் நீ கவியாக்கியிருப்பதை அறிந்தால், உன் மனம் ஒரு வேளை அதற்காக மகிழலாம். கர்வப்படலாம். கீழ்வரும் பாடல் மூலம் உனக்கு அந்தக் கர்வத்தை நான் அளிக்கலாமா?


“முத்தும் பவழமும்
நல்லிதழும் முறுவலுமாய்ச்
சித்திரமே போல்வந்தென்
சிந்தை குடிபுகுந்த
நித்தில வல்லி!
செல்வப் பூங்கோதாய்!
கத்தும் கடல்ஏழும்
சூழ்தரு காசினியில்
சித்தம் நினைப்புச்
செய்கை உள்ளளவும்


எத்தாலும் நின்னை
மறப்பறியேன் என்பதனை
வித்தும் முளையும்போற்
கலந்திணைந்த விருப்பத்தால்
சற்றேனும் நினைத்திருந்தால்
தவிர்ந்திடுவாய் சீற்றமெலாம்'’

இப்போது சொல் செல்வப்பூங்கோதை! ஒவ்வோர் அழகிய பேதைப் பெண்ணும் தன்னை நினைத்துத் தவிக்கும் யாரோ ஓர் ஆண் மகனைக் கவிஞனாக்கி விட்டு, அவன் கவிஞனாகியதற்குக் காரணமே தான் என்பதை மறந்து திரிகிறாள் என்பது எவ்வளவு நியாயமான வாதம்? நீயும் அப்படி மறந்து திரிகிறாய் என்று நான் உன்மேற் குற்றம் சுமத்த முயன்றால், அது எவ்வளவிற்குப் பொருந்துமோ, அவ்வளவிற்கே நீ நான் உன்னை மறந்து விட்டதாக என் மேற்சுமத்தும் குற்றமும் பொருந்தும். நான் உன்னை விடக் கருணை உள்ளவன் பெண்ணே! நீ சிறிதும் இங்கிதமில்லாமல், என்னைக் ‘கடுங் கோன்’ என்று சபித்தாய்.நானோ உன்னை அழகிய சிறப்புப் பெயர்த் தொடராகத் தேர்ந்து ‘நித்தில வல்லி’ என அழைத்திருக்கிறேன். யாருடைய காதற் பெருந்தன்மை அதிகம், யார் மறக்கவில்லை என்பதற்கெல்லாம் இவையே சாட்சி."

என்று அந்த ஓலையை முடித்திருந்தான் இளையநம்பி. இந்த ஓலையைப் படித்து முடித்ததும், மகிழ்ச்சியின் எல்லையில் திளைத்தாள் செல்வப் பூங்கோதை. அவ்வளவு நாட்களாக இளையநம்பியைப் பிரிந்தும், காணாமலும் இருந்ததால் ஏற்பட்ட தாபம் எல்லாம் இந்த ஒரே ஒரு கணத்துக்குள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது போலிருந்தது. அந்த ஓலையைத் திரும்பப் படித்து மகிழ்ந்தாள் அவள். நீற்றறையின் வெம்மையில் வாடியவன், நீரில் மீண்டும் மீண்டும் மூழ்கி எழுவதை ஒத்திருந்தது அவள் செய்கை. தாபம், தவிப்பு என்ற நீற்றறையில் பல நாட்களாகப் புழுங்கிய அவள் மேல் தண்ணென்று அன்பு மழையே பெய்தது போல் வந்திருந்தது அந்த ஓலை. ஓலையைக் கொடுத்ததுமே கொல்லன் விரைந்து திரும்பிப் போய்விட்டானே என்றெண்ணி இப்போது வருந்தினாள் அவள். ‘அவன் திரும்பிப் போகாமல் இருந்தாலாவது, ஒர் ஒலையை எழுதி அவருக்குக் கொடுத்தனுப்பலாம்’ என்றும் கழிவிரக்கம் கொண்டாள் அவள். மகிழ்ச்சி வெறியில் உடல் சிலிர்த்தது. நிலை கொள்ளாத உவகையில், தோட்டத்து மாதவிக் கொடியை யாரும் காணாத தனிமையில் தழுவி மகிழ்ந்தாள் அவள். பூங்கொத்துகளை முகத்தோடு முகம் சேர்த்து, மென்மையையும், நறுமணத்தையும் நுகர்ந்தாள். வாய் இனிமையாக இசைத்துக் களித்தது. 'நித்திலவல்லி’ என்ற அந்த அழகிய பெயரை மெல்லிய குரலில் தனக்குத் தானே சொல்லிப் பார்த்துக் கொண்டாள். மானாகத் துள்ளியும், மயிலாக ஆடியும் தன் மகிழ்ச்சி வெள்ளம் தோட்டம் நிறையப் பெருகும்படி குயிலாக இசைத்தும் உவகை பூத்தாள்.

பெறற்கரிய செல்வமாகிய, அந்த ஓலையை மறைத்துக் கொண்டு மீண்டும் அவள் மாளிகைக்குள் நுழைந்தபோது மாளிகையில் தாய் அந்தி விளக்கு ஏற்றிக் கொண்டிருந்தாள். பெருமாளிகை வாயிற் புறமாகிய தெரு முன்றிலில், யாரோ கூப்பிடுவது கேட்டு, “யார் என்று போய்ப் பார்த்து விட்டு வா மகளே!” என்று செல்வப்பூங்கோதையை வேண்டினாள் தாய். வாயிலுக்கு விரைந்த போது படி தடுக்கவே, ஒரு கணம் தயங்கி நின்றாள் மகள். மாளிகை நடுக் கூடத்திற்கும், வாயிற் புறத்துக்கும் இடையே நெடுந் தொலைவு நடந்து செல்ல வேண்டியிருந்தது; இருட்டி விட்டதால் தெரு முன்றிலில் நிற்பவர் யாரென்று உள்ளேயிருந்து காண முடியவில்லை. இடைகழியின் மங்கலான விளக்குகள் இருளோடு போராடிக் கொண்டிருந்தன.

பழையபடி வாயிற்புறமிருந்து மீண்டும் யாரோ கூப்பிடுகிற குரல் எழவே, தாய்,

“உன்னைத்தான் செல்வப் பூங்கோதை மறந்து விட்டாயா அதற்குள்? வாயிற்புறம் போய் யாரென்று பார்த்து விட்டு வா அம்மா” என்று மறுபடியும் நினைவூட்டினாள். நடை தடுக்கித் தயங்கி இருந்த செல்வப்பூங்கோதை வாயிலுக்குச் சென்றாள். இடை கழிகளில் அம்பாரம் அம்பாரமாகக் குவித்திருந்த புது நெல் மணம் நாசியில் புகுந்து நிறைந்தது. களஞ்சியங்கள் இருந்த கூடாரத்தையும் கடந்து, அவள் முன் வாயிற்புறத்திற்கு வந்து பார்த்த போது, அங்கே இருளோடு இருளாக இருவர் நின்றிருந்தனர். அவர்கள் இருவருமே விளக்கொளியில் நேருக்கு நேர் முன் வந்து நிற்கத் தயங்குவதாகத் தோன்றியது. முதலில் அஞ்சினாலும், பின்பு துணிவடைந்தாள் அவள்.

“யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?"-என்று கேட்டுக் கொண்டே மாடப் பிறையிலிருந்த கை விளக்கை எடுத்து அவர்கள் அருகே ஒளியைப் பரவவிட்ட செல்வப் பூங்கோதை, இருவரும் யாரென்று தெரிந்ததும் திகைத்தாள். அவர்கள் இருவரும் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு மெய்க் காவலாக நியமிக்கப்பட்டிருந்த தென்னவன் ஆபத்துதவிகளாக இருக்கக் கண்டு அவளுக்கு வியப்பாயிருந்தது. பெரியவர், அந்தப் பகுதியை விட்டு எங்கோ மறைவாகப் போய்ப் பல திங்கள் காலம் கடந்த பின், நீண்ட நாட்களுக்கு அப்பால் தன் எதிரே அவருடைய மெய்க் காவலர்களைக் கண்டு ஒன்றும் புரியாத மனக் குழப்பத்தோடு,

“தந்தையார் ஊரில் இல்லை! உங்களுக்கு என்ன வேண்டும்? பெரியவர் இப்போது எங்கே எழுந்தருளி இருக்கிறார்?” என்று வினவினாள் அவள்.

“உங்கள் தந்தையார் இப்போது இங்கே திருமோகூரில் இல்லை என்பதை நாங்களும் அறிவோம் அம்மா! இப்போது நாங்கள் தேடி வந்தது உங்களைத்தான்! உங்கள் தந்தையாரை அல்ல...பெரியவர் இப்போது இந்தக் கணத்தில் உங்களைச் சந்தித்துப் பேசுவதற்காக, இங்கே திருமோகூருக்கே எழுந்தருளி, ஆல மரத்தடியில் தங்கியிருக்கிறார் என்று நாங்கள் கூறினால், நம்புவதற்கு அரியதாயிருக்கும்.”

“மெய்யாகவா இங்கு எழுந்தருளியிருக்கிறார்?”

“உயிரே போவதானாலும் தென்னவன் ஆபத்துதவிகள் பெரியவர் பற்றி மெய் அல்லாததைக் கூறமாட்டோம் அம்மா! அவர் கட்டளைப்படியே தங்களை உடனே அழைத்துச் செல்லத்தான் இப்போது இங்கு வந்தோம்."

இதைக் கேட்டு அவள் திகைப்பும் குழப்பமும் முன்னை விட அதிகமாயின.

  1. தான் காதலித்த பெண்ணை அடைய வேண்டிக் கூரிய பனை மடலாற் செய்த குதிரையில் ஏறி, ஓர் இளைஞன் தன்னையே கொடுமைப் படுத்திக் கொள்ளுதல்