நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/16. கோட்டையும் குல நிதியும்
மல்லன் தெரிவித்த செய்தியைக் கேட்டதும் அழகன் பெருமாள், இளையநம்பியின் காதருகே வந்து மெல்லக் கூறினான்:
“ஐயா! தென்னவன் மாறனைக் கொன்றதற்காகக் களப்பிரக் கலியரசனைத் தன் கைகளாலேயே, பழி வாங்கப் போவதாகச் சிறையிலிருக்கும் போதே இவன் பல நாள் விடாமல் கோபத்தோடு எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அதை இப்போது நிறைவேற்றிவிட்டான் என்று தெரிகிறது! கலியரசனோடு போரிடும் வேலை இனி நமக்கு இல்லை. அதை இவன் நிறைவேற்றிப் பழி தீர்த்து விட்டான்.” பகைவனின் குருதி படிந்த அந்தக் கொலை வாளைப் பார்த்து, இளையநம்பியின் கண்கள் கூசின. அந்த வாளில் யாருடைய குருதி படிந்திருந்ததோ, அந்தக் குருதிக்கு உரியவன் தன் உடன் பிறந்தவர்களில் இருவரையும், உடன் பிறவாத சகோதரர்களாகிய பல பாண்டிய வீரர்களையும் கொன்றிருக்கிறான் என்பது நினைவு வந்தவுடன், அவனுடைய கூச்சம் அகன்று மனதில் கடுமை சூடேறியது. கோட்டையைக் கைப்பற்றியதும் முதல் கட்டளையாக, “இங்கே அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள களப்பிரப் பெண்களையும், நகரின் எல்லையிலுள்ள பாலி மொழிப் புலவர்களையும், கலைஞர்களையும், களப்பிரர்களின் சமயத்தைச் சேர்ந்த துறவிகளையும் மிகவும் பாதுகாப்பாகப் பாண்டிய நாட்டின் எல்லை வரை வெளியேற்றிக் கொண்டு போய் விட்டு வர வேண்டும்-” என்று முன் எச்சரிக்கையாக அறிவித்திருந்தான் இளையநம்பி.
களப்பிரர்-பாண்டியர் பழம்பகையில் பெண்களும், புலவர்களும், கலைஞர்களும், துறவிகளும் துன்புற நேரிடக் கூடாது என்றே முன்னெச்சரிக்கையோடு இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பாண்டிய மரபின் பெயர் களங்கப்படும் விதத்தில் எந்தப் பூசலும் கோநகரில் நிகழ்ந்து விடக் கூடாதென்பதில் இளையநம்பி கண்ணும் கருத்துமாயிருந்தான். பாண்டிய மரபின் பெருமைக் குறைவின்றி உரிய முறையில் இலவந்திகைக் காட்டில் பெருஞ்சித்திரனின் அந்திமக் கிரியைகள் நடைபெற்றன. அது முடிந்து மீண்டும் அரண்மனைக்குத் திரும்பும், பெரியவர் கூறியிருந்த பிரம்ம முகூர்த்த வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரே நல்வாழ்த்துகளுடன் அனுப்பியிருந்த கொடியை, மதுரை மாநகரக் கோட்டையில் ஏற்ற வேண்டும். ஊரறிய, உலகறிய மீண்டும் பாண்டியப் பேரரசு உதயமாவதன் அடையாளமாக இப்போது அவர்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது.
வைகறையின் குளிர்ந்த காற்றோடு, அந்தக் கொடியேற்றத்திற்கு வானமே வாழ்த்துக் கூறுவது போல் மெல்லிய பூஞ்சாரலாக மழையும் பெய்யத் தொடங்கியிருந்தது. விடிகாலைப் பறவைகளின் குரல்களும், வைகறைப் பண் பாடும் இசைவாணர் வாழ்த்தொலிகளும், கோட்டை முன்றிலில் கூடியிருந்த ஆயிரமாயிரம் பாண்டிய வீரர்களும், ஆபத்துதவிகளும், முனையெதிர் மோகர் படையினரும் செய்த மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க, மதுரை மாநகரின் பழம்பெரும் கோட்டையிலே மீண்டும் பாண்டியர் மீன் கொடி ஏறியது. இருள் நீங்கிப் பொழுதும் புலர்ந்தது. கொடியுடன், பெரியவர் கொடுத்தனுப்பியிருந்த இடை வாளை அணிந்து ஆலவாய் இறையனார் கோயிலுக்கும், இருந்த வளமுடையார் கோயிலுக்கும் சென்று வணங்கிய பின், மங்கல வேளையில் அரண்மனையிற் பிரவேசம் செய்தான் இளையநம்பி.
மதுரை மாநகரத்து அரண்மனையின் கீழ்த்திசையில் கோட்டை மதில்களிலே தெரியும் காலைக் கதிரவனின் ஒளியைக் கண்ட போது, முதன் முதலாகத் தான் பெரியவர் மதுராபதி வித்தகரைத் திருமோகூரில் சந்தித்த போது, 'பாண்டிய நாட்டில் இருட்டிப் போய் நெடுங்காலமாயிற்று' என்று அவர் கூறியதற்கு மறுமொழியாக, ‘ஒவ்வோர் இருட்டுக்குப் பின்னும் ஒரு வைகறை உண்டு ஐயா!' என்று நம்பிக்கையோடு அவருக்கு மறு மொழி கூறியிருந்தது, இன்று இப்படி நிதரிசனமாகி இருப்பதை உணர்ந்தான்.
அரண்மனைக்குள்ளோ, கொலுமண்டபத்திலோ அதிக நேரம் தங்காமல் ‘கொடி ஏறிப் பறக்கத் தொடங்கிய சில நாழிகை நேரத்திற் கிழக்குக் கோட்டை வாயில் வழியாக நானே நகருக்குள் வருவேன்' என்று பெரியவர் தெரிவித்திருந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு காராளரும் பரிவாரமும் புடைசூழக் கிழக்குக் கோட்டைவாயிலுக்கு விரைந்தான் இளையநம்பி. பாண்டியப் பேரரசு மீண்டும் உதயமாகக் காரணமான பெரியவரை, வரவேற்பதைத் தன் முதற்கடமையாக அவன் கருதினான்.
கோநகரக் குடிமக்கள் இந்த மாபெரும் வெற்றிக்காகக் காத்திருந்தவர்களைப் போல், தெரு எங்கும் தோரணங்கள் கட்டி, வாழை மரங்கள் நட்டுக் கோலமிட்டு அலங்கரித் திருந்தனர். கோநகரும், சுற்றுப்புறங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. மங்கல வாத்தியங்களும், வெற்றி முரசங்களும், வாழ்த்தொலிகளும் எல்லாத் திசைகளிலும் எழுந்து, பேராரவாரமாக ஒலித்துக் கொண்டிருந்தன. இளையநம்பி கிழக்குக்கோட்டை வாயிலுக்குப் போய்ச் சேருவதற்கு முன்பே, அங்கே ஆயிரம் வெண் புரவிகளில் அணி வகுத்த வீரர்களோடு புறப்பட்டுக் கொற்கையிலிருந்து வந்து காத்திருந்தான் குதிரைக் கோட்டத்து மருதன் இளநாக நிகமத்தான். முக படாம் தரித்த யானையின் மேல் அந்துவன் எடுப்பாக அமர்ந்திருந்தான். இளையநம்பியைக் கண்டதும் யானைப்பாகன் அந்துவன், “அரசே! இந்த ஏழையின் முகராசிக்குக் கெட்ட பெயர் வராமல் காப்பாற்றியதற்காகத் தங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரியவில்லை. ‘இந்த நகரத்தில் முதலில் என் முகத்தில் விழிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வந்த காரியம் நிச்சயமாக வெற்றி பெறும்’ என்று பல திங்கள் காலத்துக்கு முன் உங்களிடம் சொல்லியதை இப்போது நிறைவேற்றி விட்டேன்" என்றான். அவனுடைய கள்ளங் கபடமற்ற பாராட்டை ஏற்றுப் புன்முறுவல் பூத்தான் இளையநம்பி.
பூர்ண கும்பத்துடனும், மங்கல தீபத்துடனும் பெரியவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கும் நோக்குடனும், அங்கே தன் பணிப்பெண்களோடு காத்திருந்தாள் கணிகை இரத்தினமாலை. கிழக்குக் கோட்டை வாயிலிலிருந்து அரண்மனை வரை அழைத்துச் செல்வதற்காக இரத்தினமாலையின் முத்துப்பல்லக்கும் காத்திருந்தது. அழகிய பெண்கள் இருமருங்கும் வெண்சாமரம் வீசக் காத்திருந்தனர். வழிநெடுக மலர்களைத் தூவியிருந்தார்கள். மங்கலப் பொருள்களைச் சிதறியிருந்தார்கள்.
பாண்டியன் இளையநம்பி, நகருக்குள் பிரவேசிக்கப் போகும் அந்த மாபெரும் அரச தந்திரிக்கு மாலை சூட்டி வரவேற்பதற்காகவே காராளரோடும், அழகன்பெருமாளோடும் பரிவாரங்களோடும் காத்திருந்தான். நெடுநேரம் காத்திருந்த பின், கீழ்த்திசையில் மற்றொரு சூரியன் புதிதாக உதித்து வந்தது போல், ஒளி திகழும் அந்தப் பேருருவம் ஆபத்துதவிகள் சூழ வந்து தோன்றியதும், கடல் அலை போல் கூட்டத்தில் பேராரவாரம் எழுந்தது. வாழ்த்தொலி விண்ணை எட்டியது. மதிற்சுவர்களின் மேலிருந்தும், கோட்டைக் கதவுகளிலிருந்தும், மரங்களின் மேலிருந்தும், அந்த ஒளிமயமான பேருருவத்தின் மேல் மலர்மாரி பொழிந்தது. இன்றுதான் வாழ்விலேயே ஒரு புதிய மாறுதலாக உணர்வுகளே தெரிய விடாத அந்த முக மண்டலத்தில் வெளிப்படையாகப் புன்முறுவலைப் பார்த்தான் இளையநம்பி. இரத்தினமாலை நிறைகுடமும், மங்கல தீபமும் காண்பித்து ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றாள். முழந்தாள் மண்ணில் பதிய மண்டியிட்டு வணங்கிய பாண்டியன் இளையநம்பியைத் தூக்கி நிறுத்தி, நெஞ்சாரத் தழுவிக் கொண்டார் பெரியவர் மதுராபதி வித்தகர். நாத்தழுதழுக்க இளையநம்பி அவரிடம் கூறலானான்:-
“ஐயா! இந்தப் பேரரசை நீங்கள்தான் மீட்டுத் தந்திருக்கிறீர்கள்! நான் வெறும் கருவிதான். ஆயுதங்களும் வீரர்களும் வென்ற வெற்றி என்பதை விட இதைத் தங்கள் சாதுரியத்தின் அரச தந்திர வெற்றி என்றே கூறலாம்.”
“இந்த வெற்றியில் என் சாதுரியம் மட்டுமில்லை! இதோ இவர்களுக்கு எல்லாம் அதில் பங்கு இருக்கிறது” என்று தம்மைச் சூழ இருந்த காராளர், கொல்லன், அழகன் பெருமாள், இரத்தினமாலை, யானைப்பாகன் அந்துவன், ஆபத்துதவிகள், உப வனத்து ஊழியர்கள், மருதன் இளநாக நிகமத்தான் எல்லாரையும் சுட்டிக் காண்பித்தார் பெரியவர். அப்போது அவருக்குப் பின்புறம் நின்ற ஆபத்துதவி ஒருவன், முன்னால் வந்து அதுவரை தன் கையிற் சுமந்து கொண்டிருந்த ஒரு பேழையை அவரிடம் கொடுத்தான்.
“இளையநம்பீ! நெடுங்காலத்துக்கு முன் இந்நாட்டைக் களப்பிரர்களிடம் தோற்ற போது இங்கே மதுரை மாநகரத்து அரண்மனையிலிருந்து இரவோடிரவாக நிலவறை வழியே வெளியேறிய உன் முன்னோர்கள், இது தங்கள் குலநிதி என்பதற்கு ஒர் அடையாளமாக அரண்மனைக் கருவூலத்திலிருந்து ஒன்பதே ஒன்பது முத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள் என்பது செவி வழி வழக்கு. இந்த முத்துகள், சில தலைமுறைகளாகக் கொற்கையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அண்மையில்தான் இவற்றோடு உன் தம்பி முறையிலான பெருஞ்சித்திரன் நான் கூப்பிட்டனுப்பி என்னிடம் வந்தான் நேற்று மாலைப் போரில் அவன் மாண்ட செய்தியையும், வருகிற வழியில் கேள்விப்பட்டு வருந்தினேன். இப்போது உன் குலநிதியாகிய இந்த முத்துகளை உன்னிடம் ஒப்படைத்து விட வேண்டியது என் கடமை. உன் அரச பண்டாரமாகிய பொக்கிஷத்தில் இந்த முத்துகளை முதலில் கொண்டு போய் வைத்து, ஆட்சியைத் தொடங்கு!” என்று கூறிப் பேழையைத் திறந்து முத்துகளை, எல்லார் முன்னிலையிலும் எடுத்து, இளைய நம்பியிடம் வழங்கினார் பெரியவர். வணக்கத்தோடு அவற்றைப் பெற்றுக் கொண்டான் இளையநம்பி.
அந்த முத்துகளை கண்களில் ஒத்திக் கொண்டு அவன் நிமிர்ந்த போது, இரத்தினமாலை கண்களில் நீர் நெகிழ, அவனையே இமையாமல் பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.
மதுராபதி வித்தகர் இரத்தினமாலையின் முத்துப் பல்லக்கில் நகர் வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அரண்மனையை அடைந்தார். ஏழு வெண் புரவிகள் பூட்டிய தேரில், இளைய நம்பியும் நகருலாவாகச் சுற்றி வந்து, அரண்மனையை அடைந்தான். பெரியவர் ஆவலாய் இறையனார் திருக்கோயிலுக்கும், உவணச் சேவற் கொடி உயர்த்திய இருந்த வனத்திற்கும் சென்று நெஞ்சுருக வழிபட்டு வணங்கினார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நலிந்து போயிருந்த கோநகரின் சிறந்த புலவர்கள், கலைஞர்கள், வீரர்கள், சமய வாதிகள் அறக்கோட்டங்கள் எல்லாரையும், எல்லாவற்றையும் மீண்டும் மதுரை மாநகரின் புகழுக்கும் பெருமைக்கும் சிறப்புக்கும் உரியதாகும்படி அவர் இளைய நம்பியிடம் கூறி மாற்றினார். இளையநம்பியின் பாட்டனாரும், தம்முடைய நெருங்கிய நண்பரும் ஆகிய திருக்கானப்பேர் பாண்டியர் குல விழுப்பரையரை, உடனே எல்லாப் பெருமைகளுடனும் உரிய கெளரவத்துடனும் கோநகருக்கு அழைத்து வருமாறு, தூதர்களை அனுப்பச் செய்தார். காராளரைக் கூப்பிட்டு, “கோநகரின் வெற்றி மங்கலக் கோலாகலங்ளைக் கண்டு களிக்க உங்களுடைய குடும்பத்தினரைப் புறப்பட்டு வரச் சொல்லி ஆளனுப்புங்கள்” என்று கட்டளையிட்டார். காராளரும் உடனே தம் மனைவியையும், மகள் செல்வப்பூங்கோதையையும் கோநகருக்கு அழைத்து வருமாறு கொல்லனை திருமோகூருக்கு அனுப்பி வைத்தார். பைந்தமிழ்ப் புலவர்கள் அரண்மனைக் கொலு மண்டபத்தில் வந்து வெற்றி மங்கலம் பாடிப் பரிசுகள் பெறலாமென்று எங்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மிக முதிய புலவரும், பாண்டிய மரபுக்கு மிகவும் வேண்டியவருமான ஒருவர் இளையநம்பிக்கு முடி சூட்டுங் காலத்துச் சிறப்புப் பெயராக, ‘இருள் தீர்த்த பாண்டியன்' என்ற அடைமொழியை வழங்கிப் புகழ்மாலை சூட்டினார். தொடர்ந்து, கோநகரும், அரண்மனையும் வெற்றிக் களிப்பில் திளைத்திருந்தன. திருக்கானப்பேரிலிருந்து பாண்டிய குல விழுப்பரையர் சில நாட்களில் அழைத்து வரப்பட்டார். செல்வப் பூங்கோதையும், அவள் தாயும் கோநகருக்கு முன்பே வந்து சேர்ந்தார்கள். இன்னும் எல்லைகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த போர்களின் முடிவு தெரியவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் பெரியவர். கோட்டையில் மீனக் கொடி பறக்கத் தொடங்கி ஏழு நாட்கள் ஒடி விட்டன. எட்டாம் நாள் காலையில் போர் நிகழும் எல்லைகளிலிருந்து தூதர்கள் தேடி வந்திருக்கிறார்கள் என்று அறிந்ததும், பெரியவர் அவர்களைச் சந்திக்க வந்தார். அரண்மனையில் தூதர்களை எதிர் கொள்ளும் அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்துக்கு அவர் வந்த போது, இளையநம்பியும் அங்கே இருந்தான்.