நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/18. முடிவற்று நீளும் பயணம்
கோர்த்துப் பேசுவது போல் வேண்டுகோளை மெல்ல வெளியிட்டார். செல்வப் பூங்கோதையிடம் நேரில் கூறத் தயங்கி, அவள் தந்தையிடம் பேசுவது போல் அவர் இவற்றைப் பேசியிருந்தாலும், அவளை எதிர் நோக்கியே சொற்கள் கூறப்பட்டிருந்தன.
அவர் எதிர்பார்த்தது போல், அவள் கண்ணீர் சிந்தி அழவில்லை. கதறவில்லை. சீறவில்லை. சாடவில்லை. ஒரு சிலையாகி நின்று விட்டாற் போல் ஆடாமல், அசையாமல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். ஏளனமும், சோகமும், வரட்சியும், விரக்தியும் அவள் விழிகளில் மாறி, மாறித் தோன்றுகிறாற் போல் அவர் பார்வையில் பட்டது. அவள் இன்னும் சாந்தமாகவே நின்று கொண்டிருந்தாள். நீண்ட நேரம் அப்படி நின்ற பின், அவரைப் பார்த்து விரக்தியோடு சிரித்தாள் அவள்.
“உன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்றும் புரியவில்லை செல்வப் பூங்கோதை?”
“ஒன்றுமில்லை ஐயா! ஏதோ நினைத்துக் கொண்டேன். சிரித்தேன். அதை நீங்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளா விட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால், உங்களைப் போன்ற மேதைகளுக்கு அறிவு மட்டும்தான் இருக்கிறது. இதயம் இல்லை. இதயம் இல்லாதவர்களால், இதயம் உள்ளவர்களின் அழுகையையும், சிரிப்பையும், கண்ணீரையும், வேர்வையையும் புரிந்து கொள்ள முடியாதுதான். இந்த உலகில் உங்களைப் போன்றவர்கள், ஒவ்வொரு தலைமுறையிலும், யாராவது ஒரு பேதையின் அன்பைப் பலியிட்டு, அந்தப் பலிபீடத்தின் மேல் சிம்மாசனங்களின் உறுதிக்குக் கால்களை நடுகிறீர்கள்... செய்யுங்கள்... எத்தனை காலம் வேண்டுமானாலும் இப்படிச் செய்து பாருங்கள். உங்களால் மனித இதயங்களையும் அன்பையும் சேர விடாமற் செய்ய முடியலாம். ஆனால் அழித்து விட முடியாது..." “உன் சொற்களால் பன்னெடுங்காலமாகச் சாகாமல் வடக்கிருப்பது போல், உயிருடன் நோன்பிருந்து ருசிகளை வெறுத்திருக்கும் இந்தக் கிழவனை இன்று நீ கொல்கிறாய் செல்வப்பூங்கோதை!”
“ஏமாற்றத்தினால் ஏற்கெனவே செத்துப் போய் விட்டவர்கள், எப்படி ஐயா மற்றவர்களைக் கொல்ல முடியும்?”
“நாம் பிழை செய்து விட்டோமோ என்ற தாழ்மை உணர்வை, என் வாழ்நாளிலேயே இன்று உன் முன், இந்தக் கணத்தில் அடைவது போல் வேறென்றும் எங்கும் நான் அடைந்ததில்லை செல்வப்பூங்கோதை! மகளே! நான் இதற்கு மேல் தாங்கமாட்டேன்! என்னைப் பொறுத்துக் கொள்...”
“ஐயா! அதிகம் பேசி, உங்களைப் புண் படுத்தி விட்டதற்காக வருந்துகிறேன். உங்களுக்குக் கொற்றவை சாட்சியாக வாக்கு அளித்தபடி பாண்டிய நாட்டின் எதிர் கால நலனுக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். நீண்ட நாட்களுக்கு முன் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு பெண், இந்த மதுரையையே தீயிட்டு எரித்தாள். இன்று எனக்கும் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால், நான் அதற்காக இன்று மதுரையை எரிக்கமாட்டேன். எரிக்கவும் கூடாது; இந்த ஆறாத்துயரில் என் இதயம் மட்டுமே எரியும். அவர், சேரன் மகளையோ, சோழன் மகளையோ அல்லது பாண்டிய நாட்டின் எதிர்கால நலனுக்கும், எல்லைப்புறப் பாதுகாப்புக்கும் அவசியமான எல்லா அரசர்களின் எல்லாப் பெண்களையுமோ மணந்து கொள்ளட்டும். அதைப் பற்றி நான் வருந்தவில்லை. தயை செய்து எனக்கும் என் பெற்றோருக்கும் இப்போது இங்கிருந்து விடை கொடுத்து அனுப்புங்கள்.”
இப்படி ‘வருந்தவில்லை’ என்று அவள் கூறிய குரலிலேயே துயரம் வெள்ளமாகத் தெரிந்தது. ஆசி கூறும் பாவனையில், வலது கையை உயர்த்தியபடியே தளர்ந்து கண் கலங்கி நின்றார். சிறிது நேரத்திற்கு முன் அவளால் இதய மற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெரியவர். அவர்கள் அவரிடமிருந்து விடை பெற்றார்கள். புறப்படு முன் காராளரை நெஞ்சாரத் தழுவிக் கொண்ட வித்தகர், “தயை கூர்ந்து உடனே திருமோகூருக்குத் திரும்பிப் போய் விடாதீர்கள். முடிசூட்டு விழாவின் போது பழம் பெரும் பாண்டிய குல மரபுப்படி உங்களைப் போல வேளாளர் ஒருவர்தான் திருமுடியை எடுத்து அளிக்க வேண்டும்! இங்கே இருந்து அதைச் செய்வதற்கு உரியவர் நீங்களே!” என்று வேண்டினார். காராளரும் உணர்வு நெகிழ்ந்த குரலில், அதற்கு இணங்கினார்.
காராளரும், அவர் மனைவியும், மகளும் விடை பெற்றுச் சென்ற பின்பும் கூட, நெடு நேரம், மேலே எதுவும் செயற்பட முடியாமல் பிரமை பிடித்தாற் போல் அமர்ந்திருந்தார் மதுராதிபதி வித்தகர். நிறைவேறாத காரியங்களைப் பற்றிக் கவலைகள் பட நேரலாம். ஆனால் அவரோ, அப்போது நிறைவேற்றிவிட்ட சில காரியங்களை நினைத்துக் கவலையும், துயரமும் பட நேரிட்டிருந்தது. இந்த வெற்றி மகிழ்ச்சிக்குக் கீழே யார் யாருடைய துயரங்கள் மூடப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணிக் கணக்கிட்ட போது, எதற்கும் கலங்காத அவர் மனமும் கலங்கியது. உருகியது. உழன்றது.
காராளர் மகள் செல்வப் பூங்கோதைதான் எல்லாரையும் விட அதிகமாக அழுது அடம் பிடிப்பாள் என்று எதிர் பார்த்திருந்தார் அவர். ஆனால் அவள் தன்னை எதிர் கொண்ட அடக்கமும், அமைதியும் அவரையே உள்ளமுருகச் செய்து விட்டன. அவளுடைய சகிப்புத் தன்மையும், கொடுத்த வாக்குறுதியைக் காக்கும் வன்மையும் இவ்வளவு பெரிதாயிருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. பற்றற்ற துறவிகளை எல்லாம் விடப் பெரிய துறவியாக அவள் நடந்து கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு முன். அவரே கூசிக் கூனிச் சிறிதாகியிருந்தாற் போல் தமக்குத் தாமே உணர்ந்திருந்தார். அவள் கூறியிருந்த சொற்கள் இன்னும் அவர் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. உறுத்திக் கொண்டேயிருந்தன: “உங்களுக்குக் கொற்றவை சாட்சியாக வாக்களித்தபடி, நாட்டின் எதிர்கால நலனுக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன். நீண்ட நாட்களுக்கு முன் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதற்காக, இங்கு ஒரு பெண் மதுரையையே எரித்தாள். இன்று எனக்கும் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் அதற்காக நான் இன்று மதுரையை எரிக்க மாட்டேன். எரிக்கவும் கூடாது. இந்த ஆறாத்துயரில் என் இதயம் மட்டுமே எரியும்.”
என்ற அவளுடைய சொற்களை நினைத்த போது, இவ்வளவு பெரிய அன்பைப் பிரித்து வைத்துத்தான் ஒரு பேரரசைக் காப்பாற்ற வேண்டுமா என்று அவர் மனமே நடுங்கியது. முன்பு திருமால் குன்றத்தில் மறைந்திருந்த போது, நினைத்துத் திட்டமிட்டபடி, தாம் எல்லா பந்த பாசங்களிலிருந்தும் விடுபட்டு, உடனே இப்போதே துறவியாக, வடதிசை நோக்கி இமயத்தையும், கங்கையையும் நாடிப் புறப்பட்டு விடலாமா என்று கூடத் தோன்றியது அவருக்கு. ‘பல்லாண்டு காலமாகப் பாடுபட்டு மீட்ட பாண்டிய நாட்டின் வளர்ச்சிக்கு, அருகிலிருந்து அறிவுரை கூறாமல், பெரியவர் இப்படி விலகிப் போகலாமா?’ என மக்கள் தம்மைப் பழி தூற்றுவார்களோ என்ற ஒரே பயத்தில்தான், அதைச் செய்யத் தயங்கினார் அவர். வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகிய பாண்டிய நாட்டை மீட்கும் பணியைச் செய்த உடன், அதை விட்டு விட்டு ஓடுவது கோழைத் தனமாகிவிடும் என்றும் தோன்றியது. அவரால் எல்லாவற்றையும் துறக்க முடிந்தது. தேசபக்தியைத் துறக்க முடியவில்லை. நாட்டுப் பற்றை விட முடியவில்லை. காராளர் போன்ற வேண்டியவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தும் கூட, நாட்டைக் காக்க விரும்பினார் அவர். தாம் நடந்து கொண்ட விதத்தினால், காராளர் மகள் செல்வப்பூங்கோதை அவருடைய கருங்கல் மனத்தையும் இளக்கிக் கலங்க வைத்திருந்தாள். அவளுக்காக உருகி வருந்தினார் அவர்.
“உங்களைப் போன்ற மேதைகளுக்கு வெறும் அறிவு மட்டும்தான் இருக்கிறது. இதயம் இல்லை. இதயம் இல்லாதவர்களால், இதயமுள்ளவர்களின் அழுகையையும், சிரிப்பையும், கண்ணீரையும், வேர்வையையும் புரிந்து கொள்ள முடியாதுதான்?” என்று அவள் சற்று முன் தன்னைக் கேட்டிருந்த சொற்கள் இன்னும் அவருடைய உள்ளத்தைச் சுட்டுக் கொண்டிருந்தன. அவரால் அதைச் சுலபமாக மறந்து விட முடியவில்லை. ஓர் அழகிய பேதையின் தூய்மையான உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்து துயரப்படுத்தி அந்தத் துயரத்தின் மேல் ஓர் அரசை நிலை நாட்டித்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி இப்போது அவருள்ளேயும் எழுந்தது. சேரனுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி நினைவு வரவே, உடனே இப்படிப் புறக்கணிக்க முடியாததாகவும் இருந்தது அந்தப் பிரச்னை. ‘இளையநம்பியையும் கண் கலங்கச் செய்து, காராளர் செல்வ மகளையும் கண்கலங்கச் செய்து, இவர்கள் இருவரையும் தவிர, அவருடைய அநுமானத்திலேயே அவருக்குப் புரிந்திருந்தபடி கணிகை இரத்தினமாலையையும் அந்தரங்கமாக நெஞ்சழிய வைத்து, இப்படி நாம் ஓர் அரச தந்திரச் சதுரங்கம் ஆடி விட்டோமே’ என்று எண்ணிய போது, எதற்கும் கலங்கியறியாத அவரது அந்த உள்ளமும் கலங்கியது. கழிவிரக்கப்பட்டது.
தென்னவன் மாறனின் கழு ஏற்றம், பெருஞ்சித்திரனின் மரணம் ஆகியவற்றின் போதெல்லாம் கூட ஆறுதலடைய முடிந்தது போல், இந்தக் காராளர் மகளின் வேதனையைத் தாங்கி, மறந்து ஆறுதலடைய முடியாமல் தவித்தார் அவர். அந்தத் திருமோகூர்ப் பெண் சீறிச் சினந்து ஆவேசமாக எதிர்த்து வாதிடாமல் அமைதியாக அடங்கிப் பணிந்தே, தன்னை வென்று விட்டிருப்பது இப்போதுதான் அவருக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. தம் இதயம் இவ்வளவு தவிப்பதை சிறிதும் புரிந்து கொள்ளாமல், ‘உங்களுக்கு இதயமில்லை’ என்று அவள், தம் முன்பு நின்று குற்றம் சுமத்தியதையும் நினைத்தார் அவர். தம் இதயம் தனிமையில் படும் வேதனையை அவளறியும் படி, அவளிடமே நெஞ்சைப் பிளந்து காண்பித்து விட முடியுமானால், எவ்வளவு தெளிவாயிருக்கும் என்றும் தோன்றியது அவருக்கு. கவலைகள் இதயத்தை வாட்டிப் பிழிந்தாலும், சேர வேந்தனிடம் அளித்துள்ள வாக்குறுதியையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாதென்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதிக நேரம் அவர் கவலைப்பட்டு ஒடுங்கிச் செயலிழந்து அமர்ந்திருக்க முடியவில்லை. பரிவாரங்களோடு கோநகருக்கு வந்து கொண்டிருக்கும் சேர வேந்தனை வரவேற்க அவர் ஆயத்தமாக வேண்டியிருந்தது. ஊரறிய உலகறிய வெளியிடவோ, பிறரிடம் பங்கிட்டுக் கொண்டு பேசிக் கவலை தவிர்க்கவோ முடியாத அந்தரங்கத் துயரங்களை மனத்திலேயே புதைத்துக் கொண்டு எழுந்து நடந்தார். அவர் சேரனை எதிர் கொண்டு வரவேற்கப் பரிவாரங்களுடனும், அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேருடனும், அரண்மனை முன்றிலில் இளையநம்பி முதலியவர்கள் ஏற்கனவே காத்திருப்பதாகவும், அவர்கள் அவரை எதிர்பார்ப்பதாகவும், அழகன் பெருமாள் வந்து அழைத்தான். அவரது முகத்தில் அமைதியின்மை தெரியா விட்டாலும், வாட்டம் இருப்பதை அழகன் பெருமாள் காணமுடிந்தது. பாண்டியப் பேரரசை மீண்டும் வென்று உருவாக்கிய மகா மேதையின் அந்தக் கணத்துக் கவலைகள் என்னவாக இருக்கும், எவ்வளவாக இருக்கும் என்பதை அவனாலும் அப்போது கணிக்க முடியவில்லை.
ஃஃஃ
கோலாகலமான வரவேற்பிற்கிடையே சேரவேந்தன் தன் பரிவாரங்களோடும், பட்டத்தரசியோடும், பாண்டிய நாட்டின் பட்டத்தரசியாகச் சில தினங்களில் ஆகும் பேறு பெற்ற தன் மகளோடும் மதுரை மாநகருக்கு வந்து சேர்ந்தான். மதுரை மாநகர் விழாக் கோலம் பூண்டது. அலங்கரிக்கப்பட்ட யானை மேல் அமர்ந்து, வள்ளுவன் முடிசூட்டு விழாச் செய்தியையும், பாண்டியனுக்கும், சேரன் மகளுக்கும் மணமங்கலம் நிகழ இருக்கும் செய்தியையும் முரசறைந்து நகருக்கும், சுற்றுப்புறங்களுக்கும் அறிவித்துப் பரப்பினான். நகர் எங்கும் உண்டாட்டுகள் நிறைந்தன. நகர் எங்கும் பெருஞ் சோற்றுப் படையல்கள் நிகழ்ந்தன. வீரர்களும், புலவர்களும், கலைஞர்களும், பாணர்களும், பாடினிகளும் அரண்மனைக் கொலு மண்டபத்திலிருந்து கூட்டம், கூட்டமாகப் பரிசில் பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தனர். மங்கல வாத்தியங்களின் இன்னிசை ஒலி நகரம் எங்கும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.
அரண்மனை அந்தப்புர மகளிருக்கு அலங்கரிக்கும் உரிமை பெற்ற இரத்தினமாலை, தான் கோர்த்து வைத்திருந்த முத்துமாலையால், இளையநம்பியின் பட்டத்தரசியாக வந்திருக்கும் சேரன் மகளை அலங்கரிக்கும் போது, தன் சொந்த உணர்வுகளை எவ்வளவோ அடக்கிக் கொள்ள முயன்றும், அவளுக்குக் கண் கலங்கியது. நெஞ்சில் ஏதோ வந்து அடைப்பது போலிருந்தது. கூர்ந்து நோக்கினால் அவள் சேரன் மகளுக்கு அணிவித்துவிட்ட முத்து மாலையைத் தவிர, அவளுடைய கண்களிலும் ஒரு முத்துமாலை பிறந்து கொண்டிருந்தது தெரியும். எந்த முத்துமாலையைத் திருமோகூர்க் காராளர் மகள் செல்வப் பூங்கோதைக்கு அணிவிக்க வேண்டியிருக்கும் என்று அவள் எண்ணி எண்ணித் தொடுத்திருந்தாளோ, அதே முத்துமாலையினை இப்போது சேரன் மகளுக்கு அணிவிக்க நேர்ந்திருந்தது. முன்பு, தன் துயரத்துக்காகக் கண்ணீர் சிந்திய அவள், இப்போதெல்லாம் செல்வப்பூங்கோதைக்கு நேர்ந்து விட்ட பெருந் துயரத்துக்காகவும், அந்த நாட்டுப்புறத்துப் பேதைப் பெண்ணை எண்ணியும் கண்ணீர் சிந்தினாள். -
“முடிசூட்டு விழாவும், மணமங்கலமும் நிகழ்கிற வரை இருந்து செல்ல வேண்டும்” என்று பெரியவர் வேண்டிக் கொண்டதற்கு இணங்கி, அரண்மனையில் தங்கியிருந்த காராளரும், அவர் மகளும், மனைவியும் தங்கள் மனவேதனை பிறருக்கு வெளிப்புட்டுத் தெரிந்து விடாமல், மிகவும் அடக்கமாகவும், எதுவுமே நடவாதது போலவும் இருக்க முயன்றனர். ஒரே ஒரு கணம் எப்படியாவது செல்வப் பூங்கோதையைக் கண்டு, தன் நிலைமையை விளக்கிட எண்ணிய இளையநம்பிக்கு, அரண்மனையின் பரபரப்பிலும், முடிசூட்டு விழா ஆரவாரங்களிலும் அது இயலாமலே தட்டிப் போய்க் கொண்டிருந்தது.
அரண்மனையில் மங்கல நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாய் நிகழ்ந்தன. முடிசூட்டு விழாவுக்குப் பல்லவன் வரவில்லை என்றாலும், அவன் சார்பில் ஒர் அரச தூதர் வந்திருந்தார். முடிசூட்டுவிழா நேரத்தில், காராளர் உழவர் குடிக்கே உரிய கைராசியோடு முத்துகள் பதித்த திருமுடியை எடுத்து, அரசனுக்கு அணிவதற்காக அளித்தார். உடனே முடிசூட்டு விழாக் காலத்துத் தொன்று தொட்டு வரும் மரபாக முதுபெரு புலவர் ஒருவர் எழுந்து முன்பே இளையநம்பிக்கு அளிக்கப்பட்டிருந்த ‘இருள் தீர்த்த பாண்டியர்’ என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி அரசனை வாழ்த்தினார். உடனே முடி சூடிக் கொண்ட பாண்டியன் இளையநம்பியே எழுந்து, “என் குடிமக்களில் அனைவரினும் என்னுடைய பேரன்பின் இருப்பிடமான ஒருவர் முன்பே, எனக்குப் ‘பாண்டிய கடுங்கோன்’ என்று கோபமாகச் சிறப்புப் பெயர் சூட்டிவிட்டார். அப்படிப் பெயர் சூட்டிய அன்பு உள்ளம் இப்போது இந்தப் பேரவையிலேயே இருந்தாலும், உங்களிடம் யாரென்று கூற முடியாமல் இருக்கிறேன். என் மக்கள் இந்தக் கணத்திலிருந்து இனி எந்நாளும் என்னைப் ‘பாண்டியன் கடுங்கோன்-என்று அழைப்பார்களாயின், அந்தப் பெயரை எனக்குச் சூட்டியவரின் நினைவால் நான் அளவிலா மகிழ்ச்சி கொள்வேன்” என்று பல்லாயிரம் பேர்களிடையே வெளிப்படையாகப் பிரகடனம் செய்த போது, பெண்களின் கூட்டத்தோடு கூட்டமாக, நீறு பூத்த நெருப்பாய் நின்று கொண்டிருந்த செல்வப்பூங்கோதையின் அழகிய கண்களில் நீர் மல்கியது. யாரும் தன்னைக் கவனித்து விடாமல், தன்னுடைய கண்ணீரை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டாள் அவள். ஆனாலும் அந்தப் பெருங் கூட்டத்தில், இரண்டு கண்கள், அப்போதும் அவளைக் கவனிக்கத் தவறவில்லை. - . அவை, மதுராபதி வித்தகரின் கண்கள். தாங்கள் கூறிய ‘இருள் தீர்த்த பாண்டியன்’ என்னும் பொருள் பொதிந்த பெயரை விட்டு விட்டு, அரசன் தானே ஏன் கடுங்கோன் என்ற இங்கிதமில்லாத குரூரமான பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டான் என்பது அந்த அவையிலிருந்த புலவர்களுக்கு மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.
முடி சூட்டு விழா நிகழ்ந்த மறு நாள், அதிகாலையில் இருள் பிரியுமுன்பே வைகறையில் காராளர் குடும்பத்தினர் திருமோகூருக்குப் பயணமானார்கள். கொல்லனும் அவர்களோடு புறப்பட்டு விட்டான்.
அந்த வேளையில் அரண்மனை முன்றிலில், பெரியவர் மதுராபதி வித்தகரும், திருக்கானப்பேர்க் கிழவர் பாண்டிய குல விழுப்பரையரும், அழகன் பெருமாளும் விடை கொடுத்து அவர்களை வழியனுப்பினர். கண்களில் நீர் சரிவதையும், உள்ளே இதயம் பொருமுவதையும் மறைத்தவளாய், இருளில் சித்திரம் அசைவது போல் நடந்து வந்து, பெரியவரை அவர் பாதங்களில் சிரந் தாழ்த்தி வணங்கினாள் செல்வப்பூங்கோதை. தம் பாதங்களில் வெம்மையாக அவள் கண்ணீர் நெகிழ்வதை உணர்ந்து, மனம் கலங்கினார், எதற்கும் கலங்காத அந்த மகா மேதை. நாத்தழுதழுக்க அவர் அவளிடம் கூறினார்:-
“என்னைப் பொறுத்துக்கொள் மகளே! என்மேல் தவறில்லை! நீ என்னிடம் திருமோகூரில் அன்று வாக்குறுதி அளித்துச் சத்தியம் செய்த போதே, 'சில சத்தியங்கள் செய்யும் போது பொதுவாக இருக்கலாம்: ஆனால் மீண்டும் நிரூபணமாகும் போதுதான் அது எவ்வளவு பெரியது என்று உலகுக்குப் புரியும்', என்பதாக நான் கூறிய வார்த்தைகள் இன்றும் உனக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். உன் சத்தியமும் இன்று அப்படி மிகப் பெரியதாக நிரூபணமாகி விட்டது அம்மா.”
இதற்கு அவள் மறு மொழி எதுவும் கூறவில்லை. அவர்கள் எல்லோரும் விடை பெற்றுப் புறப்பட்டார்கள். பயணத்தின் போது யாரும் யாரிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கோநகரின் கோலாகலமான ஒலிகள் குன்றின. காட்சிகள் மறைந்தன. பாண்டியர் கோநகரும், வையையாறும் திருமருத முன்துறையும் மெல்லமெல்லச் செல்வப்பூங்கோதையின் கண் பார்வையிலிருந்து நழுவின. நீர்த்திரை கண்களை மறைத்தது. எத்துணையோ பல முறைகள் வந்து திரும்பும் போதெல்லாம், கோநகரிலிருந்து மிகமிக அருகில் இருந்த திருமோகூர், இப்போது மட்டும் பல காத தூரத்துக்கு, முடிவற்று நீண்டு வழி பெருகிக் கொண்டே போவது போல் பிரமையாயிருந்தது அவளுக்கு. இன்னும் நெடுந்தூரம், இந்த வேதனையைத் தாங்கியபடியே முடிவற்றுப் பயணம் செய்ய வேண்டும் போல் ஏதோ கனமான சுமை தன்னை அழுத்துவதை நெஞ்சில் உணர்ந்தாள் அவள். இருந்தாற் போலிருந்து இதமான மெல்லிய ஆண் குரல் ஒன்று,
“நித்திலவல்லி செல்வப்பூங் கோதாய்
கத்தும் கடலேழும் சூழ்தரு காசினியில்
சித்தம் நினைப்புச் செய்கை உள்ளளவும்
எத்தாலும் நின்னை மறப்பறியேன்...”
எனப் பின்னாலிருந்து கூவி அழைப்பது போல் தோன்றியது. ஆனால், பின்புறம் வழியைத் திரும்பிப் பார்த்த போது, அப்படித் தன்னை யாரும் அழைக்கவில்லை, அது வீண் பிரமைதான் என்று தெரிந்தது. திரும்பிய கண்களில் ஒரு கணம் மேக மண்டலங்களை எட்டுவது போல், உயர்ந்த மதுரை மாநகர்க் கோட்டையின் உச்சியில் பறக்கும் புகழ் பெற்ற பாண்டியர்களின் மீனக் கொடி தொலை தூரத்தில் மங்கலாகத் தென்பட்டது. அடுத்த கணமே சென்று கொண்டிருந்த வழி, திரும்பியவுடன் அவள் பார்வையிலிருந்து மறைந்து விட்டது.