நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/8. புதிய நிபந்தனை

விக்கிமூலம் இலிருந்து

8. புதிய நிபந்தனை

நீண்ட நேரம் வரை அந்த நிலையில், இரத்தின மாலையிடம் அவன் என்ன பேசினாலும் மறு மொழி கிடைக்கவில்லை. அவன் ஏதாவது வினாவினால், அந்த வினாவைக் கேட்டு அவள் விசும்பல் இன்னும் அதிகமாகியது. அழுகை பெருகியது. கடைசியில் அவளைப் பேச வைக்க அவன் ஒரளவு கடுமையான வார்த்தைகளைக் கூறி வினாவ வேண்டியதாகி விட்டது.

“இரத்தினமாலை! பெண்களைப் பற்றிய ஒரு பேருண்மை இன்றுதான் எனக்குப் புரிகிறது! தங்களால் அன்பு செய்யப்படுகிற ஆடவனுக்கு நல்ல காலம் வரும் போது கூட, அதற்கும் மகிழாமல் அழுவதற்குத் துணிகிற கொடுமையான உள்ளம் பெண்களுக்கு மட்டுமே இருக்கும் போலும்.”

“பேதைகளின் உள்ளங்களைக் கோட்டை கொத்தளங்களை மீட்டுக் கொடியேற்றச் செல்லும் மாமன்னர்கள் ஞாபகம் வைத்திருக்கக் கூட முடியாது ஐயா! அரசர்களின் உலகில், இதயங்களை விடக் கோட்டை கொத்தளங்கள் பெரியதாகி விடலாம். ஏற்கெனவே வெற்றி கண்ட ஒரு மனத்தை, நாளை வெல்லப் போகும் ஒரு கோட்டையின் வெற்றி-ஞாபகத்தில், அவர்கள் மிக எளிதாக மறந்து போய் விடுவார்கள். அவர்களை நம்பி, வலுவில் முன் வந்து அன்பினால் தோற்றவர்களை வென்றதாகக் கூட அவர்களுக்கு நினைவு இருக்காது...”

“களப்பிரர்களோடு நான் இன்னும் போரைத் தொடங்கவே இல்லை! அதற்குள்ளேயே நீ உன்னோடு என்னைப் போருக்கு இழுக்கிறாய்! இதுவும் என் தீவினை என்றுதான் சொல்ல வேண்டும்.”

“நீங்கள் புரியும் வாதம் பிழையானது! உங்களுக்கு முன் மனப்பூர்வமாகத் தோற்று நிற்பவர்கள், உங்களிடமே தொடங்குவதற்குப் போர் எதுவும் இருக்க முடியாது." “பின் என்ன? இல்லாமலா தொடங்குகிறாய் நீ?”

“நான் எதையும் புதிதாகத் தொடங்கவில்லை. ஏற்கெனவே மனப்பூர்வமாகத் தொடங்கியது எதுவோ, அது முடியப் போகிறதே என்றுதான் கண் கலங்குகிறேன்...”

“மனப்பூர்வமாகத் தொடங்கும் எதற்கும் முடிவே இல்லை இரத்தினமாலை! அதை முடியவும் விடக் கூடாது...”

“பதவிகளும், சுகபோகமும், ஏற்றத் தாழ்வும் உங்களுக்கும் எனக்கும் குறுக்கே மலைகளாக நிற்கும் என்பதை மறந்து விடாதீர்கள்...”

“உண்மை! அவை உன் உடலுக்கும், என் உடலுக்கும் குறுக்கே நிற்கலாம். இதயங்களுக்கு நடுவே எதுவும் குறுக்கே நிற்க முடியுமா?”

“பல திங்கள் காலம் உங்களை அன்போடு உபசரிக்கும் பேறு பெற்றதற்காக நான் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.”

“நீ மட்டுமில்லை! நானும்தான்...”

“ஆனால், இப்போது நாம் பிரியும் நாட்கள் நெருங்குகின்றன என்பதை எண்ணும் போது என்னால் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் தவிப்பதை உங்களால் உணர முடியவில்லையா?”

“உணராமல் இருப்பதற்கு நானோ, என் இதயமோ குருடாகி விடவில்லை. நீ அணிந்த மலர் மாலைகளைத் தாங்கிய தோள்கள், இனி அரச பாரத்தைத் தாங்கப் போகின்றன. என்னுடைய புதிய சுமையை, நீ கவலையோடும் அநுதாபத்தோடும் நோக்க வேண்டும். இந்த மாளிகையில் அடைபட்டுக் கிடந்த காலத்தில், ஒர் அரச குடும்பத்து இளைஞனுக்கு நீ அளித்த மகிழ்ச்சிகளை இனிமேல் அரியணையில் அமர்ந்திருக்கும் போதோ, போர்க்களங்களில் ஊடாடும் போதோ அவன் அடைய முடியாது...”

“என் போல் திருவடித் தொண்டு செய்யும் கணிகைகள், உங்களோடு அரியணையில் ஏறிக் கொலு அமர அரச குலத்து நியாயங்கள் இடம் தர மாட்டா..." “அரச குல நியாயங்கள் கண் இல்லாதவை! ஆனால், என் இதயத்தில் நீ கொலு வீற்றிருப்பதை, எந்த நியாயமும் தடை செய்ய முடியாது...”

“நீங்கள் இங்கிருந்து அரண்மனைக்குப் போய் விடுகிற மறு நாளே இந்த மாளிகை சுடுகாடு போலாகிவிடும், அதன் பின் இங்கே மங்கல வாத்தியங்களின் ஒலி எழாது. நறுமணங்கள் இராது. மாலைகளும் சந்தனமும் மணக்காது. விளக்குகள் இருண்டு விடும். நான் உருகித் தேய்ந்து மாய்ந்து போவேன்...”

“நீ உண்மையில் என்னிடம் இதயத்தைத் தோற்றவளாயிருந்தால், அப்படிச் செய்யக் கூடாது.”

“வாழ முடியாதவர்கள் சாவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கப் போகிறது!”

“நாயகனைப் போர்க்களத்துக்கு அனுப்பும் தமிழ்ப் பெண்கள், அவன் திரும்பும் வரை அவன் நலத்தோடு திரும்பி வர நோன்பிருக்க வேண்டும்.”

“இந்தப் போர்க்களத்தில் என் நோன்பிற்குப் பலன் இராது. நீங்கள் வென்ற மறுகணமே அரியணை என்ற மேட்டில், என் கண்ணுக்கு எட்ட முடியாத உயரத்துக்கு ஓடிப் போய் விடுவீர்கள்.”

“மீண்டும் உன்னிடமே திரும்பி வருவேன்! ஆனால் அது வரை உன் நோன்பின் பலனை எதிர் பார்த்துக் காத்திருக்க, உனக்குத்தான் பொறுமை வேண்டும்.”

“அப்படி எவ்வளவு காலம் நான் பொறுத்திருக்க வேண்டுமோ?”

“அடுத்த பிறவி வரை பொறுத்திருக்க வேண்டும்! இந்தப் பிறவியில் நான் பாழாய்ப் போன அரச குடும்பத்தில் வேறு வழி முறையினரே இல்லாத ஒற்றைக்கொரு வீரனாகப் பிறந்து தொலைத்து விட்டேன் பெண்ணே! அரச பாரச் சுமை என்னை இப்போது விடவே விடாது. அந்த அரச குடும்பத்து நியாயங்கள் நீயே கூறியது போல், உன்னை என்னருகே அமர விடவும் இசையமாட்டா. தயை செய்து இன்னும் ஒரு பிறவி வரை எனக்காக நோன்பிருந்து கழித்து விடு இரத்தினமாலை! அடுத்த பிறவியில் நான் குழலூதும் கலைஞனாகவோ, யாழ்ப்பாணனாகவோ, ஒரு இன்னிசைக் கவிஞனாகவோ பிறக்கிறேன். அப்போது எந்த நியதிகளும் நம்மைத் தடுக்க முடியாது” என்று கூறிக் கொண்டே வருகையில் இளையநம்பியின் கண்களிலும் நீர் மல்கி விட்டது. உணர்ச்சிப் பெருக்கில் அவன் சொற்கள் தடைப் பட்டன. அவள் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். அவளை ஆரத் தழுவி மகிழ்ந்தான் அவன். அவன் கண்ணீர் அவள் தலையில் சிந்தி நனைத்து, அவளை மறு பிறவிக்கு அங்கீகரித்துக் கொண்டது.

“ஐயா! நீங்கள் பாணனாகவோ, கலைஞனாகவோ திரும்பி வருவது உறுதியாயின், ஒரு பிறவி என்ன ஆயிரம் பிறவிகள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்” என்று அவன் மார்பில் புதைத்த முகத்தை நிமிர்த்திக் கூறினாள் அவள். இந்தச் சொற்கள் இளையநம்பியை மெய் சிலிர்க்கச் செய்தன.

சிறிது நேரம் மன நெகிழ்ச்சியில், எதுவுமே பேச இயலாமல் வாய்ச் சொற்கள் பயனற்ற நிலையில், இளைய நம்பியும் இரத்தினமாலையும் இருந்தார்கள். மீண்டும் இரத்தினமாலைதான் முதலில் உரையாடலைத் தொடங்கினாள்:

“ஐயா! நீங்கள் அழகன் பெருமாளுடன் உப வனத்திலிருந்து நிலவறை வழியே இந்த மாளிகைக்கு வந்த முதல் தினம் என் மேல் கடுங் கோபத்தோடும் உதாசீனத்தோடும் இருந்தீர்கள்... அந்த உதாசீனமும், கோபமுமே என்னைப் படிப்படியாக உங்களுக்குத் தோற்கச் செய்தன...”

“முதலில் நான் மனம் வேறுபட்டு இருந்தது உண்மைதான் இரத்தினமாலை! ஆனால், உன் அன்பு மயமான உபசாரங்களும், தேனூர் மாந்திரீகன் இங்கே காயப்பட்டு வந்த போது நீ கருணையோடு அவனுக்குச் செய்த பணிவிடைகளும் என் மன வேறுபாட்டை மாற்றிவிட்டன. நீ என்னை மயக்கிவிட்டாய்..." “அது எனக்குத் தெரியாது! நான் உங்களிடம் மயங்கிப் போய் உருகுவதை மட்டுமே என் உணர்வுகள் அறிந்திருக்கின்றன. நீங்கள் என்னிடம் முதலில் மயங்காத உறுதிதான், என்னை உங்கள்பால் விரைந்து மயங்க வைத்தது...”

“முன்பு ஒரு முறை நீயே கூறியது போல் பெரிய பூக்களைச் சிறிய நாரினால் தொடுப்பதை ஒத்து, நீ உன் அன்பினால் நுணுக்கமாக் என்னைக் கட்டிவிட்டாய்...”

“கட்டியும் பயனில்லை! அந்தச் சிறிய கட்டை அறுத்துக் கொண்டு பெரிய அரச போகத்தை நோக்கி ஓடி விடப் போகிறீர்கள் நீங்கள்...”

“நான் போகப் போவது உண்மை. ஆனால், நீ கட்டியிருக்கும் மெல்லிய அன்பு நார் அடுத்த பிறவி வரை அறப் போவதில்லை என்று உறுதி கூற ஆயத்தமாயிருக்கிறேன் நான்...”

“இது மெய்யானால், அடுத்த பிறவி வரை உங்களுக்காக மகிழ்ச்சியோடு நோன்பியற்றிக் காத்திருப்பேன்.”

“உன் நோன்பு என்னை எப்போதும் மானசீகமாகப் பாதுகாக்கும் இரத்தினமாலை!”

இதற்குச் சொற்களால் மறுமொழி கூறாமல், பூக்குடலையிலிருந்து ஒரு பெரிய மாலையை எடுத்து வந்து அவன் தோள்களில் சூட்டி, அவனுக்குத் திலகமிட்டாள் இரத்தின மாலை. பின்பு தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை புரிந்தாள். அவனும் புன்னகை புரிந்தான். அவளைத் தழுவிக் கொண்டான். - -

“இந்தப் பொன்னுடலே எக்காலமும் மாலையைப் போல் என் மேனியில் தீண்டிக் குளிர்விப்பதாக நான் பாவித்துக் கொள்வேன் இரத்தினமாலை” என்று அவன் கூறியதை அவள் செவி குளிரக் கேட்டாள். அதன்பின் அன்றும், அதற்கடுத்த நாளும் இணை பிரியாமல் அருகிலிருந்து அவனை உபசரித்தாள் இரத்தின்மாலை. மூன்றாம் நாள் மறுபடி பெரியவரின் தூதன் வந்து தென்மேற்குத் திசையில் சேரர்களும் படையெடுத்து வந்து, பாண்டிய நாட்டு எல்லையில் களப்பிரர்களைத் தாக்கத் தொடங்கி விட்டதாகத் தெரிவித்து விட்டுச் சென்றான்.

அகநகரையும் கோட்டையையும், இளையநம்பி கைப்பற்றுவதற்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. கொற்கை மருதன் இளநாக நிகமத்தானின் உதவியால் அங்கங்கே இருந்த பாண்டிய வீரர்களுக்குப் போதுமான புதிய குதிரைகள் வந்து சேர்ந்திருந்தன.

இதற்கு இடையே கொல்லனும், இளையநம்பியும் கணிகை மாளிகையின் கீழே நிலவறையில் தனியே சந்தித்துக் கொள்ளக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தின் போது, “நான் இங்கே மிகவும் சுகமான உபசரிப்புகளோடு நல்லதொரு பெருமாளிகையில் கவலையின்றி இருக்கிறேன் என்பது போன்ற கருத்துப்படக் காராளர் மகளிடம் கூறியிருக்கக் கூடாது. அது வீணாக அவள் மனத்தில் இல்லாத சந்தேகங்களை எல்லாம் உண்டாக்கியிருக்கிறது என்பதையே அவள் ஒலை காட்டுகிறது” என்று கொல்லனைக் கடிந்து கொண்டான் இளையநம்பி.

“ஐயா! நான் அப்படிக் கூறா விட்டாலும், அகநகரில் நீங்கள் மிக மிகத் துன்பப்படுவதாக எண்ணி அவள் தவிக்க நேரிட்டு விடும். குறிப்பிட்டு எதையும் கூறாமல் பொதுவாகவே, நான் அதைச் சொல்லி விட்டு வந்தேன்” என்று மறுமொழி கூறினான் கொல்லன்.

நான்காம் நாள் பெரியவரிடம் இருந்து வந்த தூதன் கொண்டு வந்திருந்த கட்டளை ஓலையில் இளையநம்பி முதலியவர்கள் நிலவறை வழியே கோட்டையைக் கைப்பற்றிக் கொடியேற்றுவதற்குப் புறப்பட வேண்டிய நாள், நேரம், செயற்பட வேண்டிய முறைகள், உபாயங்கள் எல்லாவற்றையும் எழுதியிருந்தார் பெரியவர். ஓலையின் முடிவிலே ஒரு புதிய செய்தியும் இருந்தது. அதை ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்துப் புரிந்து கொள்ள முயன்றான் இளையநம்பி. ‘தீர்த்த யாத்திரை முடிந்து காராளர், மனைவியோடும் மகளோடும் திருமோகூர் திரும்பி விட்டார். களப்பிரர்களிடம் இருந்து பாண்டிய நாட்டை மீட்கும் முயற்சிக்கு உறுதுணையாகப் பல்லவர்களை வடக்கு எல்லையிலும், சேரர்களைத் தென்மேற்கு எல்லையிலும் தாக்குதல் தொடங்கச் சொல்லி, உதவி கேட்டுத்தான் தீர்த்த யாத்திரை என்ற பெயரில் காராளரை அனுப்பியிருந்தேன். ஏற்கெனவே பல்லவர்கள் களப்பிரர்களைத் தமிழ் நாட்டிலிருந்து விரட்டும் எண்ணம் கொண்டிருந்ததால், நமது வேண்டுகோளை ஒரு நிபந்தனையுமின்றி உடனே ஏற்று விட்டார்கள். ஏற்றதற்கு அடையாளமாக, வடக்கு எல்லையில் வெள்ளாற்றங்கரையில், அவர்கள் படை களப்பிரர்களை எதிர்த்து வந்து போர் முரசு கொட்டிவிட்டது. ஆனால், தென்மேற்கே நமக்கு உதவ வந்துள்ள சேர வேந்தன், இப்போது ஏறக்குறைய ஒரு சிற்றரசனின் நிலையில் இருந்தாலும், நமக்கு இந்த உதவியைச் செய்ய ஒரு நிபந்தனை இட்டிருக்கிறான். அதை இப்போதே உன்னிடம் கூற எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால், வேறு வழி இல்லை. அந்த நிபந்தனைக்கு உன் சார்பில் நான் இணங்கி விட்டேன். என் பொருட்டு நீயும் அதற்கு இணங்கியே ஆகவேண்டும். நாம் அரசைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடும் போது, அந்த நிபந்தனை என்ன என்பதை உனக்குச் சொல்லுகிறேன்’ என்று ஒலையை முடித்திருந்தார் அவர்.