நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/உணவும் நீரும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
6. உணவும் நீரும்

பசியைப் போக்கத்தான் உணவை உட்கொள்கிறோம். அதற்குரிய பலனாக, பலமும் திருப்தியும் கிடைக்கின்றன என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் உணவு பல வகைகளாக உள்ளது. அது பலவகையாகப் பிரிந்து உடலை பாதுகாக்கிறது. பலப்படுத்துகிறது. பராமரிக்கிறது, பரிவுடன் பழுது பார்த்து நிறைவு செய்கிறது என்பதையும் நாம் புரிந்து கொண்டால், உண்ணும் உணவை நாம் எச்சரிக்கையுடனும் எண்ணிப் பார்த்தும் நன்றாகத் தேர்ந்தெடுத்து உண்ணவும் உதவும்.

முதலாவதாக, உடலை உருவாக்கும் உணவுவகை (Body Building Foods) என்பார்கள். புரோட்டீன் சத்துதான் இதற்கு ஆதாரம் ஆகும். கறி, மீன், முட்டை, பால், பீன்ஸ். பாலாடைக் கட்டி இவற்றில் அதிகம் கிடைக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்த வகை உணவு ஒரு வரப்பிரசாதமாகும்.

கடின உழைப்பாளர்களுக்கும், கர்ப்பவதியாக உள்ளவர்களுக்கும், நோய் நீங்கிய நிலையாளர்களுக்கும் புரோட்டீன் சத்து தேவைப்படுகிறது, அது, சக்தி நீங்கிய உடலை சமாளித்து, பழுதுபட்ட திசுக்களைப் பத்திரமாகப் பார்த்து, பலமுடன் திகழச் செய்கிறது.

அடுத்ததாக, வெப்பத்தையும் வலிமையையும் தரும் உணவு வகைகள் (Heat and Energy Foods). இவை கார்போஹைடிரேட்டுகளும், கொழுப்புச் சத்துக்களுமாகும். அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, கிழங்கு வகைகள் மற்றும் தானிய வகைகளிலும் இச்சத்து நிறையக் கிடைக்கிறது. இனிப்புப் பண்டங்களான கேக், பிஸ்கட், சர்க்கரை, ஜேம், டின்னில் அடைக்கப்பட்ட உலர்ந்த பழங்கள் ஆகியவற்றிலும், நிறைய கிடைக்கின்றன.

கொழுப்புச் சத்தானது கறி, வெண்ணெய், ஆலிவ் எண்ணெயிலும் உணவு வகைகளிலும் கிடைக்கிறது. இச்சத்து உடலில் எரிந்து, வெப்பத்தையும் வலிமையையும் தருகிறது. தேவைக்காக நாம் இதனைத் தேடி உணடால், தேகம் நல்ல நிலையில் இயங்கும். நலமளிக்கும்.

மூன்றாவதாக உடல் காக்கும் உணவு வகைகள் (Protective foods) இச்சத்தானது விட்டமீன் மற்றும் மினரல்ஸ் ஆகும். இவற்றை கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச் சத்து, தாமிரச் சத்து, குளோரின், அயோடின், பாஸ்பரஸ், சல்பர் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

உதாரணத்திற்குப் பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் கால்சியம் சத்து, உதவுகிறது. இது பச்சைக் காய்கறிகள். பால், பாலாடைக் கட்டிகளில் இருக்கின்றன.

விட்டமீன் A, B, C, D. என்பது பற்றியெல்லாம் நீங்கள் விவரமாகத் தெரிந்து கொண்டிருப்பதால், இங்கு விளக்கமாகத் தராமல், குடிக்கும் நீர் பற்றிய குறிப்புகளைக் கூறுகிறேன்.

நமது உடலானது முக்கால் பங்குக்கும் மேலாக நீர்ப்பகுதியில் நிரப்பப்பட்டிருக்கிறது. இரத்தமும், ஜீரண சுரப்பிகள் சுரக்கும் ஜீரண நீர்களும், மற்றும் லிம்ப் (Lymph) போன்றவை எல்லாம் அதிகமாக நீரோட்டத்தன்மை நிரம்பிய இயல்பு வாய்ந்தவையாகும்.

நீர்தான் உடலின் முதல் தரமான தேவை என்பதால், நீரை நாம் மிக ஜாக்கிரதையாக அறிந்து கொள்ள வேண்டும். நீரின் முக்கிய பயன்களையும் நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.

உள்ளுறுப்புக்களில் குறிப்பாக, குடல் பகுதியில் எப்பொழுதும் ஈரத்தன்மை இருக்க, நீர் உதவுகிறது. அதனால், உணவை ஏற்று அவற்றை எடுத்துச் செல்லவும். கழிவுப் பொருட்களை எளிதாக வெளியேற்றவும், அத்துடன் அல்லாமல், நீரானது, உடலின் வெப்பத்தை சதாகாலமும் அதாவது குளிரிலும் வெப்ப நாட்களிலும், ஒரே நிலையில் வைத்துக் காக்கவும் தண்ணீர் உதவுகிறது. தேவைப்படுகிறது.

ஆகவே, எந்த அளவு தண்ணீர் குடிக்கலாம் என்ற ஒரு கேள்வியை எழுப்புவார்கள். விஞ்ஞானிகளோ அளவு எவ்வளவு என்று குறிப்பிடாமல், பல காரணங்களை சுட்டிக் காட்டி அதன் வழியாக தேவையைக் குறிப்பிட்டுக் காட்டுவார்கள்.

அப்பொழுதைய தட்ப வெப்ப நிலை, அணிந்திருக்கும் ஆடையின் தன்மை: மேற் கொள்கின்ற உடல் உழைப்பின் இயல்பு. மற்றும் தனிப்பட்டவரின் உடலமைப்பு இவற்றை பொறுத்தே, நீர் உட்கொள்ளும் அளவு அமைகிறது.

ஆகவே, உணவு உட்கொள்கின்ற அளவுக்கு மேலே, தினமும் 6 லிருந்து 8 டம்ளர் வரை நீர் பருகலாம் என்றும் குறிப்பிடுகின்றார்கள். அதாவது, உடலுக்குத் தேவையான நீர் நிலை உடலில் இருப்பது போல, நீரைக் குடிக்கலாம்.

மலச்சிக்கலும், அஜீரணமும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க நீர் உதவுகிறது, ஆகவே உண்ணும் உணவுக்கு உயிரூட்டமாக நீர் உதவுகிறது. உடலின் தளர்வினைப் போக்கவும் வலிமையாக்கவும் நீர் பயன்படுவதால், வறட்சி இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். நீர் அளவு குறைந்தால் உடலில் வலி ஏற்படுவதுடன் செயல் படாத தன்மையும் ஏற்படும்.

சாப்பாட்டிற்கும் முன்னும் இடையிடையேயும் தண்ணீர் குடிக்கக்கூடாது. அதனால் ஜீரணம் பாதிக்கும் என்றும் கூறுவார்கள். பழகிப் போனவர்கள், உணவுக்கிடையில் நீர் குடித்தால் ஒன்றும் கெடுதலில்லை என்றும் கூறுகின்றார்கள். உண்ணும் உணவின் அளவு குறையும், பின்னும் ஜீரண சுரப்பியின் நீர் சுரக்கும் அளவு பாதிக்கப்படும் என்பதால் உணவுக்குப் பின் நீர் அருந்தலாம் என்பார்கள்.

அதனை அவரவர் பழக்கத்திற்கே விட்டு விடுவோம்.