நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/உடலும் தூய்மையும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
7. உடலும் தூய்மையும்

உடலைக் காக்க, உருவாக்க, நோயின்றி இருக்க உணவும் நீரும் மட்டும் போதாது. உடலைத் தூய்மையாக வைத்திருக்கவும் வேண்டும். ‘சுத்தம் சோறு போடும்’ என்ற பழமொழியை அறியாதார் யார்?

உடல் அழகைத் தூய்மை என்பார்கள். உள்ளத்து அழகை வாய்மை என்பார்கள். வாய்மையும் தூய்மையும் தான் ஒருவரது வாழ்க்ககையை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் வல்லமையை வழங்குகிறது.

நீரால் அமையும் புறத்தூய்மை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. காலையில் நீராடல் கடமை என்று பெரியவர்கள் போதிக்கின்றார்கள். ‘கடனே’ என்று பயந்து கொண்டு குளிப்பவர்கள் உண்டு, தேவையா இது, என்று விவாதிப்பவர்களும் உண்டு.

அழகான உடையும், ஆடம்பர வாசனைப் பொருட்களும், சீப்பினால் அடிக்கடி தலைவாரிக் கொண்டும் இருந்தாலேபோதும் என்று வாரக்கணக்காக குளிக்காத ‘மேன்மக்களும்’ நாட்டில் நிறைய பேர் இருக்கின்றார்கள்.

அவர்கள் அருகில் வந்ததும், ஏதோ அசாதாரண தன்மையில் ‘வாடை’ வந்து உலவுவதையும் நீங்கள் முகர்ந்திருப்பீர்கள். அது உடலைத் தூய்மைப்படுத்தாதது தான் என்று உணர்ந்தும் இருப்பீர்கள். மிருகங்கள் கூட தண்ணீரில் மூழ்கி சுகம் பெறும் போது, மனிதர்கள் அதனை வெறுத்துக் கிடப்பதையும் நம்மால் ஏனோ புரிந்துகொள்ள முடியவில்லை!

ஏன் குளிக்க வேண்டும் என்பதை ஒருவர் உணர்ந்து கொண்டால், அவர்களால் குளிக்காமல் இருக்க முடியாது, உடல் தூய்மை என்பது உடலின் மேற்புறத்தில் இருக்கும் தோலின் தூய்மைதான். தோலின் வண்ணத்தை வைத்து, கறுப்பு, சிவப்பு, மாநிறம் என்று குறிப்பிட்டு, அதுவே அழகு என்று ஆரவாரம் செய்பவர்கள் அறிவிலிகள் ஆவார்கள்.

தோலின் நிறம் இயற்கையாக அமைவது சிவப்பும், கறுப்பும், மாநிறமும் என்பதெல்லாம் பரம்பரையாக வருவது. இயற்கை சூழ்நிலைக்கேற்ப அமைவது. அதை வைத்துக்கொண்டு, ஒருவர் தூய்மையாக இருக்கிறார் என்று கூறிவிடமுடியாது.

உடலிலே விரைவாக வளரக்கூடிய ஓர் அங்கம் தோல்தான். தோலானது வளர்வதை நிறுத்துவதும் இல்லை. ஆனால், வளர்ந்து கொண்டிருந்தாலும், அது உருவில் பெரிதாக ஆகிவிடுவதுமில்லை.

தோலின் கனம் எவ்வளவு இருக்கும் என்று எண்ணுகின்றீர்கள்? 0.5-லிருந்து 4.0 மில்லி மீட்டர் கனமுள்ளதாக அமைந்திருக்கும் இந்தத் தோலானது, உள்ளுறுப்புக்களை வெளிப்புற வெப்பம் குளிர் இவற்றிலிருந்து காத்துக் கொள்வதுடன், உடலுக்கு மெருகையும், அழகையும் தருகின்றது. தந்துகொண்டும் இருக்கின்றது.

இது இரண்டு மடிப்பாக இருந்துகொண்டு பணியாற்றுகின்றது. வெளிப்புற தோல் பகுதியை எபிடெர்மிஸ் (Epidermis) என்றும், உட்புறப் பகுதியை டெர்மிஸ் (Dermis) என்றும் கூறுவார்கள்.

தோலின் பயனை அறிந்து கொள்வோமானால், அது உட்புற உறுப்புக்களைப் பத்திரமாக மூடிப் பாதுகாத்து வைக்கிறது. தனக்குரிய எண்ணெய் பசையை உற்பத்தி செய்து கொண்டு, மினுமினுப்புடன் வைத்துக் கொள்கிறது. தனக்கு உண்டாகும் காயங்களை விரைவில் ஆற்றிக் கொள்கிறது.

குளிர் காலத்தில் உடலுக்கு வேண்டிய வெப்பத்தை உருவாக்கிக் கொள்கிறது. வெப்பக் காலத்தில் வியர்வையை வழிய விட்டு, தேகத்தின் சூட்டைத் தணித்துக் கொள்கிறது.

வியர்வை வெளிவந்து, தோலின் மேற்பாகத்திலேயே காய்ந்து உலர்ந்து போயிருக்கும் வேளையில், காற்று வந்து உடலைத் தழுவிக் கொண்டு தந்த புழுதியையும் மற்றும் பலவிதமான பொருட்களையும் தோலின்மேல் அழுத்தி அமர்த்தி விட்டும் போகிறது! அத்துடன், மேல் தோல் பகுதியானது வேலையாலும் வெப்பத்தாலும் கழிகிறது. இந்தச் சமயத்தில் தோலின் உட்புறத்தில் சுரக்கும் எண்ணெய் பசையும் மேலே வந்து கலந்து கொள்ளவே, எல்லாம் ஒன்று சேர்ந்து ஒருவிதமான ‘புதுமணத்தை’ உண்டாக்கி விடுகிறது.

அழுக்குப் பாலமாக மேல் தோல் பகுதி அமைவதால், அதனை உடனே அகற்றிவிட வேண்டும் என்பதற்காகத் தான் தினம் குளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மேலே தங்கி விடுகின்ற அழுக்குப் படலத்தை, அழுக்குப் பாறையை அன்றாடம் அகற்றி விடுகின்ற பொறுப்பை குளியல் மேற் கொள்கிறது. இவ்வாறு தினந்தோறும் குளிக்காமல் விட்டு விட்டால், தேகத்தில் அழுக்கு கூடிக் கொண்டே போகப் போக, தேடாமல் வந்து சேரும் திரவியமாக துர்நாற்றம் கூடி, உடல் தூய்மையைத் தொலைத்து விடுகின்றது.

அழுக்கை நீக்கி விடுவது மட்டுமல்ல. அன்றாடம் மாறுபட்டுப் போகும் தட்பவெப்ப நிலைக்கு உடலை சமபடுத்திக் கொள்ளவும் குளியல் பயன்படுகிறது. அத்துடன் அல்லாமல், மேற்புறப் பகுதிக்கு ஒருபடி கவர்ச்சியான தன்மையையும் குளியல் அளிக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சியையும், புதுத் தெம்பையும் ஊட்டுகிறது. சோம்பலை விரட்டுகிறது.

இத்தனையும் எப்படி ஏற்படுகிறது? தோலின் உட்புறத்திலே பலவிதமான மெல்லிய இரத்தக் குழாய்களும் நரம்பு மண்டல இணைப்பும் இருப்பதுதான். அவையெல்லாம் சீராகவும், செழுமையாகவும் செயல்படத்தான் தூய்மை அவசியம் தேவையாகும்.

குளியலானது தோலை நலத்துடன் இருத்திட உதவுகிறது. இந்தக் குளியல் உடலுக்கு ஒருவிதமான சுகானுபவத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டுகிறது.

காலையில் நீராடல் என்கிறோம். வெந்நீரா, தண்ணீரா என்று கேட்பவர்கள் உண்டு, குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் வெந்நீரைப் பயன்படுத்தியே ஆக வேண்டியிருக்கிறது. அங்கேயும் தண்ணீரில் குளிக்கின்ற மன வல்லமை மிகுந்தவர்களும் இருக்கத்தான் இருக்கின்றார்கள்.

வெப்ப நாடுகளில் வசிப்பவர்கள் குளிர்ந்த நீரிலே குளிப்பதுதான் அறிவுடமையாகும். குளிர்ந்த நீரானது குளிர்ந்த உடலின் வெப்ப நிலையை சீராக்கி சமப்படுத்துகிறது. அதிக வெப்பமுள்ள நீரில் குளித்துப் பழகியவர்கள் நரம்புத்தளர்ச்சி நிலையை அடைகின்றார்கள் என்ற கருத்தும் உண்டு.

வெந்நீரில் குளிக்கும் பொழுது, முதலில் மேற்பகுதியில்லாமல் கால், பிறகு தொடை இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலாகக் கொண்டு நீரை ஊற்றி, வந்து பிறகு தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீரில் குளிப்பவர்கள் தலையில் முதலில் கொட்டிக் கொண்டால், குளிர் தெரியாது. இவ்வாறு இரு வகையாக நீரில் குளிக்கும் முறையைக் கையாளலாம்.

ஆற்றில் குளிப்பது உடலுக்கு உடற்பயிற்சியாகவும், அதே நேரத்தில் சிறப்பான குளியலாகவும் அமையும். ஆறில்லா ஊரில், வீட்டிலே குளிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைவுதான் என்றாலும், குளித்தோம் என்கிற மனத்திருப்தியாவது அமைகிறதே!

உடலுக்கு சோப்பு போட்டுக் குளிப்பது நல்லதா என்றால், அந்த சோப்பால் உடலுக்கு ஏதாவது கோளாறு ஏற்படாமல் இருந்தால் சரி. பழக்கப்பட்டுப் போகிற சோப்பையே பயன்படுத்திக் கொள்ளலாம். பாதகமில்லை. அதிக சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புக்கள் இல்லாத சோப்புக்கள் உடலுக்கு ஊறுவிக்காதவையாகும்.

இனி, நல்ல தோல் வண்ணம் அமையும் விதங்களையும் அறிந்து கொள்வோம். அஜீரணம், மலச்சிக்கல், திறந்த வெளியில் செல்லாமல் நல்லக் காற்றினைப் பெறாதவர்கள். உடற்பயிற்சி செய்யாதவர்கள், தூக்கமில்லாதவர்கள், அதிகக் கவலைப்படுபவர்கள் தோல் மினுமினுப்பை இழக்கின்றார்கள்.

இவைகளைத் தவிர்த்து ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் வாழ, காலையில் குளிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். குளிக்கும் போதே மகிழ்ச்சியும். குளித்த பிறகு புத்துணர்ச்சியம், உள் அவயவங்களுக்கும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும். தூய்மைச் செயலைத் தினம் தினம் செய்வோம், அஃதில்லையேல், அறிவார்ந்தவர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்வதால் பயன் என்ன?