நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/ஓய்வும் உறக்கமும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
8. ஓய்வும் உறக்கமும்

இதம் நிறைந்த இனிய வாழ்வுக்கு இதயம்தான் மிக மிக முக்கியமானதாகும். இதயம் வலிமையாக இருந்தால் எதிர்ப்படும் எல்லாமே இனிமையாக இருக்கும். இளமையாகக்கூட இருக்கும். இதயம் மெலிவு பெற்றால், நலிவுற்றால், எத்தனை துயரங்கள் துளைத்தெடுத்துவிடும் தெரியுமா?

உழைப்போ உழைப்பென்று பணமோ பணமென்று இரவையும் பகலாக்கிக் கொண்டு எதிர்பார்த்து அலைபவர்களே உலகில் அதிகம். ஏன்? அவசியத்தைவிட ஆசைகள் அதிகம்; அநேகம், அதனால்தான்.

ஆசைகள் பேயாய் விரட்டுகின்றன. அடிமைப்பட்டவன் நாயாய் ஓடுகிறான். நரியாய் ஊளையிடுகிறான்.

எப்படியோ பணத்தை சேர்த்துவிட்டு இனிமேல் உல்லாசமாக இருக்கலாம். வாய்க்கு ருசியாக உண்ணலாம். வாழ்க்கை சுகம் எல்லாம் அனுபவிக்கலாம் என்று வரும் பொழுது, தள்ளாமை உடலில் வந்து விளையாட, நோய்கள் உடலுக்குள்ளே இசைபாட, ‘பத்தியம். வைத்தியம்’ என்று மருத்துவர் தடை போட, எல்லாமே இழந்து, தளர்ந்து போயிருக்கின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.

நம் உடலுக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ. அவ்வளவு முக்கியம் ஓய்வும் உறக்கமும். ஓய்வு என்றால் உடல் உறுப்புகளுக்கு மட்டுமல்ல. ஒப்பற்ற கருவூலமாக, உழைப்புக் களஞ்சியமாக விளங்கும் இதயத்துக்குத்தான்.

இதயத்தின் அளவை, அவரவர் மூடிய கையளவு என்பார்கள். பிறந்த குழந்தை அழத் தொடங்கிய காலத்திலிருந்து இறுதிவரை இதயம் இரத்தத்தை இறைத்துக் கொண்டு இருக்கிறது. உழைத்துக் கொண்டு வருகிறது.

ஒருமுறை இதயம் சுருங்கி இரத்தத்தை இறைத்து, அடுத்த முறை இரத்தம் இறைப்பதற்குள் எடுத்துக் கொள்கின்ற ஓய்வு, வினாடியிலும் சிறு பகுதி என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். இவ்வாறு ஒரு நாளைக்கு இதயம் ஒரு ‘லட்சம்’ தடவைக்கு மேல் துடித்து இரத்தத்தை இறைத்து உழைத்து வருகிறது.

ஒருமுறை இதயமானது இரத்தத்தை இறைக்கும் பொழுதுதான் இரத்தக் குழாய்களில் துடிப்பு ஏற்படுகிறது. அதை நாடித்துடிப்பு என்று கூறுகின்றார்கள். பிறந்த குழந்தைக்கு இதயத் துடிப்பு நிமிடத்துடிப்பு 136 முறை. 5வயது குழந்தைக்கு இதயத்துடிப்பு 89 முறை. நிமிடத்திற்கு சாதாரண மனிதனுக்குரிய துடிப்பு 72 முறை. உடல் நலமும் பலமும் வாய்ந்தவனுக்கு 45 முறை என்றும் கணக்கிட்டுக் கூறுகின்றார்கள்.

யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயத்துடிப்பு 35 முறை. சுண்டெலிக்கு ஒரு நிமிடத்துக்கு 700 முறை.

ஒருமுறை இதயம் சுருங்கி இரத்தத்தை உடல் முழுதும் பாய்ச்சுகிறது என்றால். அதன் ஆற்றல் எவ்வளவு என்று எண்ணுகின்றீர்கள். ஒரு முறைக்கு 2 பவுண்டு எடையை 30செ.மீ உயரத்திற்குத் தூக்குவதற்குச் சமமான ஆற்றல் என்கிறார்கள். இன்னும் அதன் வலிமையைப் பற்றிப் பாருங்கள்.

ஒரு நாள் முழுதும் இதயம் உழைக்கின்ற உழைப்பின் மொத்த வலிமையைக் கணக்கிட்டால். 150 பவுண்டு எடையுள்ள ஒரு மனிதனை, ஏறத்தாழ 30,000 செ.மீ உயரத்திற்கு உயர்த்தித் தூக்கிச் செல்கின்ற வலிமை என்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 3000 கேலன் இரத்தத்தை உடல் முழுதுப் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு இருக்கிற இதயமானது, 70 ஆண்டுகாலம் உழைத்தால், ஏறத்தாழ, 7,70,00,000 கேலன்கள் இறைக்கின்றது. அது ஒரு பெரிய பிரமாண்டமான தொட்டியை நிரப்பிட முடியும் என்று கூறுகின்றார்கள்.

இதயத்தின் ஒரு மணிநேர உழைப்பு, ஒரு மனிதனை 5 அடுக்கு மாடிக்குத் தூக்கிச் செல்லும் சக்தி படைத்ததாகும்.

இரண்டு இதயங்கள் சேர்ந்து வாழ் நாள் முழுதும் உழைக்கின்ற உழைப்பு, ஒரு லாரியை இரண்டு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் சுற்றி இழுத்து வருகின்ற சக்தியைப் படைத்திருக்கிறது என்று அறியும் பொழுது, இந்த இதயம் எத்தனை சிறிது ஆற்றல் எத்தனை பெரிது என்று ஆச்சரியத்தில் அல்லவா மூழ்கிப் போகிறோம்!

பகல் முழுதும் உழைக்கின்ற இதயத்திற்கு கொஞ்சமாவது ஓய்வாக உழைக்க நாம் தான் உதவ வேண்டும், வேட்டை நாயை விரட்டுவது போல, உடம்பை விரட்டிக் கொண்டிருந்தால் எப்படி?

அந்த ஓய்வுதான் உறக்கத்தின் மூலம் கிடைக்கிறது. உறக்கம் என்பது என்ன? இதை ஒரு ‘தற்காலிகமான மயக்க நிலை’ என்கிறார்கள். ஏன் உறக்கம் வருகிறது என்பதற்குப் பலர் பல்வேறுவிதமான காரணங்கள் கூறுகின்றார்கள்.

மூளைக்கு இரத்தம் செல்வது குறையும் பொழுது அல்லது முக்கியமான மூளைப் பகுதிக்குள் இரத்தம் செல்வது குறையும் பொழுது இந்த மாதிரி உறக்க நிலை உந்தப்படுகிறது என்ற ஒரு பழங்கால கருத்து உண்டு.

பலவிதமான கழிவுப் பொருட்கள் உடலில் தேங்கி ஒருகளைப்பு நிலையை மூளைக்குச் செல்லும் நரம்பு செல்களுக்கு உண்டுபண்ணி விடுவதால், இதுபோல் உறக்கம் வருகிறது என்கிறது நவீன காலக் குறிப்பொன்று.

எப்படியிருந்தாலும், தூக்கம் என்பது தெய்வம் தந்திருக்கின்ற வரப்பிரசாதமாகும். ஏனெனில், தூக்கம் வராமல் தொல்லைப் படுகின்றவர்களை போய்க் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் என்னென்னமோ வழிகளையெல்லாம் பின்பற்றிப் பார்க்கின்றார்கள். தூக்கத்தைப் பெற துரத்திப் பிடிக்கின்றார்கள்.

தூக்கம் அவ்வளவு முக்கியம் வாழ்க்கைக்கு, ஏனெனில் பகலில் படுபயங்கரமாக உழைத்த நரம்பு மண்டலங்கள். பணியின் பளு குறைந்து உறக்கத்தில் விடுதலை பெறுகின்றன. தசைகள் தளர்ச்சியுடன் ஓய்வு பெறுகின்றன. சுவாசத்தின் வேகம் குறைகிறது. இழந்துபோன சக்தி, தூக்கத்தில் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

இதனால்தான், உறங்க வேண்டும். உறக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்கிறார்கள்.

எத்தனை மணி நேரம் உறங்க வேண்டும் என்ற ஒரு கேள்வி உடனே எழும் அல்லவா! அந்த நேரக் கணக்கு ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.

முட்டாளுக்கு எட்டு மணி நேரம் வேண்டும். அறிவாளிக்கு ஆறு மணி நேரம் போதும், என்று கவிதை பாடுவோரும் உண்டு. ஆனால், ஒருவர் எவ்வளவு நிம்மதியாக உறங்குகிறார் என்பதில்தான் கணக்கு இருக்கிறதே தவிர, நேரத்தில் அல்ல.

தூக்கமானது 112 மணிநேரம் தொடர்ச்சியாக ஒருவருக்கும் இல்லையென்றால், முதலில் உடல் ஆற்றல் குறையத் தொடங்கும். வாழ்க்கையே எரிச்சலாகத் தோன்றும். எடை குறைய ஆரம்பிக்கும். பிறகு. பலப்பல கற்பனைகள் பிறக்கும். அதுவே பயங்கர பூதாகாரமாக மாறி உருவெடுத்து. இறுதியாய் பைத்தியமாக மாற்றிவிடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

நெப்போலியன் இரண்டு மூன்று மணி நேர உறக்கத்தில், களைப்பு நீங்கி மீண்டும் சுறுசுறுப்பு பெற்று விடுவான் என்றும், அதிலும் அவன் குதிரைமீது அமர்ந்து கொண்டே மரம் அல்லது சுவற்றில் சாய்ந்து கொண்டு உறங்குவான் என்று கூறுவார்கள் வரலாற்று அறிஞர்கள்.

ஆக, எங்கே எவ்வளவு நேரம் என்பதல்ல பிரச்சினை. எப்படி உறங்குகிறார்கள் என்பதைக் கொண்டே நாம் அறியலாம்.

இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4மணி வரையில் அயர்ந்து தூங்கும் பொழுது உடல் இழந்து சக்தியை மீட்டுக் கொள்ள முடிகிறது என்றும் உடல் வள வல்லுநர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிலர் இன்னும் அதிக நேரம் எடுத்துக் கொண்டு உறங்குகிறார்கள்.

ஆகவே ஓய்வு தரும் உறக்கத்தை நாம் உதாசீனப்படுத்தாமல், உடலுக்குத் தருகின்ற ஒத்துழைப்பே என்று நாம் கருத வேண்டும். உடலானது ஓயாமல் உழைக்கும் எந்திரமல்ல என்பதை புரிந்து கொண்டால், உரிய நேரத்தில், உயர்ந்த வகையில் உடல் உதவும். உலகை அனுபவிக்க உற்சாகமாக வழியும் செய்யும்.

நிம்மதியாக மனம், நல்ல உழைப்பு, வயிறார உணவு, இவையெல்லாம் நிம்மதியான உறக்கத்திற்குத் தூதர்களாகும். அமைதியான இடம், இருளான பகுதி, இளஞ்சூடான வெப்பச் சூழ்நிலை, வசதியான படுக்கை, நிம்மதியான உறக்கத்திற்குத் துணை செய்வனவாகும்.

தலையணை தேவையா தூங்குவதற்கு என்பார்கள், தேவைதான், முதுகெலும்புத் தண்டானது நேர்க் கோட்டில் இருப்பதுபோல, தலையணையின் உயரம் இருந்து படுத்துக் கொண்டால், அது நல்லது என்கிறார்கள். உயரமான தலையணையுடன். முதுகு வலியும் வருவதுண்டு.

இதனை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளுங்கள்.

‘யார் படுத்தவுடன் உறங்குகிறாரோ, அவரே பாக்கியவான்’ என்று கூறலாம். கனன்றெழும் கவலைகளை கிட்டே அணுகவிடாமல் வெல்லும் கெட்டிக்காரரல்லவா அவர்!

படுக்கைக்குப் பாயும் பிரச்சினைகளை படையெடுக்க விடாமல், விரட்டும் பாங்கினைப் பெற்றுக் கொள்ளுங்கள். பலம் மட்டுமல்ல வளமான வாழ்க்கையும் அமையும். இன்பமயமான சூழ்நிலை எப்பொழுதும் நிலவும்! அதற்கு உறக்கமே உற்ற துணையாகும்.