நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/உலாவரும் உடலும் உலகமும்

விக்கிமூலம் இலிருந்து
4. உலா வரும் உடலும் உலகமும்

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் உயிருடனேதான் இருக்கின்றன. உயிர்தான் வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்று என்பதை நாமெல்லாம் அறிவோம். உயிரைத் தாங்கி வாழும் உடல்தான் அதன் அடிப்படை ஆதாரம் என்பதால், உடலை வைத்தே உலக வாழ்க்கை அமைந்திருக்கிறது.

எல்லா உயிரினங்களையும் ஒருமுறை பார்த்துவிட்டு மனித உடலையும் பாருங்கள், மற்ற உயிரினங்களின் உடல்களைவிட அழகில், தரத்தில், நிறத்தில். திறத்தில் ஈடிணையற்ற ஒன்றாகவே நமது உடல் விளங்குகிறது. துலங்குகிறது. புல்லாய் பூண்டாய் என்று தேறி, கடைசியில் குரங்காய் உருவாகி அதிலிருந்து தோன்றினான் மனிதன் என்று பரிணாமவாதிகள் பலப்பட எடுத்துரைத்தாலும், ஒன்று மட்டும் உண்மை!

கடவுளின் விலை மதிப்பற்ற பெரும் பரிசாக மனிதனுக்குக் கிடைத்திருப்பது அவனது உடல்தான். அரிய பெரிய ரகசியங்களையும் அதிசயங்களையும் தன்னகத்தே அடக்கி வைத்துக் கொண்டு, அண்டங்கள் அத்தனையையும் ஆட்டிப்படைக்கின்ற ஆற்றலையும் வலிமையையும் பெற்றிருப்பது மனித உடல்தான்.

சிந்திக்கத் தெரிந்த, சிரிக்க முடிந்த, சீர்பட கருத்துக்களைப் பேசத் தெரிந்த, நிமிர்ந்து நிற்கவும் நடக்கவும் முடிந்த ஓரினம் மனித இனம் என்றாலும், மனிதனைப் பற்றிக் கூறும் பொழுது ‘மனிதன் என்பவன் ஒரு கூடி வாழும் மிருகம்’ என்றுதான் சமூக இயல் வல்லுநர்கள் விளக்குகின்றார்கள்.

ஒருவருடன் ஒருவர் உறவாடி உரையாடிக் களிக்கின்ற, கூடி வாழ்கின்ற நேரத்தில், சுகமான வாழ்க்கை வாழும் ஒருவனையே மக்கள் அங்கீகரிக்கின்றனர். ஆரவாரித்து ஏற்றுக் கொள்கின்றனர். நோயுள்ள மனிதன் பணக்காரனாக இருந்தாலும் அவனை ஓரக் கண்ணால் பார்ப்பதும், நிலைமை சரியானால் அவனை ஒதுக்கி வைத்திடவும் தயங்காத நிலையில்தான் மக்கள் இருக்கின்றனர். நலமாக இருப்பவனையே மனிதன் என்கிறோம். நோய்க்கு அவன் இடங்கொடுத்து விட்டால், நோயாளி என்று தானே அழைக்கிறோம்.

அதனால்தான் ‘நோய்க்கு இடங்கொடேல்’ என்று நமது முன்னோர்கள் அறிவுரை கூறிச் சென்றார்கள். ‘நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்’ என்றார்கள். பணக்காரர்கள் எல்லாம் செல்வம் உள்ளவர்கள் அல்ல. செல்வம் உள்ளவன் என்பவன் நோயில்லாதவனே என்று சீனப் பழமொழி ஒன்று கூறுகிறது.

ஆகவே, நோய்க்கு இடந்தரா. வாழ்க்கையை நாம் வாழ்ந்து செல்ல வேண்டும். அதற்கு நமது உடலைப் பற்றி ஒரு சில கருத்துக்களையாவது தெரிந்து கொண்டால்தான். நமது இலட்சிய வாழ்க்கைக்கு அது இனிய வழிகாட்டியாக அமையும்.

நமது உடலைப் பற்றிக் கூறும் பொழுது, எலும்பாலும் தசையாலும். இரத்தத்தாலும் ஆனது என்றே கூறுகின்றார்கள். நமது உடலின் அடிப்படை செல்களால் ஆனதேயாகும். இந்த செல் (Cell) தான் நமது உடலின் ஆதார பூர்வமான உறுப்பாகும். அதாவது செல்களின் கூட்டம்தான் திசுக்கள் (Tissues) என்று உருவாகி, பலவிதத் திசுக்களின் கூட்டம்தான் உறுப்பு (Organ) என்று உருமாறி, பலவித உறுப்புக்களின் கூட்டம்தான் ஓர் அமைப்பு (System) என்று உருவாகி, பலவித அமைப்புக்கள்தான் உடலாக உருவாகியிருக்கிறது.

இந்தத் திசுக்களே பலவித அமைப்புக்களின் ஆதாரமாக, மிகவும் பலமாக விளங்குகின்றன, அவை காக்கும் திசுக்கள், பொருத்தும் திசுக்கள், தசைத் திசுக்கள் எலும்புத் திசுக்கள், நரம்புத் திசுக்கள், சுரப்பித் திசுக்கள், இரத்த அணுக்கள் என்றெல்லாம் மாறி, பல அமைப்புக்களாக மாறியிருப்பதையே, மண்டலம் என்பதாகவும் கூறி, நமது உடல் ஒன்பது மண்டலங்களாகப் பிரிந்து பணியாற்றுகின்றன என்றும் கூறுகின்றார்கள்.

எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், என்றெல்லாம் நீங்களும் அறிந்ததுதான்.

மண்டலங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உடன்பட்டு ஒத்துழைத்தே பணியாற்றுகின்றன. வேண்டியவற்றை வளர்த்துக் கொண்டு, வரவழைத்துக் கொண்டு, விரும்பி ஏற்றுக் கொண்டு, வேண்டாத பொழுது விலகியும் விலக்கியும், அழித்து மாற்றியும் இவைகள் பணியாற்றுவதால்தான், உடல் திறமானதாக, வளமானதாக இயங்குகின்றது.

அவ்வாறு இயங்குகின்ற உடலை நாம் அற்புதப் பெட்டகம் என்று போற்றிக்காத்துக் காப்பாற்றி வந்தால் தான், உடலும் செழிப்பாக இருக்கும். வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வாறு உடல் செழிப்பாக வளர நாம் அன்றாடம் ஒரு கடமைகளை, பழக்க வழக்கங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்து வரவேண்டும். அப்பொழுதுதான் உடல் நலியாது. மாறாக, நல்ல மென்மையுடனும் மேன்மையுடனும் பொலிவு பெற்றுத் திகழும்.

நோயில்லாமல் வாழலாம் என்று நாம் கூறுகின்ற நேரத்தில், நோய்வருவதற்கு முன்னே வராமல் காத்துக்கொண்டு வாழ்தல், வந்தபின் தடுத்தல், மூன்றாவது நிலை தடுத்துக் கொண்டே வாழ்தல் என்றும் நாம் கொள்ளலாம். வருமுன்னர் காவாதான் வாழ்க்கை நெருப்பின் முன்னே போட்ட வைக்கோல் போல விரைவில் எரிந்து சாம்பலாகும்.

அதுபோலவே, நோயைப் பற்றியும் உடலைப் பற்றியும் புரிந்து கொள்ளாதவனின் வாழ்க்கை. இருந்தும் இல்லாமல் அவதிப்படுபவனாக முடியும். அதற்கேற்ற அன்றாடப் பழக்க வழக்கங்களை மட்டுமே இந்தப் பகுதியில் விவரிக்க இருக்கின்றோம்.

அவற்றில் மிக முக்கியமானவையாக இங்கே விளக்க இருக்கின்றவை - உணவு முறை, உடை அணிதல், உறக்கம், குளியல், உடற்பயிற்சி, வேண்டாத பழக்கங்கள் என்ற தலைப்புகளில் அமையும். மிக எளிமையாக மேற்கொள்கின்ற வழி முறைகளையே இப்பகுதியில் தொடர்ந்து தர இருக்கின்றோம். அடுத்தப் பகுதியில் உணவும் குணமும் என்ன என்பதை காண்போம்.