நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/பண்பும் பழக்கங்களும்

விக்கிமூலம் இலிருந்து
3. பண்பும் பழக்கங்களும்

தன் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும் என்று தரகரிடம் கேட்டாராம் ஒருவர். அந்தத் தரகன் ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கிறான்’ என்று விலாசத்தைக் கூறி, அவனைப் பற்றிப் புகழ ஆரம்பித்து விட்டானாம். கெட்டப் பழக்கம் எதுவுமே இல்லாதவன்தானே வேண்டும் என்று கேட்டபடி, அவனது பழக்கங்களையும் விவரிக்கத் தொடங்கினானாம்.

பையனுக்கு ஒரே ஒரு கெட்டப்பழக்கம்தான் உண்டு. அதுதான் வாசனைப்பாக்கு போடுகிற பழக்கம். அடடே பரவாயில்லையே! என்று வாயைப் பிளந்தார் வருங்கால மாமனார் ஆச்சரியத்தில்!

வெற்றிலை போடும் பொழுதுதான் பாக்கு போடுவான். வெற்றிலை பாக்கும் சிகரெட் குடித்தால் தான் போடுவான். சிகரெட் குடிப்பதுகூட பிரியாணி மட்டன் சாப்பிட்டால்தான். பிரியாணிகூட ஏதாவது மது வகைகள் கூட சாப்பிட்டால்தான். மது வகையும் யாராவது பெண்கள் பக்கத்தில் இருந்தால்தான் என்று அவனது பழக்கத்தை வருணித்ததும். அதைக் கேட்க அந்த மாமனார் அங்கே இல்லை பறந்தே போய்விட்டாராம்.

ஒருவருக்கு ஒரு கெட்டப் பழக்கம் வந்துவிட்டால், அது எத்தனை எத்தனை கெட்டப் பழக்கங்களைக் கூடவே கூட்டிக் கொண்டு வருகிறது என்பதைத்தான் மேலே காணும் நிகழ்ச்சி நமக்கெல்லாம் எடுத்துரைக்கின்றது. ‘ஒரு பொய் ஒன்பது பொய்யைக் கூட்டி வரும்’ என்பார்களே. அதுபோல, ஒரு சிறு தவறான பழக்கம். உடலைக் கெடுக்கின்ற அத்தனை தவறுகளையும் உற்பத்தி செய்து விடுகிறது.

பழக்கங்கள் எல்லாம் உடலைத் தூய்மைப் படுத்தவும், வலிமை ஊட்டவும். உற்சாகமாக உல்லாசமாக வாழ்க்கையினை நடத்தவுமே உதவ வேண்டும். நாளுக்கு நாள் உடலை நலிய வைக்கின்ற தன்மையில் கொண்டு செல்லக் கூடாது.

உடலை வளர்க்கின்ற உயர்ந்த பழக்க வழக்கங்கள், ஒருவருக்கு உயர்ந்த ஆளுமையை (Personality) அளிக்கின்றன. அழகான உடல் அமைப்பும், செம்மாந்த தோற்றமும் பெறுவதால், அவர் மற்றவர்களை எளிதாகக் கவர்ந்து விடுகிறார். அந்தக் கவர்ச்சியின் காரணமாக அவர் மேற்கொள்கின்ற முயற்சிகளும் செயல்களும் சோர்வில்லாமல் நடைபெறுகின்றன. நல்ல முழு வெற்றியை நல்குகின்றன. அதனால் வீட்டிலும் சரி வெளியிடங்களிலும் சரி, அவருக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.

அவருக்கென்று நல்ல இலட்சியமும் அமைந்துவிடுகிறது. அதனால் அவரது வாழ்க்கையானது தெளிந்த நீரோடையின் சீரான ஓட்டம் போல செல்கிறது. நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நல்ல பயன்களை அளிக்கிறது.

இத்தகைய பயன்களை அளிக்கும் நல்ல பழக்கங்களைக் கற்பது எளிது. ஆனால் பின்பற்றுவதுதான் கடினம். ஏனென்றால் அதற்குத் திடமான மனமும், தீர்க்கத் தரிசனமான குணாதிசயங்களும் தேவை. ஆனால் பலஹீனமான மனம் உள்ள ஒருவரின் முடிவை இங்கே பாருங்கள். அவர் கூறுகின்றார்.

‘நான் படித்த புத்தகங்கள் எல்லாம் புகை குடிப்பதால் பிறக்கும் பெருந்தீங்குகளைப் பற்றியே கூறின. மது அருந்துவதால் உண்டாகும் மகா கேடுகளைப் பற்றியே விவரித்தன. அதிகமாக சாப்பிட்டால், அது வேண்டவே வேண்டாம், மற்றும் உறவுகளைப் பற்றியெல்லாம் தேவையில்லை என்று கூறின. அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்’

அதாவது, இனிமேல் இதுபோன்ற புத்தகங்களையே படிப்பதில்லை என்ற முடிவுதான் அது.

தீமைகள் தோன்றுகின்றன என்று தெரிந்தாலும், தீயப் பழக்கங்களில் இருந்து விடுபட முடிவதில்லை. நன்மைகளையே நாளெல்லாம் நல்குகின்றன என்றாலும், நல்ல பழக்கங்களைத் தொடர முடிவதில்லை என்ற உண்மையைத்தானே இக்குறிப்பு எடுத்துக் காட்டுகிறது!

‘திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பது போல, தனது நலத்திற்கும் சுகத்திற்கும் அக்கரை காட்டாத யாரும், பிறர் சொல்லைக் கேட்கவா போகின்றார்கள்? என்றாலும் நல்ல பழக்கங்களை உண்டு பண்ண விரும்புகின்ற யாரையும் யாரும் தடுத்து விடவோ, கெடுத்து விடவோ முடியாது. அத்தகைய நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ள விரும்பும் ஒருவருக்குத் தேவையான மனோநிலையை கீழே தந்திருக்கிறோம்.

1. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பதைவிட, சுகச் செல்வம் என்று எண்ணுகின்ற இனிய மனம் வேண்டும்.

2. தன்னால் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டு வாழ முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். தன்னைப் பற்றிய சிந்தனையில் உயர்ந்த ஆர்வம் வேண்டும்.

3. தன்னம்பிக்கையுடன் சுயக் கட்டுப்பாடு வேண்டும் எக்காரணத்தை முன்னிட்டும் நான் என் பழக்கத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன், கொஞ்சங்கூட தள்ளி வைக்க மாட்டேன் என்ற வைராக்கியம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

4. நல்ல உடல் நலம் தரும் பழக்க வழக்கங்கள், நமக்கு அதிகம் செலவு வைப்பதில்லை. நமது நேரத்தை அனாவசியமாக வீணாக்குவதில்லை. நமது முயற்சிகளில் தேக்கம் வைப்பதில்லை. சோர்வை உண்டாக்குவதில்லை. தளர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. மனதிலே நடத்திச் செல்ல தயக்கம் காட்டுவதில்லை. வழி நடத்துகின்ற வல்லமையையே அளிக்கின்றன என்று நம்ப வேண்டும்.

5. நல்ல பழக்கங்கள் உடல் உரத்தை அளிப்பதுடன் உள்ள வலிமையையும் தருவதால், வாழ்க்கையை எப்பொழுதும் ஒரு சுகத் தோட்டமாக விளங்கச் செய்கிறது என்ற உண்மையை உணர்ந்த பிறகு, தொடர்ந்து செல்லும் உறுதி வேண்டும்.

6. ஒவ்வொரு மனிதனுக்கும் என்று இருக்கின்ற பண்புகள் படியேதான் பழக்க வழக்கங்கள் நிற்கின்றன. நிலைக்கின்றன. ஆகவே எப்பொழுதும் இதே சிந்தனையில் லயித்திருக்க வேண்டும்.

ஆக, நல்ல பழக்க வழக்கங்களில் நடந்திட முதல் தேவை மன உறுதி. மனதில் ஓர் பிடிப்பு. நிறைவேற்றும் பொழுது மனதில் கொள்கின்ற மகிழ்ச்சி; இப்படித்தான் நல்லவர்கள் தங்கள் வாழ்க்கையை; சிறப்பாக வாழ்ந்து செல்கின்றார்கள். இனி, அந்த இனிய பழக்க வழக்கங்கள் என்னென்ன என்று அடுத்து வரும் பகுதிகளில் காண்போம்.