நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/புதிரும் பதிலும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
3. புதிரும் பதிலும்

அலைமோதி வரும் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்துப் போகின்ற குணமும், அதனை உருவாக்கித் தருகின்ற அற்புதமான புத்திசாலித்தனமும் நல்ல நலமான உடல் நிலையிலிருந்தே தோன்றுகிறது என்பதுதான் உவந்த, உகந்த பதிலாகும்.

அப்படியென்றால் உடல் நலமான நிலை என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? கண்டு பிடிக்கும் வழிதான் என்ன என்று ஒரு சில கேள்விகளைக் கேட்கவும் தோன்றுகிறதல்லவா? உங்களைத் தூண்டுகிறதல்லவா!

உடல் நலம் என்றால் என்ன? உடலாலும் மனதாலும். தன்னைச் சுற்றிய சூழலில் ஏற்படுகின்ற சுக துக்க, தட்ப வெட்ப, தேக மனோ நிலைகளுக்கு ஏற்ப, திருப்திகரமான முறையில் அனுசரித்துப் போய், தேர்ந்த வெற்றியைப் பெறும் நிலையையே உடல் நலநிலை என்கிறோம்.

அந்த உடல் நலநிலையை எவ்வாறு நாம் அறிய முடியும்?

அன்றாட வாழ்க்கையில் எந்தவித உடல் வலியும் மன கிலேசமும் இல்லாமல், ஜம்மென்று இருக்கிறோம் என்று நம்பி, தினம் தினம் நிகழக்கூடிய வாழ்க்கை முறையை தொடர்ந்து செய்து கொண்டு வருதல்.

எந்த வேலையை ஆரம்பித்தாலும் ஆனந்தத்தோடே ஆரம்பித்து, அதே நினைவுடன், இனிய நிலையிலே செய்து முடித்து வெற்றி காண முயலுதல்.

‘நம்மால் நடப்பது ஒன்றுமில்லை, எல்லாம் நாயகன் செயல்’ என்ற ஞானநிலை கொள்வதுபோல, எது வந்தாலும் வரட்டும். முடிந்தவரை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று எதையும் தாங்க முடிக்கின்ற, முயல்கின்ற மனநிலையுடன் இருத்தல்.

இன்னதென்றே புரியாமல், இதயம் படக் படக்கென்று அடித்துக் கொள்ள, எப்படி நான் வாழப்போகிறேனோ எனத் துடித்துத் துவண்டு, பேசாமல் தன்னை அடக்கவும், தன் மனக்குரங்கைத் தாவ விடாமல் ‘சற்றே இரும்பிள்ளாய்’ என்பது போல இருந்து சாந்த நிலையில் செயல்படுதல்.

‘நமக்கு நோய் ஏதாவது இருக்குமோ? வரக்கூடிய ஒரு நோய்க்கு இதுதான் முதல் படியோ’ என்று எதற்கெடுத்தாலும் கற்பனை நோயுடன் கரடிப்பிடியாய் பிடித்துக் கொண்டு, காகமாய் கரைந்து, கழுதையாய் புரண்டு கவலைப்படாமல், ‘நமக்கேன் நோய் வருகிறது’ என்ற திடமனதுடன், ‘தீர்க்கமான நம்பிக்கையுடன், அப்படியே உடலில் வலி இருந்தாலும் கூட, இதோ, இன்னும் கொஞ்ச நேரத்தில் அதுவாக நம்மைவிட்டு விலகிப் போய்விடும் என்று சுக நிலையில் சுகம் கண்டு சுகம் நிறைந்து வாழுதல்.

எதையும் முழுமனதுடன் செயல்படுதல், அதாவது அரைகுறை மனமோ அரைகுறை காரியமோ அன்றி. எடுத்த காரியத்தைத் தொடுத்து முடித்தல்.

தேவையில்லாத திருப்பங்கள் நம் வாழ்க்கையில் ஏதாவது நேர்ந்து, அதனால் நமது தேகமும். வாழ்க்கை வேகமும் பாழ்பட்டு போகுமோ என்று குழப்பிக் கொள்ளாமல், உண்மை நிலையை உவந்து ஏற்றுக் கொண்டு இருத்தல்.

நாள் முழுவதும் களைப்பில்லாமல் தொடர்ந்து வேலை செய்து, அதன்பின் வருகின்ற இரவில் ஓய்வான மன உறக்கத்தைப் பெற்று நிம்மதியாக உறங்குதல்.

இப்படியெல்லாம் உடல் நிலையைப் பிரித்து. விளக்கங்களைத் தொகுத்துத் தருகின்றார்கள் ஆராய்ச்சி வல்லுனர்கள். ஏதோ ஒரு பெரிய விளக்கமாக இதனை நாம் எடுத்துக் கொள்ளாமல் நமது அன்றாட வாழ்வு ஆனந்தமாகக் கழிந்தாலே, அதுவே நலமான உடல் நிலை என்று கொண்டு வாழ்வோமே!

இவ்வாறு உடல் சுகத்துடன் வாழ்வதால் என்ன பயன் என்று ஒரு சிலர் ‘ஏடாகூடமாகக்’ கூட கேள்வியை எழுப்பலாம்.

நல்ல உடல்நலம் உள்ள தேகம், செம்மாந்த தோற்றத்தைக் கொடுக்கிறது, ஆண்மை நிறைந்த ஆளுமையை (Personality) அளிக்கிறது. அந்த செம்மாந்த தோற்றம், சிறந்த கவர்ச்சியை தேகத்திற்கு ஊட்டுகிறது. கவர்ச்சியான தோற்றம் பல வெற்றிகளை அளிக்கும் வாய்ப்பினை நல்குகிறது.

நிமிர்ந்த உடலின் அமைப்பு, நிமிர்ந்த நெஞ்சுரத்தையும் அளிப்பதால், நிகழ்த்தும் செயல்களில் நிறைவான ஊக்கத்தை உற்பத்தி செய்கிறது. அது வாழ்வின் முன்னேற்றத்திற்கு அச்சாரம் வழங்குகிறது. வழி காட்டுகிறது, எழில் ஏற்றுகிறது. அது தொழிலின் ஆற்றலைத் துரிதப்படுத்துகிறது. இல்லத்தின் மேன்மைக்கு ‘உழைக்கும் ஈடுபாட்டையும் இணைக்கிறது.

அதுவே வாழ்க்கை இலட்சியத்தினை உருவாக்கும் உன்னத வழிகாட்டியாகவும் அமைந்து தனக்கேற்ற இலக்கை நேர் நிறுத்தி அதற்கேற்ற தனிவழியை அமைத்தும் தருகிறது.

இவ்வாறு உடல் நலநிலை நோயில்லாத வாழ்வை அளிக்கிறது என்பதே உண்மை நிலையாகும். அவ்வாறு உண்மையான உயர்ந்த வாழ்வை, நோயில்லாத நிலையை நாம் பெற வேண்டும். அடுத்து செய்ய வேண்டியவை என்னென்ன என்ற வினாவையும் எழுப்புவோம். அதுவே அறிவுள்ளவர் செயலாகும்! அதற்குப் பதில் ஒன்று உண்டு. அதுதான் நலம் தரும் பழக்கங்கள் என்பதாகும்.

அடுத்து வரும் தலைப்புக்களில் நலம் தரும் பழக்கங்கள் என்னென்ன என்பதைக் காண்போம்.