நீண்ட முகவுரை
நீண்ட முகவுரை
1
[தொகு]இருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஈரோட்டு மாநகரின் வீதியில் ஒரு ஜட்கா வண்டியில் நமது முன்னுரை பின்நோக்கி ஆரம்பமாகிறது. இரவு சுமார் எட்டு மணி இருக்கும். வானத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் கீழ் நோக்கிய வண்ணம் இருந்தன. வீதியில் ஜனங்கள் அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் அவர்களுடைய பார்வை நமது ஜட்கா வண்டியின் பேரிலும் விழுந்தது. அவ்விதம் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்து இழுத்த ஜட்கா வண்டிக்குள்ளே அமர்ந்திருந்தது யார்? இயம்பவும் வேண்டுமோ? இந்த நூலின் ஆசிரியராகிய அடியேன் ராவன்னா கீனாதான். ஒரு பெட்டி, ஒரு படுக்கை சகிதமாக அந்த வண்டிக்குள் அமர்ந்திருந்தேன். எதற்காக அந்த நேரத்தில் அந்த ஜட்கா வண்டியில் நான் அமர்ந்திருந்தேன்? என் உள்ளத்தில் அச்சமயம் பொங்கித் ததும்பிய கவலைக் கடலுக்குக் காரணம் யாது? - என்று வாசகர்கள் கேட்கலாம். இதோ பதில் சொல்லுகிறேன்:
ஈரோட்டிலிருந்து சென்னை மாநகர் போவான் வேண்டி இரவு ஒன்பது மணிக்குச் செல்லும் நீராவித் தொடர் வண்டியைப் பிடிப்பதற்காக அந்தப் புரவி வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்...என்ன சொல்கிறீர்கள்? முன்னுரை கொஞ்சம் முன்னேறட்டும் என்று தானே? என்ன செய்யட்டும் ஐயா, ஜட்கா வண்டி முன்னேறினால்தானே கட்டுரையும் முன்னேறும்? அந்த ஜட்கா வண்டியை இழுத்த குதிரை அன்று ஏனோ சண்டித்தனம் செய்தது. முன்னால் பத்தடி சென்றால் பின்னால் பதினைந்தடி சென்றது. வண்டிக்காரன் குதிரையை இருபது அடி அடித்தான். கொஞ்ச நேரம் இப்படி நடந்த பிறகு நான் ஒரே அடியாகப் பிடிவாதம் பிடித்து ஜட்கா வண்டியிலிருந்து கீழே இறங்கி விட்டேன். ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தே போக ஆரம்பித்தேன். ஆனாலும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை; ரயிலுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ, என்னமோ, அது எனக்காகக் காத்திராமல் போயே போய் விட்டது!
அவ்விதம் அன்றைய ரயிலைப் பிடிக்க முடியாதபடி 'டன்கெர்க்' செய்த ஜட்கா வண்டிக்கு இன்று என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். அது இப்போது எந்த உலகத்திலிருந்தாலும் அதன் ஆத்மா சாந்தி பெறுவதாக!
ஏனெனில், அன்று ரயிலைப் பிடிக்க முடியாமற் போன காரணத்தினால் என் வாழ்க்கையில் இணையில்லாத பாக்கியத்தை அடைந்தேன். இரவு ரயில் தவறிப் போய் விட்டபடியால் மறுநாள் காலை ரயிலுக்குப் போகும்படி ஆயிற்று. ரயில் நேரத்துக்கு ஒரு மணி முன்னாலேயே புறப்பட்டு ஒற்றை மாட்டு வண்டியில் சென்று ரயிலைப் பிடித்தேன். நான் ஏறிய மூன்றாம் வகுப்பு ரயில் வண்டியில் இருந்தது யார் என்று நினைக்கிறீர்கள்? ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் அவருடைய செல்வக் குமாரி லக்ஷ்மியும் இருந்தார்கள். இருவரும் கோயமுத்தூரிலிருந்து திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்குப் போய்க் கொண்டிருந்ததாக அறிந்தேன். திருச்செங்கோடு போவதற்குச் சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் இறங்க வேண்டும் என்றும் தெரிந்தது.
திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சில மாதங்களுக்கு முன்னாலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதுவரையில் கோயமுத்தூரில் உறவினர் வீட்டிலிருந்த குமாரி லக்ஷ்மியை ராஜாஜி அவர்கள் அப்போதுதான் முதன் முதலாகக் காந்தி ஆசிரமத்துக்கு அழைத்துப் போவதாகத் தெரிந்து கொண்டேன்.
அந்தக் காலத்திலேயே ராஜாஜியிடம் எனக்குப் பக்தி அதிகம். ஆனால் பழக்கம் மிகச் சொற்பம். ஆகையால் நானாக அதிகம் பேசுவதற்குத் துணியவில்லை. ராஜாஜி "எங்கே போகிறாய்?" என்று கேட்டார்கள். "கதர் போர்டில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டேன். சென்னையில் 'நவசக்தி' பத்திரிகைக்கு உதவி ஆசிரியராகப் போகிறேன்" என்றேன்.
கதர் போர்டு வேலையை நான் விட்டு விட்டதை ராஜாஜி விரும்பவில்லை என்று தெரிந்தது. சிறிது நேரம் ஏன் விட்டேன் என்பது பற்றிக் கேள்விகளும், குறுக்குக் கேள்விகளும் போட்டு என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தி விட்டார்கள். நல்ல வேளையாக, சங்கரி துர்க்கம் ஸ்டேஷன் சீக்கிரத்தில் வந்து என் சங்கடத்தைத் தீர்த்தது!
ராஜாஜி ரயிலிருந்து இறங்கும் சமயத்தில் "காந்தி ஆசிரமத்திலிருந்து மதுவிலக்குப் பத்திரிகை ஒன்று நடத்துவதாக உத்தேசம்; அதற்கு உன்னை அழைத்துக் கொள்ளலாமென்று எண்ணியிருந்தேன்" என்றார்கள். பாதாள லோகத்திலிருந்து திடீரென்று சொர்க்க லோகத்துக்குத் தூக்கி விட்டால் எப்படி இருக்கும்? அம்மாதிரி இருந்தது எனக்கு. இதற்குள் ரயில் நின்று விட்டது. ராஜாஜி இறங்கத் தொடங்கி விட்டார்கள். அவசர அவசரமாக, "தாங்கள் பத்திரிகையை எப்போது ஆரம்பித்தாலும் என்னை அழைத்தால் உடனே வருகிறேன்!" என்று சொன்னேன். என்னுடைய பதில் அவர்களுடைய காதில் சரியாக விழுந்ததோ இல்லையோ என்ற கவலை சென்னைக்குப் போய்ச் சேரும் வரையில் என்னைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தது.
எழுத்தாளர்கள் ஒரு பத்திரிகையிலிருந்து இன்னொரு பத்திரிகைக்கு மாறியதாகவோ, தாங்களே புதிய பத்திரிகை ஆரம்பித்ததாகவோ கேள்விப்படும்போது நான் சிறிதும் வியப்படைவதில்லை. எழுத்தாளர் என்போர் ஒரு விநோதமான இனத்தினர். ஓர் இடத்தில் நிலையாக இருக்க அவர்களால் முடிவதில்லை. தம் இஷ்டம் போல் சுயேச்சையாக எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எழுத வேண்டும் என்ற ஆவல் பெரும்பாலான எழுத்தாளர் உள்ளத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். மேலேயுள்ளவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் சரிதான்; மாறுதல் வெறி திடீரென்று சில சமயம் தோன்றத்தான் செய்யும். ஸ்ரீ திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களைப்போல் நல்ல மனிதர் வேறொருவர் இருக்க முடியாது. எவ்வளவோ அன்பும் ஆதரவுமாக அவர் என்னை நடத்தி வந்தார். ஒரு தடவையாவது ஒரு குற்றம் கூறியது கிடையாது. ஆயினும் மூன்று வருஷத்துக்கெல்லாம் "நவசக்தி"யை விட்டு வேறுவித வேலை பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு உண்டாகிவிட்டது. 'வெறி' என்று சொன்னாலும் தவறில்லை. எனவே ஒரு நாள் திரு.வி.க. அவர்களிடம் என் மனோநிலையைச் சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.
மறுநாள், ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநகருக்கு வந்திருப்பதாகப் பத்திரிகைகளில் படித்து அறிந்தேன். (தினப் பத்திரிகைகளில் போக்கு வரவுச் செய்திகளை வெளியிடுகிறார்களே, அவர்கள் அடியோடு வாழ்க!) திருச்செங்கோட்டிலிருந்து பம்பாய்க்குப் போகும் மார்க்கத்தில் சென்னையில் இறங்கி, ஒரு சினேகிதர் வீட்டில் தங்கியிருப்பதாகத் தெரிந்தது. "இதென்ன, காக்கை உட்கார்ந்ததும் பனம்பழம் விழுந்ததும் சரியாயிருக்கிறதே?" என்று எண்ணிக் கொண்டே ஸ்ரீ ஆச்சாரியாரைப் பார்க்கப் போனேன். (அப்போதெல்லாம் ராஜாஜி என்னும் அருமையான மூன்று எழுத்துப் பெயர் வழக்கத்துக்கு வரவில்லை. அந்த நாளில் பாடப்பட்ட ஒரு தேசியப் பாட்டில், "சேலம் வக்கீல் ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆ ஆர்" என்று தொகையராவின் ஒரு வரி முழுவதையும் அவருடைய பெயர் அடைத்துக் கொண்டிருந்தது.) ஸ்ரீ ஆச்சாரியார் என்னைப் பார்த்ததும், "முன்னொரு தடவை சொன்னேனே நினைவிருக்கிறதா? மதுவிலக்குப் பத்திரிகையொன்று ஆசிரமத்தில் தொடங்கப் போகிறேன். மூன்று மாதத்திற்குள் வர முடியுமா?" என்று கேட்டார். "மூன்று மாதத்துக்குள் வர முடியாது, இன்றைக்கே வரமுடியும்!" என்று பதில் சொன்னேன். "அதெப்படி?" என்று கேட்டார்.
"நவசக்தி"யை நான் விட்டு விட்ட விவரத்தைச் சொன்னேன்.
ஆச்சாரியார் ஐந்து நிமிஷம் கோபமாயிருந்தார். அம்மாதிரி சஞ்சல புத்தி உதவாது என்று கண்டித்தார். பிறகு, "போனது போகட்டும்; பட்டணத்தில் வேலை இன்றிச் சும்மாத் திரியக்கூடாது; கெட்டுப் போவாய்; இரண்டு நாளைக்குள் ஆசிரமத்துக்குப் புறப்பட்டுவிடு! அங்கே சந்தானம் இருக்கிறார். உன்னைப் பார்த்துக் கொள்வார். நான் வடக்கே இருந்து திரும்பி வந்ததும் பத்திரிகையைப் பற்றி யோசிக்கலாம்!" என்று கூறினார்.
எனக்கு ஏற்பட்ட குதூகலத்தைச் சொல்லி முடியாது. ஆயினும் குதூகலத்தை அதிகமாகக் காட்டிக் கொள்ளாமல் "அதற்கென்ன? அப்படியே செய்கிறேன்!" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
2
[தொகு]காந்தி மகானிடம் எனக்கு இருந்த பக்தி அப்போது ராஜாஜியிடமும் இருந்தது. ஒருபடி அதிகமாகவே இருந்தது. ராஜாஜியின் தோற்றம், பேச்சு, அவருடைய ஒழுக்கத்தையும் தியாக வாழ்க்கையையும் பற்றி நான் தெரிந்து கொண்டிருந்த விவரங்கள் எல்லாம் அத்தகைய பக்தியை எனக்கு உண்டாக்கி இருந்தன.
காந்தி மகாத்மா எவ்வளவோ பெரிய மகாத்மா தான். ஆனாலும் அவர் தமிழ் அறியாத குஜராத்திக்காரர்தானே? எனவே, அவருடைய போதனை உள்ளத்தில் ஒட்டுவது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. ஆனால் ராஜாஜியோ, நமது சொந்தத் தமிழ் நாட்டவர். நமது தாய் மொழியில் நமது உள்ளத்தில் ஒட்டும்படி பேசக் கூடியவர்.
ராஜாஜி "சென்னையில் வேலையில்லாமல் இருந்தால் கெட்டுப் போவாய்!" என்று சொன்னது எனக்கு அளவுக்கடங்காத வியப்பையும் திகைப்பையும் அளித்தது. நம்முடைய சமாசாரம் ராஜாஜிக்கு எப்படித் தெரிந்தது என்றுதான் வியப்பு.
சென்னை ராயப்பேட்டையில் நான் இருந்த போது ஒருநாள் இரவு சந்திரக் கிரகணம் பிடித்தது. கிரகணம் பார்ப்பதற்கும் ஸ்நானம் செய்வதற்கும் திருவல்லிக்கேணி கடற்கரைக்குப் போயிருந்தேன். இரவு ஒரு மணிக்குக் கிரகணம் விட்டதும் ஸ்நானமும் முடிந்தது. ராயப்பேட்டைக்குக் குறுக்கு வழியாகப் போக எண்ணித் திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் புகுந்தேன். போகப் போகப் புதிய புதிய சந்தும் பொந்தும் வந்து கொண்டிருந்தனவே தவிர, ராயப்பேட்டையைக் காணவேயில்லை. "ராயப்பேட்டை கெட்டுப் போய் விட்டதா? அல்லது நான் தான் காணாமற் போய்விட்டேனா?" என்ற யோசனை உண்டாகிவிட்டது. கடைசியில் நான் வந்திருந்தது மயிலாப்பூர் மந்தைவெளி என்று தெரிந்தது. அங்கிருந்து டிராம் ரோட்டைப் பிடித்துக்கொண்டு காலை நாலு மணிக்கு ராயப்பேட்டை சேர்ந்தேன்!
எனவே, சென்னையில் இருந்தால், அதுவும் சும்மா வேலையின்றி இருந்தால், நான் கெட்டுப் போகக் கூடியவன் தான் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தது! ராஜாஜியும் இதையே சொல்லவே ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கக்கூடாது என்று மறுநாளே வீட்டைக் காலி செய்து விட்டுப் புறப்பட்டேன். (அடாடா! அந்தக் காலி வீடு மட்டும் இப்போது காலியாகவே இருந்தால்...!)
சங்கரிதுர்க்கம் ஸ்டேஷனில் இறங்கித் திருச்செங்கோட்டுக்கு ஐந்து மைல் பஸ்ஸில் போகவேண்டும். திருச்செங்கோட்டிலிருந்து ஏழு மைல் குதிரை வண்டியிலோ மாட்டு வண்டியிலோ போக வேண்டும். பழைய குதிரை வண்டி அநுபவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு, மாட்டு வண்டியிலேதான் போனேன். மாட்டு வண்டி அவசரப்படாமல் நிதானமாக ஆடி அசைந்து கொண்டு சென்றது. சாலையின் இரு பக்கமும் புன்செய் நிலக்காடுகள். சில இடங்களில் மொட்டைப் பாறைகள். ஒரு இடத்தில் ஒரு பெரிய பனந்தோப்பு. அதில் சுமார் ஆயிரம் பனை மரங்கள் இருக்கும். இப்போது நினைத்தாலும் அந்தப் பனந்தோப்பு என் கண் முன் நிற்கிறது!
மனசுக்கு அவ்வளவு உற்சாகமளிக்கக்கூடிய காட்சிகள் அல்ல; கண்ணுக்கினிய காட்சிகளுமல்ல. ஆனாலும் மனசு என்னமோ பிரமாத குதூகலத்தை அநுபவித்துக் கொண்டிருந்தது. பனைமரங்களுக்கெல்லாம் மேலே பறந்து, பறந்து, பறந்து வான வெளியிலே உல்லாசமாக உலாவிற்று. ஆகா! இந்த மனசின் பொல்லாத்தனத்தை என்னவென்று சொல்ல? ஆகாச விமானத்தில் பதினாயிரம் அடி உயரத்தில் மணிக்கு இரு நூறு மைல் வேகத்தில் பிரயாணம் செய்யும்போது இந்த மனசு பூமியில் ஒரு சின்ன வீட்டில் சின்ன அறையில் குப்புறப் படுத்துக் கொண்டு அசைய மாட்டேன் என்கிறது! ஆனால் பட்டிக் காட்டுச் சாலையில் கட்டை வண்டியில் உட்கார்ந்து செல்லும்போது மனசு வான வெளியில் உயர உயரப் பறந்து நட்சத்திர மண்டலங்களை க்ஷேமம் விசாரித்து விட்டு வருகிறது! அடடா! நம்முடைய மனசே மனசுதான்!
"அதோ தெரிகிறதே தோப்பு! அதுதான் புதுப்பாளையம்! அந்த தோப்பிலேதான் ஆசிரமம் இருக்கிறாங்க!" என்றான் வண்டிக்காரன். காந்தி ஆசிரமத்தைப் பற்றித்தான் அப்படி மரியாதையாக பேசினானோ, அல்லது ஆச்சாரியாரை நினைத்துக் கொண்டுதான் சொன்னானோ தெரியாது.
ஆசிரமத்தை நெருங்க நெருங்க உற்சாகம் அதிகமாயிற்று. என் வாழ்க்கையில் ஒரு புதிய அற்புதமான அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது என்ற உணர்ச்சி உள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்தது. வண்டியிலிருந்து குதித்து ஓடலாமா என்று தோன்றியது. அவ்விதமெல்லாம் மனசில் ஏற்பட்ட உற்சாகம் பொய்யாகப் போய்விடவில்லை. திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் வசித்த மூன்று வருஷந்தான் என் வாழ்க்கையிலேயே உற்சாகமும் குதூகலமும் நிறைந்திருந்த காலமாகும்.
3
[தொகு]திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் அப்போது மானேஜராக இருந்த ஸ்ரீ க.சந்தானம் எம்.ஏ.பி.எல்., ஏற்கனவே எனக்குப் பழக்கமானவர். திருப்பூர் கதர்போர்டில் அவரிடம் நான் வேலை பார்த்ததுண்டு. புத்தி சொல்லி நல்ல வழியில் நடத்தக் கூடிய தமையனாரைப் போல் அவரிடம் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தேன். 1920-ம் வருஷத்தில் காந்தி மகாத்மாவின் போதனையை மேற்கொண்டு வக்கீல் வேலையை உதறித் தள்ளிய ஐந்தாறு அறிவாளிகளில் ஸ்ரீ சந்தானம் ஒருவர். ராஜாஜியிடம் அவருடைய பக்திக்கு எல்லையே இல்லை. ராஜாஜியுடன் சம நிலையில் நின்று வாதம் செய்யக் கூடியவர் அவர் ஒருவரைத் தான் நான் கண்டிருக்கிறேன். ராஜாஜியும் அவருடைய அபிப்பிராயங்களுக்கு மிக்க மதிப்புக் கொடுப்பார். மூளைக்கு அதிக வேலையைத் தரக்கூடிய எந்தக் காரியத்தையும் ஸ்ரீ சந்தானத்திடந்தான் ராஜாஜி ஒப்புவிப்பார்.
நான் வருவதற்கு முன்னாலேயே ராஜாஜியின் கடிதம் வந்திருந்தபடியால் ஸ்ரீ சந்தானம் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பனை ஓலை வேய்ந்த ஒரு குடிசையை "இதுதான் உன்னுடைய வீடு!" என்று காட்டினார். "இப்போதைக்கு ஆசிரமத்துக் கணக்கு எழுதும் வேலை தருகிறேன். ஆச்சாரியார் ஊரிலிருந்து வந்ததும் உசிதம் போல் மாற்றிக் கொள்ளலாம்" என்றார். எனக்குக் கணக்கு எழுதும் வேலை ரொம்பப் பிரியம். தினசரிக் கணக்குப் புத்தகத்திலிருந்து பேரேட்டில் பெயர்த்து எழுதி, மாதக் கடைசியில் மொத்தம் கூட்டிப் போட்டு, இரண்டு பத்தியிலும் மொத்தத் தொகை சரியாக வந்து விட்டால், ஏதோ இமய மலையின் சிகரத்தைக் கண்டு பிடித்து விட்டது போன்ற மகிழ்ச்சி உண்டாகும். எனவே சந்தோஷத்துடன் கணக்கு எழுதச் சம்மதித்தேன்.
பிறகு, "சம்பளம் என்ன வேண்டும்" என்று கேட்டார். "இங்கு ஏற்பாடு எப்படியோ அப்படிச் செய்யுங்கள்!" என்றேன். "ஐம்பது ரூபாய் சம்பளம் போடுகிறேன்!" என்றார். மானேஜரான ஸ்ரீ கே.சந்தானம் எம்.ஏ.பி.எல். அவர்களுக்கும் சம்பளம் ஐம்பது ரூபாய் தான் என்று அறிந்த போது ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போனேன். ஆசிரமத் தொண்டர்களுக்குள்ளே சம்பள வித்தியாசம் அதிகம் கிடையாதென்று தெரிந்தது. குடும்பஸ்தர்களுக்கு மாதம் ரூபாய் ஐம்பது; பிரம்மசாரிகளுக்கு அவர்களுடைய அவசியத்தை அநுசரித்துச் சம்பளம் இருபது முதல் நாற்பதுவரை தரப்பட்டது.
ராஜாஜியின் குமாரர் ஸ்ரீ சி.ஆர்.நரசிம்மன் ஆசிரமத் தொண்டர்களில் ஒருவர். அவருக்கு மாதம் ரூபாய் நாற்பது சம்பளம். இந்த நாற்பது ரூபாயிலேதான் ராஜாஜி, நரசிம்மன், நரசிம்மனுடைய சகோதரி லக்ஷ்மி, மேற்படி குடும்பத்துடன் வலிய ஒட்டிக் கொண்ட ஒரு நாய் இவ்வளவு பேருக்கும் காலட்சேபம் நடந்தது என்று தெரிந்தது.
பிரபல வக்கீலாயிருந்து ஆயிரக் கணக்கில் பணம் சம்பாதித்துத் தாராளமாய்ச் செலவழித்து நவநாகரிக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த குடும்பம் திடீரென்று வாழ்வு முறையை அடியோடு மாற்றிக் கொண்டு கிராமத்துக் குடிசையில் மாதம் நாற்பது ரூபாயில் வாழ்க்கை நடத்தியதை நினைக்க வியப்பாயிருந்தது. காந்தி மகாத்மாவின் ஆத்ம சக்தியின் பெருமைக்கு இதைக் காட்டிலும் வேறு உதாரணம் என்ன வேண்டும் என்று அடிக்கடி நான் எண்ணிக் கொள்வதுண்டு.
காந்தி ஆசிரமத்தில் அப்போது நடந்த முக்கியமான வேலை கதர் உற்பத்தி. சுற்றுப் புறக் கிராமங்களில் பல வீடுகளில் பழைய இராட்டைகள் பரண்களில் கிடந்தன. முன்னொரு காலத்தில் அவற்றில் நூல் நூற்றுக் கொண்டிருந்த ஸ்திரீகளும் நூற்றுக்கணக்காக இருந்தார்கள். அவர்களைத் தூண்டி பஞ்சு கொடுத்து, நூற்கும்படி செய்ய, ஆரம்பத்தில் மிகவும் பிரயாசையாக இருந்தது. நான் ஆசிரமத்துக்குச் சென்றபோது மேற்படி ஸ்திரீகளில் பலர் நூற்க ஆரம்பித்தார்கள். நூற்ற நூலை வாரத்திற்கு ஒரு முறை ஆசிரமத்தில் கொண்டு கொடுத்து நூற்ற கூலியும், மேலும் நூற்கப் பஞ்சும் வாங்கிக் கொண்டு போவார்கள். நூலை எடை போட்டு வாங்க வேண்டும். பஞ்சை நிறுத்துக் கொடுக்க வேண்டும். கணக்குப் பார்த்துக் கூலி கொடுக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அறியாமையில் மூழ்கிக் கிடந்தவர்களான அந்த ஸ்திரீகளுடன் பேரம் பேசிக் கணக்குச் சொல்லிக் கூலிப் பணம் கொடுத்து அனுப்புவது, பிரம்மப் பிரயத்தனமான காரியம். பல ஸ்திரீகள் ஏக காலத்தில் பேசுவார்கள். புதிதாக அந்த ஸ்திரீகளின் பேச்சைக் கேட்பவர்களுக்கு, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே விளங்காது. சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டாலோ, கேட்க வேண்டியதேயில்லை.
இப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தைச் செய்து சமாளித்துக் கொண்டிருந்த தொண்டரின் பெயர் ஸ்ரீ இராமதுரை. இன்றைக்குச் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு முன்னால் திருச்செங்கோடு தேர்தல் சம்பந்தமாகத் தமிழ் நாட்டில் பிரசித்தியடைந்தாரே, அந்த இராமதுரைதான்! அவர் மேற்படி ஸ்திரீகளின் கூச்சலையெல்லாம் சமாளித்துக் கொண்டு, அவர்களுடைய பேச்சையும் புரிந்து கொண்டு, அவ்வப்போது சரியான பதில்களைச் சொல்லிக் கொண்டு, இடையிடையே தமாஷ் செய்து சிரிக்கப் பண்ணிக் கொண்டு, கூலி தீர்த்துக் கொடுத்து அனுப்புவதை அளவில்லாத ஆச்சரியத்துடன் நான் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தப் பெண்களின் பேச்சை எப்படித்தான் இராமதுரை புரிந்து கொண்டு பதிலும் சொல்கிறாரோ என்று எனக்கு ஒரே அதிசயமாயிருக்கும்.
ஆரம்பத்தில் எனக்கு அந்தக் கிராமத்துப் பெண்களின் பேச்சு விளங்குவதே இல்லை. இராமதுரையின் பேச்சோ அதைக் காட்டிலும் விளங்காமலிருக்கும். சுருங்கச் சொன்னால், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களின் தமிழைப் போலவும், தற்கால தனித் தமிழ்ப் பேராசிரியர்களின் வசன நடையைப் போலவும் அபாரமான தெளிவுடன் அவர்களுடைய சம்பாஷணை விளங்கும்! வித்வான் பரீட்சைக்குப் பாடமாக வைப்பதற்குக்கூடத் தகுதியாக இருக்கும்!
சில காலம் கவனித்துக் கேட்டுப் பழகிய பிறகு, அவர்களுடைய பேச்சு ஓரளவு விளங்க ஆரம்பித்தது. விளங்க ஆரம்பித்ததும் வேடிக்கையாகவும் இருந்தது. இராமதுரைக்கும் ஒரு கிராமத்துக் கிழவிக்கும் ஒருநாள் பெரிய விவகாரம் நடந்து கொண்டிருந்தது.
வார்த்தைகள் வர வரத் தடித்து உப்பிக் கொண்டே இருந்தன. கடைசியில் ஒரே கூச்சலாயிற்று. இவ்வளவு கலாட்டாவுக்கும் காரணம் என்னவென்று கேட்டால், விஷயம் இதுதான்: அந்தக் கிழவி தன்னுடைய கணக்குப் பிரகாரம் "நூல் நூற்ற கூலி ஐந்தே காலணா வரவேண்டும்" என்கிறாள். நமது இராமதுரையோ, "அதெல்லாம் இல்லை; உன் கணக்கு தப்பு. என் கணக்குப்படி ஐந்தணா எட்டுத் தம்பிடி ஆகிறது. ஆகையால் ஐந்தணா எட்டுத் தம்பிடிதான் கொடுப்பேன்" என்கிறார்.
"இல்லை! ஐந்தே காலணாதான். நான் சரியாகக் கணக்குப் பார்த்துக் கொண்டுதான் வந்தேன்" என்கிறாள் அந்தக் கிழவி.
"சும்மா இரு; என்னை விட உனக்கு ரொம்பக் கணக்குத் தெரியுமோ? ஐந்தணா எட்டுத் தம்பிடிதான்! வாங்கிக் கொள்ளாவிட்டால் போ! உனக்குக் கூலி கிடையாது" என்கிறார் இராமதுரை.
"கூலி கிடையாதா? இதென்ன நாயம்? கை வலிக்க கொட்டை நூற்றுக் கூலி இல்லையென்றால் அடுக்குமா? நான் போய் வக்கீல் ஐயா ("வக்கீல் ஐயா" என்று அந்த ஸ்திரீ குறிப்பிட்டது ராஜாஜி அவர்களைத்தான்) கிட்டச் சொல்கிறேன்" என்றாள் அந்த ஸ்திரீ.
"வக்கீல் ஐயா கிட்டச் சொல்லி விடுவாயோ? சொல்லு போ! வக்கீல் ஐயா அலகாபாத்தில் இருக்கிறார்; போய்ச் சொல்லு!" என்று ஆத்திரமாய்ப் பேசுகிரார் இராமதுரை.
"அந்த ஊரு எங்கே இருக்கு?" என்று அந்த மூதாட்டி கேட்கிறாள்.
"எல்லாம் கிட்டத்தான் இருக்கு. சங்கரியிலே இன்று ராத்திரி ரயில் ஏறினால் நாளைக்கு மறுநாள் பாதி தூரம் போய்விடலாம்" என்று சொல்லிவிட்டு இராமதுரை இடி இடி என்று சிரிக்கிறார். பக்கத்திலே நின்ற என்னைப் பார்த்து, "என்ன பாருங்க, ராவன்னா கீனா! இந்த மாதிரி அறியாத ஜனங்களோடு பேசித் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போகிறது. ஐந்தே காலணாவைக் காட்டிலும் ஐந்தணா எட்டுத் தம்பிடி அதிகம் என்று இவர்களுக்குத் தெரிகிறதில்லை. சொன்னாலும் கேட்க மாட்டார்கள்! எப்படி இருக்கிறது கதை?" என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரிக்கிறார்.
"என்ன ஐயா, எகத்தாளம் பண்ணுகிறே! உங்களைப் போல நாங்கள் பள்ளிக்கூடத்திலே படிச்சிருக்கோமா?" என்று கிழவி சண்டைக்கு வருகிறாள்.
இராமதுரை அந்தக் கிழவியை விட உரத்த சத்தம் போட்டு, "அதென்னமா நான் எகத்தாளம் பண்ணறேன் என்று நீ சொல்லலாம்?" என்று சண்டை பிடிக்கிறார்.
இப்படியாக, மிகவும் தொல்லையான காரியத்தைத் தமாஷும் வேடிக்கையுமாகச் செய்து கொண்டு இராமதுரை ஆசிரமத்தில் தொண்டு செய்து வந்தார்.
அவரைப் போலவே ஸ்ரீ நாராயண ராவ், டாக்டர் ரகுராமன், சிவகுருநாதன், அனந்தராமன், வெங்கட்ராமன், விசுவநாதன், அங்கமுத்து, முனுசாமி முதலியவர்களும் ஆசிரமத்தில் வசித்துப் புனிதமான கிராமத் தொண்டில் ஈடுபட்டிருந்தார்கள்.
சிலர் ஆசிரமம் ஆரம்பமானதிலிருந்து தொண்டு செய்து வந்தார்கள். எனக்குப் பிறகு வந்து சேர்ந்தவர்களும் உண்டு. டாக்டர் ரங்கநாதன், எம்.கே. வெங்கட்ராமன், ஏ.கிருஷ்ணன், வி.தியாகராஜன் முதலியவர்கள் பிற்பாடு வந்து சேர்ந்தவர்கள்.
4
[தொகு]பஞ்சு கொடுத்து நூல் வாங்கும் வேலைக்கு அடுத்தபடியாக ஆசிரமத்தில் பெரிய வேலை, வாங்கிய நூலையெல்லாம் பக்கத்துக் கிராமங்களிலுள்ள தறிக்காரர்களிடம் கொடுத்துக்கதர் நெய்யச் செய்தல். இதுவும் சங்கடமான வேலைதான். நூலை நிறுத்துக் கொடுத்து, துணியை நிறுத்து வாங்கி, கூலி கணக்கிட்டுக் கொடுத்துப் பைசல் செய்வதற்குள்ளாக பிராணன் போய்விடும்!
நூல் நூற்கும் ஸ்திரீகளாவது, நூலை நெய்யும் தறிக்காரர்களாவது தியாக வாழ்க்கையை மேற்கொண்டு தங்களுக்காகத் தொண்டு செய்த ஆசிரமத் தொண்டர்களிடம் அன்பாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. விஷயம் அறிந்த ஒரு சிலர் தொண்டர்களிடம் மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் எப்போதும் அதிருப்தியுடன் சண்டை பிடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்கள்.
எல்லாவற்றுக்கும் தரித்திரக் கொடுமைதான் காரணம். வறுமையோடு அறியாமையும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? ஒரு சிலர், "வடக்கேயிருந்து யாரோ ஒரு புண்ணியவான் நமக்குக் கொடுப்பதற்காக ஏராளமாய்ப் பணம் அனுப்புகிறார்; அதை முழுவதும் நமக்குக் கொடுக்காமல் இந்தத் தொண்டர்கள் நடுவில் நின்று தடை செய்கிறார்கள்" என்று நம்பினார்கள்!
ஆசிரமத்திற்கு நான் போய்ச் சேர்ந்ததற்கு முதல் வருஷம் அந்த ஸ்தாபனத்துக்கு ஒரு பெரிய 'கண்டம்' ஏற்பட்டது. அதன் காரணம் பின்வருமாறு:-
திருச்செங்கோட்டுப் பிரதேசத்தில் ஆசிரமம் ஏற்படுவதற்குச் சில வருஷங்களுக்கு முன்னாலிருந்து சரியான மழை பெய்யவில்லை. மழை பெய்யாதபடியால் கேணிகளில் தண்ணீர் இல்லை. எனவே, வயற்காடுகளில் வெள்ளாமையும் இல்லை.
ஏறக்குறைய பஞ்சப் பிரதேசம் என்று சொல்லக் கூடிய நிலைமை திருச்செங்கோடு தாலுக்காவில். காந்திஜி ஆசிரமத்தைச் சுற்றியிருந்த கிராமங்கள் பூராவிலும் ஏற்பட்டிருந்தது.
இதை முன்னிட்டுத்தான் ராஜாஜி ஆசிரமத்தை ஸ்தாபிப்பதற்குப் புதுப் பாளையத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கே நடந்த கதர் உற்பத்தித் தொழிலைப் பஞ்ச நிவாரண வேலையென்றே சொல்லும்படியிருந்தது. பஞ்சத்தில் அடிபட்ட கிராமங்களுக்கு நூற்றல் கூலி நெசவுக் கூலி மூலமாக லக்ஷக்கணக்கான ரூபாய் வருஷந்தோறும் விநியோகமாயிற்று. அந்த அளவுக்குக் கிராமங்களில் சுபிட்சம் ஏற்பட்டது.
ஆனால், அறியாமையும் மூடநம்பிக்கையும் மிக்க பலம் பொருந்திய சக்திகள் அல்லவா? ஆதி காலத்திலிருந்து இன்று வரையில் எங்கெங்கும் வியாபித்து, பற்பல உருவங்கள் எடுக்கும் ஆற்றல் கொண்டவையல்லவா? இத்தகைய அறியாமை, மூட நம்பிக்கை முதலிய சக்திகளை நமது முன்னோர்கள் அசுரர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் உருவகப்படுத்திப் புராண இதிகாசங்களை எழுதினார்கள். மகாவிஷ்ணு ஒன்பது அவதாரங்கள் எடுத்து, அறியாமை மூட நம்பிக்கை என்னும் தீய சக்திகளை அழிக்கப் பார்த்தார். ஆயினும் அவை அழிந்தபாடில்லை. இன்னமும் பல்வேறு உருவங்களில் அவை நின்று நிலவுகின்றன. கிராமங்களிலும் இருக்கின்றன. நகரங்களிலும் இருக்கின்றன. அர்த்தமற்ற சமயச் சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் சாதி வேற்றுமைகளாகவும் அவை உரு எடுக்கின்றன. நாஸ்திகப் பிரசாரமாகவும், கம்பனைக் கொளுத்தும் பகுத்தறிவு இயக்கமாகவும் சில சமயம் ஓங்கி வளருகின்றன. சில சமயம் "அறிவு வேண்டாம்" என்று சொல்லும் முற்போக்குச் சக்திகளாகவும் வேஷமெடுக்கின்றன!
இப்படிப்பட்ட சர்வ வியாபியான அறியாமையும் குருட்டு நம்பிக்கையும் புதுப்பாளையம் காந்தி ஆசிரமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலே மட்டும் இல்லாமற் போகுமா? இருக்கத்தான் இருந்தன! ஆனால் முற்போக்கு சக்தி என்றோ, பிற்போக்கு சக்தி என்றோ, சநாதன தர்மம் என்றோ, பகுத்தறிவு இயக்கமென்றோ இவை படாடோ பமான பெயர்களைச் சூட்டிக் கொள்ளவில்லை. கலப்பற்ற அப்பட்டமான அறியாமையாகவும் மூட நம்பிக்கையாகவுமே மேற்படி கிராமங்களில் எழுந்தருளியிருந்தன.
எனவே, மேற்படி கிராமவாசிகளில் சிலர், தங்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்ட காந்தி ஆசிரமத்தைத் துவேஷிக்கும்படியான நிலைமை ஒரு சமயத்தில் ஏற்பட்டது. மழை பெய்யாமல் பஞ்சம் பரவி இருந்தது காரணமாகவே அந்தப் பிரதேசத்தில் காந்தி ஆசிரமம் ஸ்தாபிக்கப் பட்ட தென்பதை முன்னமே குறிப்பிட்டேன். ஆனால் ஆசிரமம் ஏற்பட்டதனாலேயே மழை பெய்யவில்லை என்று காரண காரியங்களைத் திருப்பிச் சில விஷமிகள் துஷ்பிரசாரம் செய்தார்கள். அறியாமையில் மூழ்கிய கிராம வாசிகள் அதை நம்பினார்கள்! காந்தி ஆசிரமத்துக் குடிசைகளை இரவுக் கிரவே அக்கினி பகவானுக்கு இரையாக்கி விடுவதென்று ஒரு சமயம் சதியாலோசனையும் செய்தார்கள்!
இதற்கெல்லாம் ஒரு வகையில் காரணமாக இருந்தவர் மன்னார்குடி வேங்கடராமன் என்னும் தொண்டர். இந்த மனிதர் அந்த நாளில் பிரம்மச்சாரி. எப்பொழுதுமே அவர் பிரம்மச்சாரியாயிருந்துவிடுவார் என்று சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நெற்றியில் நாமத்தையோ, விபூதியையோ குழைத்துப் போட்டுவிட்டு, இவர் சில வருஷங்களுக்கு முன்னால் கலியாணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் இயற்கை வாழ்வு நடத்திக் கொண்டிருக்கிறார்.
பிரம்மச்சாரியா யிருந்தது போதாது என்று ஸ்ரீ வேங்கடராமன் யோகாசனங்கள் பயின்று கொண்டிருந்தார். யோகாசனங்களில் சிரசாசனம் என்பதாக ஒன்று உண்டு. தரையில் தலையை வைத்துக் கொண்டு காலை மேலே நிறுத்திக் கொண்டு நெட்டுக்குத்தாக நிற்பதுதான் சிரசாசனம். நமது பெரிய தேசீயத் தலைவர்கள் எல்லாரும் ஒரு சமயம் வெகு சிரத்தையாகச் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் காங்கிரஸ் மகா சபைக் கூட்டத்தின்போது, "ஜவாஹர்லால் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று ஒரு பிரதிநிதி கேட்டார். அந்த வருஷம் ஜவாஹர்லால் காங்கிரஸ் அக்கிராசனர். மேற்படி பிரதிநிதியின் கேள்விக்கு ஒரு தொண்டர், "ஜவாஹர்லால்ஜி தலை கீழாக நிற்கிறார்!" என்று பதில் சொன்னார். தொண்டர் ஜவாஹர்லாலை எகத்தாளம் செய்கிறார் என்று எண்ணிப் பிரதிநிதி அவருடன் சண்டைக்குப் போய்விட்டார். அப்புறம் விசாரித்ததில் அவர் எகத்தாளம் செய்யவில்லை, ஜவாஹர்லால்ஜி உண்மையாகவே சிரசாசனம் செய்து கொண்டிருந்தார் என்று தெரிய வந்தது!
பண்டிட் ஜவாஹர்லால் நேருவைப் போன்ற தலைவர்களே தலை கீழாக நின்றபோது, தொண்டர்கள் நிற்பதற்குக் கேட்பானேன்? காந்தி ஆசிரமத் தொண்டர் ஸ்ரீ வேங்கடராமனும் சிரசாசனம் செய்து வந்தார். ஒரு நாள் பொழுது விடிந்து சூரியோதயம் ஆகும் சமயத்தில் ஸ்ரீவேங்கடராமனும் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது நூல் கொண்டு வந்த ஒரு ஸ்திரீ தற்செயலாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அவ்வளவு தான்; அந்த மூதாட்டி தான் கொண்டு வந்த நூலைப் போட்டுக் கூலி வாங்கிக் கொள்ளக் கூட இல்லை. கிராமத்துக்குத் திரும்பிப் போய், தான் பார்த்த அதிசயக் காட்சியைப் பலரிடம் தெரிவித்தாள். கேட்டவர்களில் ஒரு புத்திசாலி, "அதனாலேதான் மழை பெய்யவில்லை!" என்றான். மேற்படி வதந்தி கிராமம் கிராமமாய்ப் பரவிற்று. இன்னொரு பக்கத்தில் மழை பெய்யாததற்கு வேறொரு காரணமும் கற்பிக்கப்பட்டது. ஆசிரமத் தொண்டர்களில் அங்கமுத்து, முனுசாமி என்று இரண்டு ஹரிஜனங்கள் இருந்தார்கள். மற்றவர்களைப் போலவே இவர்களுக்கும் எல்லா விதத்திலும் சம உரிமை அளிக்கப் பட்டிருந்தது. சமையல் பொதுவாக இருந்த காலத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். எல்லோருடனும் சேர்ந்து உட்கார்ந்து பிரார்த்தனை செய்தார்கள். எவ்வித வித்தியாசமும் காட்டப்படவில்லை. ஆனால், ஆசிரமத்தைச் சுற்றியிருந்த கிராமங்களில் வசித்த கவுண்டர் மார்களோ தீண்டாமையில் வெகு கடுமையான நம்பிக்கை கொண்டவர்கள். "தீண்டாதவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் மழை ஏன் பெய்யும்?" என்ற பேச்சுக் கிளம்பியது. கிளம்பி அதிவேகமாகப் பரவிற்று.
ஆகக்கூடி காந்தி ஆசிரமம் ஏற்பட்டதனாலே தான் மழை பெய்யவில்லை என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்பட்டு விட்டது. மேற்படி குருட்டு நம்பிக்கையைத் துஷ்டர்கள் சிலர் தூபம் போட்டு வளர்த்தார்கள். "ஒருநாள் இரவு ஆசிரமத்துக் குடிசைகளையெல்லாம் கொளுத்தி விட வேண்டும்" என்று கிராமங்களில் பேச்சு நடப்பது பற்றி அடிக்கடி செய்திகள் வந்தன. ஆசிரம வாசிகள் அப்படி ஏதாவது நடக்கலாம் என்று பிரதி தினமும் இரவெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலமும் உண்டு.
ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நடவாததற்குக் காரணம் மேற்படி குருட்டு நம்பிக்கைகளையெல்லாம் மிஞ்சிய இன்னொரு குருட்டு நம்பிக்கைதான். அதாவது "வக்கீல் ஐயா இருக்கும்போது நமக்குக் கெடுதல் ஏற்பட விடமாட்டார். அவரிடம் சொன்னால் சரிப்படுத்தி விடுவார்" என்ற நம்பிக்கை மிகப் பலமாக அந்தக் கிராம வாசிகளிடையே குடி கொண்டிருந்தது. இது காரணமாகவே விஷமிகளின் துஷ் பிரசாரமெல்லாம் காரியத்துக்கு வராமல் போயிற்று. ஆகா! எழுதப் படிக்கத் தெரியாத நிரட்சரக் குட்சிகளான அந்தக் கிராமவாசிகள் வக்கீல் ஐயாவிடம் கொண்டிருந்த குருட்டு நம்பிக்கை மட்டும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் வாதிகள் அனைவருக்கும் இருந்திருக்குமானால் சென்ற சில வருஷங்களில் தமிழ் நாடு எவ்வளவோ மேன்மையடைந்து, தேசம் பார்த்துப் பிரமிக்கும் உன்னத நிலையை அடைந்திராதா? அடடா! என்ன துரதிருஷ்டம்! அத்தகைய குருட்டு நம்பிக்கை நம் எல்லோருக்கும் இல்லாமலல்லவா போய்விட்டது?
5
[தொகு]ஆசிரமத் தொண்டர்களில் முக்கியமான இன்னொரு மனிதர் ஸ்ரீ சிவகுருநாதன். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சாதாரணமாக யாழ்ப்பாணத்தார் தமிழ் பேசும் விதம் நம்முடைய பேச்சு முறையோடு கொஞ்சம் மாறுபட்டிருக்கும். ஸ்ரீ சிவகுருநாதன் பேசும் தமிழைத் தமிழ் என்று தெரிந்து கொள்வதே கடினம், மறுமலர்ச்சித் தமிழைக் கூடத் தெரிந்து கொண்டாலும் கொள்ளலாம். ஸ்ரீ சிவகுருநாதனுடைய தமிழை ஆதிசிவனாலும், அகத்தியனாலும் கூடத் தெரிந்து கொள்ள முடியாது. பேச்சினால் புரிய வைக்க முடியாததை ஸ்ரீ சிவகுருநாதன் சிரிப்பினால் விளங்க வைத்து விடுவார். பாதி வாக்கியத்தைச் சொன்னதுமே கலகலவென்று சிரித்து விடுவார். "அந்தப் புன்சிரிப்புக்கு எவ்வளவோ அர்த்தங்கள்" என்று கதைகளில் அடிக்கடி படித்திருக்கிறோமல்லவா? வெறும் புன் சிரிப்புக்கே அவ்வளவு அர்த்தம் இருக்குமானால் சிவகுருநாதனுடைய கலகலச் சிரிப்புக்கு எவ்வளவு அர்த்தம் இருக்க வேண்டும்?
ஸ்ரீ சிவகுருநாதனுக்குத் தெரியாத விஷயம் உலகத்தில் ஒன்றுமே இல்லை.
"மூன்று புளிய மரங்கள் சேர்ந்து ஒன்றேகால் வருஷத்தில் எவ்வளவு காய்க்கும்?" என்றால் பதில் சொல்வார்.
"ஒரு சேர் பசும்பால்; ஒரு சேர் ஆட்டுப்பால் ஒரு சேர் புலிப் பால்... இவற்றின் சராசரி நிறை என்ன?" என்று கேட்டால், பளிச்சென்று பதில் கிடைக்கும்.
"இந்தக் கிணற்றிலே, மூன்று அடி தண்ணீர் இருக்கிறதே? இதற்கு நாலு அடிக்கு அப்பால் தோண்டி எடுக்கும் கிணற்றில் ஏன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை?" என்று கேட்டால் அதற்கும் ஏதாவது விடைக் கிடைக்கும்.
எனினும் அவர் என்ன சொன்னால்தான் என்ன? நமக்கு ஒன்றுமே தெரியப்போவதில்லை!
சில மாதங்களுக்கு முன்னால் ஸ்ரீ சிவகுருநாதன் ஒரு பெரிய விசாலமான பெட்டியை எடுத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்தார். தமது சகதர்மிணியையும் அழைத்துக் கொண்டு வந்தார். பெட்டியைத் திறந்து ஏதேதோ சட்டங்களையும் சக்கரங்களையும் மற்றச் சிறிய பெரிய கருவிகளையும் எடுத்து அறை முழுவதும் பரப்பினார். அந்தக் கருவிகளின் மீது கால் வைக்காமல் அங்குமிங்கும் தாவிக் குதித்து அவற்றைப் பார்க்க வேண்டியிருந்தது.
"இது ஒரு புது விதச் சர்க்கா; பழைய சர்க்காவைப்போல் ஒன்றுக்கு மூன்று மடங்கு நூல் நூற்கும். இதை அக்கக்காகக் கழற்றலாம்; மறுபடியும் பூட்டலாம்" என்றார். (அப்படி அவர் சொன்னதாக அவருடைய முகபாவங்களிலிருந்தும் சமிக்ஞைகளிலிருந்தும் தெரிந்து கொண்டேன்.)
அவர் சொன்னபடியே அக்கக்காகக் கழற்றிக் காட்டினார்; திரும்பப் பூட்டிக் காட்டினார்!
"இந்தப் புது இராட்டையின் ஒவ்வொரு பகுதியையும் படம் எழுதிப் பிளாக் செய்ய வேண்டும். இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போகிறேன். பிளாக் செய்து தரமுடியுமா?" என்று கேட்டார். "ஆகட்டும்" என்றேன். "நான் இப்போது வர்தா ஆசிரமத்தில் இருக்கிறேன். பிளாக்குகள் செய்து வைத்தால் மறுபடி வந்து எடுத்துப் போகிறேன்" என்று சொன்னார். அவ்விதமே மேற்படி புது இராட்டையின் பகுதிகளைத் தனித்தனியாகப் படம் எழுதச் செய்து பிளாக்கும் செய்து வைத்தேன். ஆனால், ஸ்ரீ சிவகுருநாதன் இன்று வரை வந்தபாடில்லை. அவருடைய புது மாதிரி இராட்டையைப் பச்சைக் கீரைத்தண்டு என்று நினைத்து வர்தா ஆசிரமத்தில் யாராவது சாப்பிட்டு விட்டார்களோ என்னமோ?
காந்தி ஆசிரமத் தொண்டர்களில் இன்னொருவரான ஸ்ரீ நாராயணராவுக்கு அந்தக் காலத்தில் "சாயக்கார நாராயண ராவ்" என்று பெயர். கதர்த் துணிக்கு நாட்டு மூலிகைகளையும் நாட்டுச் சரக்குகளையும் கொண்டு சாயம் போடும் முறையை அவர் கற்றுக் கொண்டு வந்திருந்தார். காந்தி ஆசிரமத்தில் உற்பத்தியாகும் கதர்த் துணியில் ஒரு பகுதிக்குச் சாயம் போடும் வேலையையும், விதவிதமான கரைகளும் பூக்களும் அச்சடிக்கும் வேலையையும் செய்து வந்தார்.
ஸ்ரீ நாராயண ராவ் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். 1921-ல் ஒத்துழையாமை செய்த பிரபல வக்கீலான ஸ்ரீ எம்.ஜி.வாசுதேவய்யாவின் நெருங்கிய உறவினர். இப்போது காந்தி ஆசிரமத்தின் மானேஜராயிருந்து திறமையாக நடத்தி வருகிறார்.
குழந்தை போன்ற குணமுடைய விசுவநாதன் தேனீ வளர்க்கும் கலையில் தேர்ச்சி பெற்ற பிள்ளை. நீங்களும் நானும் தேனீயின் அருகில் சென்றால் அது நம்மைக் கொட்டும். விசுவநாதன் தேனீயிடம் சென்றால் முத்தம் கொடுக்கும்! அப்படிப் பட்ட விசுவநாதன் இப்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. எங்கே இருந்தாலும் அவர் சௌக்கியமாக நன்றாயிருக்கவேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்.
டாக்டர் ரகுராமன் நான் சென்ற ஒரு வருஷத்துக்குப் பிறகு காஞ்சி நகருக்குப் போய் விட்டார். அங்கு ஹரிஜனத் தொழிற்சாலை முதலிய பல பொது ஸ்தாபனங்களில் முக்கிய பொறுப்பு வகித்து நடத்தி வருகிறார்.
டாக்டர் ரகுராமன் பத்தரை மாற்றுத் தங்கம் என்றால், அவருக்குப் பதிலாக வந்த டாக்டர் ரங்கநாதன் பத்தே முக்கால் மாற்றுத் தங்கம். இன்னும் திருச்செங்கோட்டில் தொண்டு புரிந்து வருகிறார்.
உப்பு சத்தியாக்ரஹ இயக்கம் நடந்த வருஷத்தில் தேசத் தொண்டில் ஈடுபட்டு ஆசிரமத்துக்கு வந்த ஸ்ரீ தியாகராஜன் இன்று வரையில் அரிய சேவை புரிந்து வருகிறார்.
மொத்தத்தில் காந்தி ஆசிரமத் தொண்டர்கள் எல்லாருமே ஒரு தனி இனமாகத் தோன்றினார்கள். சுறுசுறுப்பும், ஊக்கமும், தொண்டு செய்யும் ஆர்வமும் கொண்டவர்களாய் இருந்தார்கள்.
காந்தி ஆசிரமத்தை விட்டு நான் விலகி மீண்டும் பத்திரிகைத் தொழிலுக்கு வந்த சில வருஷங்களுக்குப் பிறகு மகாத்மா காந்தி தமிழ் நாட்டில் சுற்றுப் பிரயாணத்துக்கு வந்திருந்தார். அப்போது "மகாத்மா சொன்னதை வாபஸ் வாங்க வேண்டும்" என்று கிளர்ச்சி செய்யும் அளவுக்கு நமது அருமைத் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை! "முற்போக்குச் சக்தி" அவ்வளவு தூரம் தமிழ்நாட்டை ஆட்கொண்டிருக்கவில்லை! தமிழ் மக்கள் அனைவரும் மகாத்மாவிடம் பக்தியுடன் இருந்த காலம். அவர் சொன்னபடி எல்லா விஷயத்திலும் நடக்க முடியாவிட்டாலும் மகாத்மாவின் வாக்கை வேதவாக்காக அனைவரும் மதித்தார்கள். அந்தச் சுற்றுப் பிரயாணத்தின் போது மகாத்மா காந்தி தமது பெயரைக் கொண்ட புதுப்பாளையம் ஆசிரமத்தில் இரண்டு நாள் ஓய்வுக்காகத் தங்கினார். பழைய உறவை நினைத்துக் கொண்டு நானும் அச்சமயம் காந்தி ஆசிரமத்துக்குச் சென்றேன். என்னுடன் இன்னும் சில நண்பர்களும் சென்னையிலிருந்து வந்தார்கள். பிரயாணத்தின் போது அவர்கள் காந்தி ஆசிரமத்தைப் பற்றி எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் "காந்தி ஆசிரமத் தொண்டர்கள் எப்படி? நீர் 'பூரி யாத்திரை'க் கட்டுரையில் வர்ணித்திருக்கும் தொண்டர்களைப் போன்றவர்கள்தானோ?" என்று கேட்டார். 'பூரி யாத்திரை' என்ற கட்டுரையில் 1927-ல் நடந்த டில்லி காங்கிரஸ் அநுபவத்தைப் பற்றி நான் எழுதி இருந்தேன். அதில் குறிப்பிட்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர் வர்ணனை பின்வருமாறு:-
"காங்கிரஸுக்கு வெளியூர்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திறங்குவார்கள். ரயிலை விட்டிறங்கியதும் அவர்கள் பிளாட்பாரத்தில் மூட்டைகளையும் பெட்டிகளையும் குவித்துக் கொண்டு நிற்பார்கள். உடனே நாலைந்து காங்கிரஸ் தொண்டர்களை அங்கே காணலாம்; அவர்களில் தலைவராயிருப்பவர், ரயிலிலிருந்து இறங்கிய பிரதிநிதிகளின் மூட்டைகளும் பெட்டிகளும் மோட்டாருக்குப் போக வேண்டுமென்று தீர்மானம் செய்வார். மற்றத் தொண்டர்கள் அத்தீர்மானத்தை ஆமோதிப்பார்கள். அத்துடன் தொண்டர்களின் கடமை தீர்ந்தது. வந்த பிரதிநிதிகள் தத்தம் மூட்டைகளையும் பெட்டிகளையும் தூக்கிக் கொண்டுபோய் மேற்படி தீர்மானத்தையும் நிறைவேற்றி வைக்க வேண்டும்!"
இவ்விதம் நான் எழுதியிருந்ததைப் படித்திருந்தபடியால்தான் என்னுடன் வந்த நண்பர் "காந்தி ஆசிரமத் தொண்டர்களும் அப்படிப்பட்டவர்கள்தானோ?" என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் சொன்னேன்:- "இல்லை, ஐயா, இல்லை. அந்த மாதிரி வெறும் தீர்மானம் செய்வதோடு நிற்கக்கூடிய ஒரே ஒரு தொண்டர் காந்தி ஆசிரமத்தில் ஒரு காலத்தில் இருந்தார். அந்த வேலையை அவர் நல்ல வேளையாக விட்டு விட்டுப் பத்திரிகைத் தொழிலுக்குப் போய்விட்டார்! தற்சமயம் காந்தி ஆசிரமத்தில் உள்ள தொண்டர்களில் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் யாரும் இல்லை. தீர்மானம் செய்வது ஒருவர், அதை நிறைவேற்றி வைப்பது இன்னொருவர் என்பதையே அறியார்கள். ஆகையால் நீங்கள் சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து இறங்கிய உடனே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காந்தி ஆசிரமத் தொண்டர்கள் அங்கு விருந்தினரை வரவேற்பதற்கு வந்திருப்பார்கள். உங்களுடைய பெட்டி படுக்கைகளைத் தூக்கிப் போய் பஸ்ஸில் எறிவது போல் உங்களையும் எறிந்தாலும் எறிந்து விடுவார்கள்!"
இவ்விதம் நான் சொன்னபடியே அன்றைக்கு ஏறக்குறைய நடந்தது. என்னுடன் வந்த நண்பர்கள் தங்கள் பெட்டி படுக்கைகள் படும்பாட்டைக் கண்ட பிறகு, தங்களையும் தொண்டர்கள் அந்த மாதிரி பஸ்ஸில் தூக்கி எறிவதற்குள்ளே தாங்களே அவசர அவசரமாக ஏறிக்கொண்டார்கள்!
6
[தொகு]காந்தி ஆசிரமத்துக்கு நான் போய்ச் சேர்ந்தது முதல் சில மாத காலம் வரை கணக்கு எழுதுவதில் ஈடுபட்டிருந்தேன். ஆசிரம வாழ்க்கை ஆனந்தமாகத்தான் இருந்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து பிரார்த்தனைக்குப் போய் உட்காருவது மட்டும் ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தது. சில நாள் காலைப் பிரார்த்தனை செய்த பிறகு மறுபடியும் போய்ப் படுத்துக் கொண்டு விடுவேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு காலையில் எழுந்திருப்பது பழக்கமாகிவிட்டது.
காலைப் பிரார்த்தனையைக் காட்டிலும் மாலை ஏழு மணிப் பிரார்த்தனை எப்போதும் சுவாரஸ்யமாயிருக்கும். மகாத்மாவின் சத்தியாகிரஹ ஆசிரமத்தில் நடப்பதை ஒட்டி, பகவத் கீதை பாராயணம், நாமாவளி பஜனை முதலியவை நடைபெறும். அவற்றோடு "முக்தி நெறி அறியாத" என்னும் திருவாசகமும், "மாற்றறியாத செழும் பசும் பொன்னே!" என்னும் அருட்பாவும் பாடப் பெறும். "பாடப்பெறும்" என்று சம்பிரதாயமாகத்தான் சொல்லுகிறேன். அந்தப் பாட்டுகள் இன்னும் உயிரோடிருப்பது மாணிக்கவாசகர், ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் ஆகியவர்களின் தபோ வலிமையினால் தான். மகாத்மா நடத்தும் மாலை பஜனைகளில் ஸ்ரீ மதி மீராபென் என்னும் பெயர் பூண்ட மிஸ்ஸ்லெட் அம்மையார் மீராபாயின் கீதங்களைப் பாடுவதுண்டு. அவ்வளவு துரதிர்ஷ்டத்தை மாணிக்கவாசகர் செய்யவில்லையென்று சொல்லலாம். ஆனால் அடுத்தபடி துரதிர்ஷ்டக்காரர் என்றே சொல்ல வேண்டும். ஆசிரமத் தொண்டர்களின் சாரீரம் அவ்வளவு சுகமாயிருக்கும்! ஆசிரமத்தில் எனக்கு ஏதாவது கஷ்டம் இருந்ததென்றால், அது மேற்படி தமிழ்ப்பாடல்களைத் தொண்டர்கள் பாடக் கேட்பதொன்றுதான்.
பிரார்த்தனை ஒருவாறு முடிந்த பிறகுதான் உண்மையில் சுவாரஸ்யமான கட்டம் ஆரம்பமாகும். அதாவது, பொது விஷயங்களைப் பற்றிச் சம்பாஷணை நடைபெறும். அரசியல் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள், சமய சம்பந்தமான சந்தேகங்கள் எல்லாம் விவாதிக்கப்படும். ஆசிரமத் தலைவர் ராஜாஜி, ஆசிரமத்தில் இருக்கும் காலங்களில் மேற்படி சம்பாஷணைகள் வெகு ரஸமாயிருக்கும். அத்தகைய சம்பாஷணைகளில் கலந்து கொண்டு அநுபவிப்பதற்காக இன்னும் ஒரு ஜன்மம் இந்த பூமியில் எடுக்கலாம் என்று தோன்றும்.
ஆசிரமத்துக்கு நான் போய்ச் சில மாத காலத்திற்குப் பிறகு ராஜாஜி ஒரு நாள் என்னை அழைத்து "மது விலக்கு வேலையைத் தீவிரமாக ஆரம்பிக்கத் தீர்மானித்திருக்கிறேன். மதுவிலக்குப் பத்திரிகையையும் உடனே ஆரம்பித்துவிட வேண்டியது தான்" என்றார். அந்த வேலைக்காகவே நான் ஆசிரமத்துக்குச் சென்றேனாதலால், கணக்கு எழுதும் வேலையை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு ஆசிரமக் காரியாலயத்திலிருந்து ராஜாஜியின் சொந்தக் காரியாலயத்துக்கு வேலை பார்ப்பதற்காகச் சென்றேன்.
ராஜாஜியின் காரியாலயம் அவருடைய வீட்டிலேயே இருந்தது. ஆசிரமத் தலைவருக்கு மரியாதை செய்வதற்காக அவருடைய வீடு கொஞ்சம் விசேஷ முறையில் கட்டப் பெற்றிருந்தது. மற்றவர்களுடைய வீடுகளுக்கும் ஆசிரமக் காரியாலயத்துக்கும் மேற்கூரை பனை ஓலையினால் வேயப்பட்டிருந்தது. ராஜாஜியின் வீட்டிற்கு மட்டும் கள்ளிக் கோட்டை ஓடு போட்டிருந்தது. நானும் எனக்கு உத்தியோகத்தில் ஏதோ 'பிரமோஷன்' கிடைத்து விட்டதாகவே எண்ணிக் கொண்டு கொஞ்சம் கர்வத்துடனேயே புதுக் காரியாலயத்துக்குப் போனேன். போன பிறகு தான் புதுக் காரியாலயத்தின் இலட்சணம் தெரிந்தது.
ஆசிரமத் தலைவரின் வீடு மொத்தம் பதினேழு அடி நீளமும் பத்தடி அகலமும் கொண்டது. நடுவில் ஒரு குறுக்குச் சுவர், மேற்படி பிரம்மாண்டமான மாளிகையை, சமையலறையாகவும் ஆபீஸ் ஹாலாகவும் பிரித்திருந்தது. சமையல் அறை ஏழு அடிக்குப் பத்தடி அளவு கொண்டது. இதிலேதான் ராஜாஜியின் அருமைப் புதல்வி லக்ஷ்மி (பிற்பாடு ஸ்ரீமதி தேவதாஸ் காந்தி) தகப்பனாருக்கும் தமையனுக்கும் சமையல் செய்தார். பத்து அடிக்குப் பத்தடி இருந்த விஸ்தாரமான ஹால், ராஜாஜியின் காரியாலயமாகவும் வந்தவர்களை வரவேற்கும் டிராயிங் ரூமாகவும் இரவில் ராஜாஜிக்குப் படுக்குமிடமாகவும் விளங்கியது! பகல் வேளையில் எல்லாம் கயிற்றுக் கட்டில்களும் படுக்கைகளும் வெளியில் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும். இரவில் ஹாலுக்குள் இடம் பெறும்.
ராஜாஜி அஞ்சா நெஞ்சம் படைத்தவர் என்பதும், வானம் இடிந்தாலும் மனம் கலங்காதவர் என்பதும் யாவரும் அறிந்த விஷயம். ஆயினும் ஒரு விஷயத்தில் அவருக்குப் பெரும் பயம் உண்டு. "பக்கத்து ஊரில் ஒரு வீட்டில் மூட்டைப் பூச்சி இருந்ததாம்!" என்று யாராவது சொல்லி விட்டால் போதும். அன்றிரவு விளக்குப் போட்டுக் கொண்டு அரை மணி நேரம் தாம் படுக்கும் கட்டிலைப் பரிசோதனை செய்வார்! கயிற்றுக் கட்டிலின் மரச் சட்டங்களிலும் கால்களிலும் எத்தனையோ இடுக்குகள் இருக்குமல்லவா? அவ்வளவையும் துப்புரவாகப் பரிசோதனை செய்து பார்ப்பார்! படுக்கைத் துணிகளையும் தலையணைகளையும் பல முறை உதறுவார்! இது ஒரு புறமிருக்க, தினந்தோறும் சாதாரணமாகக் கட்டில்களும் படுக்கைகளும் வெயிலில் கிடந்து காய்ந்தே தீர வேண்டும்.
மேற்படி பத்து அடிக்குப் பத்தடி விஸ்தீரணமுள்ள ஆபீஸ் ஹாலுக்கு நான் போய் ராஜாஜியின் பக்கத்தில் வேலை பார்க்க உட்கார்ந்த போது அளவில்லாத உற்சாகம் கொண்டேன். அரைமணி நேரத்துக்குள்ளே உற்சாக மெல்லாம் வியர்வையாக மாறி உடம்பெல்லாம் ஸ்நானம் செய்வித்தது.
உஷ்ணம் பொறுக்க முடியாமல் "உஸ் உஸ்" என்றேன். பக்கத்தில் கிடந்த காகித அட்டையை எடுத்து விசிறிக் கொண்டேன்.
"என்ன சமாச்சாரம்? என்ன 'உஸ் உஸ்' என்கிராய்?" என்று ராஜாஜி கேட்டார்.
"ஒன்றுமில்லை; இந்தக் கள்ளிக் கோட்டை ஓட்டுக்கு இவ்வளவு சக்தி உண்டு என்பது இது வரையில் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! வான வெளியிலுள்ள வெயில் கிரணங்களையெல்லாம் இழுத்து நம் தலை மேல் அல்லவா விடுகிறது? இந்த உஷ்ணத்தில் உட்கார்ந்து எப்படித்தான் வேலை செய்கிறீர்களோ?" என்று சொன்னேன்.
அவ்வளவு தான்; ராஜாஜி மற்ற வேலைகளை நிறுத்தி விட்டு, வெயிலின் உயர்ந்த குணங்களைப் பற்றி எனக்குச் சொல்ல ஆரம்பித்தார்.
"சென்னைப் பட்டணத்தில் இருப்பவர்கள் வெயிலில் கெடுதல் இருப்பதாக நினைக்கிறார்கள். ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் போகிறார்கள். இதைப் போல் அறிவீனம் வேறு கிடையாது. வெயில் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? அதிலும் நம்முடைய நாட்டுச் சுதேசி வெயில் இருக்கிறதே, அதனுடைய மகிமையைச் சொல்லி முடியாது. நாம் இந்த ஊர் வெயிலில் பிறந்து, இந்த ஊர் வெயிலில் வளர்ந்தவர்கள். வள்ளுவரும், கம்பரும் இந்த வெயிலில்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார்கள்? வெயிலிலுள்ள 'அல்ட்ராவயலெட்' கிரணங்களின் நோய் போக்கும் மருந்து குணத்தைப் பற்றி நீ அறிந்ததில்லையா? அதிலும் மேற்படி கிரணங்கள் கள்ளிக் கோட்டை ஓட்டின் வழியாக உஷ்ணமாய் மாறி வரும் போது அபார சக்தி உள்ளதாகின்றன. வெயிலுக்குப் பயப்படுவது சுத்தப் பிசகு!" என்று ராஜாஜி சொன்ன வார்த்தைகளை பக்தி சிரத்தையுடன் கேட்டுக் கொண்டேன். "வெயில் உடம்புக்கு நல்லது!" என்று எனக்கு நானே பல தடவை மந்திரத்தைப் போல் ஜபித்தேன். ஆனாலும் அந்தப் பாழாய்ப் போன வெயில் என்னை வறுத்து எடுக்கத்தான் செய்தது. கொஞ்ச நாளில் வேலையின் சுவாரஸ்யத்தில் தன்னை மறக்கும் நிலை ஏற்பட்ட பிறகே வெயிலின் கொடுமையையும் என்னால் மறக்க முடிந்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் சென்னைக்கு வந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது ஒரு மாதப் பத்திரிகையில் (அது இப்போது மறைந்து போயிற்று) ராஜாஜியைப் பற்றி ஒரு விசித்திரமான செய்தி வந்திருந்தது. அது என்ன வென்றால், "ராஜாஜி கதர் இயக்கத்துக்காகச் சேர்த்த பணத்தை எடுத்துக் கொண்டு போய்க் கொடைக்கானல் மலையில் சுகவாசம் செய்து விட்டு வந்தார்!" என்பதுதான்.
ராஜாஜியின் கவனத்துக்கு இது கொண்டு வரப்பட்டதும் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு, "அந்தப் பத்திரிகையின் மேல் வழக்குத் தொடரப் போகிறேன்!" என்றார். செய்தி கொண்டு வந்தவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. "அழகாய்த்தான் இருக்கிறது! தாங்கள் அந்தப் பத்திரிகையின் மேல் கேஸ் போடவாவது? அதை எத்தனை பேர் படித்திருக்கப் போகிறார்கள்? படித்திருந்தால்தான் யார் நம்பப் போகிறார்கள்? தாங்கள் கேஸ் போட்டால் அந்தப் பத்திரிகைக்கு அல்லவா பிரபலம் ஏற்படும்" என்றார் அந்த நண்பர்.
அதற்கு ராஜாஜி சொன்ன பதிலாவது:-
"அப்படி அந்தப் பத்திரிகைக்குப் பிரபலம் வந்தால் வந்து விட்டுப் போகட்டும். என்னுடைய நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவோ, யாராவது அந்த அவதூறை நம்பப் போகிறார்கள் என்றோ நான் கேஸ் போடவில்லை. பத்திரிகை நடத்துகிறவர்கள் இந்த மாதிரி பொறுப்பற்ற முறையில் பொய் அவதூறு சொல்ல இடங்கொடுப்பது தேச நன்மைக்குப் பாதகமாகும். என்னுடைய வேலையை இது பாதிக்கப் போவதில்லை; ஆனால் மற்றவர்களைப் பற்றி இம்மாதிரியெல்லாம் எழுதினால் பொது ஊழியம் செய்வதே முடியாத காரியமாகிவிடும். ஆகையால் வழக்குத் தொடர்ந்தே தீரவேண்டும்" என்றார்.
அவ்விதமே வழக்குத் தொடரப்பட்டது. காலஞ்சென்ற ஜனாப் அப்பாஸ் அலி அவர்கள் அப்போது தலைமைப் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரேட். அவருடைய கோர்ட்டில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அன்று நானும் ஆஜராகியிருந்தேன். ராஜாஜியின் சிநேகிதர்களும் பந்துக்களும், இன்னும் பலரும் வந்திருந்தார்கள்.
ஜனாப் அப்பாஸ் அலிகான் வழக்கு இன்னதென்று ஒருவாறு தெரிந்து கொண்டாலும், குறிப்பிட்ட பத்திரிகையை வாங்கி விஷயத்தைப் படித்துப் பார்த்தார். பிறகு வழக்கில் எதிரியான பத்திரிகை ஆசிரியரை ஏற இறங்கப் பார்த்தார். "என்ன ஐயா! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.
"எதிர் வழக்காடப் போகிறேன்" என்றார் பத்திரிகாசிரியர்.
"நிஜமாகவா? இந்த மாதிரி வழக்கிலா எதிர் வழக்கு ஆடப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.
பத்திரிகாசிரியர் சிறிது திகைத்து நின்றுவிட்டு, "ஆமாம்" என்று பதிலளித்தார்.
மாஜிஸ்ட்ரேட் ராஜாஜியைப் பார்த்து, "தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றார்.
"வழக்கை நடத்த வேண்டியதுதான்" என்றார் ராஜாஜி.
மாஜிஸ்ட்ரேட் அப்பாஸ் அலிகான் இன்னும் ஒரு தடவை மேற்படி பத்திரிகை விஷயத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, ராஜாஜியை நோக்கி, "மிஸ்டர் ராஜகோபாலாச்சாரியார்! இந்தக் கேஸை மேலே நடத்துவதற்கு முன்னால் தங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பதில் சொல்லலாமா?" என்றார்.
"கேளுங்கள்!" என்றார் ராஜாஜி.
"மிஸ்டர் ராஜகோபாலாச்சாரியார்! தாங்கள் எப்போதாவது கொடைக்கானலுக்குப் போனதுண்டா?" என்று மாஜிஸ்ட்ரேட் கேட்டார்.
"இல்லை" என்று ராஜாஜி பதில் சொன்னதும், கோர்ட்டில் அப்போது கூடியிருந்த அவ்வளவு பேரும் (குமாஸ்தாக்கள், பியூன்கள், அடுத்த கேஸுக்காக வந்து காத்திருந்த குற்றவாளிகள் உள்பட) ஒரேயடியாகச் சிரித்ததில், கோர்ட்டே அல்லோலகல்லோலப் பட்டுப் போயிற்று.
சிரிப்புச் சத்தம் அடங்கியதும், ஜனாப் அப்பாஸ் அலி மறுபடியும் பத்திரிகாசிரியரைப் பார்த்து "மிஸ்டர்! இன்னமும் எதிர் வழக்காடப் போகிறீர்களா?" என்று கேட்டார்.
பத்திரிகாசிரியர் விழித்துக் கொண்டு நின்றார். அதைப் பார்த்த எனக்கே அவர் விஷயத்தில் பரிதாபம் உண்டாகி விட்டது.
மீண்டும் ஜனாப் அப்பாஸ் அலி, "மிஸ்டர்! என் புத்திமதியைக் கேளுங்கள். பேசாமல் தாங்கள் எழுதியதை வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். சி.ஆர். நல்ல மனிதர் என்று எல்லாருக்கும் தெரியும். நீர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், அவரும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வார்!" என்றார்.
பத்திரிகாசிரியர் தமது வக்கீலையும் இன்னும் இரண்டொரு நண்பர்களையும் கலந்து கொண்டு அப்படியே செய்வதாகக் கூறினார். வழக்கு முடிந்தது.
காந்தி ஆசிரமத்தில் ராஜாஜி நடத்திய வாழ்க்கையையும், வெயிலின் மேல் அவருக்கிருந்த அபார பிரேமையையும் நன்கு அறிந்தவனாதலால், மேற்படி "கொடைக்கானல் வழக்கு" எனக்கு மிகவும் ரஸமாயிருந்தது. அதை நான் மறக்கவே முடிவதில்லை. அதனால் தான் அவ்வளவு சம்பந்தமில்லாவிட்டாலும், பாதகமில்லையென்று மேற்படி சம்பவத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.
7
[தொகு]மீண்டும் விட்ட இடத்தில் தொடங்குகிறேன். மது விலக்குப் பிரச்சாரத்துக்காக ஒரு மாதப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்றும், அதற்கு 'விமோசனம்' என்று பெயர் வைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் ராஜாஜி கூறியபோது எனக்குப் பல சந்தேகங்கள் தோன்றின.
"மது விலக்கு என்கிற ஒரு விஷயத்துக்கு மட்டும் தனிப் பத்திரிகையா? அவ்விதம் நடத்த முடியுமா?" என்று கேட்டேன்.
"ஏன் நடத்த முடியாது? பேஷாக நடத்த முடியும்?" என்றார் ராஜாஜி.
"பத்திரிகையின் பக்கங்கள் எத்தனை?"
"நாற்பது பக்கங்கள்."
"நாற்பது பக்கமும் மதுவிலக்கு விஷயமேயா?"
"ஆமாம்."
"நாற்பது பக்கத்துக்கு மது விலக்கு விஷயம் எப்படித் திரட்டுவது? அப்படித் திரட்டி பத்திரிகை கொண்டு வந்தாலும் ஜனங்கள் வாங்குவார்களா?"
"ஏன் வாங்க மாட்டார்கள்? வாங்கா விட்டால் வாங்கச் செய்ய வேண்டும்."
"எப்படி வாங்கச் செய்வது? அடிபிடி கட்டாயம் செய்ய முடியுமா? படிக்க சுவாரஸ்யமாயிருந்தால் தானே பத்திரிகையை வாங்குவார்கள்?"
"படிக்க சுவாரஸ்யமா யிருக்கும்படிச் செய்யலாம். நீ பார்த்துக் கொண்டேயிரு. முதல் இதழை நான் தனியாகவே தயாரித்துக் காட்டுகிறேன்!"
அவ்விதமே ராஜாஜி 'விமோசனம்' முதல் இதழைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஒரு வாரத்தில் தயாரித்தும் முடித்து விட்டார். அட்டைப் பக்கத்துக்கு மதுப் புட்டியாகிய அரக்கனை ஜனங்கள் விரட்டியடிப்பது போன்ற படம். உள்ளே முதல் பக்கத்துக்கு பாரதியாரின் "ஜய பேரிகை கொட்டடா!" என்ற பாட்டைத் தழுவி "மது வெனும் பேய்தனை அடித்தோம்!" என்று ஒரு பாட்டும் படமும். மதுவிலக்கின் அத்தியாவசியத்தைப் பற்றிய தலையங்கம்.
குடியின் தீமையை விளக்கும் இரண்டு கதைகள். இன்னும் சில கட்டுரைகள். "கடற்கரைக் கிளிஞ்சல்" என்னும் தலைப்பில் அநேக சிறு குறிப்புகள். ஆங்காங்கே மதுவிலக்குப் பிரசாரப் படங்கள். இவ்வளவும் தயாராகி விட்டன. படங்களுக்கு ஒருவாறு உருவங்களையெல்லாம் குறிப்பிட்டு ராஜாஜி பிளான் போட்டுக் கொடுத்து விடுவார். அவற்றைப் பார்த்து சரியான படங்களைச் சென்னையில் ஸ்ரீ செட்டி என்பவர் செய்து கொடுத்து வந்தார். [துரதிருஷ்டவசமாக ஸ்ரீ செட்டி அகால மரண மடைந்தார். இவருடைய இளைய சகோதரர்தான் பிற்காலத்தில் பிரசித்தியடைந்த ஸ்ரீசேகர்.]
அமெரிக்காவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல மதுவிலக்குப் பிரசார நூல்களும் பத்திரிகைகளும் ராஜாஜி தருவித்திருந்தார். அவற்றைப் படித்து "மது விலக்கு வினாவிடை" என்னும் ஒரு விஷயத்துக்கு மட்டும்முதல் இதழுக்கு நான் எழுதிக் கொடுத்ததாக ஞாபகம் இருக்கிறது. விஷயம் எல்லாம் தயாரான பிறகு பத்திரிகையை எங்கே அச்சடிப்பது என்ற கேள்வி ஏற்பட்டது. காந்தி ஆசிரமத்தில் அச்சுக் கூடம் இல்லை. பல யோசனைகள் செய்த பிறகு அப்போது சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த ஹிந்தி பிரச்சார அச்சுக்கூடத்தில் அச்சடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
"திருவல்லிக்கேணியில் பத்திரிகை அச்சடிப்பது சரிதான். அச்சடித்த பிரதிகளை என்ன செய்வது?" என்று கேட்டேன்.
"ஒரே பார்சலாகக் கட்டி இங்கே கொண்டு வந்து சந்தாதார்களுக்கு அனுப்புவது. காந்தி ஆசிரமம் தபாலாபீசுக்கும் வேலை வேண்டுமோ, இல்லையோ?" என்றார் ராஜாஜி. "சந்தாதார் இருக்கும் இடமே தெரியவில்லையே? அவர்களை எப்படிப் பிடிப்பது?" என்று கேட்டேன். "பார்த்துக் கொண்டேயிரு; போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள்!" என்று ராஜாஜி சொன்னார். அப்போது தமிழ் மக்களிடையே பத்திரிக்கை படிக்கும் வழக்கம் நன்கு பரவியிருக்கவில்லை.
ஸ்ரீ வ.வே.சு. ஐயர் அவர்களின் 'பால பாரதி'யும் ஸ்ரீ ஏ.மாதவய்யா அவர்களின் 'பஞ்சாமிர்தம்' என்னும் பத்திரிகையும் எவ்வளவு கஷ்டப்பட்டன என்பதை நான் அறிந்திருந்தேன். 'பால பாரதி'க்கு 800 சந்தாதார்களுக்கு மேலும், 'பஞ்சாமிர்த'த்துக்கு 400 சந்தாதார்களுக்கு மேலும் சேரவில்லை. ஸ்ரீ மாதவய்யா பத்திரிகை போட்டுப் பண நஷ்டமும் அடைந்தார். எத்தனையோ விதவிதமான ரஸமான விஷயங்களை வெளியிட்ட பத்திரிகைகளே இவ்வளவு இலட்சணத்தில் நடந்திருக்கும்போது மது விலக்குப் பிரசாரத்துக்காக மட்டும் நடத்தும் பத்திரிகை எவ்விதத்தில் வெற்றியடையப் போகிறது? குடிகாரர்கள் இந்தப் பத்திரிகையை ஒரு நாளும் படிக்கமாட்டார்கள். குடிப்பழக்கமில்லாதவர்களுக்கோ இப்பத்திரிகை தேவையேயில்லை. அப்படியிருக்கும்போது மதுவிலக்குப் பிரசாரத்துக்காக ஒரு தனிப் பத்திரிகை நடத்துவதில் என்ன பயன்? யார் வாங்கப் போகிறார்கள்? வீண் கஷ்டத்தோடு நஷ்டமும் ஏற்படுமே?
இப்படிப்பட்ட சந்தேகங்களும் குழப்பங்களும் மனதில் குடி கொண்டிருந்தன. ஆனால் 'விமோசனம்' முதல் இதழைப் பார்த்ததும் என் சந்தேகங்கள் எல்லாம் பறந்தன. ராஜாஜியே சென்னைக்குச் சென்றிருந்து ஹிந்தி பிரசார சபையில் முதல் இதழை அச்சடித்துக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த விமோசனம் பத்திரிகைக் கட்டைப் பிரித்து ஆவலுடன் ஒரு பிரதியை எடுத்துப் பார்த்தேன். "நம்முடைய பயங்கள் எல்லாம் வீண்; இந்தப் பத்திரிகை வெற்றியடையப் போகிறது!" என்று எனக்குத் தைரியம் உண்டாகி விட்டது.
முதல் இதழ் ஆயிரம் பிரதிகள்தான் அச்சிட்டோ ம். அதுவரை சேர்ந்திருந்த சந்தாதார்களுக்கு அனுப்பிய பிறகு, தமிழ் நாட்டிலிருந்த கதர் வஸ்திராலயங்களுக்கெல்லாம் விற்பனைக்காக அனுப்பினோம். என்னுடைய சந்தேகங்கள் பறந்து போய் பத்திரிகைப் பிரதிகளும் பறந்து போய் விட்டன!
இரண்டாவது இதழிலிருந்து நானே பொறுப்பை எடுத்துக் கொண்டேன். ராஜாஜி ஒவ்வொரு இதழுக்கும் மதுவிலக்கைப் பற்றி கதையோ கட்டுரையோ எழுதுவார். நானும் இதழுக்கு ஒரு மதுவிலக்குக் கதை தவறாமல் எழுதி வந்தேன். ராஜாஜியின் கருத்துக்களையொட்டி மதுவிலக்குப் பிரசாரக் கட்டுரைகள், குறிப்புகள் முதலியவற்றையும் எழுதி வந்தேன். மாதம் ஒரு தடவை சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று பத்திரிகையை அச்சடித்து பைண்டு செய்து எடுத்து வருவேன். சில சமயம் ராஜாஜிக்குச் சென்னையில் வேறு காரியங்கள் இருக்கும். எனவே, இரண்டு பேருமாகச் சென்னைக்குப் போவோம். மூன்று நாளைக்குள் ஹிந்தி பிரசார அச்சுக் கூடத்தார் பத்திரிகையை அச்சிட்டு பைண்டு செய்து கொடுத்து விடுவார்கள்! இந்த மூன்று நாளும் அப்போது திருவல்லிக்கேணியிலிருந்த ஹிந்தி பிரசார சபையிலேதான் எங்களுக்கு வாசம். இரவு நேரங்களில் சபைக் கட்டிடத்தின் மேல் மச்சில் மொட்டை மாடியில் படுத்து உறங்குவோம். தூக்கம் வருகிற வரையில் ராஜாஜியுடன் பேச்சுக் கொடுத்து அவருடைய பழைய வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றி ஏதாவது கேட்பேன். அவர்களும் ரஸமான சம்பவம் ஏதாவது சொல்வார்கள்.
'விமோசனம்' பத்திரிகையின் மூலம் எனக்குக் கிடைத்த மேற்படி பாக்கியத்தை நான் என்றும் மறக்க முடியாது.
'விமோசனம்' விற்பனை ஒவ்வொரு இதழுக்கும் அபிவிருத்தி அடைந்து வந்தது. மொத்தம் பத்து இதழ்கள்தான் வெளியிட்டோ ம். ஒன்பதாவது பத்தாவது இதழ்கள் நாலாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன.
அந்தக் காலத்து நிலைமையில் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பற்றிய பத்திரிகை அவ்வளவு பிரதிகள் விற்பனை ஆனது ஒரு மகத்தான வெற்றி என்றே கருத வேண்டியிருந்தது.
8
[தொகு]'விமோசனம்' பத்திரிகை நடந்து கொண்டிருந்த காலத்தில் சென்னையில் இரட்டை ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இரட்டையாட்சி சர்க்கார் மாகாணத்தில் மது அரக்கனுடைய தீமைகளைப் பிரசாரம் செய்வதற்காக ஒவ்வொரு ஜில்லாவிலும் கமிட்டிகளையும் பிரசாரகர்களையும் ஏற்படுத்தியிருந்தார்கள். "டெம்பரன்ஸ் கமிட்டி" என்று பெயர் கொண்டிருந்த இந்தக் கமிட்டிகளைச் சிலர் "மிதக்குடி பிரசாரக் கமிட்டி" என்று பரிகாசம் செய்தார்கள். ஆயினும் மேற்படி கமிட்டிகள் சில ஜில்லாக்களில் சிறந்த வேலை செய்து வந்தன. அந்தக் கமிட்டிகளின் வேலைக்கு 'விமோசனம்' மிக்க உதவியாயிருந்தது. சில ஜில்லாக் கமிட்டிகள் பத்துப் பிரதிகள் பதினைந்து பிரதிகள் தருவித்து மது விலக்குப் பிரசாரகர்களுக்குக் கொடுத்தன.
பொதுவாக அச்சமயம் தமிழ் நாடெங்கும் மதுவிலக்குப் பிரசாரத்தில் உற்சாகம் ஏற்பட்டிருந்தது. காந்தி ஆசிரமத் தொண்டர்கள் தீவிரமான மதுவிலக்குப் பிரசாரம் செய்தார்கள். விமோசனத்தில் வெளியான படங்கள் பிரசாரத்துக்கு மிக்க உதவியாயிருந்தன. மேற்படி படங்களைப் பெரிதாக எழுதச் செய்து துணியில் ஒட்டி வைத்திருந்தோம். மொத்தம் சுமார் முத்திரண்டு படங்கள் இருந்தன. இந்தப் படங்களையும் பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக்கொண்டு ஆசிரமத்தின் பெரிய கட்டை வண்டியில் ஏறி வாரத்துக்கு இரண்டு நாள் கிராமப் பிரசாரத்துக்குப் போவோம். ஆசிரமத்தில் ராஜாஜி இருந்த போதெல்லாம் அவர்களும் வருவார்கள். ஒரு கிராமத்துக்குப் போனதும் முதலில் கிராமச் சாவடிக்குச் சென்று பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றிக் கொள்வோம். பிறகு மதுவிலக்குப் பாட்டுப் பாடிக் கொண்டு ஊரைச் சுற்றி வருவோம். அந்தச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் நாமக்கல் கவிஞர் மதுவிலக்குப் பாட்டு ஒன்று பாடிக் கொடுத்தார்:
குற்றமென்று யாருமே
கூறுமிந்தக் கள்ளினை
விற்க விட்டுத் தீமையை
விதைப்ப தென்ன விந்தையே
பாடுபட்ட கூலியைப்
பறிக்கு மிந்தக் கள்ளினை
வீடு விட்டு நாடு விட்டு
வெளியிலே துரத்துவோம்!"
என்பது போன்ற பாட்டின் அடிகள் கிராமவாசிகளுக்கு எளிதில் புரியக் கூடியதாயும் அவர்கள் மனதில் பதியக் கூடியதாயும் இருந்தன. மேற்படி மதுவிலக்குப் பாட்டு ராஜாஜிக்குப் பெரிதும் பிடித்திருந்தது. இது காரணமாக நாமக்கல் கவிஞர் மீது ராஜாஜிக்கு அபாரமான அபிமானமும் மதிப்பும் ஏற்பட்டன.
நாமக்கல் கவிஞர் பாட்டுப் புத்தகத்துக்கு ராஜாஜி எழுதியுள்ள முன்னுரையில் "சில அம்சங்களில் நாமக்கல் கவிஞர் பாரதியாரைக் காட்டிலும் மேல்" என்று எழுதியிருப்பதை நேயர்கள் பலர் கவனித்திருக்கலாம். ராஜாஜி உபசாரத்துக்காக இப்படி ஒரு விஷயத்தை எழுதக்கூடியவர் அல்ல. மனதில் உண்மையாகப் பட்டதையே எழுதுவார். எனவே, நாமக்கல் கவிஞரைப் பாரதியாருக்கு மேலே மதிப்பிட்டதற்குக் காரணம் இருக்க வேண்டுமல்லவா? அதற்குக் காரணம் மேற்படி மதுவிலக்குப் பாட்டுத்தான் என்று நான் கருதுகிறேன். மதுவிலக்கு இயக்கம் ராஜாஜியின் உள்ளத்தில் அவ்வளவு முக்கியமான ஸ்தானம் பெற்றிருந்தது.
புதுப்பாளையம் காந்தி ஆசிரமம் ஏற்பட்ட பிறகு நூற்றல் கூலி, நெசவுக் கூலி மூலமாய் பக்கத்துக் கிராமங்களுக்கு லட்சக் கணக்கான ரூபாய் பட்டுவாடா ஆகி வந்தது. ஆயினும் கிராமவாசிகளின் நிலைமை மொத்தத்தில் அபிவிருத்தியடையவில்லை. தரித்திர நாராயணர்களின் வாசஸ்தலங்களாகவே கிராமங்கள் இருந்து வந்தன. இதற்குக் காரணம் கள்ளு, சாராயக் கடைகளே என்பதை ராஜாஜி கண்டார். மதுபானத்தில் ஏழை எளிய மக்களின் வீடுகள் நரகக் குழிகளாகியிருப்பதையும், அவர்கள் நாளுக்கு நாள் க்ஷீணமடைந்து வருவதையும் ராஜாஜி பார்த்தார். கள்ளுக் கடைகளை மூடினால் ஒழிய கிராமவாசிகளுக்கு விமோசனமே கிடையாது என்ற உறுதியான எண்ணம் அவர் மனதில் நிலை பெற்றது. தேசத்தில் வேறு எந்த திட்டமும் இதைப் போல் முக்கியமானதல்ல என்ற எண்ணமும் உண்டாயிற்று. ஆகையினால்தான் மதுவிலக்குப் பிரசாரத்துக்காக ஆரம்பித்த பத்திரிகைக்கு 'விமோசனம்' என்று பெயரிட்டார். அவ்வளவு பரம முக்கியமாக அவர் கருதிய மதுவிலக்கு இயக்கத்தைப் பற்றிப் பாடிய நாமக்கல் கவிஞர் மீது அவருக்கு மிக்க மதிப்பும் அபிமானமும் ஏற்பட்டதில் வியப்பில்லையல்லவா?
பெட்ரோமாக்ஸ் விளக்கைப் பொருத்தி வைத்துவிட்டு மதுவிலக்குப் பாட்டைப் பாடிக்கொண்டு ஊரைச் சுற்றி வருவோம். எங்களைத் தொடர்ந்து கிராமவாசிகள் சிலரும் வருவார்கள். வரவரக் கூட்டம் அதிகமாகும். கடைசியில் வசதியான இடம் ஒன்றில் ஊர்வலம் முடிந்து, பொதுக் கூட்டம் ஆரம்பமாகும். மதுவிலக்குப் பிரசாரப் படங்களை ஒவ்வொன்றாக விரித்து விளக்கு வெளிச்சத்தில் ஒருவர் காட்ட, இன்னொருவர் அதைச் சுட்டிக் காட்டி விளக்கிப் பேசியது கிராமவாசிகளின் மனதில் மிகவும் நன்றாகப் பதிந்தது. 'விமோசன'த்தில் வெளியான படத் தொகுதிகளில் ஒரு குறிப்பிட்ட தொகுதியைக் கிராமவாசிகள் - முக்கியமாகப் பெண்கள் - மிகவும் ரஸித்துச் சிரிப்பார்கள்.
அந்தப் படத் தொகுதியில் சட்டைத் தொப்பி போட்ட மனிதன் ஒருவன் ஒரு சாராயப் புட்டியை முதலில் ஒரு மாட்டினிடம் கொண்டு நீட்டுகிறான். மாடு குடிக்க மாட்டேன் என்கிறது. பிறகு குதிரையிடம் போகிறான். குதிரையும் வேண்டாம் என்கிறது. பிறகு நாய் குடிக்க மறுக்கிறது. பன்றி கூட 'வேண்டாம்' என்று மறுதளிக்கிறது. கடைசியில் அந்தச் சட்டைக்காரன் ஒரு கிராமத்துக் குடியானவனிடம் கொண்டு போய் புட்டியை நீட்டுகிறான். அந்தக் குடியானவன் அதை வாங்கிக் குடிக்கிறான். "நாயும் பன்றியுங் கூட விஷம் என்று குடிக்க மறுக்கும் மதுவை மனிதன் குடிக்கிறான், பார்த்தீர்களா?" என்று படத்தைச் சுட்டிக் காட்டிப் பிரசங்கி சொன்னதும் கூட்டத்தில் உள்ள ஸ்திரீகள் எல்லாரும் சிரிப்பார்கள். ஆண்களில் சிலர் சிரிப்பார்கள்; இன்னும் சிலர் "ஆமாம்; அது வாஸ்தவம் தானே?" என்பார்கள்.
கிராமவாசிகளின் மனதைக் கவர்ந்த இன்னொரு படம்:-
முதலில் ஒரு குடித்தனக்காரர் பெண்டு பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்வதைக் காட்டுகிறது; பத்து வருஷம் குடித்த பிறகு அவர் வீடு பாழாய்க் கிடப்பதையும், உடைந்த புட்டிகளுக்கும் கலயங்களுக்கும் மத்தியில் அந்த மனிதன் தலையில் கையை வைத்துக் கொண்டு தனியே உட்கார்ந்திருப்பதையும் காட்டுகிறது.
இரண்டாவது படத்தைக் காட்டி விஷயத்தைச் சொன்னதும் கிராம வாசிகள், "ஆஹா!" "ஐயோ!" என்று பரிதபிக்கும் குரல்கள் கேட்கும். இப்படியெல்லாம் கிராமவாசிகளின் மனதில் படும்படி பிரசாரம் செய்யும் முறை ராஜாஜியின் மனதிலேதான் முதன் முதலாக உதித்தது. மேற்படி மதுவிலக்குப் படங்கள் பின்னால் அச்சிடப்பட்டு தொகுதி தொகுதியாகப் பல இடங்களுக்கு பிரசாரங்களுக்காக அனுப்பப்பட்டன.
படங்களைச் சுட்டிக் காட்டி நாங்கள் ஒவ்வொருவரும் பிரசங்கம் செய்வதுண்டு. படங்களின் உதவியில்லாமல் வாசாம கோசரமாக மதுவின் தீமைகளைப் பற்றிப் பேசுவதும் உண்டு. ஆயினும் ராஜாஜி பேசும்போது கிராமத்து ஜனங்களின் மனதிலே பதிவது போல் எங்களுடைய பேச்சு பதிவதில்லை. ஏனெனில் ராஜாஜியைப் போலக் கிராமத்து ஜனங்களின் கஷ்டங்களை நாங்கள் உணரவில்லை. எங்களுடைய பேச்செல்லாம் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயர் பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிப்பது போலிருக்கும். ராஜாஜியின் பேச்சோ குழந்தையிடம் உயிரை வைத்திருக்கும் தாயார் அன்புடன் புத்தி சொல்வது போலிருக்கும்.
9
[தொகு]'விமோசனம்' ஒன்பதாவது இதழ் அச்சாகிக் கொண்டிருந்தபோது தேசத்தில் உப்பு சத்தியாக்கிரஹப் பேரியக்கம் ஆரம்பமாயிற்று. நூறு சத்தியாக்கிரஹிகள் அடங்கிய தொண்டர் படையுடன் ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்குக் கால்நடை யாத்திரை புறப்பட்டார். எனக்கு அந்த முதற் படையிலே சேர்ந்து புறப்பட வேண்டுமென்று எவ்வளவோ ஆசையிருந்தது. ஆனால், நான் வரக் கூடாது என்றும், 'விமோசனம்' பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் ராஜாஜியின் கட்டளை பிறந்தது. எனக்கு இது பிடிக்கவும் இல்லை; அர்த்தமாகவும் இல்லை. தேசத்தில் மகத்தான சுதந்திர இயக்கம் நடக்கப் போகிறது. அதில் வெற்றி பெற்றால் சுயராஜ்யமே வந்து விடப் போகிறது. ஒரு நொடியில் மதுவிலக்குச் சட்டம் நிறைவேற்றி மதுவை அடியோடு எடுத்துவிடலாம். அத்தகைய நிலைமையில் மதுவிலக்குப் பிரசாரப் பத்திரிகையை நடத்துவது முக்கியமான காரியமாக எனக்குத் தோன்றவில்லை. ஆயினும் ராஜாஜியுடன் எதிர்த்து வாதாட முடியாதவனாயிருந்தேன். வேதாரண்ய யாத்திரையின் மகத்தான விவரங்களைப் பத்திரிகையில் படிக்கப் படிக்க எனக்கு ஆத்திரம் அதிகமாகி வந்தது. ராஜாஜி சிறை புகுந்த பிறகு ஒரே ஒரு 'விமோசனம்' இதழ் மட்டும்தான் வெளிக் கொண்டு வந்தேன். அந்த இதழ் அச்சாகிக் கொண்டிருந்தபோது ராஜாஜிக்கு மன்றாடிக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். "தாங்கள் எழுதாமல் பத்திரிகை நன்றாகவும் இராது; ஜனங்களுக்கும் சிரத்தை குறைந்து விடும்; இது வரை ஏற்பட்ட வெற்றி நஷடமாகி விடும்" என்று பல முறை வற்புறுத்தி எழுதி, பத்தாவது இதழோடு பத்திரிகையை நிறுத்த அனுமதி பெற்றுக் கொண்டேன். அவ்விதமே பத்தாவது இதழில் அறிக்கை பிரசுரித்து நிறுத்தி விட்டேன்.
உண்மையிலேயே பத்திரிகையை அதே முறையில் என்னால் தொடர்ந்து நடத்தியிருக்க முடியாதுதான்.
ராஜாஜி பக்கத்தில் இருந்தவரையில் அவருக்கு மதுவிலக்கில் இருந்த உணர்ச்சியின் வேகம் என்னையும் ஆட்கொண்டிருந்தது. அவர்கள் அப்பால் சென்றதும் என்னுடைய உணர்ச்சியின் வேகமும் குறைந்து போய் விட்டது. உணர்ச்சியில்லாத எழுத்தில் சக்தி என்ன இருக்கும்? பத்திரிகைதான் எப்படி நடத்த முடியும்?
'விமோசனம்' பத்திரிகையின் இதழ்களில் நான் எழுதிய மதுவிலக்குக் கதைகள் இந்தப் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் சர்க்கார் இப்போது மதுவிலக்குச் சட்டம் செய்து வருவதால் இந்தக் கதைகள் பிரசாரத்துக்குப் பயன்படும் என்று நம்பித் தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை வெளியிடுகிறார். ராஜாஜியுடன் வாதம் செய்தாலும் செய்யலாம் சின்ன அண்ணாமலையுடன் என்னால் வாதம் செய்ய முடியாது. நான் 'வேண்டாம்' என்று தடுத்தாலும் அவர் கேட்கப் போவதில்லை. இந்த நீண்ட முன்னுரையைப் பார்த்துப் பயந்து போயாவது ஒரு வேளை ஸ்ரீ சின்ன அண்ணாமலை புத்தகம் வெளியிடுவதை நிறுத்திவிடலாம் என்ற ஒரு சின்ன ஆசை மனதின் ஒரு சிறு மூலையில் எட்டிப் பார்க்கிறது. அந்த ஆசை என்ன ஆகிறதோ, பார்க்கலாம்!
ரா.கிருஷ்ணமூர்த்தி "கல்கி"எட்டயபுரம் 17-4-47