உள்ளடக்கத்துக்குச் செல்

நீதிக் களஞ்சியம்/கொன்றை வேந்தன்

விக்கிமூலம் இலிருந்து


​

கொன்றை வேந்தன்
(ஔவையார்)
கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடி இணை
என்றும் ஏத்தித் தொழுவோம், யாமே.

நூல்

அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்.⁠1
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.⁠2
இல்லறம் அல்லது நல் அறம் அன்று.⁠3
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.⁠4
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.⁠5
ஊருடன் பகைக்கின், வேருடன் கெடும்.⁠6
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.⁠7
ஏவா மக்கள் மூவா மருந்து.⁠8
ஐயம் புகினும், செய்வன செய்.⁠9
ஒருவனைப் பற்றி, ஓர் அகத்து இரு.⁠10
ஓதலின் நன்றே, வேதியர்க்கு ஒழுக்கம்.⁠11
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.⁠12
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.⁠13

​

கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை. ⁠14
காவல்தானே பாவையர்க்கு அழகு. ⁠15
கிட்டாதாயின் வெட்டென மற. ⁠16
கீழோர் ஆயினும், தாழ உரை. ⁠17
குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லை. ⁠18
கூர் அம்புஆயினும், வீரியம் பேசேல். ⁠19
கெடுவது செய்யின், விடுவது கருமம். ⁠22
கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.⁠21
கைப் பொருள்தன்னின், மெய்ப் பொருள் கல்வி.⁠22
கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.⁠23
கோட் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.⁠24
கௌவை சொல்லின், எவ்வருக்கும் பகை.⁠25

சந்ததிக்கு அழகு, வந்தி செய்யாமை.⁠26
'சான்றோர்' என்கை ஈன்றோர்க்கு அழகு.⁠27
சிவத்தைப் பேணின், தவத்திற்கு அழகு.⁠28
சீரைத் தேடின், ஏரைத் தேடு.⁠29
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.⁠30
சூதும் வாதும் வேதனை செய்யும்.⁠31
செய் தவம் மறந்தால், கைதவம் ஆளும்.⁠32
சேமம் புகினும், யாமத்து உறங்கு.⁠33
சை ஒத்து இருந்தால், ஐயம் இட்டு உண்.⁠34
சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.⁠35
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.⁠36

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.⁠37
தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை.⁠38
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.⁠39
திராக் கோபம் போரா முடியும்.⁠40
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.⁠41
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.⁠42

​

தெய்வம் சீறின், கைதவம் மாளும்.⁠43
தேடாது அழிக்கின், பாடாய் முடியும்.⁠44
தையும் மாசியும் வைஅகத்து உறங்கு.⁠45
தொழுது ஊண் சுவையின், உழுது ஊண் இனிது.⁠46
தோழனோடும் ஏழைமை பேசேல்.⁠47

நல் இணக்கம் அல்லது அல்லற்படுத்தும்.⁠48
நாடு எங்கும் வாழ, கேடு ஒன்றும் இல்லை.⁠49
நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.⁠50
நீர் அகம் பொருந்திய ஊரகத்து இரு.⁠51
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.⁠52
நூல் முறை தெரிந்து, சீலத்து ஒழுகு.⁠53
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.⁠54
நேரா நோன்பு சீராகாது.⁠55
நைபவர் எனினும், தொய்ய உரையேல்.⁠56
நொய்யவர் என்பவர்வெய்யவர் ஆவர்.⁠57
நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை.⁠58

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.⁠59
பாலோடு ஆயினும், காலம் அறிந்து உண்.⁠60
பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.⁠61
பீரம் பேணி பாரம் தாங்கும்.⁠62
புலையும் கொலையும் களவும் தவிர்.⁠63
பூரியோர்க்கு இல்லை, சீரிய ஒழுக்கம்.⁠64
பெற்றோர்க்கு இல்லை, சுற்றமும் சினமும்.⁠65
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.⁠66
பையச் சென்றால், வையம் தாங்கும்.⁠67
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.⁠68
போனகம் என்பது தான் உழந்து உண்டல்.⁠69

மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.⁠70
மாரி அல்லது காரியம் இல்லை.⁠71
மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.⁠72
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.⁠73

​

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்.⁠74
மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்.⁠75
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.⁠76
மேழிச் செல்வம் கோழைபடாது.⁠77
மை விழியார்தம் மனை அகன்று ஒழுகு.⁠78
மொழிவது மறுக்கின், அழிவது கருமம்.⁠79
மோனம் என்பது ஞான வரம்பு.⁠80

வளவன் ஆயினும், அளவு அறிந்து, அழித்து, உண்.⁠81
வானம் சுருங்கின், தானம் சுருங்கும்.⁠82
விருந்து இலோர்க்கு இல்லை, பொருந்திய ஒழுக்கம்.⁠83
வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும்.⁠84
உரவோர் என்கை இரவாது இருத்தல்.⁠85
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.⁠86
வெள்ளைக்கு இல்லை. கள்ளச் சிந்தை.⁠87
வேந்தன் சீறின், ஆம் துணை இல்லை.⁠88
வையம்தோறும் தெய்வம் தொழு.⁠89
ஒத்த இடத்து நித்திரை கொள்.⁠90
ஓதாதார்க்கு இல்லை, உணர்வொடும் ஒழுக்கம்.⁠91