நீளமூக்கு நெடுமாறன்/அசட்டு அரக்கன்

விக்கிமூலம் இலிருந்து


கதை : நான்கு

அசட்டு அரக்கன்

ஆனைமலை அடிவாரத்தில் தோட்டக்காரன் சமயோசிதம் தன் மனைவியுடனும் ஏழு மக்களுடனும் வாழ்ந்து வந்தான். ஏழு மக்களில் மூன்று ஆண் பிள்ளைகள், நான்கு பெண்கள்.

நாள் முழுவதும் தோட்டக்காரன் சமயோசிதம், செடிகளுக்குத் தண்ணிர் பாய்ச்சுவதும், பாத்தி வெட்டுவதும், கன்று நடுவதும், விதை விதைப்பதுமாகப் பாடுபட்டு உழைத்து வந்தான். அவன் மனைவி ஆவுடையாளும் காய்கறிகள் விற்று வந்து அதனால் கிடைக்கும் சிறு ஊதியத்தைக் கொண்டு சமையல் செய்து சாப்பாடு போடுவதும், துணிமணிகள் வாங்கித் தைப்பதும், தன் ஏழு குழந்தைகளையும் வளர்ப்பதுமாக நாள் முழுவதும் உழைத்துக் கொண்டு வந்தாள்.

அந்தத் தோட்டத்தையும், வீட்டில் இருந்த ஒட்டை உடைசலான பழைய சாமான்கள் சிலவற்றையும் தவிர சமயோசிதத்திடம் சில கோழிகளும் ஒரு பசு மாடும் தான் இருந்தன. கோழிகள் இடும் முட்டைகளையும், பசு கறக்கும் பாலையும், அவன் மனைவி ஊருக்குள் கொண்டு போய் விற்று விட்டு வருவாள். இந்தப் பனமெல்லாம் சேர்ந்து அவர்கள் அன்றாடம் கஞ்சி காய்ச்சிக் குடிப்பதற்கே போதுவதில்லை. ஆகவே அவர்கள், மறுநாள் சாப்பாட்டைப் பற்றி நினைக்கக் கூட மாட்டாத நிலையில் இருந்தார்கள்.

மலையுச்சியில் இருந்த கோட்டையில் பெருந்தலைப் பிரசண்டன் என்ற அரக்கன் தன் மனைவியான பெருவாய் பேச்சியுடனும் ஒரு வேலைக்காரனுடனும் வசித்து வந்தான். அந்த மலையும், மலையைச் சுற்றி இருந்த இடங்களும் தனக்குத்தான் சொந்தமானது என்று அந்த அரக்கன் நினைத்துக் கொண்டான். ஆகவே, தோட்டக்காரன் சமயோசிதத்தின் நிலமும் தன்னுடையதென்றே கூறி அதற்கு வாடகையாகப் பணமும் காய்கறிகளும் பெற்று வந்தான். ஆண்டுக்கொரு முறை அவன் வாடகைப் பணம் வாங்க மலையை விட்டுக் கிழே இறங்கி வருவான். அவன் மிகப் பெரியவனாகவும், வலிமை வாய்ந்தவனாகவும், பொல்லாதவனாகவும் இருந்த படியால், அவன் கேட்பதைக் கொடுப்பதைத் தவிர தோட்டக்காரனுக்கு வேறு வழி தெரியவில்லை. தன்னுடைய வரும்படி தனக்கும் தன் மனைவிக்கும் தன் ஏழு குழந்தைகளுக்கும் போதுமானதாக இல்லாவிட்டாலும் கூட எப்படியோ ஆண்டுதோறும் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்து அந்த அரக்கனுக்கு வாடகை கட்டி வந்தான் சமயோசிதம்.

ஆனால், ஒரு வருடம் மழை பொய்த்து விட்டது. கிணறு குளம் எல்லாம் தண்ணீர் வற்றித் துர்ந்து போய்விட்டன. தோட்டத்திற்குத் தூரத்தில் இருந்த ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்ற கஷ்டப்பட்டு சமயோசிதம் தண்ணீர் துக்கி வந்த போதிலும் முன்னைப் போல காய்கறிகள் அதிகம் காய்க்கவில்லை. ஏதோ கிடைத்ததைக் கொண்டு அவர்கள் அரைவயிறும் குறை வயிறுமாகக் கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு வந்தார்கள். வயிற்றுக்கே உணவு போதாதபோது அவர்கள் வாடகை எப்படிக் கொடுக்க முடியும்? ஆகவே அவர்கள் அந்த ஆண்டு முடிவில் அரக்கனுடைய வருகையை அச்சத்தோடும், பீதியோடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வழக்கமாக அரக்கன் பெருந்தலைப் பிரசண்டன் வாடகை வசூல் பண்ண வருகின்ற மாதம் நெருங்கிய உடன், அவன் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும்படி தன் ஏழு குழந்தைகளையும் ஒரு நாளைக்கொருவர் தம் மலைப் பாதைப் பக்கம் காவல் வைத்திருந்தான் சமயோசிதம். ஒரு நாள் மாலை சமயோசிதமும் அவன் மனைவி மக்களும் அப்போதுதான் காய்ச்சி வைத்திருந்த கஞ்சியைக் குடித்து முடிந்திருந்தார்கள். அன்று காவல் பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய இரண்டாவது மகன் அப்போது திடீரென்று கூச்சலிட்டுக் கொண்டு ஒடி வந்தான். "அப்பா, அப்பா! அரக்கன் மலையில் இருந்து இறங்கி வருகிறான் கையில் தண்டாயுதத்தோடு அவன் வந்து கொண்டிருக்கிறான்!” என்று கூவி க் கொண்டே ஓடி வந்தான்.

"சிக்கிரம் சிக்கிரம் சிறிதும் தாமதிக்காமல் எல்லோரும் புறப்படுங்கள்!” என்று சொல்லி சமயோசிதம் தன் மனைவியையும் பிள்ளைகளையும் வீட்டுக்குப் பின்னால் இருந்த வைக்கோல் போருக்கு சென்றான். வைக்கோல் போரின் அடியில் எல்லோரையும் ஒளிந்து கொள்ளச் சொன்னான். அவர்கள் எல்லோரும் சரியாக நுழைந்து விட்டார்களா என்று எண்ணிக் கொண்டான். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆனவுடன் சமயோசிதமும் ஒன்பதாவதாக நுழைந்து கொண்டு வெளியில் மேலும் கொஞ்சம் வைக்கோலை இழுத்து விட்டு வழி தெரியாமல் மறைத்து விட்டான். அங்கே அவர்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டு அரக்கன் வந்து போவதற்காகக் காத்திருந்தார்கள்.

மலையிலிருந்து அரக்கன் பிரசண்டன் இறங்கி வந்தான். தோட்டக்காரன் வீட்டைத் தட்டிப் பார்த்தான். பதிலில்லை. தன் கையிலிருந்த தண்டாயுதத்தால் கதவை இடித்தான். பலனில்லை. வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அதன் பிறகு தான் வீடு வெளியில் பூட்டியிருப்பதைக் கவனித்தான். அரக்கனுக்கு ஒரே கோபமாக வந்தது. "நாளை வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று கத்தி விட்டுத் திரும்பினான்.

திரும்பிப் போகும்போது, தோட்டக்காரனுடைய பிள்ளை குட்டிகள் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று அரக்கன் சுற்றுமுற்றும் நோக்கினான். மாட்டுக் கொட்டகையில் கட்டிக் கிடந்த பசு மாட்டைத் தவிர வேறு ஒர் உயிர்ப் பிராணியைக் கூட அவன் காண முடியவில்லை. தனக்கு வந்த கோபத்தில் அவன் தன் தண்டாயுதத்தால் ஓங்கி அந்தப் பசு மாட்டின் மண்டையிலே ஒர் அடி அடித்தான். அந்த ஒரே அடியில் பசு மாடு செத்துக் கீழே விழுந்து விட்டது. பிறகு அவன் தன் கோட்டைக்குத் திரும்பிச் சென்றான்.

அவன் போய்விட்டான், இனித் தைரியமாக வெளி வரலாம் என்று தோன்றியதும், தோட்டக்காரன் சமயோசிதமும், குடும்பத்தினரும், வைக்கோல் போரின் அடியிலிருந்து வெளிப்ப்ட்டார்கள். இருமிக் கொண்டும், தும்மிக் கொண்டும், அரிக்கும் உடலைச் சொரிந்து கொண்டும், தூசியைத் தட்டிக் கொண்டும் அவர்கள் வெளியில் வந்தபோது அதுவரை அமைதியாக இருந்த அந்தத் தோட்டம் திடீரென்று உயிர் பெற்று விட்டது போல் இருந்தது.

முதலில் அவர்கள் தாங்கள் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொண்டு விட்டதாக எண்ணி மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால், பசுமாடு செத்துக் கிடந்ததைப் பார்த்த பிறகு அவர்கள் மகிழ்ச்சியெல்லாம் துயரமாக மாறிவிட்டது. அந்தப் பசுமாடு அவர்களைப் பலவகையிலும் காப்பாற்றி வந்த தெய்வமாக விளங்கியது. அது செத்துப் போனதை எண்ணித் தோட்டக்காரன் மனைவி ஆவுடையாள் விம்மி விம்மி அழுதாள்.

“கொட்டிப் போன பாலுக்காக கட்டி அழுது கொண்டிருந்தால் என்ன பயனுண்டு? அழுவதை நிறுத்தி விட்டு ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்கலாம் வா! நான் அந்த மாட்டின் தோலை உரித்தெடுக்கிறேன். அதைச் சந்தையில் கொண்டு போய் விற்றால் ஒன்று அல்லது இரண்டு ரூபாய் கிடைக்கும். அதன் சன்தயை நீ கரியாகச் சன்மத்து வை. இரண்டு நாளைக்காவது சாப்பாட்டுக்கு ஆகும்” என்று சொன்னான் சமயோ சிதம். அவன் சொன்னபடியே செத்துப் போன மாட்டின் தோலை உரித்துக் காயவைத்தான். கறியை வெட்டித் துண்டு துண்டாக்கித் தன் மனைவியிடம் கொடுத்தான். அதன் குடல் பை ஒன்றிலே அதன் இரத்தத்தைப் பிடித்து நிரப்பி வைத்தான். பிறகு இருட்டு வந்தவுடன் எல்லோரும் பேசாமல் படுத்துத் தூங்கிவிட்டார்கள்.

பக்கத்தூர்ச் சந்தையில் போய் அந்த மாட்டுத் தோலை விற்று விட்டு வருவதற்காக நள்ளிரவிலே வீட்டை விட்டுப் புறப்பட்டான் சமயோசிதம். தோளில் மாட்டுத் தோலைப் போட்டுக் கொண்டு இருட்டிலே அவன் போய்க் கொண்டேயிருந்தபோது, பின்னால் யாராரோ விரைந்து நடந்து வரும் ஒசையும் பேச்சுக் குரலும் அவன் காதில் விழுந்தன. அவர்கள் திருடர்களாக இருக்கக் கூடும் என்று பயந்து அவன் பக்கத்தில் இருந்த மரம் ஒன்றிலே ஏறி உட்கார்ந்து அந்தமாட்டுத் தோலைக் கொண்டு தன் உடலைப் போர்த்திக் கொண்டான். அவர்கள் தன்னைக் கடந்து போன பின் கீழே இறங்கலாம் என்று அவன் எண்ணியிருந்தான்.

ஆனால் அவன் மறைந்திருந்த மரத்தின் அடியிலேயே அவர்கள் வந்து கூடினார்கள். அங்கு கூடிய நான்கு பேரும் நான்கு சாக்குப் பைகளிலே ஏதோ கொண்டு வந்து தரையில் கொட்டினார்கள். பிறகு ஒருவன் கையில் கொண்டு வந்திருந்த லாந்தர் விளக்கை ஏற்றினான். கீழே கொட்டிய தங்க நாணயங்கள் முழுக்க அந்த ளக்கு வெளிச்சத்தில் மின்னின. அவர்கள் அந்த நாணயங்களைத் தங்களுக்குள் பங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் திருடர்கள் தாம் என்று உறுதியாகத் தெரிந்தவுடனே சமயோசிதத்தின் உடலெல்லாம் வெட வெட வென்று நடுங்கியது. அந்த நடுக்கத்தில் மரக் கிளையாடி இலைகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, பயங்கரமான சலசலப்பை உண்டாக்கின. அவன் பற்களும் கிடுகிடுவென்று தந்தியடித்தன.

இந்த ஒசைகளைக் கேட்ட திருடர்கள் மேலே நிமிர்ந்து பார்த்தார்கள். அவர்களிலே ஒருவன் "யார் அது?’ என்று சத்தம் போட்டான். உடனே, பீதியை அடக்கமாட்டாமல் சமயோசிதம் "ஊய்" என்று கூச்சலிட்டு விட்டான். அப்போது அவன் போர்த்தியிருந்த மாட்டுத் தோல் நழுவி க் கிழே திருடர்களின் மேல் விழுந்தது “ஊய்” என்ற பயங்கரமான சத்தத்தையும் இரண்டு கொம்புடன் கறுப்பாகத் தங்கள் மேல் விழுந்த அந்த கரிய பொருளையும் கண்ட திருடர்கள் ஏதோ பூதம்தான் தங்களை அமுக்க வருகிறதென்று எண்ணிப் பயந்து, அலறியடித்துக் கொண்டு தாங்கள் கொள்ளையடித்துக் கொண்டு வந்த பொருளை விட்டு விட்டு அங்கிருந்து பாய்ந்தோடினார்கள்.

அவர்கள் போய் நெடு நேரத்திற்குப் பிறகு ஒருவாறு பயம் தெளிந்து சமயோசிதம் கிழே இறங்கி வந்தான். கிழே கொட்டிக் கிடந்த தங்க நாணயங்களை யெல்லாம் சாக்குப் பைகளில் அள்ளிப் போட்டு நிரப்பினான். பிறகு அவற்றை மாட்டுத் தோலில் வைத்து மூட்டையாகக் கட்டி அதை கொண்டு தன் வீட்டுக்குப் பேர்னான். கவும் கனமாக இருந்த அதைப் பெரும் பாடுபட்டு இழுத்துச் சென்று வீட்டில் சேர்த்தவுடன், தன் மனைவியை எழுப்பித் தங்க நாயனங்களைத் தன்னுடன் கூட இருந்து எண்ணும்படிச் சொன்னான். மறுநாள் பகல் வரையிலே அவர்கள் உட்கார்ந்து எண்ணியும் தங்க நாணயங்களில் பாதியளவு கூட எண்ணி முடிக்கவில்லை.

“நம்மிடம் படியிருந்தால் எளிதாக அளந்து இத்தனை படியென்று கணக்குச் செய்து விடலாம்” என்று தோட்டக்காரன் மனைவி சொன்னாள்.

"அந்த அரக்கனிடம் அளவுப்படி நிச்சயம் இருக்கும். அவனுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் இருந்தும் அவன் நம்மை வாடகை கொடு என்று சொல்லி வாட்டி வதைக்கிறான்.” என்று சொல்லிக் கொண்டிருந்த சமயோசிதத்துக்குத் திடீர் என்று ஒரு யோசனை தோன்றியது. அவனும் அவன் மனைவியும் காதுக்குள் சிறிது நேரம் குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள்.

அதன்பின் தோட்டக்காரன் மனைவி நல்ல சேலையொன்றைக் கட்டிக்கொண்டு அரக்கனுடைய மாளிகைக்குச் சென்றாள். சமையற்கட்டுப் பக்கம் இருந்த கதவை அவள் மெதுவாகத் தட்டினாள். அரக்கனுடைய வேலைக்காரன் வந்து கதவைத் திறந்தான். "ஐயா! கொஞ்ச நேரம் உங்கள் வீட்டு மரக்கால் படியைக் கொடுக்கிறாயா? என் கணவர் கொஞ்சம் பொன் கொண்டு வந்திருக்கிறார். அதை அளக்க எங்கள் வீட்டில் படி ஒன்றும் இல்லை” என்றாள் தோட்டக்காரன் மனைவி ஆவுடையாள்.

வேலைக்காரன் அவளை வியப்போடு நோக்கினான். "பொன் அளக்கப் படி வேண்டுமா?" என்று நம்பிக்கையில்லாத குரலில் கேட்டான். பேச்சுக்குரலைக் கேட்டுவிட்டு அரக்கன் மனைவியான பெருவாய் பேச்சி அங்கே வந்தாள்.

தோட்டக்காரன் மனைவியைப் பார்த்தவுடன் அந்த அரக்கி, "உனக்கென்னடி தைரியம்? இந்த வருடம் கொடுக்க வேண்டிய வாடகைப் பணத்தை உன் கணவன் இன்னும் கொடுக்கவில்லை. நீ எப்படி இங்கே இவ்வளவு துணிச்சலாக வந்து விட்டாய்? போ! போ” என்று விரட்டினாள்.

உடனே தோட்டக்காரன் மனைவி ஆவுடையாள் மிகவும் மரியாதையாக, அந்த அரக்கியின் முன் தலைவணங்கி, "அம்மா பெருவாய் பேச்சி! இனிமேல் பாக்கி வைக்கமாட்டோம். என் கணவருக்கு இப்போது கொஞ்சம் அதிர்ஷ்டம் வந்துவிட்டது. அவர் நிறையத் தங்கம் கொண்டு வந்திருக்கிறார். அவ்வளவு தங்கம் நீங்கள் கூட இதுவரை பார்த்திருக்கமாட்டீர்கள். அதை அளப்பதற்குப் படி வாங்குவதற்காகத் தான் நான் இங்கே வந்தேன். இப்போது உங்கள் வேலைக்காரரிடம் அதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்!” என்று சொன்னாள்.

"தங்கம் அளக்கப் படி வேண்டுமா? உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா?" என்று கேட்டாள் அரக்கி.

“எனக்கொன்றும் பைத்தியமில்லையம்மா! உண்மையைத் தான் சொல்கிறேன்” என்றாள் ஆவுடையாள்.

"மூடமே உளறாதே" என்று கூறினள் அரக்கி. அவளால் நம்பமுடியவில்லை.

அரக்கி, "இருக்காது" என்று கூற ஆவுடையாள், "உண்மைதான்" என்று கூற இப்படியாகப் பெண்கள் மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் போட்ட கூச்சலில் சரியாகத் துரங்கமுடியாத அரக்கன் பெருந்தலைப் பிரசண்டன் கோபத்தோடு உறுமிக் கொண்டே அங்கு எழுந்து வந்தான் . தோட்டக்காரன் மனைவியைக் கண்டவுடனே அவன் கடுமையான குரலில், “நீ தானா? சரி. உன் கனவனிடம் சொல்லி விடு. நாளைக்கு அவன் ஒழுங்காக வாடகைப் பணத்தை எண்ணிக் கொடுக்காவிட்டால் நான் சும்மா விடப்போவதில்லை.” என்று கண்டிப்பாகக் கூறினான்.

. ஆவுடையாள் அவன் முன்னால் மரியாதையாகத் தலை வணங்கி நின்று, 'ஐயா, பெருந்தலைப் பிரசண்டப் பெருமானே! தங்களுக்குரிய வாடகைப் பாக்கியைத் தவறாமல் கொடுத்துவிட்த் தான் என் கணவர் விரும்புகிறார். வேண்டுமானால் நீங்கள் இன்றே கூட வந்து வாங்கிக் கொள்ளலாம். அவருக்கு இப்போது கொஞ்சம் அதிர்ஷ்டம் வந்திருக்கிறது. எல்லாம் உங்கள் தயவால்தான். நீங்கள் மாட்டைக்கொல்லாமல் இருந்திருந்தால், அவர் அதன் தோலையுரித்தெடுத்துச் சந்தைக்கு விற்கக் கொண்டு போயிருக்கவும்மாட்டார். நான்கு சாக்குப் பை தங்கத்தோடு திரும்பி வந்திருக்கவும்மாட்டார். அதற்காகத் தங்களுக்கு நாங்கள் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறோம்! இப்பொழுது அவ்வளவு பொற்காசுகளையும் அளக்க எங்களிடம் எதுவும் இல்லை. அதற்காகத் தான் உங்களிடமிருந்து படி வாங்கிக் கொண்டு போகலாம் என்று வந்தேன்” என்றாள்.

அவள் சொல்லுவதெல்லாம் மொட்டைப் பொய் என்று சொல்லிச் சுமார் ஐந்து நிமிடம் வரை அரக்கன் அவளைத் திட்டினான். கடைசியில் ஒருவாறு தணிந்து, 'சரி, வா! நானே நேரில் வந்து பார்க்கிறேன்!” என்று சொல்லிப் புறப்பட்டான்.

அரக்கன் மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது அவனுடன் கூடவே வருவதற்காக உடல் குலுங்கக் குலுங்க ஓடி வந்தாள் தோட்டக்காரன் மனைவி . தோட்டக்கார்ன் வீட்டில் அவன் தங்கநாணயக் குவியலின் மத்தியிலே உட்கார்ந்து கொண்டிருப்பதை நேரில் பார்த்த அரக்கன் ஆச்சரியத்தால் வாய்பிளந்து நின்று கொண்டிருந்தான். அவன் ஆச்சரியம் சிறிது தணிந்து பேசக்கூடிய நிலை வந்தவுடன், "இவ்வளவு பொன்னும் நீ கொண்டு போன ஒரு மாட்டுத் தோலுக்காக்வா கிடைத்தது? இது உண்மைதானா?” என்று கேட்டான்.

"உண்மைதான் பெருந்தலைப் பிரசண்டரே! இதோ பாரும் நான்கு சாக்குப் பைகள்!” என்று தலை நிமிர்ந்து பதில் கூறினான் சமயோசிதம்.

“சரி, நான் வருகிறேன்!” என்று அரக்கன் சொல்லிவிட்டு வாடகைப் பணம் கூடக் கேட்காமல் அவசரமாகத் திரும்பிச் சென்றான். தங்கள் தந்திரம் பலித்ததென்று சமயோசிதமும் அவன் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்து வாய்கிழியச் சிரித்தார்கள்.

அரக்கனுக்குச் சொந்தமான பசுக்கள் மொத்தம் நாற்பது இருந்தன. அவை அனைத்தும் மலையின் மறு சரிவில், மேயவிடப்பட்டிருந்தன. நாற்பது பசுக்களுக்கும் எவ்வளவு சாக்குப் பொன் கிடைக்கும் என்று நடந்து செல்லும் போதே கூட்டிப் பார்த்துக் கொண்டான் அரக்கன். நான்கு நான்காக நாற்பது தடவையும் கூட்டிய பிறகு நூற்று அறுபது சாக்கு கணக்கு வந்தது. உடனே அவன் ஒட்டமும் நடையுமாகத் தன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான். தன் வேலைக்காரனைக் கூவியழைத்தான். "போ போ! உடனே போ! என் பசுக்கள் எல்லாவற்றையும் கொன்று தோலையுரித்து எடு! அந்தத் தோலையெல்லாம் பக்கத்து ஊர் சந்தைக்குக் கொண்டு போ. ஒரு தோலுக்கு நான்கு சாக்குத் தங்கம் வீதம் விற்றுக் கொண்டு வா. உடனே தாமதிக்காமல் இன்றே சந்தைக்குப் போய்விடு. நீ தாமதித்தால் மாட்டுத்தோல் விலை இறங்கி விடக்கூடும். போ! போ! சிக்கிரம் போ!' என்று வேலைக்காரனை ஏவினான். .

கட்டளையிட்டபடியே வேலைக்காரன் நடந்தான். ஆனால் அவன் சந்தைக்குப் போய் மாட்டுத் தோலை வைத்துக் கொண்டு விலை கூறியபோது எல்லோரும் அவனைப் பார்த்துக் கேலி செய்து சிரித்தார்கள். அதுதான் மாட்டுத் தோலுக்கு அப்போது உள்ள விலைவாசி என்று வாதாடினான். ஆனால் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று எல்லோரும் பரிகாசம் பண்ணினார்கள். கடைசியில் அவன் மாட்டுத் தோல் ஒன்று ஒரு ரூபாய் வீதம் விற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தான்! மாளிகையில் அவனுக்கு எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைத்திருக்கும் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ளலாம். 

கிழே தோட்டக்காரன் வீட்டில் எல்லோரும் சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். குழம்பு அப்போது தான் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயம் அரக்கன் வருகிறானா என்று காவல் காத்துக் கொண்டிருந்த பெரிய பெண் "அப்பா! அப்பா அரக்கன் மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருக்கிறான்!" என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள்.

இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயோசிதம் "சிக்கிரம் சிக்கிரம்! இந்தச் சட்டியை வெளியில் துக்கிச் செல்ல வேண்டும். கூட ஒரு கை பிடி" என்று தன் மனைவி யிடம் கூறினான்.

அவன் மனைவி ஆவுடையாளும் அவனும் கந்தைகளை வைத்துப் பிடித்துக் கொண்டு குழம்புச் சட்டியை வெளியில் இருந்த புல் தரையில் கொண்டுவந்து வைத்தார்கள். பிறகு சமயோசிதம் ஒரு சவுக்கை எடுத்துக் கொண்டு, அந்தக் குழம்புச் சட்டியை ஓங்கி ஓங்கி அடித்தான். "சட்டியே, சிக்கிரம், சிக்கிரம்! நாங்கள் பசியோடு காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறிக் கொண்டே அதை ஓங்கி ஓங்கி அடித்தான்.

அப்போது அரக்கன் தன் தண்டாயுதத்தை ஓங்கிக் கொண்டே, "புரட்டுக்காரத் திருட்டுப் பயலே இரு, இரு! இதோ உன்னை என்ன சேதியென்று விசாரிக்கிறேன்" என்று கூவியபடி நெருங்கினான். ஆனால் சமயோசிதம் அவனை கவனிக்காமல், சட்டியை ஓங்கி ஓங்கிச் சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட அரக்கன் பெருந்தலைப் பிரசண்டன், வியப்பினால் செத்த பிணம்போல் நின்று விட்டான். "தோட்டக்காரா! என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?" என்று கேட்டான்.

அரக்கன் குரலைக் கேட்டதும் ஆச்சரியமடைந்தவன் போல் தலை நிமிர்ந்து பார்த்த சமயோசிதம், "ஐயா! சாப்பாட்டிற்காக குழம்பு வைத்துக் கொண்டிருக்கிறேன், இப்போதுதான் ஒரு கொதி வந்திருக்கிறது!" என்றான்.

"முட்டாளே! அடுப்பில்லாமல், நெருப்பில்லாமல் புல்தரையின் மீது வைத்துக் கொண்டு எப்படி குழம்பு வைப்பாய்?" என்று உறுமினான் அரக்கன்.

"ஐயா! உங்களுக்கு விஷயம் தெரியாது. இது ஒரு மாயச் சட்டி. இது நெருப்பில்லாமலே எதையும் சமைக்கக் கூடியது. ஒன்றிரண்டு நிமிடங்கள் இதைச் சவுக்கினால் அடித்தால் போதும். உடனே, கொதி வந்து உள்ளேயிருக்கும் பொருள் வெந்து சமையலாகி விடும்" என்றான் தோட்டக்காரன்.

"பொய்! பொய்! வடிகட்டின பொய்!” என்று சொல்லிக் கொண்டே நெருங்கி வந்து குழம்புச் சட்டியை நோக்கினான் அரக்கன். அப்போதுதான் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த சட்டியாகையால், அதில் இருந்த குழம்பு தளதளவென்று கொதித்துக் கொண்டிருந்தது. கறியின் வாசனையோடு ஆவி வந்து கொண்டிருந்தது! அரக்கனுக்குத்தான் இன்னும் சாப்பாடு முடிக்கவில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது: "நான் இந்தச் சட்டியைக் கொண்டு போகிறேன். எனக்கு இது மிகவும் பயனுள்ளதாயிருக்கும்" என்று சொன்னான் அரக்கன்.

"ஐயா, விறகு விலை அநியாயமாயிருக்கிறது. என் சட்டியை விட்டுவிட்டு நான் என்ன செய்வேன்?” என்று வருத்தப்படுபவன் போல் நடித்தான் சமயோசிதம்.

"சமைக்காமலே சாப்பிடு!” என்று அரக்கன் அகங்காரத்தோடு கூறிவிட்டு அருகில் கிடந்த கந்தையை எடுத்துக் கொதிக்கின்ற அந்தச் சட்டியைக்குழம்போடு சேர்த்துத் தூக்கிக் கொண்டு மலை மேலிருந்த தன் மாளிகைக்குச் சென்றான். அவன் தலை மறைந்தவுடன் சமயோசிதமும் அவன் குடும்பத்தினரும் விலா நோகச் சிரித்தார்கள்.

அரக்கன் தன் மாளிகைக்குப் போய்ச் சேரும் சமயம், சட்டி சூடு தணிந்து விட்டது. எத்தனை முறை சவுக்கால் அடித்தும் அது திரும்பக் கொதிக்கவில்லை. அரக்கனுடைய மடத்தனத்தைக் கண்டு அவனுடைய வேலைக்காரன் வாய்க்குள் சிரித்துக் கொண்டான். அரக்கி பெருவாய் பேச்சியோ வெளிப்படையாகவே அவனை, “முட்டாள்! முட்டாள்!" என்று புத்தி வரும் படியாகத் திட்டினாள். குழம்புச் சட்டியைச் சவுக்கால் அடித்து அடித்து அரக்கனுடைய கை வலித்துவிட்டது. கடைசியில் அவன் ஆத்திரத்தோடும் கோபத்தோடும், "இருக்கட்டும். நாளைக்கு அந்தத் தோட்டக்காரப் பயலை என்ன பாடுபடுத்துகிறேன் பார்! அவன் இந்த உலகத்தில் பிறந்ததே தப்பு என்று நினைக்கும்படியாகச் செய்து விடுகிறேன்” என்று வஞ்சினம் கூறினான். -

மறுநாள் அதிகாலையில் மலைப்பக்கம் காவல் இருந்த சழயோசிதத்தின் பெரிய பையன் ஓடிவந்து பொரும் பீதியோடு "அப்பா! அப்பா அரக்கன் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று கூவினான்.

எப்படியும் அரக்கன் திரும்பி விடுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயோசிதம், செத்துப்போன பசு மாட்டின் இரத்தத்தை நிரப்பி வைத்திருந்த குடல் பையை எடுத்துத் தன் மனைவி யின் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டான். பிறகு சேலை முந்தானையால் அதை மூடி மறைத்துக் கொள்ளச் செய்தான். 

"இப்போது நீ சரியாக நாடகம் ஆட வேண்டும்!” என்று அவளை எச்சரித்து வைத்தான் சமயோசிதம். ஆவுடையாளும் சரி என்றாள்.

கோபமாக உறுமித் திட்டிக் கொண்டே அரக்கன் தோட்டத்திற்குள் நுழைந்தவுடனேயே, வீட்டிற்குள் தோட்டக்காரனும் அவன் மனைவியும் ஒருவரை யொருவர் வைது கொள்ள ஆரம்பித்தார்கள். "துப்புக் கெட்ட்வளே! சீர்கெட்டவளே! துடைப்பக்கட்டையே!” என்று திட்டினான் சமயோசிதம்.

'குடிகாரனே! அறிவு கெட்டவனே! உபயோகமற்றவனே!” என்று வசைபாடினாள் அவன் மனைவி. அதோடு நில்லாமல் ஒரு மரக்கம்பை எடுத்துக் கொண்டு அவனை அடிக்கப் போனாள் மனைவி. -

அரக்கனுடைய கூப்பாட்டையும் அடக்கும்படியான கூச்சல் போட்டு கணவன் மனைவி இருவரும் சச்சரவிட்டுக் கொண்டிருந்தார்கள். கோபமாக வந்த அரக்கன், என்றும் அடித்துக் கொள்ளாத தம்பதிகள் அன்று அப்படி ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கதவோரமாக நின்று கொண்டே கவனித்தான். திடீரென்று சமயோசிதம் ஒரு பெரிய கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு தன் மனைவியின் நெஞ்சிலே குத்தினான். அந்தக் கத்தி நெஞ்சுக்கு நேரேயிருந்த பசு மாட்டு இரத்தம் அடங்கிய குடல் பையைக் குத்திக் கிழித்ததால், இரத்தம் பீறிட்டுக் கொண்டு விழிந்தது. தோட்டக்காரன் மனைவி பயங்கரமாக அலறிக்கொண்டு செத்தவள் போல் கீழே விழுந்து விட்டாள். பிறகு அவள் உடல் அசையவேயில்லை. பேச்சு மூச்சில்லாமல் பிணம்போல் கிடந்தாள்.

"பாவி! கொலைகாரா! முதலில் உன்னுடைய தந்திரத்தால் நான் அருமையாக வளர்த்த பசுக்களையெல்லாம் கொல்லும்படிச் செய்தாய். இப்போது என் கண்முன்னாலேயே உன் மனைவியைக் கொலை செய்து விட்டாய். மறுபடியும் நீ இந்தப் பாதகச் செயல்களைச் செய்யாமல் இருக்க உன்னைத் துரக்கு மரத்தில் தான் கட்டித் தொங்கவிட வேண்டும்" என்று அரக்கன் கூவிக் கொண்டே வீட்டின் உள்ளே வந்தான்.

அப்போதுதான் அரக்கன் வந்ததைக் கவனித்தது போல, சமயோசிதம், "ஐயா, அரக்கரே, வாருங்கள்! வணக்கம்! என் மனைவியைப் பற்றி நீங்கள் கவலைப்படவே வேண்டாம். ஏனென்றால் இது அடிக்கடி நடக்கக் கூடிய காரியம்தான். நான் கொஞ்சம் முன் கோபக்காரன் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே! கோபத்தில் இப்படித் தான் அவளை நான் கத்தியால் குத்தி விடுவேன். ஆனால், அவளுக்கு அதனால் ஒன்றும் கெடுதல் இல்லை. ஏனென்றால் என்னிடம் இருக்கும் இந்த மாயத்துருத்தி மிகவும் உபயோகமாயிருக்கிறது” என்று சொல்லி அடுப்படியில் இருந்த துருத்தியை எடுத்துவந்தான். அதைத் தன் மனைவியின் மூக்குத் துவாரத்தில் வைத்து மெல்ல மெல்ல ஊதினான். சிறிது நேரத்திற்குப்பின் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள் மனைவி . அவள் அப்போதுதான் அரக்கனைக் கண்டது போல, "ஐயா, இப்படிப் பட்ட நேரத்திலா நீங்கள் இங்கு வரவேண்டும்? எங்களுக்குள் சண்டை நேர்ந்து இவர் என்னைக் கொல்லும் சமயத்திலா நீங்கள் வந்து சேர வேண்டும்? இப்படிப்பட்ட கண்ணராவிக் காட்சியையா நீங்கள் பார்க்க வேண்டும்?” என்று கேட்டாள்.

அரக்கன் அவளுடைய அங்கலாய்ப்பை யெல்லாம் சிறிதும் கவனிக்கவில்லை. அவன் பார்வை முழுவதும் தோட்டக்காரன் கையிலிருந்த துருத்தியின் மீதே பதிந்திருந்தது. "அந்தத் துருத்தி எனக்குப் கூடும். அதைக் கொடுத்துவிடு" என்று கேட்டான் அரக்கன்.

"ஐயா மறுபடியும் என் மனைவியைக் கொன்ற பிறகு என்ன செய்வது?’ என்று கேட்டான் சமயோசிதம்.

"புதைத்துவிடு!" என்று சொல்லிவிட்டு அரக்கன் அந்தத் துருத்தியைப் பறித்துக் கொண்டு தன் மாளிகைக்குத் திரும்பினான். சமயோசிதமும் அவன் குடும்பத்தாரும் இடுப்பு வலிக்கச் சிரித்தார்கள்.

மாளிகைக்கு வந்த அரக்கனை அவன் மனைவி பெருவாய்ப் பேச்சி, வாசலிலேயே சந்தித்தாள். "அந்தத் தோட்டக்காரனிடம் உங்கள் ஆத்திரத்தைத் திர்த்துக் கொண்டாயா?" என்று அவள் கேட்டாள்.

"நான் ஆத்திரத்தையே மறந்து விட்டேன். ஆனால் என் அருமை அரக்கியே! இதோ பார் ஓர் அருமையான பொருளைக் கொண்டு வந்திருக்கிறேன். இது ஒரு மாயத்துருத்தி. இறந்தவர்களைத் திரும்பவும் மூச்சுவிடச் செய்யும் இந்த அதிசயத் துருத்தி!” என்று பெருமையுடன் சொன்னான் அரக்கன்.

"ஐயோ! மறுபடியும் அந்தத் தோட்டக்காரன் உன்னை ஏமாற்றி விட்டானா? இந்த உலகத்திலேயே உன்னைக் காட்டிலும் பெரிய முட்டாள் யாரும் இருக்கமாட்டார்கள் போலிருக்கிறதே!" என்று அரக்கி பெருவாய்ப் பேச்சி பெரிதாகப் பேச ஆரம்பித்தாள். அரக்கன் அவளை இடைமறித்துப் பேச முயன்றான். ஆனால், அவள் இடைவிடாமல் அவன் ஏமாந்து போனதைக் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசும்போது அரக்கன் குறுக்கே பேச முயன்றபோதெல்லாம் இப்படித்தான் தோல்வி காண்பது வழக்கம். இந்த வழக்கத்தை மாற்ற அவளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று அரக்கன் எண்ணினான்.

உடனே அவன் ஒரு கத்தியை எடுத்து அவளுடைய குரல்வளையை இரண்டு பக்கமும் காதுவரை கிழித்து விட்டான். அவள் இந்த நிலையில் இறந்து போனாள். அவளுக்கு நன்றாகப் புத்தி வரவேண்டும் என்பதற்காக மத்தியானம் வரையில் அவளைச் செத்த நிலையிலேயே வைத்திருந்து பிறகுதான் உயிர்ப்பிக்க வேண்டும் என்று அரக்கன் நினைத்திருந்தான்.

மத்தியானம் வந்தது! அவனுக்கு வயிற்றுப்பசியும் எடுத்தது. மனைவியை உயிர்ப்பித்துச் சோறு போடச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. தோட்டக்காரனிடம் பறித்துவந்த துருத்தியை எடுத்து அரக்கியின் மூக்கிலே பொருத்தி ஊது ஊது என்று ஊதினான். அவன் முகம் வீங்கிச் சிவக்கும்வரை ஊதினான். ஆனால் அரக்கி செத்தபடியேதான் கிடந்தாள்!

கடைசியில் அரக்கன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தான். தன் முட்டாள்தனத்தால் அருமை மனைவியை இழந்த துக்கம் தாங்காமல் தலைமயிரைப் பிய்த்துக் கொண்டு மாளிகை அதிரும்படியாகக் கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடினான். அவன் மனைவி அப்படி ஒன்றும் அழகியல்ல; அவன் அன்பை கவர்ந்தவளுமல்ல - அவள் ஒரு பெரிய வாயாடிதான். எப்போதும் அவளிடம் சச்சரவிட்டு வாயாடித்தனமாக ஏதாவது பேசிக் கொண்டுதான் இருப்பாள். ஆனால், சுவை சுவையாக உணவு சமைப்பதிலே பெரிய கெட்டிக்காரி! அவனுடைய வேலைக்காரனுக்கோ உளுந்துக்கும் கடுகுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆகவே தான் அரக்கன் தன் மனைவியை இழந்தது பற்றி அவ்வளவு துாரம் வருந்தினான். 

மலையடிவாரத்தில், தோட்டக்காரன் சமயோசிதம் அப்போதுதான் மத்தியானச் சாப்பாட்டை முடித்து விட்டு, அன்று அவன் மனைவி அவனுக்காக வைத்திருந்த பாயாசத்தை அருந்திக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அரக்கன் பிரசண்டனும் அவன் வேலைக்காரனும் ஆத்திரத்தோடு கிழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். இந்தச் சமயம் எல்லோருக்கும் கடைசியான நான்காவது பெண் குழந்தை மலைப் பக்கத்தைக் கவனித்துக் காவல் செய்து கொண்டிருந்தாள். அவள் அரக்கனும் அவனுடைய வேலைக்காரனும் இறங்கி வருவதைக் கண்டதும் பயந்து கிச்சுக்குரலில் கத்திக் கொண்டு வைக்கோல் போருக்குக் கீழே போய் மறைந்து கொண்டாள். அவளுடைய கிச்சுக்குரல் சமயோசிதத்தின் காதில் விழவில்லை.

ஆகவே, இந்தச் சமயம் யோசனை செய்வதற்கு நேரமும் வாய்ப்பும் இல்லாதவகையில் சமயோசிதம் அரக்கனிடம் மாட்டிக் கொண்டான். எப்போதும் அதிர்ஷ்டம் ஒருவனுக்கு துணையிருக்க முடியாது என்பது அப்போது மெய்யாகி விட்டது. அரக்கன் அப்படியே சமயோசிதத்தின் குடுமியைப் பிடித்துத் துாக்கி தன் வேலைக்காரன் திறந்து பிடித்துக் கொண்டிருந்த சாக்குக்குள் அவனைப் போட்டான். பிறகு வேலைக்காரன் சாக்குப் பையின் வாயைக் கட்டித் தன் தோள்மீது தூக்கிக் கொண்டான்.

சாக்குப் பைக்குள் இருந்த சமயோசிதத்தைத் தூக்கிக் கொண்டு அரக்கனும் அவனுடைய வேலைக்காரனும் ஆற்றுக்குப் போனார்கள். ஆறு இரண்டு மைல் துரத்தில் இருந்தது. அப்போது மத்தியான நேரமாக இருந்தபடியால் வெயிலும் அதிக வெப்பமாக இருந்தது. வழியில் ஒரு கள்ளுக்கடை தென்பட்டது. அந்தக் கள்ளுக்கடை வாசலுக்கு வந்தவுடன், அரக்கன் பிரசண்டன் சாக்கை இறக்கிக் கிழே வைக்கும் படி வேலைக்காரனுக்கு உத்தரவிட்டான். "எனக்குத் தாகமாக இருக்கிறது. நான் கொஞ்சம் கள்ளுக் குடித்து விட்டு வரவேண்டும். இன்று இந்தப் புரட்டுக்காரனைத் தீர்த்துக் கட்டப் போகிறோம். ஆகையால், உனக்கும் ஒரு மொந்தை கள் வாங்கித் தருகிறேன் வா" என்று அழைத்தான் அரக்கன்.

வேலைக்காரன் இதைக் கேட்டு பெருங்களிப்பு கொண்டு அரக்கன் பின்னாலேயே கள்ளுக் கடைக்குள் நுழைந்தான். கள்ளுக்கடை வாசலில் கட்டியிருந்த சாக்குக்குள்ளே சமயோசிதம் மட்டும் தனியாக இருந்தான்.

அவன் தன் மூச்சையெல்லாம் அடக்கி முண்டி முண்டிப் பார்த்தும் ஒன்றும் பலனில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் சாக்கு பலமாக கட்டப்பட்டிருந்தது. சமயோசிதம் தன் நம்பிக்கையை இழந்து விட்ட சமயத்தில் சாலையில் கழுதைகள் நடக்கின்ற சப்தம் கேட்டது. உண்மையில் பன்னிரண்டு கழுதைகளின் மேல் வியாபாரத்திற்குள்ள சரக்குகளை ஏற்றிக் கொண்டு அப்போது அந்த வழியாக ஒரு வியாபாரி சென்று கொண்டிருந்தான்.

"நண்பனே, என்னை அவிழ்த்து விடு; நல்ல நண்பனே! என்னை அவிழ்த்து விடு' என்று கூவினான் சமயோசிதம்!

வியாபாரி தன் கழுதைகளை நிறுத்திவிட்டு சாக்கு மூட்டையின் அருகே வந்து, "நான் எதற்காக உன்னை அவிழ்த்து விட வேண்டும்?” என்று கேட்டான்.

"எனக்குத் துன்பம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் உன் துணையை நாடுகிறேன். தயவுசெய்து என்னை அவிழ்த்து விடு” என்றான் சமயோசிதம். 

வியாபாரி சாக்கு மூட்டையின் மேல் தன் காலால் எட்டி உதைத்தான். "இந்தக் கழுதைகளைச் சந்தைக்கு ஓட்டிக் கொண்டு போய் எவ்வளவோ வியாபாரம் செய்ய வேண்டியிருக்கிறது. வழியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டுக் கிடப்பவர்களை யெல்லாம் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. வேறு யாரையாவது பார்த்துக் கொள்!" என்று சொல்லி தன் சவுக்கை ஓங்கி வீசிக் கொண்டு "ஹை, ஹை" என்று தன் கழுதைகளைச் செலுத்தத் தொடங்கினான்.

"நில்! நில்! போய்விடாதே நீ எனக்கு உதவி செய்யத்தான் வேண்டும். நானும் உன்னைப்போல் ஒரு வியாபாரிதான். ஒரு பெரிய பணக்காரன் என்னைத் தன் மாளிகைக்குத் தூக்கிக் கொண்டு போகிறான். அவனுடைய மகள் ஒரு வியாபாரியைத் தான் திருமணம் செய்து கொள்வேனென்று பிடிவாதம் செய்கிறாளாம். திருமணம் இன்றைக்கே நடக்கப் போகிறது. திருமணம் முடிந்ததும் தன் மகளுக்கு சீதனமாக பண்க்காரன் பாதிச் சொத்தை எழுதி வைக்கப் போகிறான். ஆனால் எனக்கென்னவோ பணக்காரனாக வாழ்வது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதோடு எனக்கு நல்ல மனைவி ஒருத்தியும் இருக்கிறாள்!" என்றான் சமயோசிதம்.

"இருந்தால் என்ன? உன்னைப் போன்ற நிலையில் நான் இருந்தால் இப்படி முட்டாள்தனமாக மறுக்கமாட்டேன்” என்று சொன்னான் வியாபாரி.

"அப்படியானால் நண்பனே, எனக்குப் பதிலாக நீ போகலாமே? போவது யாராக இருந்தாலும், அது ஒரு வியாபாரியாக இருந்தால் போதும் அந்தப் பெண்ணுக்கு!" என்றான் சாக்கு மூட்டைக்குள்ளிருந்த சமயோசிதம்.

வியாபாரி சிறிது நேரம் யோசித்தான். சமயோசிதமோ அதே சமயம் இந்த விவகாரம் முடிவதற்குள் உள்ளே போன அரக்கன் திரும்பி வந்து விடக் கூடாதே என்று கடவுளை வேண்டிக் கொண்டான்.

சாக்கு மூட்டையை முடிந்து கட்டியிருந்த கயிற்றை வியாபாரி அவிழ்த்து விட்டான். சமயோசிதம் வெளியே வந்ததும் சாக்குக்குள்ளே வியாபாரி நுழைந்து கொண்டு, "இதோ பார்! என் கழுதைகளை இங்கேயே பக்கத்தில் ஒரு மரத்தடியில் நிறுத்தி வைத்து என் சரக்குகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள். நான் போய் அந்தப் பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சீதனப் பணத்திற்கும் நிச்சயமான ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன். இங்கே நீ என் சரக்குகளை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டால் திரும்பி வந்ததும் உனக்கு மொந்தைக் கள் வாங்கித் தருகிறேன்" என்றான்.

"உன் சரக்குகளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். அதைப்பற்றிச் சிறிதும் பயப்பட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அந்த வியாபாரியைச் சாக்கு மூட்டைக்குள்ளே வைத்து நன்றாக இறுக்கிக் கட்டிவிட்டான் சமயோசிதம். பிறகு அவன் சவுக்கை எடுத்துக் கொண்டு கழுதைகளை வெகு வேகமாக அடித்து விரட்டிக் கொண்டு புறப்பட்டான். அவன் சாலை முனையில் திரும்பிய சமயத்தில் உள்ளே கள்ளுக்குடிக்கப் போன அரக்கனும், வேலைக்காரனும் திரும்பி வந்தார்கள். சாக்கு மூட்டையைத் துக்கிக் கொண்டுபோய் ஆற்றிலே போட்டார்கள்.

அரக்கன் மிகுந்த ஆனந்தத்தோடு, “அந்தப் புரட்டுக்காரப் பயல் ஒழிந்தான்! இப்போதுதான் எனக்கு மன அமைதி ஏற்பட்டது. சரி வா! திரும்புவோம்” என்று சொன்னான். ஆனால் சம்பந்தமில்லாத யாரோ ஒரு வியாபாரி உயிரை இழந்தான் என்ற விஷயம் அவனுக்குத் தெரியாது! 

சமயோசிதம் கழுதைகளை ஒட்டிக் கொண்டு சந்தைக்கு வந்தான். வசதியான ஒர் இடத்தைத் தேர்ந்து அந்த இடத்திலே கழுதைகளின் மேலிருந்த வியாபாரச் சரக்குகளைப் பரப்பி வைத்தான். அவையனைத்தும் வண்ணக் கண்ணாடித் துண்டுகள் இழைத்து வெள்ளியினால் செய்த மோதிரங்களும், மேகலைகளும், தலைச் சிட்டிகளும், வளையல்களும், பொத்தான்களுமாயிருந்தன. எல்லாம் நல்ல விலைக்குப் போயின. அவன் இவ்வாறு வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அவனுக்கு நன்றாகப் பழக்கப்பட்ட அரக்கனுடைய குரல் அவன் காதிலே பட்டது. அவன் பீதியோடு தலை நிமிர்ந்து பார்த்தான்.

அரக்கனும், அவனுடைய வேலைக்காரனும் எக்களிப்போடு, ஒருவரோடொருவர் கைகோர்த்துக் கொண்டு சந்தையினுள்டே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் குடிவெறியில் ஆடி ஆடி அசைந்தசைந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அரக்கன் தான் மிகவும் குடித்திருந்தான். அவன் தள்ளாடி விழப் போகும் போதெல்லாம் வேலைக்காரன் அவனைத் தாங்கிப் பிடித்து நிறுத்தினான். அரக்கன் எக்களிப்போடு பாடிக் கொண்டிருந்தான். இவ்வளவு ஆனந்தமான நிலையில் சமயோசிதம் அவனைப் பார்த்ததேயில்லை. அவன் கண்ணில் படாமல் தப்பிப்பதற்காகச் சமயோசிதம் ஒளிந்துக் கொள்ளக் கூடிய இடம் எங்காவது இருக்கிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஆனால், அவன் தகுந்த இடத்தைக் கண்டு பிடிப்பதற்குள் அரக்கன் அவன் கடை எதிரே வந்து, வியப்போடு வாயைப் பிளந்து கொண்டு நின்றான்.

நடுங்கிக் கொண்டிருந்த சமயோசிதத்தின் பக்கம் அரக்கன் பிரசண்டன் தன் கையை நீட்டி, "தோட்டக்காரா! ஆற்றின் அடியில் இருக்க வேண்டிய நீ இங்கே எப்படி வந்தாய்? நான் தானே சற்று முன் உன்னை ஆற்றில் போட்டு விட்டு வந்தேன்?" என்று கேட்டான்.

"ஆமாம்; பெருந்தலைப் பிரசண்டரே! நீங்கள் என்னை ஆற்றில் போட்டது உண்மைதான். அதற்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன். பார்த்திர்களா, நான் ஆற்றின் அடியில். கண்டெடுத்த பொருள்களை! இவ்வளவு வியாபாரப் பொருள்களும், இவற்றைச் சுமக்கப் பன்னிரண்டு கழுதைகளும் எனக்கு அங்கே கிடைத்தன” என்றான் சமயோசிதம்.

'நீ ஓர் அதிர்ஷ்டக்காரன் என்பதில் சந்தேகமேயில்லை. ஆற்றின் அடியில் இவ்வளவு பொருள்கள் தான் இருந்தனவா? இல்லை, இன்னும் இருக்கின்றனவா?" என்று கேட்டான் அரக்கன்.

'இன்னும் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. இவற்றைக் காட்டிலும் உயர்ந்த பொருள்கள் அவை. அத்தனையும் அசல்:வைரத்தினாலும் தங்கத்தினாலும் செய்யப்பட்டவை.ஆனால், என்னைப் போன்ற ஒர் ஏழைத் தோட்டக்காரன் அப்படிப்பட்டதங்கத்தையும் வைரத்தையும்-வியாபாரம் செய்யவந்தால் அது சந்தேகத்திற்கிடமாகக் கூடும். நான் அவற்றைத் திருடிக்கொண்டு வந்திருப்பதாக எண்ணி அரச காவலர்பிடித்துக் கொண்டு போனாலும் போய்விடலாம்.அதற்காகத் தான் இந்த சாதாரணப் பொருட்களைமட்டும் அள்ளிக் கொண்டு வந்தேன்!” என்றுவகையாகப் பொய் சொன்னான் சமயோசிதம்.

"ஆம் ஆம் நீ செய்தது புத்திசாலித்தனமான காரியம்தான்!” என்று சொன்ன அரக்கன் தன் வேலைக்காரனை இழுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பலானான். "ஏ மரமண்டையே திரும்பிவா. உன் குடிபோதையையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு வேகமாக நட. நாம் போவதற்கு முன் விஷயம் தெரிந்து எவனாவது ஆற்றுக்குப் போய் அந்தப் பொருள்களையெல்லாம் அள்ளிக் கொண்டு போய்விடப் போகிறான்!” என்று சொல்லி வெகு வேகமாக நடந்து சென்றான்.

அவர்கள் ஆற்றுக்குள் சாக்கு மூட்டையைப் போட்ட இடத்தில் அரக்கன் வந்து நின்றான். "கீழே போய்ப்பார்த்து, என்னென்ன இருக்கின்றன சொல்” என்றபடி அவன் வேலைக் காரனைத் தூக்கி ஆற்றுக்குள்ளே வீசியெறிந்தான். அந்த வேலைக்காரன் தண்ணீரில் மூழ்கி ஒரு முறை மேலே எழும்பினான். மூச்சுத் திணறிக் கொண்டு மேலே வந்த அவன் நீந்தத் தெரியாமல் திண்டாடினான். அரக்கனை உதவிக்கு வரும்படி கையைக் காட்டினான். "ஆ! நீ அருமையான வேலைக்காரன்தான் ! தங்கத்தைப் பார்த்து விட்டாயா? இரு, இரு. இதோ நானும் வருகிறேன்" என்று சொல்லி அரக்கன் பிரசண்டனும் ஆற்றுக்குள்ளே குதித்தான். அவனுக்கும் நீந்தத் தெரியாது. ஆகவே அவர்கள் இருவரும் அந்த ஆற்றை விட்டுக் கரையேறி மலைமேலிருந்த மாளிகைக்குத் திரும்பவேயில்லை!

சமயோசிதம் சந்தையில் வியாபாரம் செய்து கிடைத்த பண மூட்டைகளையும், விலை போகாத மீதிச் சரக்குகளையும் கழுதை மேல் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். விற்காத சரக்குகளை யெல்லாம் தன் மனைவி மக்களை அணிந்து கொள்ளச் சொல்லிக் கொடுத்தான். சில நாட்களுக்குப் பிறகு அரக்கன் பிரசண்டன் திரும்பி வரவில்லை என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு அவனுடைய மாளிகையிலேயே போய் ஆனந்தமாக வாழ்ந்து வரலானான்.