நூறாசிரியம்/இழி வறிந்துய்க

விக்கிமூலம் இலிருந்து

73 இழிவறிந் துய்க


ஊருண் கூவல் தூருண் மண்டி
நீரிழி பட்டென யாவருந் தொட்டுப்
புதுக்கல் நந்த உணல்யா மென்றியர்
ஒதுக்கலர் நிரப்பின் ஒப்புர வாரை!
பதுக்கற் றிருவார் படுதுயர் முடைசேர் 5
முதுநீர்த் தேக்கம் மூடுநர் ஆங்க
அழிமென் றழுங்கா ராகலின்
இழிவறிந் துய்க இறைத்துண வீந்தே!


பொழிப்பு

ஊர்மக்கள் குடிநீர் கொள்ளும் கிணற்றகத்தே கும்பியுங் கசடுகளும் மிக்கு நிறைந்து நீர் நலங்கெட்டது என்று ஊரார் யாவருங்கூடி அக்கிணற்றைத் தோண்டிப் புதுக்குதல் போல, ஒப்புரவாளர் வறுமைப்பட்ட விடத்து ஊரார் அவரையும் அழைத்து யாம் உண்போம் என்பர்; அவ்வாறன்றி அவரைப் புறக்கணித்து ஒதுக்குவாரல்லர். மற்று மிகுந்த துன்பத்தை செய்கின்ற தீய நாற்றம் வீசும் நெடுநாள் நீர் தேங்கி நிற்குங் குட்டையைத் தூர்த்து மூடுவாரைப் போலப் பதுக்கி வைத்த செல்வமுடையவர்கள் துன்பமுற்றவிடத்து அவர்தங் குடும்பம் அழிந்துவிடும் என்று வருந்துவாரல்லர். அதனால் செல்வத்தைப் பதுக்கி வைத்தலால் நேரும் இழிவினை யறிந்து யாவர்க்கும் வழங்கியும் உணவளித்தும் ஒப்புரவாற்றி உய்வு பெறுமின்!

விரிப்பு

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

யாவர்க்கும் உதவியுந் துணையுமாய் நிற்கும் ஒப்புரவாளர் வறுமையுற்றவிடத்தும் ஊரார் அவரைப் புறக்கணியாது தம்மோடு உளப்படுத்திக்கொண்டு அவரைப் போற்றிக் காப்பர் என்றும், யார்க்கும் பயன்படாது செல்வத்தைப் பதுக்கி வைத்திருப்போர் துன்பமுற்றவிடத்து அவர் தங்குடும்பத்தின் அழிவு கருதி எவரும் வருந்தார் என்றும் எடுத்துரைப்பதோடு செல்வத்தைப் பதுக்கி வைத்தலின் இழிநிலையை அறிந்துணர்ந்து யாவர்க்கும் வழங்கியும் உணவளித்தும் ஒப்புரவாற்றி அறநெறியில் வாழுமாறு உலக மக்களுக்கு அறிவுறுத்துவது இப் பாட்டு

சீர்கெட்ட காலையும் தூர்வாரிப் புதுக்கப்பெறும் குடிநீர்க் கிணறும், முடைநாற்றம் வீசுதலால் மூடித் தூர்க்கப் பெறும் முதுநீர்க் குட்டையும் இப்பாடலில் நிரலே ஒப்புரவாளர்க்கும் பதுக்கற் செல்வர்க்கும் உவமைகளாகச் சுட்டப்பட்டன.

ஊர் உண் கூவல் ஊருணி

ஊர்-ஊர்வாழ்மக்கள். பிற உயிரிகளும் பயன்கொள்ளுமேனும் மேனிலை நோக்கி மக்கள் எனப்பட்டது. இது யாவருந் தொட்டு’ என்பதனானும் அறியப்படும்.

உண்ணுதல் என்னும் பொதுவினையால் பருகுதல் மட்டுமின்றி அடுதலும் சுட்டப் பெற்றது.

கூவல்- கிணறு

தூர் உள் மண்டி நீர் இழிபட்டு என உள்ளே கும்பியும் கசடும் மிக்கு நிறைந்து நீர் நலங்கெட்டது என்று.

தூர்-கும்பியும் கசடும். கும்பியாவது நொதித்த சேறு.

மண்டுதல் -செறிவுற நிறைதல்,

யாவரும் தொட்டுப் புதுக்குதல் நந்த ஊர்மக்கள் யாவருங் கூடித் தூர்வாரிச் சீர்ப்படுத்துதல் போல,

தொட்டு தோண்டி புதுவதன்று ஆகலின் தோண்டுதல் துர்வாருதலைக் குறித்தது.

புதுக்கல்- பழுதுபட்டதனைச் சீர்ப்படுத்துதல்.

நந்த -உவமஉருபு

உணல் யாம் என்றியர்: யாம் பகிர்ந்து உண்போம் என்று கூறுவர்.

என்றியர் என்னியர் (77று கூறுநர்) என்பது என்றியர் என நின்றது.

நிரப்பின் ஒப்புரவாரை ஒதுக்கவர் ஒப்புரவாளர் வறுமையுற்றவிடத்து அவரைப் புறக்கணித்து ஒதுக்கி விடார்; போற்றிக் காப்பர்.

நிரப்பு:வறுமை , மங்கல வழக்கு

ஒப்புரவாரை ஒப்புரவாளரை ஒப்புரவாளராவார் உலக நடை யறிந்து பிறர்க்கு உதவிசெய்து வாழ்வோர்.

படுதுயர் முடைசேர் முதுநீர்-மூடுநர் ஆங்க

மிகுந்த துன்பத்தைச் செய்கின்ற தீயநாற்றம் வீசும் நெடுநாள் நீர் தேங்கி நிற்கும் குட்டையைத் துர்த்து மூடுவாரைப் போல

படுதுயர்-மிக்க துன்பம்

முடை -தீய நாற்றம்

பதுக்கல் திருவார் அழிம் என்று அழுங்கார்

யாருக்கும் பயன்படாமல் பதுக்கிவைத்திருக்கும் செல்வத்தையுடையாரது குடும்பம் மிக்க துன்பமுற்றவிடத்து அழிந்து விடும் என்று ஊரார் வருந்தார்; அழிய விடுவர்.

பதுக்கல் என்றமையால் பிறர் அறியாதவாறு கரந்து வைத்திருத்தலும், அது முறையான வழியில் ஈட்டப்படாமையும் கொள்ளப்படும்.

செல்வமிருந்தும் அவர் துன்புறுதல் அஃது அல்வழியில் ஈட்டப் பட்டமையான் எனக் கொள்க!

அழிம்-அழியும் எனற்பாலது செய்யுள் நோக்கித் தொக்கு நின்றது. செய்யும் என்னும் வாய்பாட்டு வினையாதலின் குடும்பம் என்பது வருவித் துரைக்கப்பட்டது. அல்லாக்கால் திருவார் அழியும் என்பது பொருந்தாமை (தொல்.சொல்) அறிக!

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்

என்றாங்கு ஈண்டுக் குடும்பத்தின் அழிவு சுட்டப்பட்டது. பதுக்கலுக்கு உடந்தையாய் இருந்தமையின் என்க:

இழிவு அறிந்து இறைத்து உணவு ஈந்து உய்க: பதுக்கி வைத்தலால் படும் இழிவினை அறிந்து செல்வத்தை எல்லோர்க்கும் வழங்கியும் உணவு அளித்தும் உய்வுபெறுக,

இறைத்து எல்லோர்க்கும் வாரி வழங்கி இவ்வாறு பொதுப்படக் கூறியவர் உணவு ஈந்து என்று தனித்துதெடுத்துக் கூறியது அதன் சிறப்பு நோக்கி என்க.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் கொடுப்போ ரேத்திக் கொடாப் பழித்தல் என்னும் துறையுமாம்.