நூறாசிரியம்/குரக்கின் களிநடம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
65 குரக்கின் களிநடம்


காசிற் கில்லை; கந்தற் கில்லை;
மூசுநர் இளங்கை கொட்டி முழக்கி
அகடு வலிக்கும் உகுநகைக் கில்லை;
தகவுப் படுத்துந் தன்னைக் கோற்குத்
தாண்டியும் சுழன்றும் வேண்டிய ஆடுங் 5
காண்டகு குரக்கின் களிநடம் போல
என்னைக் கல்லா லன்னை
நன்னய வுரைக்கு மன்னாது நெஞ்சே!

பொழிப்பு :

காசுக்காகவும் இல்லை; கந்தல் துணிகளுக்காகவும் இல்லை (பார்க்கக்) கூடுவோர் இளைய கைகள் தட்டி வரவேற்று, மகிழ்ச்சியால் பேரொலி எழுப்பி வயிறு வலிக்க, உகுக்கின்ற நகை முழக்கத்திற்காகவும் இல்லை : தன்னை நெறிப்படுத்தி இயக்குகின்ற தன் தலைவனின் கையிலுள்ள கோலுக்கு இசைந்தே, அதைத் தாண்டவும் சுழலவும் அவன் விரும்பிய வகையில் எல்லாம் ஆடுகின்ற, காணத்தகுந்த குரங்கின் களிப்பான நடனத்தைப் போல, என் தலைவனுக்கு அல்லாமல் அன்னையினது அன்பான மெல்லுரைகளுக்குப் பொருந்துவதில்லை என் நெஞ்சம்.

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவன் மீது ஆராக் காதல் கொண்ட தலைவி தன்காதலைத் தன் நெருங்கிய தோழிக்குக் குறிப்பாக உணர்த்தியதாகும் இப்பாடல்.

தெருவில் நடந்த குரங்காட்டத்தைத் தன் இல்லத்தினின்று கண்டு களித்த தலைவி, அருகிருந்த தோழியிடம், அக்குரங்கைக் காட்டி, அது போல்வதே ஆகும் தன் நிலையும் என்று கூறித் தன் தலைவனிடம் தனக்கு இருக்கும் ஈடுபாட்டைப் புலப்படுத்திக் கூறினாள் என்க.

ஈண்டு இத் தெருவிலாடும் இக்குரங்கு, காசுக்காகவும் ஆடவில்லை, வேடிக்கை பார்க்கின்றவர்கள் கொடுக்கும் கந்தல் துணிகளுக்காகவும் ஆடவில்லை. அல்லது அங்குக் கூடியுள்ள சிறுவர்கள் குரங்கின் வேடிக்கைகளைப் பார்த்துக் கைகளைத் தட்டி மகிழ்ந்து ஆரவாரம் செய்து எழுப்புகின்றவர்களின் சிரிப்பொலிக்காகவும் ஆடவில்லை. தன்னை அவ்வாறெல்லாம் பழக்கி, ஆட்டுவிக்கின்ற தன் தலைவனிடம் இருக்கிற கைக்கோலுக்காகவே அதைத் தாண்டியும் அதை வைத்துக் கொண்டு சுழன்றும் அவன் விரும்பிய வாறெல்லாம் எல்லாரும் காணத்தகுந்த மகிழ்வான நடனத்தை ஆடிக் காட்டுகின்றது.

தானும் அப்படித்தான்; தன் தலைவன் தன்னை அன்பால் பழக்கிக் காதல் என்னும் உணர்வால் ஆட்டுவிக்கின்றான். எனவே தன் தாய் தன்னிடம் நயமாக உரைக்கும் பிற உரைகளுக்கோ, அவர்கள் தனக்கு உணவும் உடையும் தந்து மகிழ்ந்து புரக்கின்ற அன்புணர்வுக்கோ தான் கட்டுப்படவியலவில்லை. என்று தோழியிடம் தன் தலைவனிடம் தனக்குள்ள ஆழமான காதலை உணர்த்திக் கூறியதாகும் இப்பாடல்.

காசிற்கில்லை கந்தற்கு இல்லை - குரங்காட்டியின் கையிலுள்ள குரங்கு மக்கள் கொடுக்கும் காசுக்கோ, அல்லது அவர்கள் கொடுக்கும் கந்தல் துணிக்கோ ஆடுவதில்லை.

அதுபோல் தானும், தன் பெற்றோரோ அல்லது தன்னை மணம் செய்து கொள்ள விரும்புவான் வேண்டி வருவோனோ தனக்குப் பொருள் நலமும் உடைநலமும் கொடுப்பினும், தன் உள்ளம் அவற்றை நாடி அவர்களுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதில்லை என்றாள் என்க.

மூகநர். இல்லை - குரங்காட்டத்தைப் பார்க்கக் கூடியிருப்பவர்களுள் இளையோர் தம் கைகளை மகிழ்ச்சியால் கொட்டி, வயிறுகள் வலிக்கும்படி சிரிக்கின்ற பேரொலிக்காகவும், அக்குரங்கு மகிழ்ந்தோ அரண்டோ ஆடவில்லை.

அதுபோல், தன் பெற்றோரும் மற்றோரும் தன் அகவையையும் அழகையும், நடைமுறைகளையும் பார்த்து மகிழ்ச்சியாலோ அன்றி இகழ்ச்சியாலோ, ஒருபுறம் பாராட்டவும்-மறுபுறம் அவர் தூற்றவும் செய்யினும், அவ்வாரவாரங்களக்காகவும் தான் அவர்கள் வழி நிற்கவும் இயலாது.

தகவுப் படுத்தும் தன்னைக் கோற்கு - அதனைப் பயிற்றி இயக்கும் குரங்காட்டியாகிய அதன் தலைவனின் கையில் உள்ள கோலுக்குஇசைந்தே

தாண்டியும்.ஆடும் - தாண்டவும் சுழலவும் ஆக அவன் விரும்பியபடியெல்லாம் ஆடுகின்ற.

காண்டகு குரக்கின் களிநடம் போல - காண்பதற்குகந்த குரங்கினது மகிழ்வான நடனத்தைப் போல.

என் ஜக்கு அல்லால், அன்னை நன்னய உரைக்கு - என் தலைவனின் அன்புரைக்கு அல்லாமல், என் தாயின் நன்மையும் நயன்மையும் சான்ற உரைக்கு. மன்னாது நெஞ்சு - பொருந்தாது என் நெஞ்சம்.

குரங்கானது, தன்னை ஆட்டுவிக்கும் தன் தலைவனது கையிலுள்ள கோலுக்கு இயைந்து நடப்பதைப் போல், யானும் என் தலைவனது காதல் உணர்வுக்குக் கட்டுண்டு நடக்கின்றேன் என்றாள்.

குரங்கைத் தகவுப் படுத்துவது அவனது கோல், அதுபோல் தலைவியைத் தகவுப்படுத்துவது அவனது காதலன்பு தகவுப் படுத்துதல், உடன்பட்டு ஒப்ப நடக்கச் செய்தல்.

கோலின் பொருட்டாக அக் குரங்கு தாண்டியும் சுழன்றும் களிநடம் பயில்வது போலத் தலைவியும் தலைவனின் காதற்பொருட்டாக, இல்லந்தாண்டிப் புறத்தே சென்றும், அன்பால் அவனைச் சுழல (சுற்றி) வந்தும், காதல் உணர்வால் களிப்புறக் களவு ஆடியும் வருகின்றதைத் தலைவி தோழிக்குக் குறிப்பாய் உணர்த்தினாள் என்க.

‘அன்னையின் உரை நல்லது நயமானது; எனினும் என் உள்ளத்தே அது பொருந்துவது இல்லை. குரங்கு தன்னைச் சுற்றியிருப்பவரின் மகிழ்வும் பாராட்டும் நிரம்பிய சிரிப்பொலிக்கு இயையாது தன் தலைவனின் கைக்கோலுக்கே ஆடுவதுபோல், நானும் என் தலைவனின் காதல் உணர்வாகிய கோலுக்கே இவ்வாறெல்லாம் நடக்க வேண்டி உள்ளது, என்றாள் தலைவி.

குரங்காட்டத்தைப் பார்த்துக் கூட்டத்தில் உள்ள இளவோர் கைகொட்டி நகைப்பது போலத் தன் காதல்-களவு நடவடிக்கைகளையும் தங்களின் அன்புணர்வை அறியாத மூடர் இழித்தும் பழித்தும் அவர் துாற்றுவதைக் குறிப்பாகவும், ஆனாலும் அதைத் தான் பொருட் படுத்தாததை உறுதியாகவும் உணர்த்தினாள் தலைவி என்க.

‘மன்னாது நெஞ்சம்’ என்ற தன் நெஞ்சம் தலைவனின் அன்பான காதலுணர்வுக்கு மட்டுமே அல்லாமல், பிறர் எவருடைய எவ்வுரையானாலும் அதற்குப் பொருந்தவும் பொருந்தாது, நிலைப்பாடும் எய்தாது என்றும் கூறினாள் என்க.

இனி குரங்கு தன் பெற்றோரையும் பிறந்தவிடத்தையும் விட்டு வெளியேறித் தன் தலைவனின் வாழ்வோடு பொருந்தி வாழ்வது போல், தானும் தன் பெற்றோரையும் பிறந்தவிடத்தையும் விட்டு வெளியேறித் தன் தலைவனோடு பொருந்தி வாழவிருக்கும் குறிப்பைத் தலைவி தோழிக்கு உணர்த்தி அறத்தொடு நின்றாள் என்க.

இப்பாடல் குறிஞ்சி என் திணையும் தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்றல்’ என் துறையும் என்க.