நூறாசிரியம்/கொதிப்புறு நறுநெய்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

56 கொதிப்புறு நறுநெய்


எவர்கொல் அவர்க்கே முனிவாற் றும்மே!
அரைசாள் இழிசின் புரைசூழ் நெஞ்சினன்;
பறைவாய் தெறிக்கும் பத்த வச்சலன்
பெயரா விருக்கை நினைவிற் றப்பி
வடவர்ப் பணியும் முடவெள் ளறிவின் 5
இட்ட போக்கிற் கிடறாக் காவலர்
சுட்டுக் கிடத்திய செந்தமிழ்ச் சிறாஅன்
வளங்கூர் நாவின் இளங்கோ
மருந்தகத் துளைந்துயிர் துறப்பப் புடைந்து
கற்பத் தூக்கிய சுவடி வீசி 10
வெற்புத்தோளில் விறலேற்றித்
தெறுவிழியில் தியேற்றிச்
செந்நாவிற் செற்றத்தார்
உண்ணாவி அறக்கழல
ஒருசூலிற் பன்னுாறாப் 15
புற்றீயற் புறப்பாட்டின்
கதிர்கொன்ற களமென்ன
எதிர்நின்ற மரம்வீழ்த்தி
ஒச்சுமுகத் தடக்கையின்
காச்சிதர்க்கும் களிறன்ன 20
மலையெரிவாய் பீர்ந்தன்ன
உலைநெஞ்சின் வெளியேறிப்
புதுப்புனலின் கதழ்போகிக்
கொதிப்புறு நறுநெய் யாக
விதிர்ப்புறப் படைப்புல மெதிர்ந்த ஞான்றே! 25

பொழிப்பு :

எவர்தாம் அவர்களுக்கு எழுந்து நிற்கும் கடுஞ்சினத்தை ஆற்றக்கூடியவர்; அரசு ஆள்கின்ற இழிமையும் சிறுமையும் கொண்டு, தவறான நடவடிக்கைகளையே ஆராய்கின்ற உள்ளத்தினனும், பறைபோல்

முழங்குகின்ற கட்டளைகளைத் தெறிக்கின்ற வாயினனும் ஆகிய பக்தவச்சலன் என்னும் முதலமைச்சன் , தன் பதவியழுத்தத்தினின்றும் பெயராமல் இருந்த இருக்கையின் நலத்தினால், தன் நினைவில் தவறியும், தனக்கு மேலராகிய வட நாட்டினர்க்குப் பணியும், கோணலான வெள்ளிய அறிவினோடும், தான் இடுகின்ற கட்டளைக்குச் சற்றும் இடராத போக்கினை உடைய காவலர்கள்,துமுக்கியால் சுட்டுக்கிடத்திய செந்தமிழ் காக்கும் இளையோனாகிய, வளமையும் கூர்மையும் உடைய நாவினனாகிய இளங்கோ என்னும் மாணவன், மருத்துவமனையின் கண் துன்புற்று உயிர் துறந்தானாக; அதனால் அளாவியெழுந்த மாணவர்கள் தாங்கள் கற்பதற்காகக் கொண்டு சென்ற நூல் சுவடிகளை ஒரு புறத்தே வீசியெறிந்து விட்டுத் தங்களுடைய மலை போலும் தோள்களில் வீரத்தை ஏற்றிக் கொண்டு கனல்கின்ற விழியில் தீயினை ஏற்றிக் கொண்டு, கல்வி பயிலும் செவ்விய நாவில் சினத்தை உடையவராக உள்ளுயிர் அறவே கழன்று வெளியே கழியுமாறு ஒரு கருப்பப் பேற்றில் பல நூறு ஈசல்கள் புறப்பட்டு வெளியேறுதல் போல், கதிர்களைப் பிடுங்கியெறிகின்ற நெற்களம் போலும், எதிரே நிற்கின்ற மரங்களையெல்லாம் வீழ்த்தி, ஒச்சியவாறு, முகம் படுத்திய பருத்த கைகளை நீட்டிக் கொண்டு, காட்டை அழிக்கின்ற களிறுகள் போல், எரிமலையின் வாயினின்று சிதறியடிக்கின்ற உலைபோன்ற நெஞ்சுகளை உடையவராகி, (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்றும்) வெளியேறிப் புதுவெள்ளத்தின் பொங்குகின்ற சினத்தவராகிய போக்குடையவராகிக் கொதிக்கின்ற நல்ல நெய்போல், பிறர் நடுக்கமுற, அக் காவலர் படைகளை எதிர்த்துப் போரிட்ட பொழுதில்!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

அண்ணாமலை நகரத்துத் தமிழ்காக்கத் துஞ்சிய அரசேந்திரனொடு, குண்டடிபட்டு மருந்தகத்து உயிர்துறந்த இளங்கோவனைப் பாடியது.

“கொதிப்புறு நறுநெய்யாக, விதிர்ப்புறப் படைப்புலம் எதிர்ந்த ஞான்றே, எவர்கொல் அவர்க்கே முனிவாற்றும்மே' என இறுவாய்த் தொடையாக வைத்துப் பொருள் கொள்ளுக.

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவன் அரசேந்திரன் காவலர்களின் குண்டடிபட்டு, அவ்விடத்திலேயே மாய்ந்தான்; அவன் நண்பனாகிய இளங்கோவனோ துமுக்கிச் சூடுபட்டு, மருத்துவமனையில் துன்புறக் கிடந்து இறந்து போனான். அவன் இறந்து போன செய்தியைக் கேள்வியுற்ற மாணவர்கள் கொதிப்புடன் வீறுகொண்டெழுந்து, காவலர் படையுடன் போரிட எதிர்ந்த காட்சியைக் கூறுவதாகும் இப்பாடல்.

காலமும் சூழலும் முன்னைய பாடல்களுள் காட்டப் பெற்றன.

எவர்கொல் அவர்க்கே முனிவு ஆற்றும்மே - எவர்தாம் அவர்க் கெழுந்த சீற்றத்தை ஆற்றக்கூடியவரோ! எவரும் இல்லை என்பதாகப் பொருள் கொள்க.

அரைசு ஆள்... நெஞ்சினன் - அரசு ஆளுகின்ற இழிமையும் சிறுமையும் கொண்டு, தவறான நடவடிக்கைகளையே ஆராய்கின்ற உளத்தினன் பக்தவச்சலன் என்னும் முதலமைச்சன்.

பறைவாய் தெறிக்கும் - பறைபோலும் முழங்குகின்ற அடக்கமிலாத வாய்.

பெயரா விருக்கை நினைவில் தப்பி - தன் பதவியழுத்தத்தின் ஆசையால் அதனின்று அசையாமல் குந்தியிருந்த இருக்கையின் நலத்தினால், தன் நினைவில் தவறியும்.

வடவர்ப்பணியும் முடவெள்ளறிவின்-தனக்கு ஆட்சி நிலையில் மேலராகிய வடநாட்டு நடுவணரசினர்க்குப் பணிந்து போகின்ற கோணலான வெள்ளிய புல்லறிவினோடு.

இட்ட போக்கிற்கு இடராக் காவலர்- அவன் இடுகின்ற கட்டளைகளுக்குச் சற்றும் மாறாக நடவாத காவல்படையினர்.

சுட்டுக்கிடத்திய - துமுக்கியால் சுட்டுக்கிடத்திய செந்தமிழ்ச் சிறாஅன் - செந்தமிழ்காக்கும் இளையோனாகிய, வளங்கூர்நாவின் இளங்கோ-வளமையும் கூர்மையும் உடைய நாவினான இளங்கோவன் என்னும் மாணவன்.

மருந்தகத்து உளைந்து உயிர்துறப்ப - மருத்துவ மனையின்கண் துன்புறக்கிடந்து உயிர் துறந்ததனால்,

புடைந்து - அளாவியெழுந்த மாணவர்கள், கற்பத் தூக்கிய சுவடி வீசி - தாங்கள் கற்பதற்காகத் தூக்கிக் கொண்டு சென்ற நூற்சுவடிகளை ஒருபுறத்தே வீசியெறிந்துவிட்டு,

வெற்புத் தோளில் விறவேற்றி - தங்களின் மலைபோலும் தோள்களில் வீரத்தை வருவித்துக் கொண்டு.

தெறுவிழியில் திபேற்றி - கனல்கின்ற விழியில் தீயினை ஏற்றிக் கொண்டு. செந்நாவில் செற்றத்தார் - தங்களுடைய கல்வியிலும் செவ்விய நாவில் சினத்தை உடையவராக.

செவ்விய நாவில் சினத்தை உடையவராக என்றது, கொதிக்கின்ற கடுமையான உரைகளை முழக்குகின்ற தன்மையராக என்றற்கு

உண்ணாவி அறக்கழல் - உள் உள்ள உயிர் அறவே கழன்று வெளியேறும்படி, உயிர் போகின்றவாறு முழங்கிச் சென்றார்கள் என்றவாறு. ஒருகுவிற் பல்நூறாய்ப் புற்றியல் புறப்பாட்டின் - ஒரு முறை சூலுற்று வெளிப்போந்த பலநூறு ஈசல்கள் புறப்பட்டு வெளியேறுதல் போல்.

கதிர்கொன்ற களமென்ன - கதிர்களைப் பிடுங்கி எறிகின்ற நெற்களம் போல்.

எதிர்நின்ற மரம் வீழ்த்தி - எதிரதாகத் தென்பட்டு நிற்கின்ற மரங்களையெல்லாம் வீழ்த்தியவாறு.

ஒச்சு முகத் தடக்கையின் ஒச்சியவாறு முகத்தின் மேல் வைத்த பருத்த தும்பிக்கைகளை நீட்டிக் கொண்டு.

காச்சிதர்க்கும் களிறன்ன - காட்டை அழிக்கின்ற ஆண்யானைகளைப் போல்.

மலையெரி வாய்பீர்ந்து அன்ன-எரிமலையின் வாயினின்று பீச்சியடித்துச் சிதறுதல் போன்ற,

உலை நெஞ்சின் - கனற்குழம்பின் நெஞ்சுகளை உடையவர்களாகி வெளியேறி - (அண்ணாமலை பல்கலைக் கழகக் கட்டிடத் தினின்றும்) வெளியே போந்து.

புதுப்புனலின் கனல் போகி - புது வெள்ளத்தின் பொங்குகின்ற சினத்தவராகிய போக்குடையவராகி;

கொதிப்புறு நறுநெய்யாக - கொதிக்கின்ற நல்ல நெய்யைப் போல்.

விதிiப்புற - பார்க்கின்ற பிறர் நடுக்கமுற

படைப்புலம் எதிர்ந்த ஞான்றே - அக் காவலர் படைகளை எதிர்த்துப் போரிட்ட பொழுதில்

இந்தியெதிர்ப்புப் போரில் இளங்கோவன் காவலரின் குண்டடிபட்டு. மருத்துவமனையில் உயிர்துறந்தான் என்று கேள்வியுற்ற அளவில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துப் பயின்ற அவனின் ஒருசாலை மாணவர்கள், கிளர்ந்தெழுந்து, கொதிப்புற்று, அக் காவலர் படையை எதிர்ந்து போய்ப் போராட்டம் நடத்தியதன் சூழலை விளக்குவதாகும் இப்பாடல்.

இப்பாடல் முன்னது தினயையும் பயில்வோர் எழுச்சி என்துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.