நூறாசிரியம்/செங்கட்சேய்

விக்கிமூலம் இலிருந்து

6செங்கட் சேய்


விழவிற் றப்பிய செங்கட் சேஎய்
கொழுவிய கூறினு மொழுகா தலமர
வொருதாய்த் தேடி யுவந்து புன்றலை
பெருமடி புதைக்கும் பெற்றிதே தோழி!
அண்மைத் தாயினுஞ் சேய்மைத் தாயினும் 5
பெண்மைக் கொன்றிய நெஞ்சம் நாடித்
தேங்குவ தியல்பின் தேரார்
யாங்குகொல் முனிவது? யாதிவர் வினையே!


பொழிப்பு:

விழாக் கூட்டத்துள் தன் தாயின் பிடியினின்று தவறிய சிவந்த கண்களையுடைய நடைபயில் குழந்தை உறவும் நொதுமலும் ஆகிய பிறர், மருட்சியுற்ற அதன் மனத்தைத் தேற்றும் கொழுமையான உரைகளைக் கூறினாலும், அவர்பால் இருந்து பயில்தலையறியாமல், மனம் சுழற்சியுறத் தன் ஒருதனித் தாயைத் தேடிக் கண்டு உவந்து, தன் இளந்தலையை அவளின் பெருமை பொருந்திய மடியில் புதைத்து ஆறுதலுறும் தன்மை வாய்ந்தது, தோழி! அது போல் அருகிலிருப்பினும் தொலைவிலிருப்பினும் மன, மொழி, மெய்களால் ஒருத்தியின் பெண்மைக்குப் பொருந்திய ஆண்மமையுடையவனின் அருள் நெஞ்சம் ஒன்றையே நாடி, அதன் இணைப்பில் தேங்கி அமைதியுறும் தன்மையைத் தத்தமக்குற்ற இயல்பினால் உண்ர்ந்து தேர்ந்து கொள்ளாத இவர் எம் உளத்தை உணராது செய்ய முற்படும் வினை எத்தகைய சிறுமை உடையது!

விரிப்பு :

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவியின் பெற்றாரும் மற்றாரும் தம் உறவோன் ஒருவனுக்கு தன்னைக் கொடுக்கும் மணவிழா முயற்சிகளைக் கண்ணுற்றுத் தன் உள்ளம் ஏற்கனவே தனக்குப் பொருந்திய ஒருவனை நாடியதென்றும், அவன் உள்ளத்தன்றி அஃது அமைதியுறும் இடம் வேறில்லை என்றும் கூறி, அவர் செயல்களைப் பேதைமை என்று கடிந்து, தலைவி தன் தோழிக்கு உணர்த்துவதாய் அமைந்தது இப்பாட்டு.

தலைவி தன் தூய்மையான காதல் அன்பிற்கு, ஒரு குழந்தையின் தாய்மை அன்பினை உவமையாகக் கூறுகின்றாள்.

ஆரவாரமான விழாக்கூட்டத்துள், நடைபயில் குழந்தை ஒன்று தன் தாயின் பிடியிலிருந்து தப்பி, அவளை எண்ணி எண்ணி மன்ம் சுழற்சியுறத் துன்புறுவதைத் தான் தன் காதலனை அடைய முடியாமல் பெறும் மனத்துயருக்கு உவமையாகக் கூறுகின்றாள்.

விழாவில் தப்பிய விழாக் காலத்துத் தவறிய ஊர் விழாவின் ஆரவாரத்திற் கிடையில் தவறிய குழவியும், மணவிழா ஆரவாரத்திற் கிடையில் நழுவிய தன் மனமும் ஒரே துயர் கொண்டன என்றாள். தாயின் கைநெகிழ்ச்சி குழவியை ஊர்விழா ஆரவாரத்திடை உய்த்துத் துயருற வைத்தது. அதுபோலவே தன் காதலனின் கால நெகிழ்ச்சியும் தன்னை இம் மணவிழாப் பேச்சின் ஆரவாரத்திடைப் புகுத்துத் துயருறச் செய்தது.

குழந்தை விழிப்பாயிருந்தால் தன் தாயின் பிடியிலிருந்து தவற நேராது போலவே, தான் விழிப்பாயிருந்தால் தன் தலைவனின் பிடியினின்று தவற நேர்ந்திராமல் இருந்திருக்கலாம் என்று தலைவி தோழிக்கு உணர்த்தினாள்.

இளமையில் குழந்தை தன் தாயை நாடுவது இயல்பு போலவே, பருவத்தில் அது தனக்குற்ற ஆடவனையோ பெண்ணையோ தேடிப் போவதும் இயல்பாம் என்ற குறிப்பும் காட்டினாள் என்றபடி

செங்கட் சேஎய் - சிவந்த கண்களை உடைய நடை பயில் குழவி. மடிப்பிள்ளை மகவும், இடைப்பிள்ளை குழவியும், நடைப்பிள்ளை சேயுமாம், சேய் - சிவந்த நிறத்தது. நடந்து தொலைவிற் செல்லும் பான்மையது. - சேயோன்.

தாயைத் தேடிக்காணாது அழுது நிற்கும் கண்களை உடையதாகலின் செங்கட் சேய் எனப்பட்டது.

தலைவியும் தன் தலைவனைக் காணாது வருத்தமுற்றுச் சிவந்த கண்ணினளாய் இருத்தலைத் தோழிக்குக் குறிப்பாய் உணர்த்தினள் என்றபடி

கொழுவிய கூறினும் ஒழுகாது - செழுமையான சொற்கள் - அன்பு நிறைந்த சொற்களால் கூறித் தேற்றினும் தம்பால் பழகாது தன் துயர் நீக்கி அமைதியுறாது.

தன் தாயையன்றி வேறு எவரைக் காணினும், எவர் எத்தகைய செழுமையான அன்பு பொதிந்த சொற்களைக் கூறினும் அக்குழந்தை அவர்டால் ஆறுதல் கொள்ளாததைப் போலவே, தலைவி தன் தலைவன் பாலன்றி வேறு எவருடைய அன்பும் பரிவும் வாய்ந்த சொற்களாலும், செயல்களாலும் ஆறுதல் பெறாள்-அமைதியுறாள் என்று உணர்த்தியவாறு,

ஒழுகல் - ஒத்துப் பழகுதல் ஒரு படித்தாய் நிற்றல். உலகில் ஒரே சீராக அமைந்த ஒரு பொருளை யாண்டுங் காண்டல் அரிது. ஒன்று போலவே வேறொன்றை ஒரே இனமும், தன்மையும், எடையும் வாய்ந்த இன்னொன்றைம் பார்த்தல் இயலாதாம். நெல், கம்பு முதலிய தவச மணிகளும், குன்றி, பவழம் முதலிய பரு மணிகளும் பெரும்பாலும் ஒன்றியிருப்பினும் ஒரோவொரு கால் வேறுபடுவனவே. எனவே ஒரே சீராகவும் ஒரு படித்தாகவும் இருப்பன நீர்ப்பொருள் ஒழுகும் ஒழுக்குத் துளிகளே! ஒரே நீர்மப் பொருளின் பல துளிகளும் ஒரே சீருடையன. மேலும் ஒரு தொளையினின்று ஒரேயளவாக நீர் துளிர்த்துக் கசிந்து வெளிவருதலைத் துளிகள் என்றும், அது வரும் தன்மையை ஒழுக்கு என்றும் கூறினர் தமிழர். அதனின்று பிறந்ததே ஒழுக்கம் என்ற மாந்த நடைமுறைச் சீர்மை குறித்த சொல்லும் ஒழுக்கம் உடையவன் என்ற கூற்றுக்கு ஒரே படித்தான சீர்மை- நடைமுறை வாய்ந்தவன் என்பதே பொருள். பெரும்பாலும் உயர்ந்த தன்மைக்கே சீர்மை உரித்தாகலின் ஒழுக்கம் என்பதே உயர்ந்த நெறியைக் குறித்தது. நீர் ஒழுக்கல் உடைய தன்மையின், ஒழுக்கத்திற்கு நீர்மை என்றும் சொல் உண்டாயிற்று. அதன் பின்னரே நீரின் பிற (தூய்மை, தண்மை, பரந்தமை, கொண்மை முதலிய) துண்தன்மைகளையும் அச்சொல் அளாவி நின்றது. அலமர-சுழல அஞ்சகலங்க-வருத்ததுன்பமுற. சிவந்த கண்களையுடைய அக்குழந்தை தன் விழிகளை நான்கு புறமும் சுழற்றி மருட்சியுற அழுது தன் தாயைத் தேடுதலை உணர்த்திற்று. செங்கண் அலமரத் தேடி என்றும் கொண்டு கூட்டிப் பொருள் கண்டு மகிழ்க

ஒரு தாய்த் தேடி - ஒரு தனித் தாயைத் தேடி குழவிக்குத் தன் தாயைவிட வேறொரு புகலிடம் இல்லையாகவின் ஒரு தாய் எனலாயிற்று.

'குழவி அலைப்பினும் அன்னே என்றோடும்'(நான்மணிக்கடிகை35) என்றும்,

அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன். அருள் நினைந்தே அழுங்குழவியதுவேபோன் றிருந்தேனே’ (பெருமாள் திருமொழி ) என்றும் குழவியின் தாய்மைப் பிடிப்பு காட்டப்பட்டுள்ளது.

குழவிக்குத் தாய்போல், தலைவிக்குத் தலைவன் என்பதைத் தலைவி தோழிக்கு உணர்த்தினாள்

உவந்து உள்ளம் விரும்பம்.கிழ்ந்து ஒரு தாய் தேடி உவந்து - என ஒரு தனித்தாயைத் தேடலும், அவளைத் தொலைவிற் கண்ட அளவிலேயே உவத்தலும் கூறலாயிற்று.

தேடிக் கண்டு உவந்து என வராது. தேடி உவந்து என வந்தது உவத்தல்

கண்ட நொடியினானே நிகழ்ந்த விரைவு பற்றி

அதுபோலவே உவந்து புன்றலை பெரும, புதைக்கும் என்பதிலும் உவந்து

ஓடி என வராது உவந்து புன்றலை புதைக்கும் என்றது, கண்ட அளவிலேயே உவந்து, உவந்த அளவிலேயே ஓடிப் புன்றலை புதைத்தது எனும் விரைவுபற்றி கண்டவுடன் மகிழ்ச்சியும் மகிழ்ந்தவுடன் ஓடி மடியில் தலை புதைத்ததும் நேர்ந்ததென்க.

புன்றலை - இளந்தலை - சிறியதலை
பெருமடி, புதைக்கும் பெற்றிதே - தாயின் பெருமை பொருந்திய மடியுள் தன் தலையைப் புதைத்துக் கொண்டு ஆறுதலுறும் தன்மையது.

ஒரு குழவிக்குத் தன் தாயின் மடியே பெருமை பொருந்திய மடி போல், பருவமுற்ற தலைவிக்குத் தன் தலைவனின் மடியே பெருமை பொருந்திய மடியாம் என்றவாறு.

தோழி - விளி. தோழி, நீ கேட்பாயாக.

தோழி இன்னும் தன்னைப்போல் ஒரு தலைவனைப் பெற்றிலள் ஆகையினால், அவளுக்குத் தான் தன் தலைவன்பாற் கொண்ட ஈடுபாட்டினை உணர்த்துவாள், முதலில் குழந்தை தன் தாயின்பால் கொண்ட ஈடுபாட்டினைக் கூறினாள் என்க. அண்மைத் தாயினும் சேய்மைத் தாயினும் - இடமும், காலமும் உணர்த்தக் கூறினாள். இடத்தான், அருகில் உள்ளான் எனினும் தொலைவில் உள்ளான் எனினும் என்றும், காலத்தான், இனி அடுத்து வரும் காலத்தே மனப்பான் எனினும், அன்றிப் பின்னொரு காலத்தே மனப்பான் எனினும்- என்றும் கொள்க. இடத்தான் சேய்மையோன் எனின், தான் அவனை நாடிப் போதலே முறையென்றும், காலத்தால் சேய்மையோன் எனின், தான் அவன் மணக்கும் வரை காத்திருத்தலேமுறையென்றும் அறங் கூறினாள் என்றபடி அறம்-ஒழுகலாறு

பெண்மைக் கொன்றிய நெஞ்சம் நாடி - தன் பெண்மை உளத்திற்குப் பொருந்திய நெஞ்சத்தை நாடி இக்கூற்றான்தான் முன்பே தன்தலைவனைக் கண்டு அவன் நெஞ்சுறக் கலந்த நிமித்தங் கூறினாள் என்க.

தேங்குவது இயல்பின் தேரார் - பெண்மை நெஞ்சம் தனக்கொன்றிய ஆண்மை உள்ளத்தைத் தேடித் தேங்கி அமைதியுறுவதே இயற்கை யாதலின், அதனை அறியாதவர் என்றும், தமக்குற்ற இயல்பினால் பட்டறிவினால் தன் மகளின் உள்ளத்தைத் தேர்ந்து கொள்ளாதவர் என்றும் பொருள் கொள்க தமக்குற்ற அறிவாலும், நிகழ்ச்சியாலும் மன அறிவாலும், தன் உள்ளத்தைத் தேராதவர் தனக்கு மணவினை தேர்ந்தனரே என்று இழிவுதோன்றக் கூறினள் என்றபடி

யாங்குகொல் முயல்வது- தன் உள்ளத்தைத் தமக்குற்ற மனவியலால் தேர்ந்து உணராதவர், இம்மண வினைக்கு ஒருப்படாத என்னை முனிந்து கொள்வது எதற்கு என்றவாறு.

இக்கூற்றால் தன் தோழிக்குச் சொல்லுவது போல் அருகில் தான் உரைப்பது கேட்டு நிற்கும் தலைவனுக்கும் தன் உறுதிப்பாடு கூறினாள் என்றபடி

யாதிவர் வினை - மணவினை குறித்த எம் பெற்றோரின் செய்கை இத்தகைய சிறுமை வாய்ந்ததே என்றும்.

மணவிழா குறித்துத்தம் பெற்றோர்வினைபடத் தொடங்கிவிட்டனர்; இனி என் தலைவன் செய்யப் போவதொரு செயல்தான் என்ன? என்று தோழி முகமாகத் தலைவி தலைவனைக் கேட்டனள் என்றும் பொருள் கொள்க.

இப்பாட்டு குறிஞ்சி யென் திணையும், நொதுமலர் வரைவழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது என்ற துறையுமாம்.

இனி, 'நொதுமலர் வரைவுழித் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது' என்றும் கொளற்பாலதாம்.