உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/துய்ப்போராகுநர்

விக்கிமூலம் இலிருந்து

100 துய்ப்போர் ஆகுநர்

உயிரின் மாட்டே உடலின் இயக்கம்;
உளமும் அறிவும் உயிரை இயக்குப;
உளமும் அறிவும் ஒன்றினை யொன்று
தாமே இயக்கித் தம்மொடு பொருந்திய
எல்லாப் பொருளையும் இயக்கலே வாழ்க்கை! 5
வல்லமை இருபான் குறையுங் காலை
எல்லாந் தூக்கிய இறையவன் இயக்கும்
இல்லவன் என்பது கல்லார் கூற்றே!
இன்னவன் என்பது பேதையர் கூற்றே!
மண்பொருட் கூட்டும் நுண்பொருள் இயக்கமும் 10
எண்பொரு ளாய்ந்த திண்ணியர் அறிவர்;
உயிர்ப்பொருள் யாவும் ஒன்றொடு தொடரும்;
மெய்ப்பொருள் அதனதன் மேலே தூங்கும்;
பொய்ப்பொருள் மெய்யின் போலிகை, அவையவை
உய்பொருள் அறிந்தவை உழைபோ வாரே 15
துய்ப்போர் ஆகுநர் துவ்வார்
நைவார் ஆகுநர் நலிபிறப் பானே!

பொழிப்பு:

உயிரின் பொருட்டாகவே உடலின் இயக்கம் நிகழுகின்றது; உயிரை உள்ளமும் அறிவும் இயக்குவனவாம்; அவ்வுள்ளமும் அறிவும் தமக்குள் ஒன்றனை யொன்று ஆளுமைபுரிந்து தம்மைச் சார்ந்த எல்லாப் பொருள்களையும் இயக்குதலே வாழ்க்கை யெனப்படுவதாம்.

உள்ளமும் அறவும் என்னும் இரண்டனிடத்தும், உயிரை இயக்குவதற்கான திறங்குன்றுமிடத்து அவ்வுயிர்களின் பொருட்டு யாவற்றையுஞ் தோற்றுவித்த இறையவன் அவற்றை இயக்குவான்.

இறைவனை இல்லாதவன் என்று மறுத்துரைப்பது மெய்ந்நூல்களைக் கற்றுணராதவர் கூறும் கூற்றாகும்; மற்று அவன் இருப்பை உடன்படினும் அவனை இன்னவன் என்று வண்ணித்துரைப்பது அறிவு விளங்கப் பெறாதவர் கூறும் கூற்றாகும்.

பருப்பொருளாகிய மண் முதலியவற்றின் சேர்க்கையும் நுண்பொருளாகிய உயிர்களின் இயக்கமும் பற்றிய கருத்துகளைத் தெளிவுபட ஆராய்ந்துணர்ந்த திறவோரே அறிவர் எனப்படுவோராவர்.

உயிர்ப்பொருள் ஒன்றொடு தொடர்ந்து இயங்கும். மெய்ப்பொருள் ஆளுமைநிலையில் அவ்வப் பொருள்களின் மீது பொருந்தியிருக்கும். பொயப்பொருளாவது உண்மைப்பொருளின் போலியேயாம்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

தலைப்பாடலான இறைநிலை வாழ்த்தில் ஒன்றிறை’ என இந் நூறாசிரியத்தைத் தொடங்கிய ஆசிரியர் இடையே உலகியல் நிலைகளைப் பலபட விரித்துரைத்து உயிர்கள், இறைமையில் தோய்ந்து நிறைநிலை யெய்துதலை விளக்குவதாக அமைந்துள்ளது இவ்வீற்றுப் பாடல்.

உயிரின் இயக்கம் எத்தகையது என்றும், அதனொடுபட்ட இறையவன் இயக்கமாவது யாது என்றும், இறைவனை இல்லவன் என்றும் இன்னான் என்றும் கூறுவார்தம் கூற்றுகள் எத்தகையன என்றும், மெய்யறிவர் யாரென்றும், உயிர்கள் உய்யுமாறு யாங்ஙனமென்றும், துய்ப்போரும் துவ்வாரும் இன்னின்னார் என்றும் இப்பாடலின் கண் விளக்குகிறார் ஆசிரியர்.

உயிரின் மாட்டே உடலின் இயக்கம் - உயிரின் பொருட்டாகவே உடலின் இயக்கம் நிகழ்கின்றது.

உயிரைச் சார்ந்தே உடல் இயங்குகின்றது. உயிர் கருத்தாவாய் நின்று உடலை இயக்குகின்றது என்றவாறு.

உயிரை உளமும் அறிவும் இயக்கு - அவ்வுயிரை உளமும் அறிவும் இயக்குவனவாம். -

உடலை இயக்குமாறு உயிரைத் துண்டுவன உளமும் அறிவுமாம் என்றவாறு.

உளமாவது உணர்வுநிலையே என்பது அறியப்படும்.

உளமும் அறிவும்தாமே ஒன்றனைஒன்று இயக்கி-உளமும் அறிவும் தமக்குள் ஒன்றனைப் பிறிதொன்று ஆளுமைபுரிந்து உணர்வு மேலோங்குங்கால் அது அறிவை யடக்கியும், அறிவு மேலோங்குங்கால் உணர்வை அடக்கியும் ஒன்றனைப் பிறிதொன்று ஆளுமை புரிந்து என்றவாறு.

தம்மொடு பொருந்திய எல்லாப் பொருளையும் அவ் உளமும் அறிவும்

தம்மால் உணரப்படுவனவும் அறியப்படுவனவுமான அனைத்துப் பொருள்களையும். புறப்புலன்களால் கண்டு கேட்டு, உண்டு உயிர்த்து உற்று அறியப்படுவனவும் உணரப்படுவவையுமான அனைத்துப் பொருள்களையும் என்றவாறு,

இயக்கலே வாழ்க்கை - துய்ப்பின் பொருட்டு இயக்குதலே வாழ்க்கை எனப்படுவாம்.

வல்லமை இருபால் குறையும் காலை-வாழ்க்கைக்கான ஆற்றல் உயிரிடத்து உளத்தானும் அறிவானும் குன்றியவிடத்து உடலையும், உளத்தொடும் அறிவொடும்பட்ட அனைத்துப் பொருள்களையும் இயங்குதற்கான ஆற்றல் உயிரிடத்துக் குறைவுற்ற காலை.

எல்லாம் தூக்கிய இறைஅவன் இயக்கும் - உயிரின் பொருட்டு உடலையும் பிற எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்த இறையாகிய அவன் உயிர்களை இயக்குவான்.

இறையவன் என்றமையால் மெய்யியல் நிலைபற்றி இறை என்றும், உலகியல் நிலைபற்றி அவன் என்றும் சுட்டினார் என்பது கொள்ளப்படும். இறையவன் என்பது ஒரு சொல் நீர்மைத்து.

இல்லவன் என்பது கல்லார் கூற்று - இறைவனை இல்லாதவன் என்று மறுத்துக்கூறுவது மெய்ந்நூல்களைக் கற்றுணராதார் கூறும் கூற்றாம்.

இது இன்மைக் கொள்கையரான நம்பாமதத்தாரைக் குறித்துக் கூறியது.

இறைவன் இல்லையென்போர் ஐயறிவும் ஐயறிவை யொட்டிய பகுத்தறிவும் மட்டுமே கொண்டு முடிபுகட்டி யுரைத்தலின் அது கல்லார் கூற்று என்றார். கல்லாராவார் மெய்ந்நூல்களைக் கற்று அறிந்து உணராதோர். மெய்ந்நூலறிவானும் மெய்யுணர்வானும் இறைவன் அறியப்படும் என்பது.

இன்னவன் என்பது பேதையர் கூற்று - இறைவனை இத்தகையோன் என்று கூறுவது அறிவுத் தெளிவில்லாதார் கூறும் கூற்றாம்

இது உண்மைக் கொள்கையரான நம்பும் மதத்தாருள் ஒரு சாரரைக் குறித்துக் கூறியது. இறைவன் இருப்பை உடன்படினும் இன்னவன் என்று வண்ணித் துரைத்தலால் அவரைப் பேதையர் என்றார்.

இன்னவன் என்பதாவது இன்ன வடிவினன், இன்ன நிறத்தினன் என்றும், இன்னின்ன சில இயல்புகளை யுடையான் என்று வரையறுத்தும் கூறுதலாம். இன்னும் அவன் இன்ன இடத்தினன் என்றும் ஆணென்றும் பெண்ணென்றும், மனைவி மக்களும் வைப்பாட்டியுங் கொண்டு குடும்பங் குடித்தனத்தோடு வாழ்கிறான் என்றும் பிறவாறும் கூறப்படுவன வெல்லாம் கொள்க. மண்பொருட்கூட்டும் ..... அறிவர் - மண்முதலிய பருப்பொருட்களின் சேர்க்கையான உலகின் இயல்பும் நுண்பொருள்களான உயிர்களின் இயக்கமும் பற்றி ஆய்ந்து தெளிபொருள் உணர்ந்த திறவோரே மெய்யறிவர் எனப்படுவோராவர்.

சிலரைக் கல்லார் என்றும் மற்றுஞ் சிலரைப் பேதையர் என்றும் சுட்டியமையின் மற்று அறிவர் தாம் யாவர் என வினா எழுதலின் அது நோக்கி இவ்வாறு கூறினார்.

மண்பொருள் கூட்டு என்றது உலகத்தைக் குறித்தல்.

நிலம் நீர் தீவளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலக மாதலின்"- என்றலால் அறியப்படும்.

மண் முதலிய பருப்பொருள்கள் என்றது என்னை யெனின், பின்னையது நுண்பொருள் என்றமையின் என்க. மண்ணும் தீயும் நீரும் அல்லாத வளியும் வெளியும் பருப்பொருள்கள் அல்லவேனும் பூதங்களாதலின் அவ்வாறு சேர்த்துக் கூறப்பட்டது.

‘மண்பொருட் கூட்டு என்ற கலந்த மயக்கம்’ பற்றி விரிப்பிற் பெருகும்.

எண்பொருள் ஆய்ந்த தெளிபொருளாக அவற்றை ஆய்ந்து உணர்ந்த

உயிர்ப்பொருள் யாவும் ஒன்றொடு தொடரும் - உயிரிகளெல்லாம் ஒரறிவு முதல் ஆறறிவு ஈறான பாகுபாட்டை யுடையனவாகப் படிநிலை வளர்ச்சிபெற்றுத் தொடரும்.

ஒன்று- ஆறறிவின் முதலதான ஊறறிவு.

இனி, ஒன்று என ஆசிரியர் இந் நூறாசிரியத்தின் முதற்பாடலின்

தலைச் சொல்லாய் நின்ற இறையொடு ஒன்றித் தொடர்ந்து நிறைவுறும் எனினுமாம்.

மெய்ப்பொருள் அதன் அதன் மேலே தூங்கும் - மெய்ப்பொருள், உயிர்ப் பொருள் ஒவ்வொன்றின் மேலும் ஆளுமையால் பொருந்தி நிற்கும்.

பொய்ப்பொருள் மெய்யின் போலிகை - உலகத்துப் பொய்ப்பொருள் களெல்லாம் உண்மைப் பொருள்களின் போலி நிலைகளாம்.

பெயர் கட்டப்படும் பொருள்களெல்லாம் நிலைபொருள் இயங்கு பொருள் எனவும், காட்சிப் பொருள் கருத்துப் பொருள் எனவும், நுண்பொருள் பருப்பொருள் எனவும், இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் எனவும், பிறவாறும் அமைந்த உண்மைப் பொருள்களே யாம். ஆதலின் பொய்ப்பொருள் என்பது ஏதுமில்லை. இல்லையாயின் பொய்ப்பொருள் எனப்படுவதுதான் என்னை யெனின் உண்மைப் பொருள்போல் புனையப்படுவனவேயன்றி வேறில்லை யென்க!

உய்பொருள் அவை அவை அறிந்து - அவ்வாறு பல்வகைப்படத் தோற்று விக்கப்பட்ட பொருள்களான அவ்வவற்றின் இயல்புகளை அறிந்துணர்ந்து.

அவையவை என்றது. அவைதாம் பற்பல வகைப்படுதல் நோக்கி. உய்பொருளாவது தோற்றுவிக்கப்பட்ட பொருள். உய் - செலுத்துதல்; பிறப்பித்தல்.

அவை.உழை போவாரே - அவற்றினிடத்துத் தொடர்புகொண்டு இயங்குவோரே

போவார் என்பது, இயங்குவார் என்னும் பொருட்டு. அதாவது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உதவியுந் துணையுமாய் நின்று வாழ்வித்து வாழ்வோர் என்பது.

உழை இடத்து ஏழனுருபு

துய்ப்போர் ஆகுநர்-மெய்ந்நிலை நின்று உலக வாழ்க்கையை நுகர்வோர் ஆவர்.

துய்ப்போர் - இறைமையில் தோய்ந்து வாழ்வோர்.

துவ்வார் ஆகுநர் நலி பிறப்பானே நைவார் - உலக வாழ்க்கையை மேற்கண்டாங்கு நுகராதார் பிறவியின் பயனை அறியாத நிலையான் வருந்துவோர்

நவி பிறப்பாவது மாந்தனாய்ப் பிறந்தும் இறைமையில் தோய்ந்து வாழும் மெய்ந்நெறியறியாதார்.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.