உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/தேரா வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து



14 தேராவாழ்க்கை


விரைவா கின்றே உலகம்! உலகத்துப்
புரையா கின்றே பொலிவுறு வாழ்வே!
மண்ணா கின்றே மனனே! மாண்பொடு
பொன்னா கின்றே பொய்யுடைப் போக்கே!
வறிதா கின்றே அறிவே! வாணாட் 5
குறியதர் தப்பின்று குடும்பெனும் பயனே!
முதியோர் முதுமை முகிழ்விறந் தன்றே!
இளையோர் இளமை எழில்குலைந் தன்றே!
பெண்டிர் பெண்மை பெட்பிறந் தன்றே!
ஆடவர் ஆண்மை அறக்குலைந் தன்றே! 10
அறங்கூ னின்று பொருளர சாணையின்
மறந்தலை நிமிர்ந்தன்று, மானிழிந் தன்றே!
மணஞ்செய் கோலத்து மாண்பிழந் தன்றே!
கணவர் மனைவியர் கட்டவிழ்ந் தன்றே!
அறிவியல் உடலிய லடியிழிந் தன்றே! 15
பொறியியல் மக்களின் பொறியரிந் தன்றே!
கான்படு விலங்கின் முனைவே!
மாண்பெறு மாந்தர்க்கு முயல்வா கின்றெனத்
தேரா வாழ்க்கை திறம்பலின்
ஆரா விருள்சேர் அழிநிலை நோக்கியே! 20


பொழிப்பு:

சுழற்சி நிரம்பிய இம் மண்ணகத்துப் பொலிவு நிரம்பியிருந்த வாழ்வு உள்ளிடு குன்றித்திண்மை குன்றுவதாயிற்று நிலைத்திருக்க வேண்டுவதாகிய உள்ளம் மண் போலும் குலைவுறலானது , பொக்கென வெறுமை நிரம்பிய பொய்ம்மைப் போக்கே பெருமை பெறுவதாகிப் பொன் போலும் மதிக்கத் தக்கதானது அறிவு பயனற்றுப் போதலால் வறட்சியுற்றது. வாழ்நாளின், இலக்கை எய்தும் வழி தப்பியது, கூடி வாழும் பெரும் பயன்! முதுமை நிரம்பியவரின் மூப்பு அறிவு மலர்ச்சியற்றதாய்ப் போனது; இளையோரின் இளமை அழகு குலைவதாயிற்று; பெண்டிரின் பெண்மை வேட்கத் தக்க நிலையினின்று அழிந்தது; ஆடவரின் ஆளுமை நிலை முற்றும் குலைந்து

போனது, அறம் கூனலுற்றது. பொருள் அரசு செய்து ஆணை புரிதலால் மறம் தலை நிமிர்ந்தது, மானம் தன் நிலையினின்று இழிந்தது; ஆனும் பெண்ணும் கூடித் தலைப்பெய்தும் மனவமைப்பின்கண் பெருமை இலவாகியது; கணவனும் மனைவியுமாகப் பொருந்தியவர்தம் பிணைப்பு தளர்வுறலாயிற்று, பூதவியல்,வேதியியல், முதலிய அறியப் பெற்ற சிதைவிலா உண்மைகள் யாவும், சிதைவுறும் மாந்த உடலின் காலடி நின்று இழிதலாயின; மாந்தன் தானே சமைத்துக் கொண்ட பொறி வினைப்பாடுகள் யாவும் இவன்றன் உடலிலுள்ள பொறி புலன்களை அரிந்தெடுத்து விலக்கலாயின. காட்டின்கண் தோன்றி மறையும் விலங்கினங்கள் தம் ஊன் பொதி உடம்புகளை வளர்த்துக் கொள்ளவே முனைந்து முயல்வன போல், மாட்சிமை பெறும் மாந்தரின் மீமிசை வாழ்வும் அவ்வூன் முயற்சி ஒன்றே கொண்டு இயங்குதலாயிற்று - என்றிவ்வாறு தேர்ந்து கொள்ளப் பெறாத வாழ்க்கை மாறுபடுதலுறின், விலக்கமுடியா இருள் பொருந்திய அழிவு நிலை நோக்கி விரைதல் ஆகின்றது இவ்வுலகம்.

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும்.

இவ்வுலகத்துக்கண் அறம் மயங்கி மறமோங்கி, பொருள். புரைந்து இருள் நிறைந்து, இன்பிழிந்து துன்பெழுந்து, மாந்தர் வாழ்வுறலின்றித் தாழ்வுறக் கிடக்குங் கீழ்நிலை நோக்கி, உலகியல் பொருண்முடிபு உணரக் கூறியதாகும் இப்பாட்டு,

புரையாகின்றே பொலிவுறு வாழ்வு - என்ற விடத்து, வாழ்க்கை பொலிவு மிக்கது என உறுத்துக் கூறியும், குறியதர் தப்பின்று குடும்பெனும் பயனே என்ற விடத்து வாழ்க்கைக் குறி தப்பிப் போகும் இவ்வுயிர்க் குழாம் மீளுமிடத்து நலம் பயக்குற விளங்கும்’ என்று எடுத்துக் கூறியும், கான்படு விலங்கின் ஊன் வளர்முனைவே மாண்றுெ மாந்தர்க்கு முயல்வாகின்று'என்றவிடத்து, நாடுபடு மாந்தரின் மீமிசைப் பேறு காடுபடு விலங்கின் ஊன் வாழ்விற் (கிழிந்த) முயல்வினின்று மீட்கப்பெறின் மாட்சிமைப் பட்டு விளங்கலுறும் என்று நிறுத்துக் கூறியும், இன்னும் பிறவழியும் உலகமுய்யக் கூறியதாகும் இப் பாட்டு.

விரைவு ஆகின்று உலகம் - உலகம் விரைந்து செல்லுதலை உடையது. இவ் வடியொடு பாட்டின் இறுதியடியாகிய ஆரா விருள்சேர் அழிநிலை நோக்கியே'என்ற அடியினைக் கொண்டு கூட்டிப் பொருள் முடிக்க உலகம் அழிவுநிலை நோக்கி விரைந்து செல்கின்றது. ஈண்டு'உலகம் ஆகுபெயராக உலகத்துள்ள எண்ணாயிரங் கோடி உயிர்களையும், அவற்றுள் மேம்பட்டு நிற்கும் மக்களையும், அவர் தம் பெருநிலை வாழ்வையும் குறித்தது என்க. ‘ஏ’ அசை, உறுதிப் பொருளில் வந்தது. உலகத்துப் புரையாகின்று பொலிவுறு வாழ்வு - புரையாகின்றமை நோக்கி உலக வாழ்வு முன்பு திண்மை மிக்கதாக விருந்தமை உணரப்பெற்றது. புரைதல்-உள்ளிடு குறைந்து பொள்ளென்றாதல். பொள்ளுதல்-தொளையுடையதாயிருத்தல், புள்-பொள்+து:பொத்து-பொந்து= தொளை.

புள்-புளை.புழை-புரை=உள்ளீடறுதல்.

பொலிவுறு வாழ்வு என்று கருத்துப் பொருளைக் காட்சிப் பொருளாக்கியது, தோற்றமே வேண்டாததொன்றாகலின் அதனுள் துலங்குதலும் அறவே வேண்டாததொன்றாம் என வலியுறுத்துவான் வேண்டி என்னை? தோற்றத்திற்கும் பயனுக்கும் வேறுபாடில்லையோ எனின், உண்டு; அவ்வகை வேறுபாடுற்ற பொருள் எட்டிபோல் துய்ப்பதற்காகாதென்க. இனி, பலாப்போல் துய்ப்புப் பொருள்களிலும் வேறுபாடு தோன்றுவதென்னை எனின், அஃதொன்றே அத் துய்ப்புப் பொருளுக்கு அரணாக நின்றது கண்டு கொள்க. அஃது எட்டித் தோற்றம் போல் வேட்பித்து ஊறுபடுத்தாது, வேட்பியாது நலம் பயப்பதாகியதை உய்த்துணர்க. இனி, வேட்பியாத தோற்றம் நலம் பயக்குமாறு போல் காட்சியளவானே பொலிவு குன்றிய உலகு நலம் பயவாது போவதேன் எனின், பொலிவு என்பது மருள் நீங்கிய மாசறு காட்சிக் குரியதாகலின், அத்தகையோர்க்குத் தோன்றுவதே அன்றி, இருள் தேங்கிய இழிவுறு காட்சியோர்க்குத் தோன்றுவதே ஈண்டுக் குறிக்கப்பெற்றதாம் என்க. இருண்ட அகக்கண் பெற்றோர்க்குத் தோன்றும் பொலிவும், ஒள்ளியார்க்குத் தோன்றும் பொலிவும் வேறு வேறாம் என்க. ஈண்டுப் புறத்தே பொலிவு நிரம்பியதாக இருளோரும், மருளோரும் காண்பதாகிய இவ்வுலக வாழ்க்கை, அகத்தே புரையோட்டம் உளவாக அருளோரும், தெருளோரும் காண்பதற்குரியதாக உள்ளது என்பது வலியுறுத்தப் பெற்றது.

மண்ணாகின்றே மனனே! - நிலைகுலையாத மனம், நிலை குலையும் மண்போலும் ஆகியது. மனம்-மன் என்னும் அடி நிலை கொண்டது. மன் - நிலைத்தல் நிலைத்தல் உடையதாகலின் 'மனம்' என்னும் பெயர் பெற்றது. என்னை? நிலையா வொன்றை நிலைத்தல் என்றது ஏன் எனில், அது நிலையா நிற்றல் கொண்டே நிலையாமை வாய்ந்தது எனக் கருதல் வேண்டா வென்பது குறித்தும், முயற்சியின் நிலைக்கும் திறன் வாய்ந்ததாகும் என்பது குறித்தும், உறுதிப் பொருளும், பண்பும் தோன்ற மனம் என்றனர் முந்து நூல் கண்ட முதுவோர். மெய்யறு தோற்றத்தை மெய் என்றாற் போலவோ எனில் அற்றன்று. உயிர் இவ்விடத்தே உறையுள் கொண்டது. மெய்யே எனத் தேற்றலான் உடலை மெய் என்றனர். என்னை? காண்பொருளாகிய உடலின் வெளிப்பாடு கொண்டே காணாப்பொருளாகிய உயிரின் உண்மை உணரப் படுதலின் மெய் என்றனர், தூசறு உணர்வால் துலங்கத் தோற்றிய மாசறு காட்சியின் மதிமன நுண்ணியர். இனி, நிலைக்குரிய தன்றிதன் தன்மை, நிலைக் குரியதே என வலியுறுத்துவான் வேண்டி இப் பொருளின் மெய்த் தன்மை புலப்படுத்த மனம் என்றனர். மெய்தனிப் பொருளன்று. உயிரொடும் பிற வொடும் கலந்த பல்பொருள் ஓருரு; பன்மூல வெளிப்பாடு. எனவே கோ ஏறும் கழுதை கோவேறு கழுதை எனப் பெயர் பெற்றாற் போல், உயிர் இருப்பதை மெய்ப்பிக்கும் உடலை மெய்யெனப் போற்றியும் தேற்றியும் கூறினர் என்க.

இனி மனம் நிலைப்பாடுற வளர்தலே அதன் மீமிசை நிலையாதலின் அது நிலை குலைதல் தாழ்வான மாந்த நிலையாம் எனக் கண்டு கொள்க. மனம் மக்களிடையன்றிப் பிறவுயிர்களிடத்தும் மங்கித் தோன்றுதல் உண்மையின், மக்கள்பால் புலரத் தோன்றிய நிலையினின்று வளர்ச்சியுறுதலே மாந்தத் தோற்றத்தின் சிறப்பாம் என்க. இவ்வழிச் சிறப்பெய்த வேண்டிய மனம் மண்போல் நிலை குலைதலுற்றது என்க. மண் உலகத் தோற்றத்தின் முதல்; நாற் பூதங்கள் நிரம்பிய ஐந்தாவது பூதப் பொருள். அத்தகையதோர் ஐம்பூதப் பொருளாகிய உடலில் மனம் என்னும் நிலைப்புப் பொருள் நிலைத்திருக்க வில்லையானால், இம் மண்ணிற்கும் உடலிற்கும் வேறுபாடுதான் என்னையோ என்று உன்னுக.

மாண்டொடு பொன்னாகின்றே பொய்யுடைப் போக்கே: பொய்யுடைப் போக்கு மாண்புடையதாகவும், பொன் போல் மதிக்கப் பெறுவதாகவும் உளது. பொய்-பொள் (வெறுமை-உள்ளீடற்றது) என்னும் வேரடியாகப் பிறந்த சொல். பொன்-பொலம் மிக்கது. பொல் என்னும் வேரடியாகப் பிறந்த சொல்லென்பதும், பயனும் முன்னரே குறிக்கப்பட்டன. மனம் நிலை குலைந்த பின் பொய் மாண்பென மதிக்கப் பெற்றது என்க.

வறிதாகின்றே அறிவே - மனம் நிலை குலைந்து, பொக்கு நிலை மதிக்கப் பெற்ற பின் அறிவு வறிதாக மதிக்கப் பெறுகின்றது என்க. வறிது- வறள். விளைவு இல்லது. வள்வறு வறுமை வறட்சி-வறண்டது. வள்-வெள்-வெறு-வெறுமை. அறிவின் விளைவு ஒன்றுமில்லை என்க. விளைவு-பயன். அறிவு நிலம் போல்வதாயின் அதனைப் பயன் கொளுவா வழி வறண்டு கிடத்தலால் வறிது நிலை எனப்பட்டது.

வானாட்குறி அதர் தப்பின்று குடும்பெனும் பயன் - குடும்பு நிலையால் எய்தப்பெறும் பயன் வாழ்நாளின் பெரு நோக்கினை அடையப் பெறுதல். அவ்வழி தவறிற் றென்க அதர்-வழி.

குடும்பு - கூடியுறைதல்நிலை, குடும்பு குடும்பம், குல்-குடு-கூடு : குல்-குலு-குலவு-குழு-குழும்பு. குல்-கல்-கல. கலாவுதல்-கலத்தல். உயிர்கள் கூடியுறைதலால் ஏற்படும் பெரும் பயன், வாழ்வின் வழி தப்பலால் இலதாகின்றது. அதர் தப்பவே பயனும் தப்பிற் றென்க.

முதியோர் முதுமை முகிழ்விறந்தன்று முதுமை-முற்றிய நிலை. முதுமை உடல் வழித் தெனினும், அறிவும், மனமும் அதன் வழி முதிர்வுற்று முகிழ்ச்சி யடைதல் இயல்பாயிற்றென்க. ஆயின் இக்கால் மனமும், அறிவும் முகிழ்வின்றி உடல் மட்டும் முதுமை யற்றது இழி நிலை என்க. முகிழ்விறந்ததுமலர்ச்சியுற்றது.

இளையோர் இளமை எழில் குலைந்தன்று - இளமை எழில் குலுங்குவதாய ஒரு பருவம் எழில் குலைதலால் இளமை சாம்பிற் றென்க, முதுமை மலர்ச்சி யறுதலால் அதன் வழிபட்ட இளமையும் எழில் குலைந்த தென்க. வித்து விளைவின்றி, செடி பொலிவுறாதாகலின், முதுமை முகிழ்ச்சியற, இளமையும் குலைவுற்றதென்க.

பெண்டிர் பெண்மை பெட்பிறந்தன்றே பெட்பு:வேட்கப் படுவதாந் தன்மை, இத் தன்மை அறுதலின் பெண்மையும் அற்ற தென்க, பெண்மை அறின் உலகம் மறவழிப் படுமென்க.

ஆடவர் ஆண்மை அறக்குலைந் தன்று - ஆண்மை ஆளுதல் தன்மை, ஆண்மை குறைவுற்ற தென்க. ஆண்மையும் பெண்மையும் நிறைவுற விளங்காமற் போமாயின் உலகு மறவுணர்வால் அழிக்கப் பெறுமென்க.

அறம் கூனின்று- அறம் கூனுத லுற்றது. கூன் வளைவு-குல்-குன்கூன். குல்லென் வேரடியில் நூற்றுக் கணக்கான சொற்கள் வளைதற் பொருளில் தோன்றியிருப்பதை மொழிப்பேரறிஞர் தேவநேயப்பாவாணரின் தமிழ் வரலாறு” என்னும் நூலிற் கண்டு கொள்க

பொருளரசாணையின் மறந்தலை நிமிர்ந்தன்று- பொருள் அரசு கொண்டு ஆனை (அதிகாரம்) செலுத்துதலின் மறம் தலை தூக்கிற்று என்க. நிமிர்தல் ஏக்கழுத்தம் பெறல்

மான் இழிந் தன்று - மானம் இழிநிலை யுற்றது. ஆண்மை குலைந்து, அறங் கூனி, பொருள் அரசோச்சி, மறம் தலை நிமிரவே மானமும் இழிந்து போன தென்க.

மணஞ்செய் கோலத்து மாண்பிழந் தன்றே- மணம்- இணையப் பெறும் தன்மை, மணத்தல்-இணைதல் சேர்தல், மள் என்ற வேரடியாகப் பிறந்த சொல், மள்-மண்சேர்ந்தது. மண் துகள் ஒன்றோடொன்று சேர்தலின் மண் எனப் பெயர் பெற்றது. சேராத மண் துகள்கள் உடையது மணல், மண்+ அல் = மணல், மள்+து- மண்டு, மண்டுதல் சேர்தல், நிறைதல். ஆண் பெண் சேர்தவின் மணம்’ என்றாயிற்று. இம் மன நிகழ்ச்சியில் இக்கால் பெருமை இலதென்க. ஆணும் பெண்ணும் இணைதல் உடலுறு புணர்ச்சியின் அடியில் மட்டுமன்றி உளமுறு புணர்ச்சியிலும் அடியொற்றிய தாகலின், புள்ளினும் விலங்கினும் நடைபெறும் சேர்க்கையைவிட மாந்தச் சேர்க்கை பெருமை பெறுவதாயிற்று. ஈண்டோ, இந்நிலை மனப்புணர்வின் வழியின்றி நேர்வதால் மாண்பிறந்த செயலாயிற்றென்க.

கணவன் மனைவியர் கட்டவிழ்த் தன்றே - மனம் பிணிக்காத மண மாகலின் கணவன் மனைவியர் கட்டு அவிழ்கின்ற நிலையாயிற்றென்க. கட்டுதல்-மணத்தல், மணத்திற்கு அடையாளப் பொருளாகிய தாலியையும் குறிக்குமென்று கொள்க. வெறும் உடலால் பிணிக்கப் பெற்ற கட்டு உடற் சூடு தணிந்த பின் அவிழ்தல் போல் மனக் கட்டு அவிழா தென்க. இக்கால் நடைபெறும் மணக் கட்டு மனக் கட்டன்றாக நிணக் கட்டாகலின் அஃது அவிழப் பெறுதல் இயல்பாயிற்று. நிணம்-கொழுப்பு-தசை-அரத்தம் இவற்றால் அமைந்த உடல்

அறிவியல் உடலியல் அடி இழிந்தன்றே -அறிவியல் பூதவியல், வேதியியல் முதலாய அடிப்படை நின்ற உண்மையியல். இவ்வறிவுகளான் தெளிந்து தேரப் பெற்ற உண்மைகளும், அவை கொண்டு நிறுவிய பல்லாயிரக் கணக்கான ஆக்கங்களும் மாந்தரின் வெறுமை நலத் துய்ப்புக்கே பயன்படுத்தப் பெற்று மேனோக்கம் இன்றிக் கீழ்மையுற்ற தென்க. என்னை? ஒளிக்கும் ஒலிக்கும் அடியாய மின்னும், அனற்கும் புனற்கும் அடியாய விண்ணும் அறிவியலால் வயப்படுத்தப்பெற்று மாந்தரின் உடல் துய்ப்புக்கே உதவுவன அன்றி, உளத் துய்ப்புக்குப் துணை நில்லாமை ஊன்றி உணர்க.

பொறியியல் மக்களின் பொறியரிந் தன்றே - கருவியறிவும் , புதுப் புனைவுகளும் மக்களின் ஐம்புல வுணர்களையும் குன்றச் செய்து, ஐம்பொறிகளையும் செயலறும்படி செய்தனவே யன்றி, மற்று அவற்றின் வளர்ச்சிக்குப் பயன்படாமை ஊர்திகள், ஆடிகள் முதலாய காட்டுப் பொருள்களால் நாட்டிக் கொள்க.

கான்படு விலங்கின் .... நோக்கியே - கான்படு விலங்கு என்று அடை தந்து பிரித்தது, மனைபடு விலங்குகளாய நாய், பூனை, குதிரை, மாடு முதலாய விலங்குகள் வாழ்வு பயன்படுதலும், கான்படுவனவாய அரிமா, வரிமா, கரிமா, நரிமா முதலாய விலங்குகளின் வாழ்வு பயன்படாமையும் காட்டுவான் வேண்டி அவை வாழ்வு பயன்படாமை கருதி, அவற்றின் ஒவ்வொரு முனைவும் அவற்றின் ஊன்வளர்ச்சிக்கான முனைவே என்றறிக. அத்தகைய முனைவே போல் இற்றை மாந்தரின் முயல்வும் எவ்வகை மாட்சியும் பெறாததாகி இழிந்தது என்க.

இவ்வகையாகிய தேர்ந்து கொள்ளப் பெறாத வாழ்க்கைக்கு மாந்தர் முயல்வு மாறுபட்டு வருதல் ஆரா விருள் சேர்ந்த அழிநிலைக்கு வழியாம் என்க. அவ்வழிநிலை நோக்கி இவ்வுலகம் விரைந்து செல்கின்றதாம் என்க!

தேரா வாழ்க்கை -தேர்ந்து கொளப்பெறாத வாழ்க்கை தேரா வாழ்க்கை என்றதால் தேர்ந்த வாழ்க்கை ஒன்றுண்டு என்பதும். அஃது ஒளி நிரம்பியதாக விருக்கும் என்பதும், அஃது ஒன்றே வாழ்நிலைக்கு வழிகாட்டுவதாகும் என்பதும் தெளியப்பெறும்.

திறம்புதல் - மாறுபடுதல், தில்-திர்-திரு.திருகு திரும்பு-திறம்பு-திருகு. மாறுபாடு.

ஆராவிருள் - பொருந்திய விருள். விலக்கலாகா விருள்.

“மாந்த வியல்பாந் தன்மைகள் எல்லாம் முறையே குலைந்தும், வறியதாகியும், சிதைவுற்றும், இறந்தும், இழிந்தும் அழிந்தும் படுதலால், அவை யடி யொட்டிய மாந்த வாழ்வின் இயற்கையும் மாறுபட்டதென்க: :படவே அதற்கு நிலைக் களனாக உள்ள உலகமும் இருள் நிரம்பிய அழிநிலை நோக்கி விரைந்து செல்வதும் இயல்பேயாம் என்க” என எதிரது கூறி இழிவது தடுத்தலாம் இப் பாடல் என்க.

இது பொதுவியல் என்திணையும், முது மொழிக் காஞ்சி என் துறையுமாம் என்க.