உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/பாடுக புலவீர்

விக்கிமூலம் இலிருந்து

58 பாடுக புலவீர்

பாடுக புலவீர் பீடுடைப் பாவே!
ஏவா அரைசின் எண்ணியது துணியும்
காவலர் போரீர் நீவிர்! இற்புகுந்து
யாவர் தேடினிர் என்னலும்; அம்மையீர்!
மேவறு சின்மொழி கடிந்து தலைக்கூடி” 5
மூவறு நாளா ஆவணத் துமிய
சூர்படு ஒதையும் எழுச்சியும் சூடுமா
ஊர்கொள் அமலை அறிந்திலிர் போலும்!
கலைபுகு கழகத்துப் புலைபுக,
சுவடிச் சிறாஅர் கவடியி னாட்ட 10
ஊனும் உறக்கமுந் துறந்து, பகலிரவாக்
காவற் படுப்பதுங் காண்கிலிர் போலும்!
இவ்வே மறுகின் எழுந்த கூட்டத்து
எம்மோன் ஒருவன் முன்பல் தெறித்துக்
குருதி பிதிரக் கூர்ங்கல் எற்றிக் 15
கடிதின் நுழைந்தோர் செங்கண் விடலை,நும்
இற்புறத்துக் கரந்தா னாக அவனைக்
கைப்படத் தொடர்ந்தேம் காட்டுதிர் என்ன, அம்
முதியோள் நடுக்குற வெழுந்து,
முன்றிலும் அகத்தும் மடையினுங் காட்டி20
ஒன்று மறிகிலே மென்றா ளாக,
வந்தோர் மனம்பெறக் கழிய, உட்புகுந்து
நென்னிறை குரம்பை ஒளியவுள் ளிறக்கிய
புன்றலைச் சிறுவனை அகவிப் புறந்துக்கி
அன்னைத் தமிழ்க்கே அவலங் கடிந்தோய் 25
நின்னை மகனாப் பெற்றிலேன் பதடியென
இளந்தலை முகர்ந்து குருந்துதோள் நீவி
வெல்க தமிழென விறல்பெற முழக்கி
மல்க நீர்விழி மறைப்பச்
செல்கென விடுத்த சீர்மை நினைந்தே!30

பொழிப்பு:

பாடுவீராக, புலவரீர் பெருமிதம் தோன்றும் படி யாக (இது போலும்) பாட்டினை. இது செய்க என்று கட்டளையிடார்(எனினும்) , அரசினரின் எண்ணம் இதுதான் என்று தெரிந்து செய்யத் துணிந்துவிடுகின்ற காவலர்கள் போலும், (இருக்கின்றீர்கள்) நீங்கள். (என்) வீட்டிற்குள்ளே (கேளாது) புகுந்து, யாரைத் தேடுகின்றீர்கள். என்று கேட்டதும், (அதற்கு அக்காவலர்கள்). அம்மையீர், (தமிழ்நாட்டின் கண் வந்து} பரவுகின்ற சிறுமொழி(யாகிய இந்தி)யை, (அவ்வாறு பரப்புதலை விரும்பாமல்) கண்டித்து, ஒன்று கூடி, கடந்த பதினெட்டு நாள்களாகக் கடைத்தெருக்கள் துாளிபடவும், அச்சங்கொள்ளும் (படி நடக்கும்)ஆரவாரங்களும், போராட்டங்களும், (அதன் விளைவாகக் காவலர்தம்) துமுக்கிச் சூடுகளும்இவ்வாறாக ஊரே அமர்க்களப்படும் நிலைகளை நீங்கள் அறியமாட்டீர்கள் போல் தெரிகிறது.’

‘(எனவே) கல்விபயிலும் இடங்களிலெல்லாம், புன்மையான செயல்கள் புகுந்தவாறு, நூல்களை எடுத்துச் சென்று பயில வேண்டிய மாணவர்கள், எங்களைக் கவடி விளையாடுகின்றவர்களைப் போலும் ஆட்டங் காட்டுகின்றனராக! அதனால், யாங்கள் உண்ணும் உணவையும், உறக்கத்தையும் அறவே கைவிட்டவராகப், பகலும் இரவும் (கண் விழித்துக்) காவல் செய்ய வேண்டியுள்ளதையும், தாங்கள் காணவில்லைபோல் இருக்கிறது.’

“இப் பக்கத்துத் தெருவில் எழுச்சிகொண்ட கூட்டத்தின் (ஆரவாரத்தில்) எம் காவலன் ஒருவனை முன்பல் தெறித்துவிழவும், அதனான் குருதி பீறிடவும், ஒரு கூரிய கல்லை எடுத்து வீசிவிட்டு, விரைந்து (ஓடிவந்து) இப்புறம் நுழைந்து, சிவந்த கண்களை உடைய ஒர் இளந்தையன், உங்கள் வீட்டின் உட்புறமாக ஒளிந்து கொண்டானாக அவனைப் பிடிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம்; (அவன் எங்கே இருக்கிறான்) என்று காட்டுங்கள்” எனவும்:

அம் முதியவள் உடல் நடுக்கத்துடன் எழுந்து, வீட்டின் முன்பகுதியிலும், உள்புறத்தும், (பின்னுள்ள) சமையற்கட்டிலும், (அவர்களை அழைத்துச் சென்று, அவன் இல்லாததைக் காட்டி), 'எங்கே போயிருப்பான் என்று ஒன்றும் கண்டுபிடிக்கக் கூடவில்லையே' என்று கூறினாளாக. அதனால் வந்திருந்த காவலர், மனம் நிறைவுற்றுச் செல்லலும், (அதன் பின்னை அவள்) வீட்டிற்கு உள்ளாகச் சென்று, நெல்லை நிறைத்து வைக்கும் குரம்பையின் உள்ளே ஒளியச் செய்வதற்காக இறக்கிவிட்ட, புல்லிய மென்தலையினையுடைய சிறுவனைக் கூவி அழைத்து வெளியே தூக்கிக் கொணர்ந்து, 'தமிழன்னைக்கு வந்த துயரத்தைக் கடிந்து நின்றாயே! நின்னை யான்) மகனாகப் பெறாத பதடியாகினேனே’ என்று கூறி அவனது இளந்தலையினை முகர்ந்து மூங்கில் போலும் இளந்தோளை நீவிக் கொடுத்துத் 'தமிழ் வெல்க' என்று வீறுணர்வுடன் முழக்கி, மண்டுகின்ற நீர் கண்களை மறைக்கும்படி, 'நீ சென்று விடு’ என்று விடுத்த சிறந்த செயலை எண்ணியே!

விரிப்பு :

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டுக் காவலர் மேல் கல்லெறிந்த இளந்தையன் ஒருவன், காவலரால் துரத்தி வரப்படுங்காலை ஆங்குள்ள இல்லமொன்றினுள்ளே ஓடிப் புகுந்தானை, முதியோள் ஒருத்தி நெற்குரம்பையினுள்ளே ஒளித்து வைத்துக் காத்து, அக்காவலர் வெளியேறிய பின்னை, வெளியில் விடுத்துப் போற்றிய சீர்மையைப் பாராட்டியது.

'மல்கு நீர்விழி மறைப்பச் செல்கென விடுத்த சீர்மை நினைந்தே, பாடுக புலவீர் பீடுடைப்பாவே!’ என இறுவாய்த்தொடையாக இணைத்துக் காட்டுக.

பாடுக புலவீர் பீடுநடைப் பாவே - பாடுங்கள் புலவர்களே (இத்தகைய) பெருமை மிகு பாடல்களையே!

புலவர்கள் இக்கால் பாடுபொருளாக, வீணான வெறுஞ் செயல்களை, வெற்றுச் சொற்களால், கற்பனை நயமும் வளமும் இன்றி, வெறிதாகப்பாடித் தம் புலமைத் திறனைப் புழுதியில் இறைக்கும் புல்லிய செயல்களைத் தவிர்த்து, இத்தகைய அச்சமும் நகையும், வீரமும் வெகுளியும் வியப்பும் உவகையும் அன்பும் அமைதியும் பொலிந்த, இலக்கிய நயஞ்செறிந்த பாக்களையே மக்கள் மனங் கொள்ளவும் நலந்துளும்பவும் பாடி மகிழ்தலும் மகிழ்வித்தலும் வேண்டும் என்னும் வேண்டுகையாகப் பாடியதாம் இப் பாடல். என்னை?

'ஏவா அரைசின் எண்ணியது துணியும், காவலர் வரவும் ‘சூர்படு ஓதையும் எழுச்சியும் சூடுமா, ஊர்கொள் அமலையும் என்பதில், அச்சமும்

'சுவடிச்சிறாஅர் கவடியின் ஆட்ட, ஊனும் உறக்கமும் துறந்து, பகலிரவாக் காவற்படுப்பதும்’ என்பதில் நகையும்

‘எம்மோன் ஒருவன் முன்பல் தெறித்துக் குருதி பிதிரக் கூர்ங்கல் எற்றிக் கடிதின் நுழைந்தோர் செங்கண் விடலை, தும் இற்புரத்துக் கரந்தானாக’ என்பதில் வீரமும்

அவனைக் கைப்படத் தொடர்ந்தோம்; காட்டுதிர்’ என்பதில் வெகுளியும்;

‘வந்தோர் மனம்பெறக் கழிய உட்புகுந்து நென்னிறை குரம்பை ஒளிய உள்ளிறக்கிய புன்றலைச் சிறுவனை அகவிப்புறந்துக்கி என்பதில் வியப்பும், உவகையும்

‘அன்னைத் தமிழ்க்கே அவலங் கடிந்தோய் நின்னை மகனாப் பெற்றிலேன் பதடியென, இளந்தலை முகர்ந்து குருந்து தோள் நீவி' என்பதில் அன்பும்

‘மல்கு நீர்விழி மறைப்பச் செல்கென விடுத்த சீர்மை நினைந்தே' என்பதில் அமைதியும்;

-இணைந்து வந்து, எண் சுவையையும் இப்பாடல் வெளிக்கொணர் வதை ஓர்ந்து உணர்ந்து மகிழ்க

-இனி, இத்தகைய சுவை நலங்கொழிக்கும் பாடல்களைப் பாடுவீர்களாக என்பதுடன், வீர இளையோனைக் காவல் கையகப்படுத்தாமல் கரந்து வைத்து வாழ்த்தி வழியனுப்பிய முதியோனின் சீர்மையை எம்மைப்போலும் நீவிரும் பாடுக என்பதாகவும் பொருள் கொண்டு போற்றுக என்பதுமாம்.

ஏவா அரைசின் ....... காவலர் - கட்டளையிடாமலேயே அரசினரின் நோக்கும் போக்கும் உணர்ந்து, அதைச் செயலாக்கத் துணிந்து நிற்கும் காவலர் என்க.

காவலர் போறீர்- காவலர் போல்வீர் என்பது, வகரங்கெட்டு, இடையினம் வலிந்து, நெடில் குறுகிற்று.

போல்தல் - போலல்-போறல் (தொல்-பொருள்களகா-3) போல்வீர் -போலீர்-போறீர் ( கவி.9-1, அகம் 29-12).

இற்புகுந்து... என்னலும்- எம் இல்லுள்ளே (கேளாது) புகுந்து, யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டலும்,

மேவுறு சின்மொழி - மேவுறுதலுறும் சிறிய மொழியாகிய இந்தி, சிறிய மொழி என்றது, வளமின்மையும், பரப்பின்மையும், செப்பமின்மையும், சிறப்பின்மையும் கருதி என்க.

கடிந்து- கண்டித்து, தலைக்கூடி ஒன்றுகூடி.

மூவறு நாளா - பதினெட்டு நாள்களாக

ஆவணம் துமிய- கடைத்தெரு துளிபட..

சூர்படு ஓதை - அச்சம் கொள்ளும்படியான போராட்ட ஆரவாரம். ஒதை ஓசை யென்னுஞ் சொல் திரிந்து பேரோசையைக் குறித்தது.

சூடு - துமுக்கிச் சூடு அமலை அமர்க்களப்படுத்தும் நிலை.

கலை புகு கழகம் - பள்ளிகளும் கல்லூரிகளும்,

புலை புக -புல்லிய செயல்கள் புக கல்விக்குத் தேவையற்ற போராட்டம் முதலிய ஆரவாரச் செயல்கள்.

சுவடிச் சிறா அர் - மாணவர்கள்.

கவடி-இரண்டு அணியினர் போராடும் ஒரு விளையாட்டு மாணவர்கள் காவலர்களை எதிரணியினராகக் கருதிக் கவடியாட்டத்தில் விளையாடுவது போல் ஆட்டங்காட்டினர் என்பது.

காவற் படுப்பது - காவல் காப்பது.

இவ்வே- இவ்விடத்தே மறுகு- தெரு.

எம்மோன் ஒருவன் - எம் போலும் ஒரு காவலன்.

பிதிர - வெளிப்பட

செங்கண் விடலை - போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதாலும், சினந்து எழுச்சி கொண்டதாலும் கண்கள் சிவந்து காணப்பட்ட இளந்தையன் இளந்தைப்பருவம் - பிள்ளைமைக்கும் இளைமைக்கும் இடைப்பட்ட பருவநிலை.

இற்புறத்து - வீட்டின் பக்கல்.

கரந்தானாக - மறைந்தான் ஆக,

கைப்படத் தொடர்ந்தேம் - கைப்பிடிக்கத் தொடர்ந்து வந்தேம்.

காட்டுதிர் - அவன் ஒளிந்துள்ள இடத்தைக் காட்டுங்கள்.

நடுக்குறவெழுந்து-முதுமையால் உடல் நடுங்கியவாறு எழுந்து முன்றில் வீட்டின் முன்புறம், அகம்வீட்டின் உட்புறம் மடையினும் சமையற்கட்டு உள்ள, வீட்டின் பின்புறம்.

மனம் பெறக் கழிய - மனம் நிறைவுற்ற, வெளியே செல்ல,

நென்னிறை குரம்பை - நெல் கொட்டிவைக்க உதவும் சிறிய தொம்பை! பெரிய குதிர்.

புன்றலைச் சிறுவன் - இளந்தல்ையை உடைய பள்ளிச் சிறுவன். அகவி கூவி அழைத்து,

பதடி - பதர் போன்றவள்.

அவன் போலும் போராட்ட உணர்வுடைய 9 வீரமகனைப் பெற்றிலாததால், தன்னைப் பதடி என்று கூறிக் கொண்டான் என்க.

குருந்து தோள் - இளம் மூங்கிலைப் போலும் மென்மையான தோள்.

விறல் பெற -வீறுணர்வு பெறும்படி

மல்குநீர் விழி மறைப்ப - மல்குகின்ற கண்ணிர் விழிகளை மறைக்கும்படி

செல்கென விடுத்த சீர்மை நினைந்தே - நீ சென்றுவிடுக என்று விடுத்த சிறந்த செயலை எண்ணியே; (பாடுக புலவர் பீடுடைப் பாவே என்று புணர்த்துக)

இளம் உள்ளம் ஒன்றின் தாய்மொழிப்பற்றையும், அவர்களை வேட்டையாடிய காவலர்களின் கொடுமையையும், அவர்களை ஆட்டிவைத்த அரசினர்தம் அச்சுறுத்தும் தன்மையையும், போராட்டம் நடந்த காலத்து, அதில் ஈடுபட்டாருக்குப் பொது மக்கள். துணையாயிருந்து, காத்தொழுகிய சீர்மையையும் வெளிப்படுத்தி உரைப்பதாகும் இப்பாடல்.

இப்பாடல் முன்னது திணையும், செந்தமிழ்ச்சீர்மை என் துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.