நூறாசிரியம்/மருட்கையுன் துணிவே

விக்கிமூலம் இலிருந்து
46 மருட்கை யுன் துணிவே


அம்ம, வாழி தோழி! நின் காதல்
இம்மா நிலத்தும் பெரிதே பொழிந்த
விசும்பின் தூய்தே, கதிரின் செவ்விது;
மணியின் காழ்த்தது; பனியின் தண்ணிது;
அறவோர் நெஞ்சினும் அகன்றது; நெறியின் 5
துறவோர் உளத்தினுந் திண்ணிது; மறவன்
கொடுங்கை அம்பினுங் கூரிதே அவன்றன்
நெடுங்குறி யெய்பினும் நேரிதே புலவர்
தடையறு கற்பனை மடையி னாழ்ந்தது;
கொடையருள் நெஞ்சினும் புடைநணி கனிந்தது; 10
நிணநீர்ப் பெருக்கி முரசுத்தலை செருக்கிப்
பணைக்கால் அலைத்த பருங்கூர்ங் கோட்டின்
களிறு வீழ்த்திய வரியினுந் துணிந்ததே!
குலந்தரு பிரிவைக் குலைத்ததுன் வளைக்கை!
அலர்தலை மிதித்துத் துமித்ததுன் அணிகழல்! 15
இழிநோக் கெரித்ததுன் எரியுமிழ் இணைவிழி!
பழியறத் துடைத்ததுன் பண்புறு நெஞ்சம்!
செங்கால் நாரையின் தூங்கி யிருந்து,
நுங்குறி பற்றினை; மருட்கையுன் றுணிவே!
சான்றவர் பாங்கின் ஊன்றிய நெஞ்சும் 20
தோன்றுயர் வினையின் நான்றிய உணர்வும்
தாழ்வறப் பெற்றோன் தடந்தோள்
வாழ்வெனப் பற்றி வரைந்தனை கொண்டே!

பொழிப்பு:

அம்ம! தோழியே! நீ என்றும் வாழ்வாயாக! நினது காதல் இவ்வுலகை விடப் பெரியது; நிறைந்து பெய்த மழைக்குப் பின்னுள்ள விசும்பைப் போல் தூயது. ஒளிக்கதிரைவிடச் செவ்வையானது, வயிரத்தைவிட உறுதியானது; பனியை விடக் குளிர்ந்தது, அறம் பேணுவார் நெஞ்சைவிட விரிந்து அகன்றது; நன்னெறியில் துறந்தார் உள்ளத்தைவிடத் திண்மையானது; மறவனுடைய வளைந்த கையின் அம்பைவிடக் கூர்மையானது; அவனின் நீண்ட குறியின் இலக்கை விட நேரானது: புலவரின் தடையில்லாத கற்பனை மடுவினும் ஆழமானது; கொடை மேவிய அருள் நெஞ்சத்தை விட முழுதும் மிகுந்த கனிவுடையது; மதநீரைப் பெருக்கி, தன் முரசு போன்ற தலையை நிமிர்த்துப் பெருத்த கால்களை அசைத்து வந்த பருமையும் கூர்மையும் சான்ற மருப்புகளை உடைய ஆண்யானையைப் போரிட்டு வீழ்த்திய வரிப் புலியை விடத் துணிவானது! வளையல்களனிந்த நினது கை, குலத்தால் ஏற்பட்ட பிரிவுணர்வைக் குலைத்துச் சிதைத்தது; அதன் மலர்ச்சியுற்ற தலையை வெற்றிக் காப்பிட்ட நின் கால்கள் மிதித்துத் தோய்த்தன; அதன் இழிவான நோக்கத்தை, அனலை கக்கும் நின் இரண்டு விழிகளும் எரித்துத் தீய்த்தன; குலப்பிரிவால் நேரவிருந்த பழியை உன் பண்பு சான்ற உள்ளம் துடைத்து நீக்கியது! சிவந்த கால்களையுடைய நாரையைப் போல், அமைந்திருந்து உன் குறியாகிய கணவனைப் பற்றிக் கொண்டனை ; உன் துணிவு வியப்பை உடையது, சான்றோர்கள் பக்கத்துப் பொருந்திய உள்ளமும் அவ்வுள்ளத்துத் தோன்றிய உயர்ந்த வினைப்பாடுகளில் பிடிப்புற்ற நல்லுணர்வும், என்றும் தாழ்வில்லாதபடி அமையப் பெற்றவனின், பருத்த தோளை, இதுதான் நமக்குற்ற வாழ்வு என எண்ணி அதனை இறுகப்பற்றி மணந்து கொண்டனை: (அதனால்)

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

குலப்பிரிவை மதியாது, கலப்பு மணம் புணர்ந்து கொண்ட தலைவியின் துணிவையும் முனைவையும் வியந்து பாராட்டித், தோழி வாழ்த்தியதாகும் இப்பாட்டு.

புன்மையோர் அமைத்த குலப்பிரிவுணர்வுகளுக்குக் குமுகத்தின் எத்திறத்தாரும் கட்டுப்பட்டு அடங்கி, அவற்றைத் துணிந்து விலக்காது, மணவினை முதலிய மங்கல வினைகளில் அப்பிரிவு மேற்கொண்டு வாழ்வு நடத்துகையில், தலைவி அப்பிரிவுணர்வை எதிர்த்து நின்று, தான் விரும்பிய காதலனையே மணந்து பொருந்திய நிகழ்ச்சியைத் தோழியொருத்தி வியந்து பாராட்டி வாழ்த்திப் பாடியதாகும் இது.

அக்குலப் பிரிவு மதர்த்துப் பொங்கி ஊரை அலைக்கழிக்கும் யானை போல்வது; அதைத் தன் துணிவால் புலியைப் போல் முறியடித்துப் பொருதி, வீழ்த்தினாள் என்கிறாள் தோழி.

முதற்கண், தோழி தலைவியின் காதலை வாழ்த்திப் பின்னர் அதன் தூய்மை நலன்களைக் கூறி மகிழ்ந்து, அதன்பின் அவள் அக்காதல் வெற்றி பெறுவதன் பொருட்டு, அதற்குத் தடையாயிருந்த குலப்பிரிவைப் போராடி பொருதியதைச் சுட்டி வியந்து அடுத்து, அதுவரை அவள் அமைதியாயும் உறுதியாயும் இருந்ததைப் பாராட்டிப் பின் அவளின் காதலனின் பெருமை கூறி உவந்து, இறுதியில் அவள் பெற்ற வெற்றி வாழ்வை போற்றிக் கூறினாள் என்க.

அம்ம! - கேட்பித்தற் பொருளில் வரும் விளி. நீ கேட்பாயாக!

வாழி தோழி - நீ பெற்ற மணவாளனுடன் என்றென்றும் தோழியே, நீ வாழ்வாயாக!

நின் காதல்....பெரிதே- நின்னுடைய காதல் திறம் இவ்வளவு பெரிய உலகத்தைப் பார்க்கினும் மிகப் பெரியது.இயற்கையின் தோற்றமாகிய இவ்வுலகின் இயக்கமும், அதன்கண் நின்று நீடும் உயிர்களின் வாழ்க்கைத் தொடரியக்கமும் மாந்தர் அறிவுணர்வுக் கெட்டாத ஆற்றல் சான்றன. ஆனால் அவற்றினும் நின் காதல் யாராலும் கணித்துக் கூற முடியாத பேராற்றல் வாய்ந்ததாகலின், அஃது இவ்வுலகினும் பெரிது ஆகின்றது.

பொழிந்த விசும்பின் தூய்தே - மழை முகில் கட்டியிருந்து, மழையாக அறப் பொழிந்த பின்னர் உள்ள கலங்கமற்ற வானத்தைப் போலும் நின் காதல் துய்மையானது.

தூய்மைக்குக் கலங்கமற்ற வானத்தை உவமையாகச் சொன்னாள் வெறுந் துய்மையான வானம் என்னாது, நிறைந்து மழை பொழிந்த பின்னர் உள்ள மாசற்ற வானத்தை உவமை கூறியது, அதன் குளிர்மையும், அகற்சியும், உயர்வும் கருதி என்க. மேலும் நீலவானம் அன்பின் பெருக்கிற்கு ஒர் அடையாளமும் ஆம். மழை பொழியாத வானம் வறட்சியும் களங்கமும் உள்ளதென்க.

கதிரின் செவ்விது - சிறிதும் கோட்டமில்லாத ஒளிக்கதிரைப் போலும் செப்பமானது.

மணியின் காழ்த்தது - உறுதியில் வயிரமே வலிதாகலின் அது போலும் வலியது என்றாள்.

பணியின் தண்ணிது - பனியைப் போலும் குளிர்ச்சி மிக்கது.

அறவோர்....அகன்றது - அறம் செய்வோர் நெஞ்சினும் அகற்சி சான்றது. அறவுணர்வு உடல், உயிர்க் கட்டுகளைத் தாண்டி அன்பாக விரிந்து, அருளாகப் படர்ந்து நிற்பதாகலின் அகற்சிக்கு அதனை உவமித்து, அதனினும் அகன்றது என்றாள்.

நெறியின்....திண்ணிது - நெறிப் படத் துறந்தவர் தம் உள்ளத்தினும் உறுதி சான்றது. நெறிப்படத் துறவாதார் உள்ளம் உறுதியிழக்குமாதலின் நெறிப்படத் துறந்தார் உள்ளத்தை உவமை கூறினாள் என்க. என்னை? ‘நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வார்’ என்றாராகலின்,

மறவன்....கூரிதே வில்லாண்மை வல்ல மறவனின் வளைந்த கையில் உள்ள அம்பை விடக்கூரியது. தான் கொண்ட குறி தப்பாமல் சென்று தைப்பதற்கு அம்பு கூரியதாக அமைய வேண்டுவது போல, தலைவியும் அவள் கொண்ட காதல் குறியாகிய காதலனைச் சென்று சேர்வதாகிய அவள் அன்புணர்வும் மிகக் கூரியதாகும் என்றாள். இனி, அதனினும் கூரியது என்றது அம்பு தைப்பது ஒரு பருப்பொருளையோ, ஒரு அஃறிணைப் பொருளையோ என்றிருக்க, இவன் அன்புணர்வாகிய அம்பு தைத்துப் பற்ற வேண்டுவது ஒரு மாந்த உயிரையும், அதன் நுண்பொருளாகிய உள்ளத்தையும் ஆகலின், அதனினும் கூர்மையானது இதுவென்றாள் என்க.

அவன்றன் ..... நேரிதே- அவன் தான் கொண்ட நெடுவதாகிய குறிக்கு எய்யும் அம்பு செல்லும் வழியினும் நேரானது. அம்பு செல்லும் வழி மிக நேராக அமைவதாகலின் அதனினும் நேரானது என்றாள். என்னை? அன்புணர்வு அவ்வம்புக் குறியினும் நெடிது பாய வேண்டியிருப்பதால், செலவு நோக்கியும் தொலைவு நோக்கியும் அதனினும் நேரிது என்றாள் என்க.

புலவர்....ஆழ்ந்தது - புலவர் தம் தடையில்லாத கற்பனை என்னும் ஆழமான மடுவை விட ஆழமானது. தலைவியின் காதல் உணர்வு புறத்தோர் எளிதே உணரவியலாத அளவிற்கு மிக ஆழமானது என்று குறிப்பிடவேண்டி, அதற்கு ஈடாகத் தடையில்லாத கற்பனை வளஞ்சான்ற புலவர் தம் ஆழமான உணர்வை எடுத்துக் கூறி, அதனினும் ஆழமானது என்றாள். தடையற்ற கற்பனை உணர்வு மேம்பட்ட புலவர்க்கே கைவரப் பெற்றதாகும் என்க.

கொடையருள்....கனிந்தது - கொடையுணர்வு சான்ற அருள் நெஞ்சினும் முழுமையாக மிகவும் கனிந்த உணர்வுடையது. கொடை உள்ளஞ்சான்றவர் தம் புற உடைமைப் பொருள்களையே பிறர்க்கு ஈகஞ்செய்யும் அருள் உணர்வு கொண்டவராய் இருப்ப, இவள் தன்னையும், தன் உயிரையுமே தன் காதலன் பொருட்டு ஈந்தாளாகலின், அவர்தம் உணர்வினும் இவள் காதல் உணர்வு மிகவும் கனிவுடையது என்றாள் என்க.

நிணநீர்ப் பெருக்கி - உணர்வெழுச்சியால் மத நீரைப் பெருக்கி.

முரசுத்தலை செருக்கி - முரசு போலும் திரண்டு பருத்துள்ள தலையை நிமிர்த்தவாறு.

பனைக்கால் அலைத்த - பருத்த கால்களை அலை போலும் அசைத்துக் கொண்டு வரும். பருங்கூர்ங் கோட்டின் களிறு - பருத்த கூரிய மருப்புகளையுடைய ஆண் யானையை.

வீழ்த்திய வரியினும் துணிந்ததே - (அத்தகைய ஆண் யானையைப்) போரிட்டுக் கொன்று வீழ்த்திய வரிப்புலியை விடத் துணிவானது (நின் காதலுணர்வு) என்றாள் என்க.

ஈண்டு ஆண்யானையும் அதன் மதர்ப்பெழுச்சியும் சாதி வேறுபாட்டு உணர்வுக்கு உருவகமாகக் கூறப்பெற்றன. குமுகாயத்தில் மக்களிடை வேரூன்றிக் கிடக்கும் சாதியுணர்வானது, ஒரு மதம் பிடித்துத் தலை செருக்கிக் கால்களை அலைக்கழித்து வரும் ஒர் ஆண் யானை போல்வது. அவ்வுணர்வு அடங்கியிருப்பது போல் இருந்து, அவ்வப்பொழுது எழுச்சி கொள்வது, யானையிடத்து அடங்கியிருந்து அவ்வப்பொழுது எழுச்சி கொள்ளும் மதம் போல்வது. மதம்-வெறி. தலை செருக்குதல் என்பது அச்சாதியுணர்வால் பெருமை கூறிச் செருக்குதல். பனைக்கால் அலைத்தல் என்பது, அச்சாதியுணர்வால் பிற அன்பு, அறம், ஒப்புரவு போலும் மென்மையும் உயர்வும் சான்ற நல்லுணர்வுகள் மிதிக்கப் பெற்று நிலை குலையுமாறு அலைவுறுத்தல் என்றபடி பருங்கூர்க்கோடு என்பது, பெருமையும் ஆரவாரிப்பும் வன்மையும் கொண்ட சாதி அடையாளங்கள். களிறு என்று சாதியுணர்வை, ஆண் யானையாக உருவகித்தது, பெண்கள் இயல்பாகவே அச்சாதிப் பிரிவுகளைப் பொய்யாக்கும் கலவைக் கூடலுக்கு இசைந்தவர்களாகையால், ஆண்களாலேயே அச் சாதிக்கட்டு வலிப்பெற நின்றது என்பான் வேண்டி என்க. வீழ்த்துதல்-போரிட்டுத் தோல்வியுறச் செய்தல் அழித்தல்.

தலைவியை வரிப்புலியாக உருவகித்தது, சாதி வேறுபாடுகளுடன் அவள் பொருத எழுச்சியையும் முனைப்பையும் காட்ட வேண்டி என்க. ஓர் ஆண் யானையின் எழுச்சியை விடப் புவியின் சீற்றம் வலிதோ என்பார், ‘யானைவெரூஉம் புலிதாக்குறின்’ என்னும் கருத்தை ஓர்க.

இனி, அவ்வ்ரிப்புலியினும் துணிவானது இவள் காதலுணர்வு என்றது, அவ்வரிப்புலி தன்னைக் காத்துக் கொள்ளவே, அவ்வியானையை எதிர்த்துப் போரிட்ட நிலையில், இவள் தன்னோடு தன் காதலனையும், காக்கவும் மீட்கவும், யானையினும் வலிதாகிய அச் சாதிப் பாகுபாடுகளுடன் புலியினும் துணிவாகப் போரிட வேண்டியிருந்ததால் என்க.

குலந்தரு....வளைக்கை - குலங்களால் ஏற்படுத்தப் பெற்ற உயர்வு தாழ்வெனும் பிரிவுணர்வை நிலைகுலையும்படி செய்தது வளையல்களனிந்த நின் கை.

அலர்தலை....அணிகழல் - சாதிகளின் மலர்ச்சியுற்ற தலையை இனி மலர்ச்சியுறாதவாறு, மிதித்துச் சிதைத்தது, கழல் அணிந்த நின் கால், இழிநோக்கு ... இணைவிழி - சாதி வேறுபாட்டின் இழிவான நோக்கத்தை எரித்துத் தீய்த்தது, தீயை உமிழும் நின் கண் இணைகள்.

தான் கொண்ட காதலில் வெற்றி பெற்றுக் கலப்பு மணம் புணர்ந்து கொண்டாளாதலின், அச்சாதி வேறுபாட்டை நிலை குலையும்படியும், மிதித்துச் சிதைவுறுமாறும், எரித்துத் தீய்க்கவும் செய்தாள் என்க,

பழிபற....நெஞ்சம் - குலத்தால் வேறுபட்ட இருவரும் மனம் ஒன்றிக், கொண்ட காதல் நிறைவேறாது பொய்க்கும் என்று சாதியுணர்வினார் பேசிய பழிச்சொல்லை இல்லாமற் போகும்படி துடைத்தல் செய்தது, பண்புற்ற நின் நெஞ்சம்.

செங்கால் நாரையின் - சிவப்பு நிறக் கால்களை உடைய் நாரையைப் போல்.

தூங்கியிலிருந்து - மனம் பதறாமல் காலம் பொருந்தும் வரை அமைந்திருந்து. ‘தூங்குக தூங்கிச் செயற்பால' என்றாராகலின்.

நூங்குறி பற்றினை - நுன் குறியாகிய நின் காதலனைக் கைப்பற்றிக் கொண்டனை.

மருட்கை உன் துணிவே - இந்த உன் துணிவு வியப்புடையது.

சான்றவர்....நெஞ்சம் - சான்றோர் மருங்கில் பொருந்தி, அவர்தம் நோக்கினும் போக்கினும் கருத்துக் கொண்ட உள்ளமும்,

தோன்றுயர்....உணர்வும் - உள்ளத்தே தோன்றுகின்ற உயர்ந்த உணர்வின் அடிப்படையாக மலர்ந்த வினைகளில் கட்டப் பெற்றுத் தொங்கிய உள்ளமும்.

தாழ்வறப் பெற்றோன்தடந்தோள் - தாழ்வில்லாமல் அமையப் பெற்றவனின் பருத்த தோளை.

வாழ்வெனப் பற்றி - இதுவே நமக்குற்ற வாழ்வு என இறுகப்பற்றி.

வரைந்தனை கொண்டே - அவனை மணந்து கொண்டனை நீயே!

தோழியே! இதனைக் கேட்க! நீ என்றும் வாழ்வாயாக; நின் காதல் இவ்வுலகினும் பெரியது; பொழிந்த விசும்புபோல் தூயது; கதிர் போல் செப்பமானது; மணிபோல் உறுதியானது; பனிபோல் குளிர்மையானது; அறவோர் நெஞ்சைவிட அகன்றது; முறைப்படத் துறந்தோர் உள்ளத்தை விடத் திண்ணியது; மறவன் கை அம்பைவிடக் கூர்மையானது; அவன் இலக்கை விட நேரானது; புலவரின் கற்பனை மடுவைவிட ஆழமானது: கொடை சான்ற உள்ளத்தை விடக் கனிந்தது; யானையை எதிர்த்துப் போரிட்டு வீழ்த்திய புலியைப் பார்க்கினும் துணிவு கொண்டது; நின் வளையல்களனிந்த கை குலப்பிரிவைக் குலைத்தது நின் கழல் அணிந்த கால் அதன் தலையை மிதித்துத் துவைத்தது; உன் இரண்டு விழிகளும் அதன் இழிந்த கோட்பாட்டை எரித்துத் தீய்த்தன ; உன் பண்புடைய நெஞ்சம் அதனால் வரும் பழியைத் துடைத்தது செங்கால்களையுடைய நாரையைப்போல் அமைந்திருந்து உன் குறியாகிய கணவனை நீ பற்றிக் கொண்டனை, உன் துணிவு வியப்பானது; சான்றோர் துணையோடு உயர்ந்த வினைகளில் நாட்டம் கொண்டவனின், பருத்த தோள்களை நீ வாழ்வு இதுதான் என்று விடாமல் பற்றி மணந்து கொண்டனையே’ என்று வேறு குலத்தவன் ஒருவனை நயந்து காதலான் மணந்து மனையறம் புகுந்த தலைவியை வாழ்த்தியும் பாராட்டியும் உரைத்தாள் என்க. -

இது முல்லை என் தினையும் பாங்கி வாழ்த்தல் என்னுந் துறையுமாம் என்க.