நூறாசிரியம்/மறல்கொடு நெஞ்சின் மாமகன்

விக்கிமூலம் இலிருந்து

53 மறல்கொடு நெஞ்சின் மாமகன்


ஆற்றிலம் என்றே அழுங்கினர் சான்றோர்!
நோற்றிலம் என்றே நொந்தனர் முதியோர்!
பெற்றிலம் என்றே ஆடவர் புலம்பினர்!
தாயர் ஆகிலம் என்றனர் தாயர்!
உடப்பிறந் திலமே என்மார் இளையோர்! 5
படற்கிலம் நோக்கெனப் பாவையர் கலங்கினர்:
முந்தினம் அலமென நைந்தனர் உழையோர்!
பிந்தினம் அலமெனக் காவலர் பிதற்றினர்!
முதிராச் சிறுமொழி முனிந்து முத்தமிழ்க்
கதிரெரி எஃகம் அணிமுன் னின்று10
மறல்கொடு நெஞ்சின் மாமகன்
விறல்பெறத் தாங்கி வீழ்ந்த ஞான்றே!

பொழிப்பு :

(இத்தகு வீறு பொருந்திய மறச்செயலை நாம் நம் வாணாளில்) ஆற்றிலமே என்று உள்ளம் வருந்தினர் நன்று எண்ணி நல்லனவே செய்யும் அறிஞர்; (இது போலும் வீரனை நாம் மகனாகப் பெறுதற்கு நாம் நோன்பு) நோற்ற திலமே என்று எண்ணி நோகலுற்றனர், முதியவர்கள்; இவனனைய ஒர் ஆண்மகனை யாம் பெற்றிருக்கவில்லையே என்று) ஆடவர்கள் வாயரற்றிப் புலம்பினர்; (இவனனைய ஒரு மறவனுக்கு) நாம் தாயராக வில்லையே என்று கூறினர்,தாய்மார் பலர் (இவன் போலும் ஒருவனொடும்) நாம் ஒரு வயிற்றில் பிறக்கவில்லையே என்று இளைஞர்கள் உரைத்தனர் : (இவனைப் போலும் ஒருவனின்) கண்களில் நாம் படவும் காதலுறவும் வாய்ப்பிலையே என்று இளநங்கையர் மனம் வருந்தினர்; (இவன் செய்தது போலும் ஒரு மறச் செயலைச் செய்தற்கு நாம்) முந்திக் கொண்டோம் இலமே என்று இவன் நண்பர்கள் உள்ளம் துயருற்றனர்; (ஐயகோ, நம் வேட்டெஃகத்தால் வெடியுண்டு இவன் மாய்ந்திடாதவாறு) நாம் நம் செயலில் சிறிது பிந்திக் கொண்டோம் இலையே என்று (இவனைச் சுட்ட) காவலர் மாறுமொழி கூறி வாய் பிதற்றினர்; அண்மையில் தோன்றி, இலக்க்ண இலக்கியங்களால் முற்றி முதிர்ச்சியுறரத் சிறுமை மொழியாகிய இந்தியை-அதன் திணிப்பைப் பொறுத்துக் கொள்ளாமல், சினங்கொண்டு, முத்தமிழ் நலனுக்காக, தீக்கதிர்களை உமிழ்கின்ற வேட்டெஃகம்(துமுக்கிகள்) சூழ வைத்த காவலர்களின் முன்னர் அஞ்சாமல் எதிரேறி நின்று; வீரங்கொண்ட நெஞ்சையுடைய பெருமகனாகிய அரசேந்திரன் என்னும் மாணவன் தான் கொண்ட கொள்கை வெற்றி பெறும்படி, தன்மேல் வந்து தாக்கிய எஃகுக் குண்டுகளைத் தாங்கி, அதனால் உயிர் பிரிந்து வீழ்ந்த அந்த பொழுதிலே!

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

முதிராச் சிறுமொழி இந்தி முனிந்து, முத்தமிழ் காக்க முன்னின்று, வேட்டெஃகம் தாக்கி வீழ்ந்த, அண்ணாமலைப் பல்கலைக் கழக அரசேந்திரனைப் பாடியது, இது.

இந்தியெதிர்ப்பில் உயிர் நீத்த அரசேந்திரனையும் அவன் வீரச் செயலையும், கேட்டபொழுது, சான்றோரும், முதியோரும், ஆடவரும், அன்னையரும், இளையோரும், பாவையரும், உழையோரும், காவலரும் அழுங்கலாகவும், ஆற்றிலராகவும், இரங்கலாகவும் என்னென்ன கூறி வருந்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

‘இத்தகு வீறுமிக்க ஒரு வீரம் பொருந்திய செயலை நாம் நம் வாழ்நாட்கண் செய்ததில்லையே’ என்று சான்றோர் ஆற்றாமையால் வருத்தினர்.

முதியவர்கள் 'இத்தகைய வீரன் ஒருவனை நாம் மகனாகப் பெறுதற்குத் ‘தவம் செய்ய வில்லையே’ என்று மனம் நொந்து கூறினர்.

‘இவன் போலும் ஓர் ஆண்மகனை நாம் பெறாமற் போனோமே என்று ஆடவர்கள் புலம்பிக் கொண்டனர்.

‘இத்தகைய வீரன் ஒருவனுக்கு நாம் தாயாக வில்லையே’ என்று அன்னைமார் மனம் வருந்தினர்.

‘இன்னவன் ஒருவனுடன் நாம் உடன் பிறந்திலமே ‘ என்று இளைஞர்கள் வருந்தினர்.

‘இவனைக் காதல் செய்யும் வாய்ப்பு நமக்கு கிட்டிலையே என்று கன்னிப் பெண்கள் கலங்கினர்.

இவனுடன்.தோழர்களாக நாம் இருந்தும், இவ்வீரச்செயலுக்கு நாம் முந்திக்கொள்ளவில்லையே’ என்று அவன் தோழன்மார் நெஞ்சம் நைந்தனர்.

‘ஐயகோ, இத்தகு ஒரு மறவனை நாம் கொன்றுவிட்டோமே! நாம் சற்றுப் பிந்தி வந்திராமற் போனோமே! அக்கால் இவன் அடிபட்டுச் சாகாமல் இருக்க வாய்ப்பேற்பட்டிருக்குமே ! என்று காவலர்களும் பலவாறு பித்துப் பிடித்தவர் போலும் வாயரற்றிக் கொண்டனர்.

-இவ்வாறு பலரும், அவ் வீரமகனாகிய அரசேந்திரன், இந்தி மொழிப் போரில் குண்டடிபட்டு உயிர் துறந்தபொழுது, பலவாறாக எண்ணி, உரைத்துத் தம் வருத்தத்தைத் தீர்த்துக் கொண்டனர் என்றவாறு என்க.

ஆற்றிலம் - ஆற்றி இலம் என்னும் சொற்கள் புணர்ச்சியில் இடைக் குறைந்து நின்றன. ஆற்றுதல் நன்றாற்றுதல் - நல்லது செய்தல்.

அழுங்கினர்- வருந்தினர், நெஞ்சுள் வருந்துதல்.

சான்றோர் - சான்றாகி நிற்பவர். பிறர்க்கு எடுத்துக்காட்டாகி நிற்கும் பெருந்தகையாளர்.

நோற்றிலம்-நோற்று இலம்-நோன்பு செய்திலம் முதியோர் நொந்தனர் என்றிருத்தலின், முதுமையில் கடந்த காலத்திற்கு வருந்துதல் என்க.

பெற்றிலம்- பெற்று இலம் பெற்றிருத்தல் இல்லேம். பெறற்குக் காரணமாயினர் அவராகவின் ஆடவர் புலம்பினர் ஆயினர்.

தாயர் ஆகிலம் தாயர்: வெறுமனே தாயர் ஆகிலம் எனின், தாய்ப்பேறே வாயாதவர் என்றாகுமாகலின், அஃதில்லாமை குறிக்கத் தாயர் என்று தம் பேறு குறித்தனர் என்க.

உடப் பிறந்திலம் - உடன் பிறந்திலம் என்பன வலித்துப் புணர்ந்தன

படற்கிலம் நோக்கு - நோக்கில் படுதற்கு இலம்.

கலங்குதல் - மனமும் கண்ணும் ஒருசேரக் கலங்கி வருந்துதல்.

உழையோர் - பாங்குளார். நண்பர்.

பிந்தினம்-பிதற்றினர்' பிந்தினோம் அல்லம் எனல் நிகழ்ச்சி நடந்த பின்னைக் கூறுதலாகலின் பிதற்றுதல் ஆனது.

முதிராச் சிறுமொழி - வளர்ச்சியுறாத சிறிய பயன்தரும் இந்தி மொழி.

முனிந்து- அதன் புகுதலைக் கடிந்து வெறுத்து.

முத்தமிழ்க்கு அதிர் எரி எஃகம் அணிமுன் நின்று - முத்தமிழ் காத்தலின் பொருட்டு, அதிர்கின்ற ஒலியுடன் எரியுமிழ்கின்ற வேட்டுக் குழல் தாங்கிய அணியினர் முன்னே துணிந்து நின்று.

மறல் கொடு நெஞ்சின் மாமகன் - வீரம் கொண்ட நெஞ்சுடைய பெருமை மிக்கவன்.

விறல்பெறத் தாங்கி - வெற்றி பெறும்படி நெஞ்சில் ஏற்று.

வீழ்ந்த ஞான்று - உயிர் கழன்று விழுந்த பொழுது,

இப்பாடல், 1965இல் தமிழகத்தில் நடந்த இந்திமொழித் திணிப்பை எதிர்த்தெழுந்த போரில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அரசேந்திரன் என்னும் மாணவன் காவல் சூட்டைத் தாங்கி மடிந்தபொழுது, அவன் வீரப் பிறப்பைப் பலரும் பாராட்டியுரைத்ததைக் கேட்டுப் பாடியது.

இது, செந்தமிழ்த் தும்பை என் திணையும், மொழி மறம் என் துறையும் என்க. திணையும் துறையும் புதியன.