நூறாசிரியம்/வியப்பினும் வியப்பே

விக்கிமூலம் இலிருந்து

76 வியப்பினும் வியப்பே


சென்றுநொந் தார்வழிச் செல்கிலர் இலரே
சென்றுய வென்றார் செவிகொள் ளலரே
கண்டுழித் தேர்ந்துங் கைப்பற் றலரே
தண்டிலா விழியிலி தவிப்பென உண்டலுக்
கொருதுறை யின்றிப் பொய்யுரை குயிற்றிக் 5
கரவுகைக் கொண்டே உறவு தழீஇ
ஓடுநீ ருருட்ட உருசிறுத் தழியும்
பீடுறு பெருங்கல் போலப் பிழையிலாது
உளமும் பேணலர்; உடலும் பேணலர்;
வளமுந் துறுத்தும் வாழ்வது மின்றி 10
எழுந்தலைத் தயின்றே திலராய்
விழுந்துயிர்ப் படங்கல் வியப்பினும் வியப்பே!


பொழிப்பு:

முன்னர்த் துன்புற்றவர்கள் சென்ற வழியில் செல்லாதவர்கள் இலர்; இந்நெறியைக் கடைப்பிடித்தொழுகி ஈடேறுக என்ற சான்றோர்தம் அறிவுரையைக் கேட்டு நடந்தாரல்லர், தாமே கண்டு நல்லதெனத் தெளிந்தகாலையும் அதனைக் கடைப்பிடித்து ஒழுகினாரல்லர்; ஊன்றுகோல் இல்லாத குருடன் செல்வழி யறியாது தவிப்பது போல உணவின் பொருட்டு ஒரு முறையுமின்றிப் பொய்யைப் புனைந்துரைத்தும் வஞ்சகக் செயல்களைக் கைக் கொண்டும் உறவாடி, ஓடுகின்ற யாற்றுநீரால் உருட்டிச் செல்லப் பெற்று வடிவம் சிறிதாகி அழிகின்ற, உயர்ந்து நின்ற பெரிய கல்லைப் போல; பிழையின்றி உள்ளத்தையும் உடலையும் போற்றிக் கொள்ளாதவராய், செல்வத்தைத் திரட்டி வைத்திருந்தும் அமைதியுற வாழாதவராய் எழுச்சிகொண்டு அலைந்தும் உண்டும் ஏதுமற்றவராய்ச் செயலிழந்து கிடந்து உயிரை விடுவது வியப்பான வற்றுளெல்லாம் வியப்பாம்!

விரிப்பு:

இப் பாட்டு புறப்பொருள் சார்ந்தது.

துன்பத்திற் கிடனான வழி என்று அறிந்து தவிர்க்காமலும், சான்றோர் கூற்றைக் கேட்டு நடவாமலும், தாமே கண்டு தெளிந்த நெறியையுங் கடைப்பிடிக்காமலும் தவிக்கின்ற மக்கள், உணவின் பொருட்டு முறையேதுமின்றிப் பொய்யுரையும் வஞ்சக நடத்தையுங் கொண்டு உறவாடித் தம் உள்ளத்தையும் உடலையும் நெறிதவறாது போற்றிக் காவாமலும் செல்வத்தைத் திரட்டி வைத்திருந்தும் சிறப்புற வாழாமலும் முனைப்புற்று அலைந்து உண்டு ஏதுமில்லாதவராய்க் கிடந்து உயிர்விடுதல் கண்டு வியப்புற்றுப் பாடியது இப் பாட்டு.

சென்று நொந்தார்.இலரே - முன்னர்ச் சென்று துன்புற்றவர்கள் கடைப்பிடித்த வழி துன்பத்திற்கு இடனானது என்று அறிந்தும் அவ்வழியே யாரும் செல்லாமல் இல்லை.

அறிந்தும் செல்லுதலின் முரண்பாடு தோன்ற, அவ்வழியிற் செல்வாரும் உளர் என்பதனைச் செல்கிலர் இலர் என எதிர்மறை வாய்பாட்டாற் கூறினார்.

சென்று உய என்றார் செவி கொள்ளலரே- இவ்வழியைக் கடைப்பிடித்து ஈடேறுக என்ற சான்றோர்தம் அறிவுரையையும் கேட்கின்றார் இலர்.

உய்க என்றார்-சான்றோர் செவிகொள்ளற் பாலனவாதலின் அறிவுரை என்பது பெறப்படும்.

கேட்கின்றார் இலர் என்பது கேட்டுச் செயற்படவில்லை என்னும் பொருட்டு.

கண்டுழித் தேர்ந்தும் கைப்பற்றலரே- தாமே கண்டு தெளிந்த காலையும் அந்நெறியில் நடக்கின்றார் இலர்.

மேற்கூறியாங்குப் பார்த்துங் கேட்டும் அறிந்த வழியில் நடவாதது மட்டுமின்றித் தம் பட்டறிவாற் கண்டு தெளிந்த வழியிலும் நடவாதது வியப்புக்குரியதாயிற்று.

தண்டிலா விழியிலி தவிப்பு என- ஊன்று கோல் இல்லாத குருடன் செல்வழி யறியாமல் தவிப்பது போல,

தண்டு- ஊன்றுகோல்

சான்றோர் கூற்றைக் கேளாமையின் ஊன்று கோல் இன்மையும், தன்வழியிற் செல்லாமையின் விழியின்மையும் கூறப்பட்டன.

என உவமஉருபு.

உண்டலுக்கு ஒரு துறை.உறவு தழீஇ: உணவு உண்டலின் பொருட்டு வரம்பின்றிப் பொய்யைப் புனைந்துரைத்தும் வஞ்சக நடத்தையை மேற்கொண்டும் உறவாடி

மேற்கண்டாங்கு நெறியுற வாழாமல் உணவு தேடுதலையே பெரும்பாடாய்க் கொண்டமையின் உண்டலுக்கு என்றார். உணவுகொள்ளுதல் தேவையே எனினும் அதன் பொருட்டுப் பொய்யுங் கரவடமுங் கொண்டு போலிமையாய் உறவாடல் வியப்புக்குரிய தாயிற்று.

‘பொய்மையும் வாய்மையிடத்த’ என்பவாகலின் வாளா கூறாது துறையின்றி என்றார்.

துறை- முறையான வழி.

பொய்யை மெய்போலக் கூறுதலின் பொய்யுரைத்து என்னாது பொய்யுரை குயிற்றி என்றார்.

'குயிற்றுதல்-இன்குரலிற் சொல்லுதல்.

உறவு தழீஇ-உறவினரோடு கூடிக் குலாவி

ஓடுநீர் உருட்ட ..... பெருங்கல் போல : ஓடுகின்ற யாற்று நீரால் உருட்டப்பட்டு வடிவம் சிறுத்து மறைந்தொழியும் உயர்ந்துநின்ற பெருங்கல் போல

யாவருங் காணுமாறு உயர்ந்து நின்ற பெருங்கல் யாற்றுநீர் விசையால் உருட்டிச் செல்லப்பெற்று உருட்டைக் கல்லாகவும், பரலாகவும், மணலாகவும், அயிராகவும் படிப்படியே வடிவஞ் சிறுத்துக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தொழிதல் போல், வாழ்வாங்கு வாழ்ந்து புகழ் நிறுவ வேண்டிய பெருமைசால் மாந்தன் நெறிவயிற் செல்லாது வயிறு வளர்த்தல் பொருட்டுச் சிறுமையுற்று அலைந்து செயலிழந்து இறந்தொழிதலை விளக்குதற்கு இவ்வுமை கூறப்பட்டது.

பிழையிலாது உள்ளமும் -பேணலர்

தவறுபடாது உள்ளத்தையும் போற்றிக் கொள்ளாதவராய், உடலையும் போற்றிக் கொள்ளாதவராய்,

உள்ளத்தைத் தவறுபடாமல் போற்றிக் கொள்ளலாவது, பொறாமை பேராசை முதலானவற்றுக்கு இடங் கொடாமையும், உடலைத் தவறுபடாமல் போற்றிக் கொள்ளுதலாவது மாறுபாடான உண்டியும் அளவின் மீறிய உண்டியும் கொள்ளுதலும் உண்டி கொள்ளாமலேயே தவிர்த்தலும் நோய்க்கு இடங்கொடுத்தலும் பிறிவுமாம். மாந்தப் பிறவிக்குச் சிறந்ததாகலின் உள்ளத்தைப் போற்றாமையை இடித்துரைத்தார். உள்ளத்தைப் பேனாதொழிதலோடு உயிர்வாழ்க்கைக்கு இடனான உடலைத் தானும் பேனாமை வியப்புக்குரிய தாயிற்று.

வளம்பேணுதல்-போற்றிக் காத்தல்

வளம் முந்துறுத்தும் வாழ்வதும் இன்றி - செல்வத்தை மிகுதியாகத்

திரட்டிவைத்திருந்தும் அதன் பயன்துய்த்து வாழ்தல் இல்லாமல்,

வளம்- வாழ்க்கைக்குத் தேவையான பல்வகைச் செல்வங்கள்.

முந்துறுத்தல் மேம்படுத்தல், மற்றையவரினும் அதிகமாகத் திரட்டி வைத்துக் கொள்ளுதல்.

செல்வத்தைத் திரட்டிவைத்திருத்தும் அதன் பயன் நுகர்ந்து வாழாமை வியப்புக்குரியதாயிற்று.

எழுந்து அலைந்து அயின்று எழுச்சியுற்றுப் பொருட்கென அலைந்து உண்டு. அவா அடங்குதலின்றி மேன்மேலும் முயன்று திரிதலின் எழுந்து அலைந்து என்றார்.

உண்ணுதலை ஈண்டுக் குறித்தது அதன் சிறுமை கருதியென்க!

விழுந்து உயிர்ப்பு ....... வியப்பே - செயல் இழந்து கிடந்து உயிர்விடுதல் வியப்பானவற்று ளெல்லாம் வியப்பாம்.

உயிர்ப்பு அடங்குதல் மூச்சுவிடும் வினை ஒய்தல்,

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.