உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/வேண்டுமென் நெஞ்சே!

விக்கிமூலம் இலிருந்து

71 வேண்டுமென் நெஞ்சே!


யாண்டவ னாயினும் மாண்டுப் பீடொடு
வேண்டுவ சுரக்கும் வியன்றமிழ்க் கல்வி
துறையறப் போகித் துணிந்து குறையற
வடித்துவந் தளிக்கும் வாயி னானை
மிடிந்தார்க் கிரங்குஞ் செவியி னானை 5
வாய்ந்தார்க் கருளுந் தோளி னானைத்
தோய்ந்தார்க் குரித்த மார்பி னானைக்
குணங்குயர் காட்சி வணங்குறு வாழ்வின்
சான்றோர்க் கினித்த சொல்லி னானை
ஈன்றோர் தவிர்க்கினும் வேண்டுமென் நெஞ்சே! 10


பொழிப்பு:

அவன் எவ்விடத்தானாயினும் மாட்சியமையால் செம்மாந் திருத்தலோடு தேவைப்படுங் கருத்தைத் தருகின்ற பெருமைசான்ற தமிழ்க் கல்வியைக் கற்றுத் தேர்ந்து முடிபு கண்டு, குறையின்றித் தெளிவுபட இனிது எடுத்துரைக்கும் வாயையுடையவனை; வறியார்பால் இரக்கங்கொண்டு அவர்தம் வேண்டுகோளை ஏற்கும் செவியையுடையவனை ஆற்றாமை வாய்ந்தவர்கட்கு அருள் செய்யும் தோளை யுடையவனை நட்புப் பொருந்தியவர்கட்கு உரிமையாக்கப்பட்ட மார்பை யுடையவனை, சிறு தெய்வங்களினும் மேம்பட்ட இறைமைக்காட்சியில் ஒன்றியவரும் உலகத்தவரால் வணங்கப்பெறும் மெய்வாழ்வினருமான சான்றோர் பெருமக்களுக்கு இனிமைபயக்கும் சொல்லைப் பேசுபவனைப் பெற்றோர் தவிர்த்தாலும் என் நெஞ்சம் விரும்புகிறது.

விரிப்பு:

இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.

தலைமகன்பால் காதல்கொண்ட தலைவி, தன் பெற்றோர் அவனை மணமகனாக ஏற்காது தவிர்த்து வேறுமணம் பேச முற்பட்டகாலைத் தலைமகனின் கல்விச் சிறப்பும் சொன்வன்மையும் சான்றாண்மைப் பண்புகளும் எடுத்துக்கூறி அவனை விரும்பும் தன் காதல் நெஞ்சத்தைத் தோழிக்குப் புலப்படுத்துவதாக அமைந்தது இப் பாட்டு,

யாண்டு அவன் ஆயினும் - அவன் எவ்விடத்தானாய் இருப்பினும்

மாண்டுப் பீடொடு - மாட்சிமையுடையனாகிச் செம்மாந்திருத்தலோடு.

மாட்சிமை - நற்குண நற்செயல்கள். பீடு - செம்மாப்பு

வேண்டுவ சுரக்கும் வியன் தமிழ்- தேவைப்படுங் கருத்துக்களை ஊற்றுப் போல் தொடர்ந்து சுரந்து கொண்டிருக்கும் பெருமை பொருந்திய தமிழ்.

அறிவியல் வளர்ச்சியால் கண்டுபிடிப்புகளும் புதுப்புனைவுகளும் நாளுக்குநாள் பெருகி; பன்னாட்டு, பலவின, பன்மொழித் தொடர்புகள் மிகுந்து, நாகரிகங்களின் போக்குமாறி, செய்தித் தொடர்புகள் பெரிதும் எளிமைப்பட்டிருத்தலின் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, எந்நிலை வாழ்க்கைக்கும் எத்துறை அலுவலுக்கும் எவ்வகைப்பட்ட கல்வி, கலை, தொழில் முதலானவற்றுக்கும் பயன்படத்தக்கதாய் எக்கருத்தையும் துணுக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லவும், எச்சிக்கலுக்கும் தீர்வுகாணவும் தேவையான சொல்வளமும் கருத்துவளமும் தழைத்து, மேற்கோள்களும், உவமைகளும், பலமொழிகளும் நிறைந்த இலக்கண இலக்கிய நூல்வழக்கும் என்றும் நிலவும் மக்கள் வழக்கும் உடையதாய் இருத்தலின் தமிழை வேண்டுவ சுரக்கும் வியன் தமிழ் என்று சிறப்பித்தார்.

"இற்றைக் கியல்வன இனிமேல் எழுவன முற்றும் செந்தமிழ் மொழிக்குள் அடக்கம்” என்பது ஆசிரியர் கூற்று

கல்வி அறப்போகித் துணிந்து- (கல்வியைக் கற்றுணர்ந்து முடிபு கண்டு. கல்வி துறை அறப் போகித் துணிந்து

தமிழ்க்கல்வியை நிறைவுறவும் ஐயந்திரிபுகளறவும் கற்றுணர்ந்த முடிபுகண்டு என்றவாறு,

குறையற வடித்து உவந்து அளிக்கும் வாயினானை- குறைபாடு இன்றியும் கேட்போர் தெளிவுறவும் இனிது எடுத்துரைக்கும் வாயை யுடையவனை.

அளித்தல் கருத்தை வழங்குதல்.

மிடிந்தார்க்கும் இரங்கும் செவியினானை - வறுமையுற்றாற்போல் இரக்கங்கொண்டு அவர்தம் வேண்டுகோளை ஏற்கும் செவியை யுடையவனை.

இரங்குதலாவது இரக்கங்கொண்டு அதற்குத் தக உதவுதல், இரங்கத் தக்க மிடிந்தார்தம் வேண்டுகோளைச் செவிமடுத்துவிடின் அவன் தவறாது உதவுவான் என்னும் உறுதிப்பாட்டைப் புலப்படுத்துவார் அவன் செய்யும் உதவியைச் செவியின் மேல் ஏற்றிக் கூறினார். மிடி-வறுமை.

வாய்ந்தளிக்கு அருளும் தோளினானை - ஆற்றாமை வாய்ந்தவர்கட்கு அருள்செய்யும் தோளையுடையவனை.

ஆற்றாமை அவாய் நிலையால் வந்தது. ஆற்றாமை வாய்ந்தோராவார் நலிவுற்றோர்.

செயற்பாட்டுக்குரியது தோளாதலின் அருள் செய்தல் தோள்மேல் ஏற்றப்பட்டது. உற்றுழி உதவுதலைத் தோள்கொடுத்தல் என்னும் உலக வழக்கும் நோக்குக!

தோய்ந்தோர்க்கு உரித்த மார்பினானை- நட்புப் பூண்டார்க்கு உரியதாகிய நெஞ்சம் உடையவனை.

மனம் ஒன்றுபட்ட நிலையே நட்பாதலின் நட்புப்ண்டார் தோய்ந்தார் எனப்பட்டனர். தோய்தல் ஒன்றுபடுதல்.

குணங்கு உயர் காட்சி-ஆவிகளாகிய சிறுதெய்வ நிலையினும் வேறுபட்டு உயர்ந்த இறைமைக் காட்சியைக் கண்டு. குணங்கு-சிறுதெய்வம்.

வணங்கு உறு வாழ்வின் சான்றோர்க்கு - உலக மக்களால் வணங்கப்பெறும் சான்றோர்க்கு

இனித்த சொல்லினானை- இனிமையளிக்கும் சொல்லைப் பேசுபவனை

ஒருவன் அருளுணர்வும் நல்லொழுக்கமும் உடையானென்றும், இவன் நாட்டுக்கு நலஞ்செய்யும் வினையாளன் என்றும் இன்ன பிற சிறப்புடையானென்றும் நம்பிக்கை கொள்ளுதற்கு இடனான சொல் சான்றோர்க்கு இனிக்குஞ் சொல்.

மேல்வாயினானை என்றது அவன்றன் கல்விச் சிறப்பும் நாநலமும் பற்றியது என்றும், ஈண்டுச் சொல்லினானை என்றது.அவன்றன் ஒழுக்கமும் வினைநலமும் பற்றியதென்றும் கொள்க!

இனி, வாயும் செவியும் தோலும் மார்பும் சொல்லும் உடையானை என்னாது வாயினானை, செவியினானை என்றாங்குத் தனித்தனியே கூறியது இயைபுத் தொடை நோக்கி என்க.

இன்றோர் தவிர்க்கினும் வேண்டும் என் நெஞ்சே - பெற்றோர் தவிர்ப்பினும் என் நெஞ்சு வேண்டுகின்றது.

யான் பெற்றோர் கருத்துக்கு மாறுபட விரும்பவில்லை யாயினும் என்நெஞ்சு எனது கட்டுப்பாட்டிலில்லை என்பாள் போல் யான் வேண்டுவல் என்னாது நெஞ்சின்மேல் ஏற்றிக் கூறினாள்.

இப்பாடல் குறிஞ்சியாகிய அகத்தினையும் வேற்றார் வரைவு நேர்ந்துழி தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது என்னுந்துறையுமாம்.