உள்ளடக்கத்துக்குச் செல்

நூலக ஆட்சி/நூலகப் பணி

விக்கிமூலம் இலிருந்து

1. நூலகப்பணி
-------------

நூல்களையும் அவைகளைப் பற்றிய முழு விளக்கங்களையும் வருவோர்க்கு வழங்குவதே நூலகத் தலைவர் வேலை. நூல்களையும் அரும்பெரும் கையெழுத்து ஏடுகளையும் காப்பவரே அவர். நூலகத்தில் செய்யப்படும் பணியின் முறையும் தன்மையும் இடத்திற்கேற்ப மாறிய போதிலும் அஃது ஒரு தன்மைத்தே. நூலக விதிகளுக்கேற்ப நூலகத் தலைவர் நூல்களைத் தொகை வகை விரி செய்து அமைக்கிறார். பின் அவைகளை வழங்குவதற்கேற்ற முறையிலே அமைக்கிறார். நூல்களையும் அவைகள் இருக்கும் அலமாரிகளையும் செப்பனிடல், ஆண்டுக்கொரு முறை அவைகளைச் சரிபார்த்தல், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகிற முறையிலே நூல்களை அடுக்கி ஒழுங்குபடுத்தல் என்னும் அலுவல்களை அவர் மேற்பார்க்கின்றார்.

நூலகத் தலைவர் படிப்போர்களின் தேவைகளை அறிந்து அவர்கள் விரும்பும் நூல்களைத் தேர்ந்தெடுப்பதிலும், வாங்குவதிலும் துணையாக நிற்றல் வேண்டும். குறிப்பெடுப்பதிலும், மேற்கோள் நூற்பட்டியல் தயாரிப்பதிலும் படிப்போர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் அவர் அறிவுரை கூறலாம்.

நூலகத் தலைவருக்கு உதவி செய்யவே நூலக உதவியாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். பெரு நூலகங்களிலே குறிப்பெடுப்பதிலும், ஆராய்ச்சிபுரிதலிலும் படிப்போர்க்கு உதவிசெய்தல் இந்த உதவியாளர்கள் வேலையாகும். நூல் வழங்கல், புதுச் சீட்டுக்களை எழுதுதல், செய்தித் தாள் களையும் பிற இதழ்களையும் சரிபார்த்தல், நூல்களிலுள்ள சிறு சிதைவுகளைப் பார்த்தல், வழங்குநூற் பதிவேட்டைச் சரிபார்த்தல் என்பன அவர்களுடைய நாள் வேலைகள்.

நூலகத்தினுள்ளே செய்யும் பணியும் ஒன்றுண்டு. அஃதாவது மணிக்கணக்காக நூலகத்தினுள்ளே நின்றும் நடந்தும் நூல்களை உரிய இடத்திலே வைத்தலும் சரிவர அமைத்தலும் சேர்த்தலும் ஆம் என்க. பெரிய நூலகங்களிலே பரந்த இடம், நல்ல இருக்கை, ஒளியமைப்பு என்பன இருக்கும். நூலகம் சிறியதோ பெரியதோ அங்கு வேலை செய்யும் பொழுது சூழ்நிலை அழகாகவும் மகிழ்ச்சியூட்டத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்.

வேலை நேரம் நூலகத்திற்கேற்ப மாறியிருக்கும். பல பொது நூலகங்களும், கல்லூரி நூலகங்களும் நாள் தோறும் பன்னிரண்டு மணி நேரம் திறக்கப்பட்டிருக்கும். நூலக உதவியாளர்கள் குழுவாகப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட மணிக்கு ஒரு குழுவாக வேலை செய்வர்.

நூலகத் தலைவர் சிறந்த கல்வி அறிவுடையவராகவும் நூலகப் பயிற்சி பெற்று நூலகத் தேர்விலே வெற்றி பெற்று பல்கலைக்கழக நற்சான்றிதழ் பெற்றவராகவும் இருத்தல் சாலச் சிறந்ததாகும். நூலக உதவியாளர்களும் பயிற்சி பெற்றவராயிருத்தல் நூலகத் தலைவருக்கு மிகவும் உதவியாயிருக்கும்.

கூர்சரம், மகாராட்டிரம், கன்னடப் பகுதிகளிலுள்ள நூலகக் கழகங்கள் ஆறு வார கால நூலகப் பயிற்சி அளிக்கின்றன. பம்பாயிலும், தில்லியிலும் உள்ள இரு நூலகக் கழகங்கள் அவ்விரு நகரங்களிலே ஆறு முதல் ஒன்பது மாத கால நூலகப் பயிற்சி அளித்து நற்சான்றிதழ் வழங்குகின்றன. ஆறு வார காலப் பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த அளவு பத்தாவது வகுப்பினையாவது முடித்திருக்க வேண்டும். ஆறு மாத காலப் பயிற்சிக்கு மேலும் இரண்டாண்டுகள் கலையிலோ அறிவியலிலோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

பட்டங்களும் (Degrees) பயிற்சிப் பட்டங்களும், (Diploma course) சென்னை, ஆந்திரா, பம்பாய், தில்லி, கல்கத்தா, பஞ்சாப், காசி, அலிகார் என்ற பல்கலைக் கழகங்கள் அளிக்கின்றன. பயிற்சிப் பட்டங்கள் பம்பாய் பல்கலைக் கழகத்தில் மட்டும் இரண்டாண்டுகள் கழித்துத் தரப்படுகின்றன; ஏனையவற்றில் ஓராண்டில் தரப்படுகின்றன. பயிற்சிப் பட்டம் பெற விரும்புவோர் குறைந்தது இளங்கலைப் பட்டம் (பி. ஏ.) பெற்றவராயிருத்தல் வேண்டும். கல்லூரிக் கட்டணம் மாதத்துக்கு ஐந்திலிருந்து பதினைந்து வெண்பொற் காசுகள் வரையும், தேர்வுக் கட்டணம் இருபதிலிருந்து முப்பத்தைந்து வெண்பொற் காசுகள் வரையும், உணவு இல்லக் கட்டணம் அறுபது முதல் தொண்ணூறு வரையும் வேறுபடுகின்றன.

சென்னைப் பல்கலைக் கழகம் நூலகத்தார்க்கு மூன்று மாத காலப் பயிற்சியும் அளிக்கின்றது. இதில் சேர விரும்புவோர் குறைந்தது இடைக்கலைத் தேர்விலாவது வெற்றி பெற்றிருக்கவேண்டும். மேலும் பள்ளி இறுதித் தேர்வில் (S.S.L.C.) வெற்றி பெற்று நூலகத்தில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்த எவரும் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம். இது போன்றே ஆந்திரப் பல்கலைக் கழகமும் மூன்று மாதகாலப் பயிற்சி அளிக்கின்றது. இப்பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த அளவு பத்தாவது வகுப்பினையாவது முடித்தி ருக்கவேண்டும். இப்பயிற்சி முடிந்த பின்னர் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்றவருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

நூலகம் அமைத்தல், நூலக ஆட்சி, மேற்கோள் நூற்றொகுதி, நூல் தேர்வு, நூல் வாங்குதல், நூல் தொகுத்தல், வகுத்தல், நூலக இயக்க வரலாறு முதலியன நூலகப் பயிற்சிப் பாடங்கள் ஆம். தாய்மொழி தவிர ஏனைய இந்திய மொழிகளிலும் அயல் நாட்டு மொழிகளிலும் உள்ள அறிவு மேலும் ஓர் உதவியாகும். அந்த அறிவு துணைத் தகுதியாகக் கருதப்படும். இதே துறையில் முதிர்கலைப் பட்டம் (எம். ஏ.) அளிக்கப்படுகிறது. தில்லிப் பல்கலைக் கழகம் நூலகத் துறையிலே இரண்டாண்டுகளில் முதிர்கலைப் பட்டம் பயிற்சி அளிக்கின்றது. இப்பட்டம் பெறுவோர் பின்னர் இதே துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் (Ph.D.) பட்டமும் பெறலாம். நூலகத் துறையிலே முதிர்கலைப் பட்டம் பெறக் குறைந்த அளவு வேண்டிய தகுதி அத்துறையில் ஒரு பயிற்சிப் பட்டமேயாகும்.

தேர்வுக் கட்டணம் :

1. முதிர்கலை :

1. நுழைவுக் கட்டணம்-15 வெண்பொற் காசுகள்
2. கல்லூரிக் கட்டணம் :
முதல் ஆண்டிற்கு-180 வெண்பொற் காசுகள்
இரண்டாம் ஆண்டிற்கு-216 வெண்பொற்காசுகள்
3. தேர்வுக் கட்டணம்-80 வெண்பொற்காசுகள்

2. டாக்டர் (Ph. D.) :

1. மேற்பார்வைக் கட்டணம் (மாதமொன்றிற்கு) -20 வெண்பொற் காசுகள்.
2. தேர்வுக் கட்டணம்--100 வெண்பொற் காசுகள்.

நூலகத்துறை மாணவருக்கு நல்ல நினைவாற்றல், காரண காரியம் அறிதல், முறையான அறிவுத்திறன், ஆழ்ந்த புலமை என்ற குணங்கள் இன்றியமையாதன. நல்ல உடற்கட்டும், தெளிவான பேச்சும், நல்ல கண்பார்வையும் மிக மிக வேண்டியனவே. நூலகத் தலைவருக்கு முதலில் வேண்டியன நூல் மேல் மாறாக் காதலும் படிப்பதில் பருகுவனன்ன ஆர்வமும் ஆகும். மேலும் அவருக்குப் பலதிறப்பட்ட விருப்பங்களும் வேண்டும். குழந்தைகள். மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஓய்வு நேரப் பார்வையாளர்கள் (Leisure-time visitors), படிப்பாளிகள் என்ற அத்தனை பேருக்கும் உதவியான முறையிலே தம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும்.

நூலகத் தலைவர் பதவிக்கு வழக்கம்போல விளம்பரங்கள் செய்யப்படும். அரசாங்க உயர்தர நூலகத் தலைவர்கள் (Gazetted Officers) பொதுப் பணிக் குழுவினாலோ (Public Service Commission) அன்றி பொறுக்குக் குழுவினாலோ தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆய்வுக் கூடங்கள், கல்வி நிலையங்கள், சமூக, பண்பாட்டு, வணிக, தொழில் நிலைய அலுவலகங்கள் முதலியவற்றைச் சார்ந்த நூலகங்களிலும், நூலகத் தலைவர், உதவியாளர்கள் அமர்த்தப்படுவர்.

நாடு, வட்டாரம், பல்கலைக் கழகம், அமைச்சுத் துறை என்பவற்றைச் சேர்ந்த நூலகங்களிலே ஊதிய மிக்க உயர்ந்த பதவிகள் உள்ளன. நூலகத் தலைவர்களுக்கும் உதவியாளர்களுக்கும் உரிய ஊதிய முறைகள் உள்ளன. அவற்றை ஏற்படுத்தியது மத்திய அரசியலாரே.

1. நூலகத் தலைவர் :

முதல் தகுதி - ரூ. 275-25-500-30-800.
இரண்டாவது தகுதி - ரூ. 160-10-350.
மூன்றாவது தகுதி - ரூ. 100-8-140.

2. உதவியாளர் :

1. உதவியாளர் (Assistant) - ரூ. 100-8-140-10-250.
2. இளம் உதவியாளர் (Junior) - ரூ. 80-5-120-8-200-10-220.
3. தொழில் நுணுக்க உதவியாளர் (Technical Assistant)- ரூ. 250-10-300-15-450--

25-500.

4. தொழில் நுணுக்க இளம் உதவியாளர் - ரூ. 160-10-300.


மாதமொன்றிற்கு ரூ. அறுநூறு முதல் ஆயிரம் வரை ஒரு சில முதல் வகுப்புப் பதவிகளுக்குத் தரப்படுகின்றன. தேசீய நூலகத் தலைவர்கள் உயர்ந்த ஊதியம் பெறுகின்றனர். பல்கலைக் கழக நூலகத் தலைவரின் குறைந்த அளவு ஊதியம் ரூ. 200-600 ஆகும்; அதிக அளவு ரூ. 600- 800. துணை நூலகத் தலைவர் ரூ. 150-250 பெறுகிறார். ஒரு சிலர் ரூ. 300-500ம் பெறுகின்றனர். மாநில நூலகங்களிலும், கல்வி நிலைய நூலகங்களிலும் தரும் ஊதிய முறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுடையதாய் விளங்கலாம். எனினும் பிற அலுவலகங்களிலே ஒத்த நிலையும், பொறுப்பும், பயிற்சியும் உள்ளவர்கள் வாங்கும் ஊதிய முறையினை ஒத்தே நூலக ஊதிய முறையும் உள்ளது. நூலகப் பணியிலே ஈடுபட்டிருப்பவரில் திறமை மிக்கவர் முன்னேறுவதற்கு எத்தனையோ வாய்ப்புக்கள் உள்ளன. நூலக உதவியாளரும் காலப்போக்கில் முதலிரு தகுதிகளுக்கு உயர இயலும். பல்கலைக் கழகப் பட்டம் பெற்று நூலகத் துறையிலே பணிபுரிபவர் மிக உயர்ந்த பதவியினை அடையக்கூடும்.

வேறு வேறு வகையான ஆயிரம் நூலகங்கள் இன்றைய இந்தியாவில் உள்ளன. மத்திய, மாவட்ட நூலகங்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்த ஒருசில ஆண்டுகளில் நாடு முழுவதும் பொது நூலகங்களைக் காணலாம். இருபதிற்கு மேற்பட்ட மத்திய நூலகங்களும் (Central), இருநூறு மாவட்ட நூலகங்களும், ஆயிரத்தெண்ணூறு கிளை நூலகங்களும் நாடு முழுதும் அமைக்கப்பட இருக்கின்றன. கல்வியையும் பண்பாட்டையும் இலக்கிய இன்பத்தினையும் எடுத்தியம்பக் கூடிய படக்காட்சிகள் இன்று சில நூலகங்களிலே காட்டப் பெறுகின்றன. பல பள்ளிகளிலும் ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்கு இத்தகைய படக் காட்சிகள் காட்டப்படுகின்றன. இதற்குரிய கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.

இன்று பொது நூலக இயக்கம் நாடு முழுமையும் ஆதரவினைப் பெற்று வருகின்றது. முப்பதாண்டுகளில் நாடு முழுவதும் நூலகங்கள் திறக்கப்படுவதற்குரிய வழியினை நமது மத்திய அரசியலார் வகுத்துள்ளனர். நூலக விரிவுத் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பொது நூலகங்கள் தோன்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நம் நாட்டில் சுற்றும் நூலகங்களின் துணைகொண்டு நாட்டுப்புற நூலகத்தொண்டும் நடைபெற விருக்கின்றது. குழந்தை நூலகம், பொருட்காட்சி சாலை முதலியனகூட இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத் தலைநகரங்களிலே நிறுவப்படலாம்.

நமது நாட்டின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் நூலக வளர்ச்சிக்காக 140 லட்சம் வெண்பொற் காசுகள் ஒதுக்கப்பட்டிருப்பது மிகவும் போற்றப்பட வேண்டிய தொன்றாகும். நூல் நிலையக் கலைப் பயிற்சி அளிக்க கல்லூரி (Central Training Institute in Library Science) ஒன்று நிறுவ 10 லட்சம் வெண்பொற் காசுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

மேலே கூறப்பட்டுள்ள நூலகத் திட்டங்கள் பொது மக்களுக்குத் தொண்டு செய்யவும், கற்கவும் படிக்கவும் விரும்புவோருக்கு வழி காட்டவும் தீட்டப்பட்டுள்ளன. தற்காலக் கல்வி, கற்பிப்பதிலிருந்து கற்பதற்கு மாறியுள்ளது; கற்கும் இடம் நூலகமே. எனவே இந்நூலகத் தொண்டினைப்போல் சிறந்த தொண்டு வேறென்றுமில்லை. இது நாட்டுத் தொண்டாக மாறும் காலம் சேய்மையில் இல்லை. கல்லூரிகளில் பள்ளிகளில் பயின்றுவரும் கட்டிளம் மாணவர்கள் வருங்காலத்தில் நூலகப்பணியில் ஈடுபடுவது நாட்டுக்கும் அவர்களுக்கம் நன்மை பயப்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நூலக_ஆட்சி/நூலகப்_பணி&oldid=1130455" இலிருந்து மீள்விக்கப்பட்டது