நூலக ஆட்சி/நூல் தேர்வு
நூல் தேர்வு (Book Selection) என்பது நூலகத்திற்கு, வேண்டிய நூல்களைத் தேர்ந்தெடுத்தலாகும். நூல்களைத் தேர்ந்தெடுத்து நூலகங்களில் வைப்பது ஒரு முக்கியமான வேலையாகும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து அவைகளை நூலகத்திற்கு வாங்குவது நாட்டிற்கு மட்டுமல்ல மக்களுக்கும் நலம் பல விளைவிப்பதாகும். நூலகத்திற்கு வருகின்ற மக்கள் மனத்தினை ஈர்ப்பவை நல்ல நூல்களே. நூலகம் மக்களுக்கு அறிவும் உணர்வும் ஊட்டும் பயனுள்ள பாசறையாய் விளங்குவதற்கு நல்ல நூல்களே துணைபுரிகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை எடுத்துச் சென்று படிப்பதில் மக்கள் அளவிலா ஆர்வம் காட்ட வேண்டும் : பயன் மிகப்பெற வேண்டும்.
அறிவியலில் வீறுபெற்றிலங்கும் இன்றைய உலகிலே நாடோறும் அளவிறந்த நூல்களும் பருவவெளியீடுகளும் வெளிவருகின்றன. வெளிவரும் நூல்கள் அனைத்தும் பயனுள்ளவையாக இரா. மேலும் வெளிவரும் அத்தனை நூல்களையும் வாங்கும் திறன்பெற்ற நூலகங்கள் ஒரு சிலவே. எனவே நூல் தேர்வு இன்றியமையாத தாகின்றது. பொருள்நிலை, நூல்களின் தேவை, மக்களின் விருப்பம், வழங்கும்மொழி, புதிய பதிப்பு என்ற ஐந்தினையும் மனத்திற்கொண்டு நூல்களைத் தேர்ந்தெடுத்தால் நூலகம் தொடர்ந்து வளரும் இயல்பிற்றாய ஓர் உயிர்ப் பிண்டமாக உயர்வு பெறும் என்பதில் ஐயமின்று. நூல் தேர்வு நல்ல முறையில் செய்யப்பட்டால்தான் மக்களும் தம் மனக் கோட்டம் ஒட்டும் மாண்புறு நூல்களைப் படித்து இன்புறுவர். சுருங்கக் கூறின் மக்கள் மனங் கவரும் நூல்கள் எவை என்பதை அறிந்து அதற்கேற்ப நூல்களை வாங்கவும், எல்லாப் பொருள்களையும் பற்றிய நூல்களைப் பெறவும் முற்பட வேண்டும். இதனால் மக்கள் மனங்கவரும் நூல்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பதில்லை. எண்ணிக்கை குறைவாக இருப்பினும் எல்லாப் பொருள்களையும் பற்றிய நூல்கள் நூலகத்தில் உள்ளன என்ற மனநிறைவு மக்களுக்கு ஏற்படவேண்டும். விலையினை மட்டும் பொருளாக வைத்து நூல்களை மதிப்பிடுதல் கூடாது ; வாங்குவதும் கூடாது. எனினும் நல்ல நூல்களை உரிய விலை கொடுத்து வாங்குவதில் பின்னடைதல் கூடாது.
நூல்தேர்வு செய்யுங்கால், நூலகத் தலைவர் மேற்கூறியவைகளை தம் மனத்திற்கொண்டு மிக்க கவனத்துடன் தன்பணியைச் செய்தல் வேண்டும். நூலகத் தலைவர், மக்களுக்குச் செய்தி விளக்கம் அளிக்கும் நூலக அலுவலர் (Reference Librarian), நூலகப் பணியில் பழக்கம் மிக்கவர்கள் முதலியவர்களால் நூல் தேர்வு நடத்தப்படல் வேண்டும். இது தவிர அறிவாற்றல் நிரம்பிய சில பெருமக்களையும் ஆசிரியப் பெரியார்களையும் அநுபவ மிக்கவர்களையும் நூல் தேர்வு நடத்தும்பொழுது நூலகத் தலைவர் கலந்து கொள்ளலாம்.
பின்வருவன நூல் தேர்வுக்குரிய சிறந்த மூலங்களாகும் (Sources) :-
- க. பதிப்பகத்தார் அறிக்கை (Publisher's Circular) :- இஃது இங்கிலாந்தில் வெளியிடப்படும் வார இதழாகும்.
- பதிப்பகத்தார் வார இதழ் (Publisher's Weekly):-
- இவ்விதழ் அமெரிக்க நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழாகும்.
- ௩. பதிப்பகத்தாரால் அவ்வப்பொழுது வெளியிடப்படும் துண்டு அறிக்கைகள் :
நூல் வணிகப் பட்டியல் முறையாக வெளியிடாத நாடுகளுக்கும் ஆங்கிலந் தவிர மற்ற மொழிகளிலுள்ள சிறந்த நூல்களைப் படித்துப் பயன் பெறுவோருக்கும் பதிப்பகத்தார் வெளியிடும் செய்திகள்.
- ௪. நூலகத்திற்கு வருவோர் வேண்டுகின்ற நூல்கள் :
நூலகத்திற்கு வருவோர் தாங்கள் விரும்பும் நூல்கள் ஆண்டு இல்லையாயின் அவைபற்றிய குறிப்புக்களை அதற்கென வைக்கப்பட்டிருக்கும் பார்வையாளர் ஏட்டில் எழுதிவைக்கலாம். நூலின் பெயர், ஆசிரியர், விலை, பதிப்பகத்தார், நூலைப்பற்றிய விமரிசனமோ அல்லது விளக்கமோ வெளிவந்த செய்தி இதழின் பெயர் முதலியன எழுதப்படல் வேண்டும்.
- ௫. இந்து நாளிதழின் ஞாயிறு மலர், ‘நேச்சர்’, ‘டைம்சு ஆவ் லிட்டரரி சப்ளிமெண்ட்’, மற்றைய தமிழ் ஞாயிறு இதழ், திங்கள் இதழ் போன்ற இதழ்கள் :--
இவ்விதழ்களில் புதிதாக வெளியாகும் நூல்களைப் பற்றிய விவரங்கள் உடனுக்குடன் தரப்படுகின்றன.
நூல் தேர்வில் துணைபுரியும் நூல்கள் (Reference Books) பின்வருமாறு :--
- க. நூற்பட்டியலின் தொகை (Cumulative Book Index) :)
இது அமெரிக்க நாட்டு நியூயார்க்கில் வெளியிடப்படும் ஓர் உலக நூற்பட்டியலாகும் (World list of books). ஒவ்வொரு மாதமும் நூல்வடிவில் இது வெளியாகின்றது. ஆண்டின் இறுதியில் உலகிலுள்ள எல்லா நூலகங்களுக்கும் (வேண்டினால்) பன்னிரண்டு பட்டியல்களும் பணமின்றி அனுப்பப்படும்.
கிடைக்குமிடம் :
எச். டபிள்யூ வில்சன்கோ , 950, யுனிவர்சிடி அவென்யூ, நியூயார்க்-52.
- உ.. ஆங்கில நூற்பட்டியல் தொகை :
ஆண்டுதோறும் வெளிவரும் நூற்பட்டியல் தொகையாகும்.
- ௩. தற்கால இலக்கியங்களின் நூற்பட்டியல் தொகை (Reference Catalogue of Current Literature) :
இங்கிலாந்தில் ஈராண்டுகளுக்கொருமுறை இது வெளியிடப்படுகின்றது. நூலாசிரியர்களுடைய அகர வரிசைப்படியும் பொருள் வாரியாகவும் நூல் விவரங்கள் தரப்படுகின்றன.
கிடைக்குமிடம் :
ஜே. வைடாகர் அண்டு சன்சு, 12, வார்விக் லேன், பாடெர் நாச்டெர் ரோ, இலண்டன். இந்நூல்கள் பதிப்பகத்தார், விலை முதலியவற்றை அறிவதற்கும் விற்பனையாளருடைய விலைச்சீட்டைப் பரிசீலனை செய்வதற்கும் பயன்படும்.
மேலே சொல்லப்பட்டிருக்கும் மூலங்களும், துணை புரியும் நூல்களும் நூல் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளவையாகும். நூலகத்தார் இவைகளின் துணைகொண்டு சிறந்த நூல்களை வாங்க இயலும். ஊதியத்தையே நோக்கமாகக் கொண்டுள்ள சில பதிப்பகத்தார் தங்களது நூலிலே காணும் குறைபாடுகளை மறைத்துவிட்டு நூற் பட்டியலை வெளியிடலாம். இவ்வாறே சில செய்தி இதழ்களும் நூல் விமரிசனம் செய்யலாம், உண்மையினை உள்ளவாறே எழுதும் செய்தி இதழ்கள் ஒரு சிலவே. எனவே நூல் நிலையத் தலைவர் இத்தகைய சிறந்த செய்தி இதழ்கள் வெளியிடும் விமரிசனத்தை நன்கு படித்து அதன் பின்னரே ஒரு முடிவுக்கு வருதல் நன்மை பயப்பதாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட நூலைத் தேர்ந்தெடுக்குங்கால், கீழேத் தரப்படும் கருத்துக்களே மனத்தில் கொண்டு அதனைத் தேர்ந்தெடுத்தல் சாலச் சிறந்ததாகும்
1. நூலின் ஆசிரியர் யாரென்றும் அந்நூல் எவ்வளவு தூரம் அவ்வாசிரியரின் உயர்ந்த உள்ளக்கிடக்கையினை எடுத்துக் காட்டுகிறதென்றும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
2. நூலானது ஆசிரியரின் எழுத்துத் திறமைக்கு எடுத்துக்காட்டாய் இலங்குகிறதா என்றும் கற்பனைத் திறனுக்கு ஆதாரமாய் இருக்கிறதா என்றும் அறிதல் வேண்டும். ஆசிரியர் தமது கருத்தை விளக்குங்கால் தெளிவுற உயர்ந்த நடையில் எழுதியுள்ளாரா அல்லது பிறர் புலமைக்கு எட்டாத நிலையில் எழுதியுள்ளாரா அன்றி எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தமது எண்ணக் குவியல்களைத் தந்துள்ளாரா என்று கவனிக்க வேண்டும்.
3. அந்நூல் வெளியான காலத்தையும் நாம் கருத்திலே கொள்ளவேண்டும். குறிப்பாக அறிவியல், தொழில் நுணுக்கங்களை விளக்கும் நூல்களைத் தேர்ந்தெடுக்குங்கால் அவைகள் தற்காலத்திற்குப் பொருந்திய கருத்துக்களைக் கூறுகின்றனவா என்பதை அறிதல் அவசியமானதாகும். ஆனால் ஒரு சில பழம்பெரும் நூல்கள் தனிச் சிறப்பை என்றும் பெற்று விளங்குகின்றன. அதனையும் நாம் கருதுதல் சிறப்புடைத்து.
4. அடுத்து நூலானது நல்ல முறையில் அச்சிடப்பட்டுள்ளதா, சிறந்தமுறையில் தொகுக்கப்பட்டுக் கண் கவரும் கட்டுக் கோப்புடன் விளங்குகின்றதா என்பவற்றையும் நூலகத்தார் அறிதல் வேண்டும். எழுத்துக்கள் தெளிவாய் யாவரும் சிறிதும் தொல்லையின்றிப் படிக்கும் வகையில் இருத்தல் வேண்டும். அச்சிடப்பட்டிருக்கும் தாள் நல்ல வெண்மையும் நீண்டநாள் உழைக்கும் தன்மையும் கொண்டதாய் விளங்குதல் இன்றியமையாததாகும். நூலினுள்ளே உள்ளுறை, படங்கள், விளக்கக் குறிப்புக்கள் உள்ளனவா என்பதையும் உற்றுநோக்குதல் வேண்டும். இவை தவிர, பின்வருவனவற்றையும் நூலகத்தார் நூல் தேர்ந்தெடுக்குங்கால் கடைப்பிடித்தால் நூலகம் செழித்து வளரும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. தோர்தெடுக்கப்படும் நூல்கள் நமது வாழ்க்கை வளத்திற்கு வழிவகுப்பனவாயும் யாவர்க்கும் பயன்படுவனவாயும் இருத்தல் வேண்டும். ஒரு தனிப்பட்ட வரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ பழிக்கும் வகையில் எழுதப்பட்ட எந்த நூலும் நூலகத்தில் இடம் பெறுதல் கூடாது. மக்கள் உள்ளத்தினை நன்கு அறிந்து அதன்பின்னர் அவர்கள் விரும்பும் நல்ல நூல்களையே பெரும்பாலும் வாங்குதல் நூலகத்தார் கடமையாகும். எல்லா மக்களது தேவைகளையும் பூர்த்தி செய்யும் வாயில் நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் ஈடுபட்டிற்கும் பல துறைகளைப் பற்றி விளக்கும் நூல்களை வாங்குதல் மக்களுக்குப் பெரிதும் பயன் அளிக்கும். வாணிகம், அரசியல், சமயம், பண்பாடு முதலிய குறித்து எழுந்த சிறந்த நூல்கள் எல்லாம் மக்கள் சிந்தனைக்குப் பெரு விருந்தாகும். மேலும் ஒரு நூலானது அதிக அளவிற்குப் பயன்படுமா அல்லது பயன்படாது போய் விடுமா என்பது குறித்து ஆராயாது நிலைத்து நிற்கும் ஆற்றல் உடைய எந்த நூலையும் வாங்குவதில் தவறொன்றுமில்லை. இறுதியாக ஒரு நூலகத்தினால் பயனடையும் மக்களது எண்ணிக்கையையும், அந்நூலகத்தின் பொருள் நிலையையும் மனத்திலே கொண்டு நூல் தேர்வு செய்தல் வேண்டும். குறைந்த விலையினையுடைய நல்ல நூல்களை வாங்கினால் ஒரு நூலகத்தில்நிறைந்த அளவில் நூல்கள் விளங்கும். குறைந்த அளவு பொருள் உள்ள ஒரு நூலகத்திற்கு அதிக விலையுள்ள நூல்களை வாங்கினால் ஒருசில நூல்களே வாங்க இயலும். இதன் காரணமாய் மக்கள் பெருமளவில் வந்து படித்து இன்புற முடியாது. எனவே நூல் நிலையத் தலைவர் நூல் வாங்குவதற்குச் செலவிடுங்கால் ஓரளவு சிக்கனமாகவே இருத்தல் வேண்டும். இது தவிர நூல் பரிமாற்றத்தின் மூலமாகவும், நன்கொடையாகவும் நூல்களைப் பெறுவதற்குப் பெருமுயற்சி செய்தல் வேண்டும். இவையிரண்டின் மூலமாகப் பலநூல்களைப் பெற முடியும். அரசினர் வெளியிடும் இலவச வெளியீடுகளையும் வர வழைத்தல் வேண்டும். நல்ல நிலையில் உள்ள பழைய நூல்கள் குறைந்தவிலக்குக் கிடைத்தால் அவைகளையும் நூலகத்திற்கு வாங்கலாம். இவை நிற்க.
முன்னர்க் கூறப்பட்டிருக்கும் ஒன்று முதல் ஐந்து வரையிலுள்ள மூலங்களிலிருந்து (Sources) தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் பென்சிலினால் குறியிடப்படும்; அல்லது வகைப்படுத்தப்படும் மூல எண்கள் (Main Class Numbers) அவற்றிற்கு நேரே எழுதப்படும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை நூலக எழுத்தாளர் பின்வரும் குறிப்புக்களுடன் சரிபார்க்க வேண்டும்.
- க. நூலகப் பட்டியலின் தொகை (Library Catalogue).
- உ. முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் அட்டைகள்
- ௩. நூல் தேவைக்கு எழுதி அனுப்பிய ஆணையின் படிகள் (Order Copies).
சரிபார்த்து முடிந்தபின்னர் நூலகத்திலில்லாத நூல்களுக்கும் முன்னரே தேர்ந்தெடுக்கப்படாத நூல்களுக்கும் வாங்கப்படாத நூல்களுக்கும் நூலகத்தார் ஒரு பட்டியல் தயாரிக்கவேண்டும். அதன் பின்னர் எல்லாக் குறிப்புக்களும் சரிவர எழுதப்பட்டிருக்கின்றனவா என்று எழுத்தாளர்கள் ஒத்திட்டுப் பார்க்க வேண்டும். சரியாக இருந்தால் அதனை நூலகக் குழுவினர் பார்வைக்கு அனுப்புதல் வேண்டும். இக்குழுவின் செயலாளராக நூலகத் தலைவரே இருத்தல் வேண்டும். பின்னர் வாங்கவேண்டிய நூலைப்பற்றிய விளக்கங்களை அட்டைகளில் குறிக்கவேண்டும். அதாவது நூலின் தலைப்பு, ஆசிரியர், விலை, பதிப்பு, பதிப்பகத்தார், பக்கங்கள் என்பதை எழுதப்படுதல் வேண்டும். இறுதியாக நூலட்டைகளை வகைப்படுத்தி, வகைப்படுத்திய குறிகளை (எண்களை) அதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் எழுதுதல் வேண்டும்.