நூலக ஆட்சி/நூலினைப் பயன்பெற ஆக்குதல்

விக்கிமூலம் இலிருந்து

4. நூலினைப் பயன்பெற ஆக்குதல்


நூலினைப் பயன்பெற ஆக்குதல் என்பது நூலகத்திற்குப் புதிய நூல்கள் வந்தவுடன் பின்வரும் முறைப்படிச் சரிபார்த்து, ஒழுங்குபடுத்திய பின்னர் பிறர் படிக்கும் வண்ணம் நூலகத்தில் அவற்றை வைத்தலாகும்.

1. விலைச் சீட்டினைச் சரிபார்த்தல் (Checking off)

புதிய நூல்கள் விற்பனையாளரிடமிருந்து வந்ததும் முதலில் அவை நாம் அனுப்பச் சொன்ன நூல்கள் தானா என்பதைச் சரிபார்த்தல் நூலகத்தாரின் முதற் பணியாகும். மேலும் நாம் வேண்டிய பதிப்பினை அனுப்பியுள்ளனரா என்பதையும் கவனிக்க வேண்டும். அடுத்து இப்புதிய நூல்கள் ஏற்கனவே உள்ள நூல்களுடன் கலந்து விடாதபடி மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் விலைச்சீட்டின்படி அதில் கண்டுள்ள நூல்கள் எல்லாம் வந்துள்ளனவா, ஒவ்வொன்றிலும் நாம் வேண்டிய படிகள் வந்துள்ளனவா. பதிப்பகத்தாரின் விலையும் விலைச்சீட்டில் போட்டிருக்கும் விலையும் மாறுபாடில்லாமல் இருக்கின்றதா என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். நூல்களைச் சரிபார்க்குங்கால், நூலக அலுவலர் இருவர் கீழே கண்டுள்ளபடி சரி பார்த்தல் மிகவும் நல்லது காலமும் வீணாகாது. ஒருவர் நாம் விற்பனையாளரை அனுப்பும்படி வேண்டிக் கொண்ட ஆணையின் படியினை எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். மற்றொருவர் வந்துள்ள நூல்களை அவைகளின் தலைப்பின் அகரவரிசைப்படி ஒழுங்காக அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதல்வர், ஆணையில் கண்டுள்ளபடி முறையே ஒவ்வொரு நூலையும் வாசிக்கவும் மற்றொருவர் அந்நூலை எடுத்து ஆணையில் குறித்துள்ளபடி எல்லா வகையானும் ஒத்திருக்கின்றதா என்பதைக் காணவேண்டும். இவ்வாறே ஒவ்வொரு நூலையும் சரிபார்க்க வேண்டும். இத்துடன் விலைச் சீட்டினையும் நன்கு கவனித்தல் இன்றி மையாததொன்றாகும். ஒரு நூலைப் பற்றிய விவரங்கள் யாவும் சரியாக இருந்தால் அதற்குரிய அட்டையினை அங் நூலினுள் வைத்துவிட்டு, விலைச்சீட்டில் அந்நூலிற்கு எதிரே ✓ என்று குறியீடு செய்தல்வேண்டும். சரியில்லாத நூல்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு வேலை முடிந்ததும், அவற்றை உடனடியாக விற்பனையாளருக்கு அனுப்புதல் நூலகத்தார் கடமையாகும்.

2. நூல்களைச் சரிபார்த்தல் (Collation)

அடுத்து ஒவ்வொரு நூலும் சரியாக ‘நூல்வடிவாக்கம்’ (Binding) கொண்டதாயுள்ளதா, பக்கங்கள் சரியாக உள்ளனவா, அவைகள் ஒழுங்காக வைத்துத் தைக்கப் பட்டுள்ளனவா, தாள்கள் தலைமாறி இல்லாது சரியாக இருக்கின்றனவா, நூலில் குறித்துள்ளபடி படங்கள், நாட்டுப்படங்கள் முதலியன சரியாக இருக்கின்றனவா, சரியான முறையில் நூல் அச்சடிக்கப்பட்டுள்ளதா போன்ற பல விடயங்களை உற்று நோக்குதல் வேண்டும். நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் சரிபார்த்தல் என்பது மிகவும் கடினமான வேலையாகும். மேலும் நம் பொறுமையைச் சோதிக்கவும் செய்யும். நூல்கள் பல அளவுகளில் வெளியிடப்படுகின்றன. ஒரு தாளில் அச்சடித்து அதை இரண்டாகவோ நான்காகவோ எட்டாகவோ மடித்துத் தைப்பார்கள். இவ்வாறு தைக்கப்பட்டுள்ள நூல்களில் முறையே 1, 5, 9, 13-ம் பக்கங்களிலும், 1, 9, 17, 25-ம் பக்கங்களிலும், 1, 17, 33, 49-ம் பக்கங்களிலும், ஒவ்வொரு பக்கத்தின் அடியில் இடப்பக்கத்து மூலையில் 1, 2, 3, 4 என்றோ , A, B, C, D என்றோ , அ, ஆ, இ, ஈ, என்றோ போடப்பட்டிருக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு, வரிசையாக இருக்கிறதா என்று பார்த்து, நூல் சரியாகப் பக்கம் தவறாமல் கட்டடம் செய்யப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். இவை வரிசையாக இல்லாவிடில் அவற்றினைப் பக்கம் வாரியாகச் சரிபார்க்க வேண்டும். இவை எல்லாம் சரியாக இருக்குமானால் அந்நூல்களை நாம் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். சரியாக இல்லையெனின் அவற்றினைத் திருப்பி அனுப்புதல் வேண்டும்.

3. நூல்களைப் பதிவு செய்தல் (Accessioning)

நூல்களைச் சரி பார்த்து முடிந்த பின்னர், அவற்றினை நூலடங்கலில் (Accession Register) பதிவு செய்தல் வேண்டும். பதிவு செய்யுங்கால் நூல்களை விலைச்சீட்டில் கண்டுள்ள வரிசைப்படி பதிவு செய்யவேண்டும். அப் பதிவு எண்களை (அதனதன் எண்ணை ) விலைச்சீட்டில் ஒவ்வொரு நூலின் எதிரிலும் குறிக்க வேண்டும். பின்னர் விலைச்சீட்டில் ‘இதில் கண்டுள்ள நூல்கள் யாவும் சரிவரப் பதிவு செய்யப்பட்டன ; விற்பனையாளருக்குரிய பணத்தை அனுப்பலாம்’ என எழுதி விலைச்சீட்டினை அலுவலகத் தலைவருக்கோ செயலாளருக்கோ அனுப்புதல் வேண்டும்.

4. முத்திரையிடுதல் (Stamping)

நூல்களைப் பதிவுசெய்து முடிந்ததும் நூலக அடையாள முத்திரையினை (Library Seal) முதலில் நூலினது தலைப்புப் பக்கத்திலும் (Title Page) இறுதிப் பக்கத்திலும் இடுதல் வேண்டும். மேலும் இடையிடையே சில பக்கங்களிலும், அட்டைகளிலும், அட்டவணைகளிலும், படங்களிலும் முத்திரையிடுதலும் உண்டு. இதனை நூல் சீட்டுக்கள் ஒட்டும்பொழுது செய்து கொள்ளலாம்.

முத்திரையில் நூலகத்தின் பெயரும், ஊரும், அதனது மையத்தில் பதிவெண், நாள் என்ற இரண்டு வார்த்தைகளும் ஒன்றின் கீழ் ஒன்றாய் பொறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். பதிவெண்ணும், நாளும் அவைகளுக்கு நேராக முத்திரையின் மையப்பகுதியில் முத்திரையிட்டபின் நாம் எழுதுதல் வேண்டும். தலைப்புப் பக்கத்தில் மாத்திரம் முத்திரையில் இவ்வாறு எழுதவேண்டும்.

5. நூலின் தாள்களை ஒழுங்குபடுத்தல் (Cutting)

சில நூல்களில் தாள்கள் முறையாக வெட்டப்படாமலிருக்கலாம். சில தாள்கள் ஒன்றினோடு ஒன்று ஒட்டிக்கொண்டும் இருக்கலாம். இவ்விதம் காணப்படும் ஒழுங்கற்ற தாள்களை முறைப்பட அளவொடு வெட்டிச் சரிப்படுத்தவேண்டும். இதன் பின்னர் நூலில் ஒட்டப்பட வேண்டிய நூல்பை (Book-Pocket), நாள்சீட்டு (Date slip), வட்டச் சீட்டு (Round Lable) முதலிய வற்றை அவற்றிற்குரிய இடங்களில் ஒழுங்காகவும் அழுக்குப்படாமலும் ஒட்டுதல் வேண்டும். அட்டைப் பையினை நூலின் மேல் அல்லது கீழ் அட்டையின் உட்புறத்தில் ஒட்டலாம். இதனுள் நூல் - அட்டையினை (Book Card) வைக்க வேண்டும். நூல் அட்டையானது நூலின் பெயர், அதன் ஆசிரியர், வகைப்படுத்திய எண், வரிசை எண் என்பவற்றைக் கொண்டிலங்கும். நாள் சீட்டினை நூலின் உட்புறத்தில் முதல் தாளில் ஒட்ட வேண்டும். இவற்றின் பயனைப் பிறகு கூறலாம். வட்டச் சீட்டினை ஒவ்வொரு நூலின் முதுகின் (Spine) கீழ்ப்பகுதியில் ஒட்டவேண்டும்.

6. நூல்களை வகைப்படுத்தல் (Classification)

பொருள் வாரியாக நூல்களைப் பிரித்து, அதன் பின்னர் அதற்குரிய எண்களை வழங்குதலே நூல்களை வகைப்படுத்தல் (Classification) ஆகும். நூல்களை வகைப்படுத்தும் முறைகள் (Systems) எத்தனையோ உள்ளன. ஒவ்வொருவரும் அவரவரது விருப்பம் போல் எந்த முறையினையேனும் கடைப்பிடிக்கலாம்.

7. நூற்பட்டியல் தொகை எழுதுதல் (Cataloguing)

நூல்களை வகைப்படுத்தியதும், வகைப்படுத்திய எண்ணை நூலின் தலைப்புப்பக்கத்தின் பின்புறத்தில் நடு மையத்தில் பென்சிலால் எழுதவேண்டும். இதன் பின்னர் நூற்பட்டியல் தொகைக்குரிய அட்டைகளை எழுத வேண்டும். அட்டைகளை எழுதுங்கால் அதற்குரிய விதிகளை மனத்திலே கொள்ளவேண்டும். சில நூலகங்களிலே அட்டைகளுக்குப் பதில் ஏட்டிலேயே (Register) எழுதிக்கொள்வர். அவ்வாறு எழுதுங்கால் பொருள் வாரியாகவும் ஆசிரியர் வாரியாகவும் எழுதலாம்.

8. நூலின் எண் குறித்தல் (Numbering)

இதன்கீழ், வரிசை எண்ணும், வகைப்படுத்திய எண்ணும் அடங்கப்பெறும். வகைப்படுத்திய எண்ணை முன்னர்க் கூறியது போன்று நூலின் தலைப்புப்பக்கத்தின் பின்புறத்திலும் நூல் சீட்டிலும் எழுதுவதோடு அமையாது நூலின் முதுகில் ஒட்டப்பட்டிருக்கும் வட்டச் சீட்டிலும் எழுதவேண்டும். சில நூலகங்களில் இவ்வெண்களைப் பொன் எழுத்துக்களால் பொறிப்பதும் உண்டு. இதற்கென மின்சாரக் கருவி ஒன்று உள்ளது. எல்லா நூலகங்களும் இக்கருவியினை வாங்கிப் பயன்படுத்தலாம். வரிசை எண்ணை முன் கூறியது போன்று நூல் சீட்டிலும் நூலின் தலைப்புப்பக்கத்தில் காணப்பெறும் முத்திரையிலும் எழுத வேண்டும். இவை தவிர, வரிசை எண், வகைப்படுத்திய எண், இவ்விரண்டையும் நாள் சீட்டின் தலைப்பில் அதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் எழுதுதல் கட்டாயமாகும்.

9. பதிவு முறை (Process Recording)

இறுதியாக மேற்கூறிய பணிகளையும் அதைச் செய்தவர்களையும் பதிவு செய்தல் என்னும் வழக்கம் சில நூலகங்களிலே நடைமுறையிலிருக்கின்றது. இவ்விவரங்களைக் கீழ்க்கண்ட தலைப்புக்களில் குறிக்கலாம்.

1. நூலைச் சரிபார்த்தவரின் பெயர்:
2. நூலின் வடிவாக்கத்தைச் சரிபார்த்தவர்:
3. வரிசை எண் :
4. வகைப்படுத்திய எண் :
5. முத்திரையிட்டவர் :
6. நூற்பட்டியல் தொகை எழுதியவர் :
7. ஒழுங்கற்ற தாள்களைச் சரிப்படுத்தியவர் :
8. சீட்டு முதலியன ஒட்டியவரின் பெயர் :
9. இவற்றைச் சரிபார்த்தவரின் பெயர் :

மேற்கூறியவற்றை அட்டைகளில் எழுதிவைக்கலாம்; அல்லது இவ்விளக்கங்கள் பொறித்த முத்திரை ஒன்றினைச் செய்து, நூலின் இறுதிப் பக்கத்தில் இம்முத்திரையினை இட்டு, அதில் காணும் தலைப்புக்களுக்குரியவற்றை அவற்றிற்கு நேரே எழுதிக் கொள்ளலாம். இம்முறைப்படி யாவும் செய்து முடித்த பின்னர், நூல்களைப் படிப்பதற்காக அலமாரிகளில் அடுக்கி வைத்துவிடலாம்.

நூல்களை அலமாரிகளில் அடுக்கிவைத்தல்

நூல்கள் பயன்படவே அதாவது படிப்பதற்கே உள்ளன. அலமாரிகளை அழகுபடுத்துவதற்காக நூல்கள் வாங்கப்படவில்லை. ஒரு நூல் விலை உயர்ந்தது என்றோ, அது காணாமற் போய்விடும் என்றோ, அழுக்குப் பட்டும் சிதைந்தும் போய்விடும் என்றோ, அதனைப்பூட்டி வைத்தல் தவறானதாகும். நூலகத்திற்கு வருவோர் பிறர் உதவியின்றி உளம் விரும்பிய நூல்களோடு உறவாட வேண்டும் என்ற உயரிய நோக்கம் நூலகத்தாருக்கு இருத்தல் வேண்டும். இதற்கு வழி வகுப்பது ‘விரும்பிய வண்ணம் படிக்கும் நூலக முறை’யேயாகும் (Open Access System) இதன்படி நூல்கள் திறந்த அலமாரிகளில் (open shelves) அடுக்கி வைக்கப்படவேண்டும். நூலகத்திற்கு வரும் மக்கள் எவர் உதவியும் இன்றித் தாங்கள் விரும்புகின்ற நூல்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் வகையில் அலமாரிகளில் நூல்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்படல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் விரும்பும் நூல் கிடைக்க வேண்டும்.

வெறும் செங்கற் குவியல்களோ கற்குவியல்களோ கட்டிடம் ஆகாதது போல, நூல்களை அழகாக அடுக்கி வைத்திருந்தால் மட்டும் அது நூலகம் ஆகிவிடாது. நூலகத்தினைப் பயன்படுத்திக்கொள்ள வரும் மக்களுக்கு, எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்க வேண்டியதில்லை என்று வழிகாட்டும் வகையில் நூல்கள் அடுக்கப்பட வேண்டும். மேலும் நூலகத்தில் எங்கெங்கு என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளுதற் பொருட்டு அட்டையினால் வழி காட்டிகள் (Guides) செய்து ஆங்காங்கு வைத்தல் வேண்டும்.

நூல்களைத் தூசு படியவிடாமல் நூலகப் பணியாளர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். நாடோறும் நூலகப் பணியாளர்கள் அலமாரிகளையும், இருக்கைகளையும், நூல்களையும் நன்கு துடைத்தல் வேண்டும். மேலும் நூல்கள் அவை அவை இருக்கவேண்டிய இடங்களில் ஒழுங்காக இருக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். நூலகத்திற்கு வருவோர் அலமாரிகளிலிருந்து நூல்களை எடுக்க இணங்கலாமேயொழிய, படித்து முடித்த பின்னர் நூல்களை அவர்களே சென்று அலமாரிகளில் திரும்ப வைப்பதற்கு நூலகத்தார் இணங்கக்கூடாது. இப்பணியினை நூலகப் பணியாளர்தாம் செய்தல் வேண்டும். ஏனெனில் நூலகத்திற்கு வருவோர் ஒரு நூலினைத் திரும்ப வைக்குங்கால் அதற்குரிய இடத்தில் வைக்காது வேறோர் இடத்தில் வைத்துவிட்டால், அதனை எளிதில் தேடி எடுக்க முடியாது.