உள்ளடக்கத்துக்குச் செல்

நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 15

விக்கிமூலம் இலிருந்து

15

கொடுமை என்பது லாட்டரிச் சீட்டு மாதிரி. தோற்கத் தோற்க, வாங்கச் சொல்லும்; போதை மாதிரி-போடப்போட, போட வைக்கும்; சூதாட்டம் மாதிரிதோற்றாலும், வென்றாலும், தொடரச் சொல்லும்; எல்லாவற்றிற்கும் மேல், பப்ளிசிட்டி மோகத்தைப் போன்றது-இருப்பதில் துவங்கி, இல்லாததில் முடிய வைக்கும்.

ஆரம்பத்தில், மாடக்கண்ணுவையும், கலாவதியையும் லேசாக அடித்து, பலமாக மிரட்டி 'உண்மையை' வரவழைத்துவிட வேண்டும் என்று தான், முத்துலிங்கம் அவர்களை, தோட்டத்திற்குக் கொண்டு வரச் செய்தார். ஆனால், வீட்டிலிருந்து புறப்படும் போதே, தமிழரசியிடம்-அவர் பாணியில் சொல்லப்போனால் 'கேவலம், ஒரு பொம்பிளையிடம்' தோற்றதை, கலாவதியிடம் வெற்றியாகக் காட்டவேண்டும் என்ற வெறி வந்தது.

இரண்டு 'போடோ', ஒரு 'சூடோ' போட்டால், உண்மை தானாக வந்து விடும் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. உடனே, அவர்கள் சொல்லப் போகும் இடத்திற்கு, தமது தலைமையில் ஒரு 'பிரதிநிதிக் குழுவை' அழைத்துச் சென்று, வினைதீர்த்தானை ராத்திரியோடு ராத்திரியாகக் கொண்டு வந்து, அவன் தலையை மொட்டை யடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத்தில் எருக்கலை மாலையைப் போட்டு, கழுத்தில் மணல் பெட்டியை ஏற்றி, தெருத் தெருவாக, அவனை ஊர்வலமாக அடித்து, அழைத்துச் செல்ல வேண்டும். அப்புறந்தான், ஒரு கையையோ, காலையோ வெட்டவேண்டும் என்று நினைத்தார்.

ஆனால், கட்டிப் போட்ட மாடக்கண்ணுவும், கட்டாமல் போட்ட கலாவதியும் ‘உண்மையை’ சொல்ல மறுத்ததை, அவர்கள் தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்தார். இனிமேல், வினை தீர்த்தானை கண்டு பிடிக்கவே முடியாது என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டதும், அவர் வெறியரானார்.

‘முத்துலிங்கம் தங்கச்சியை, கூட்டிக்கிட்டுப் போன வினை தீர்த்தான் குடும்பத்தை, நிர்மூலமாக்குனவனாக்கும் இந்த முத்துலிங்கம்’ என்று ஊரார், தன்னை பயபக்தியுடன் பாராட்ட வேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது. அவர் கண் முன்னால், வினை தீர்த்தான்–பொன் மணி ஜோடிக்கு, கலாவதி தன் வீட்டு வாசலில் காவல் காப்பது போல் ஒரு கற்பனைக் காட்சி தோன்றியது. அந்தக் காட்சி விரிய விரிய, அவருள் இருந்த மிச்சம் மீதி மனிதாபிமானமும், மிருகத்தனமாய் மாறியது.

கலாவதியை நிர்வாணப்படுத்தத் தயங்கிய கையாட்களை, முத்துலிங்கம் அதட்டினார்.

“இதுல யோசிக்கதுக்கு என்ன இருக்கு? நம்மள பேடிப் பயலுவன்னு நெனச்சு இவள் ‘கல்லுளி மங்கியா’ கிடக்குறது ஒங்களுக்கு உறைக்கலியா? ஒங்களால முடியாட்டால் சொல்லுங்க, நான் செய்யுறேன். அப்புறம் ஒங்களுக்குன்னு ஏதாவது வந்தால், என் கிட்ட வரப்படாது. நாம் இனிமேலும் சும்மா இருந்தால், பேடியிலயும் பேடி பெரிய பேடின்னு அர்த்தம்.”

கையாட்கள், தாங்கள் பேடிகள் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவோ என்னவோ, சும்மா இருக்கவில்லை. உடம்பையே கையில் பிடித்து நிற்பவள்போல், நின்று, கையெடுத்துக் கும்பிடப் போன கலாவதிமேல், கட்டு விரியன் பாம்புபோல் பாய்ந்தார்கள். ஏற்கனவே அவிழ்ந்திருந்த கலாவதியின் சேலை, அவர்கள் கையோடு வந்தது. பாவாடை துண்டு துண்டாக வந்தது. அவள் முண்டியடித்து முருங்கை மர வேரில் விழுந்தாள். அதில் சிக்கிக் கிழிந்த ஜாக்கெட், அவர்களிடம் கந்தல் கந்தலாகப் போனது. அவர்கள் நிர்வாணப் படுத்தும்போது, கலாவதி சொன்ன ஒரே வார்த்தை:

“எய்யா ... என்னப் பெத்த அய்யா ...”

எரியும் நெருப்பில், விரியும் வெளிச்சத்தில், மகள் படும் மானப்பாட்டைப் பார்த்துவிட்டு, மாடக்கண்ணு சொன்ன ஒரே வார்த்தை :

“மவளே... மவளே!”

கலாவதி, முதலில் உடம்பை மறைக்கப் போனாள். அதற்காக, உடம்பை குறுக்கப் போனாள். அது முடியாது என்பது தெரிந்ததும், கண்ணோடு சேர்த்து, முகத்தைக் கரங்களால் மூடியபடி, எவர்கள் துகிலுரிந்தார்களோ, அவர்களிடமே ஆதரவு தேடுபவள் போல் சாய்ந்தாள். அவர்கள், ஆணுடம்புக்காரர்கள் என்றோ, தன்னுடம்பு பெண்னுடம்பு என்றோ பேதம் தெரியாமல் பேதலித்துச் சாய்ந்தாள்.

வழியிலே, ஒரு கிழவியைப் பார்த்தால்கூட, மாராப்புச் சேலையை இழுத்து மூடி, பாவாடை தெரியாமல் இருக்க, இடுப்புச் சேலையை தூக்கி நிறுத்தி, வயிறு தெரியாமல் இருக்க, முந்தானைச் சேலையை முன்னால்மூடி நடந்து பழகிய கலாவதி, இப்போது, மானத்தை மறைக்க முடியாமல் வானத்தையே பார்த்தாள். மாடக்கண்ணுவோ, நெற்றியை ஒரு கல்லில் மோதியபடி, குப்புறப் புரண்டார்.

திரௌபதியைப் போல், கையெடுத்துக் கும்பிட அவளுக்கு கண்ணன் இல்லை. வாசகர்கள் எதிர்பார்ப்பது போல்–சினிமாக்காரர்கள் நம்மை நம்ப வைப்பது போல், வினை தீர்த்தான் அங்கே திடீரென்று குதிக்கவில்லை. தமிழரசி, ரயில் கிடைக்காமல் ஊருக்குத் திரும்பி, ஆட்களைத் திரட்டிக் கொண்டு அங்கே வரவில்லை. அவளுக்கு, அவளே காவல். கசப்பான கொடுமையை, இனிப்பாகச் செய்த திருப்தியில் நின்ற அந்த மனிதப் பேர்வழிகளின் கண்ணில் பட்ட, தன் நிர்வாணத்தை மறைக்க முடியாது என்பதை உணர்ந்து, அவள் தன் கண்களை- நிர்வாணமாயிருந்த தனது கண்களைத்தான்–இமைகள் என்னும் ஆடைகளால் மறைத்தாள்.

சிறிது நேரத்தில், மானம் அவளைப் பங்கப்படுத்த, அவள் சோளப் பயிருக்குள் ஓடப் போனாள். சற்று பள்ளமாய்க் கிடந்த கமலைக் கிடங்கின் முடிவிடத்தில் பதுங்கப் போனாள். தென்னை மரத்தருகே மறையப் போனாள். ஓடப் போனவளை, வீரபத்திரன் ஓடிப் பிடித்தார். பதுங்கப் போனவளை, பேச்சிமுத்து பாய்ந்து பிடித்தார். மறையப் போனவளை, பிள்ளையார் மடக்கிப் பிடித்தார். கலாவதி பேச்சற்று, நினைப்பற்று, பிரமைக்குள் நின்றாள்.

“நெருப்பிற்குப் பயந்து, ஆகாயத்தை வட்டமடித்த பறவைகளே! நீங்களாவது ஊருக்குச் சொல்லலாமே .. ஓ... நிர்வாணப் பறவைகளான உங்களுக்கு அவள் நிர்வாணம் ஒரு பொருட்டாகத் தெரியலயோ...? தோட்டத்தின் நிர்வாணத்தை மறைக்கும் பயிர் பச்சைகளே! பட்டென்று கீழே விழுங்கள். அப்படி விழுந்தால், தொலைவில் யாராவது போனால், அவர் கண்ணில் இந்தக் காட்சிபட்டு, ஊருக்கு சேதியாய் போனாலும் போகலாம்!


தாவர சங்கமம், கலாவதியைக் கைவிட்டது. காதல் தூதுக்கு கிளியுண்டு; நிர்வாணத்திற்கு ஏது?

கலாவதி, கை சோர்ந்து, மெய்சேர்ந்து, சிந்தையிழந்து, செயலிழந்து, உடம்பில் ஏற்பட்ட நிர்வாணத் தால், உள்ளத்தாலும் நிர்வாணப்பட்டவள் போல், வீரபத்திரன் மேல் சாய்ந்தாள். அவர் ‘சீ’ என்று உதறியபோது, அவள் தலை, பேச்சிமுத்துவின் தோளிலும், கைகள், பிள்ளையார் தலையிலும் விழுந்தன. சாய்த்தவர்கள் மேலேயே சாய்ந்தவள், அப்படியே கிடந்தாள்.

முத்துலிங்கத்தின் கையில், கதிரருவாள், சிவப்புச் சிவப்பாய் பளபளத்தது. ரத்தச் சிவப்பாய் மின்னியது. ஏழையின் பிழைப்பாயுதமான அந்த பன்னருவாளின் மரப் பிடியைப் பிடித்தபடி, முத்துலிங்கம், நிதானமாய், அடிமேல் அடியாய் நடந்தார்.

“இப்போதாவது உண்மையைச் சொல்லு” என்று கேட்கப் போனவர், வாயை மூடிக் கொண்டார். வினை தீர்த்தான் வந்தாலும் சரி, கிடைத்தாலும் சரி, கலாவதியை விடப் போவதில்லை என்ற கங்கணக் கொடுமை விழிகளோடு, கலாவதியின் விழிகளை பலவந்தமாகத் திறந்தார். நெருப்புத் துண்டை நீட்டினார்.

“இந்தக் கண்ணுதானடி காவல் பார்த்தது” என்று சொல்லியபடியே, நெருப்புத் துண்டை கண்களுக்குள், கொடுமையின் அடிக்கல்லாக நாட்டப் போனபோது, கலாவதியின் அனிச்சை உணர்வு, விழிகளை, அவரிடம் இருந்து விடுபட வைத்து, மூடச் செய்தது. இதனால் கண்களுக்குள் போகப் போன சூட்டருவாள், கலாவதியின் இமைகளுக்குக் கீழே பட்டது பட்ட இடம் பொசுங்கியது. அவள் மீண்டும் “எய்யோ ... எய்யோ ...” என்றாள்.

மனித ரத்தம் ருசி கண்ட புலிபோல முத்துலிங்கம் மாறினார்.

“இந்தக் கையாலதானடி அவங்களுக்கு வழியனுப்பினே?” என்று கைகளில் சூடு போட்டார். “இந்த நெஞ்சுல தானடி அவங்க போன இடம் மறைஞ்சு இருக்கு” என்று மார்பகங்களிலும் மார்பகங்களுக்கு மத்தியிலும், காய வைத்த அரிவாள் முனையை ஏவி விட்டார்.

“இந்த வாய்தானடி அவங்கள போகச் சொன்னது” என்று அவர் கத்தியபோது, தீக்கோல், அவள் வாய்க்குள் நுழைந்தது, இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தொழிலைக் கற்பித்து, ஒவ்வொரு விதமாக பன்னருவாள் முத்திரையிட்டது. கலாவதிக்கு எங்கெல்லாம் நெருப்பு முத்திரையை பதிக்கமுடியுமோ, அங்கெல்லாம் பதித்தார்.

உடம்பின் ஒன்பது வாசல்களில், கண் வாசல்கள் தவிர, மீதி வாசல்களை, அரிவாள் முனை, அனலாய் சுட்டெரித்தது. உடம்பு முழுவதும் அந்தத் தீக்கோலால், அவர் கொடுங்கோல் புரிந்தபோது, முதலில் “எய்யோ ... எய்யோ” என்ற கலாவதி, பிறகு அந்த அரிவாள் முனை, உடம்பில் சூட்டை கக்கக் கக்க, அதே விகிதத்தில் உயிரை உடம்பிலி ருந்து கக்கி விட்டவள் போல, ‘ஆங்...ஆங்’ என்று மட்டும் தனக்குள்ளே புலம்பி, தனக்குள்ளே தவித்தாள். கடைசியாக, உடம்பில் எல்லாப் பக்கமும் பொசுங்கியதால், நிற்க முடியாமல் கீழே விழுந்தாள். வலி தாங்க முடியாது தரையில் புரண்டாள்! பிறகு புரளாமலே கிடந்தாள்.

திடீரென்று சரல் மேட்டில், உயிரை உறைய வைப்பது போல் சத்தம் கேட்டது. குறுக்கப்பட்ட மாடக்கண்ணு மரணப் பிரகடனத்தை வெளியிடுபவர் போல் வெளியிட்டார்.

“அடேய் முத்துலிங்கம்! என் பெண்ணையாடா பண்ணாத கோலமெல்லாம் பண்ணிட்டே? ஒரு காலத்துல ஒம்மா இதே இந்தத் தோட்டத்துல, என் கையைப் பிடிச்சு இழுத்து சோளத்தட்டைக்குள்ளே கூப்பிட்டபோது, அவளை கையெடுத்துக் கும்பிட்டு ஓடினவண்டா நான். அப்படிப்பட்டவன் பெத்த மகளயாடா இந்தப் பாடுபடுத்துரே? ஒன்னோட சொத்துல்லாம் ஒம்மாவுக்கு வெளியூர் வியாபாரிங்க கொடுத்ததுடா. ஒம்மா சங்கதிய ஊர்ல கேட்டுப் பாருடா. கடவுள் ஒன்னை விட மாட்டாண்டா, ஆண்டவா! நீ இருக்கியா... இருக்கியா... நீ இருக்கப்படாது... நீ அப்படி இருந்தால் இவன்கூட சேர்ந்ததா அர்த்தம் ஆயிடும். அடேய்... என் மவள பலவந்தமாய்தான் அம்மணமாக்குனே. ஆனால் ஒன் அம்மா பலர்கிட்ட அம்மணமாய் நின்னவள். அந்த புத்திய கடைசில காட்டிட்ட பாத்தியா...”

அம்மாவின் கற்பை சோதித்துப் பார்க்காமலே தெரிந்து கொண்ட முத்துலிங்கம், கதிரருவாளை கீழே போட்டுவிட்டு, சரல்மேட்டைப் பார்த்து ஓடினார். மாடக் கண்ணுவின் தலைக்கு, தனது வலது காலை அம்பாக்கி, அவர் ஓடிச்சேர்வதற்குள்—

மாடக்கண்ணு, தனது உடம்பின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி, மூச்சை நிறுத்தி, முன் நெற்றியைச் சாய்த்து, சரல்மேட்டில் இருந்து தன்னைத்தானே உருட்டினார். துவக்கத்தில், உருளாதது போல் அங்குமிங்குமாக ஆடிய உடம்பு, அவர் அடிவயிற்று நெருப்பை, கரி எஞ்ஜின்போல் தலைக்குக் கொண்டு வந்ததும், சரல் மேட்டுச் சரிவில் உருண்டோடியது. சுருண்டு சுருண்டு, உருண்டு உருண்டு, விழுந்து விழுந்து போன அந்த உடம்பை, திடீரென்று காணவில்லை, ‘மூலைப்படி’ வரை தண்ணீர் நிரம்பிய கிணற்றில் மட்டும் ‘தொய்’ என்று சத்தம் கேட்டது. நெருப்பின் ஒளியில், தீர்த்திவலைகள், அந்தரத்தில் வானவில்லாய்த் தோன்றி, பின்பு வடிவம் குலைந்தன.

முத்துலிங்கம் உட்பட எல்லோரும் பிரமித்தபடி, கிணற்றுப் பக்கம் நடந்தார்கள். கையில் உள்ள பேட்டரி லைட்டைப் போட்டு, கிணற்றுக்குள் பார்த்தார்கள், கிணற்று நீர், சுழிபோட்டுக் கொண்டிருந்தது. நடுப் பாகத்தில் குமிழிகள் தோன்றின. மாடக்கண்ணு, உயிர்த் தாகம் தீர, தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ?

எல்லோருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. கிணற்றையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள், கிணறு மாதிரியே, வாயைப் பண்ணினார்கள். ‘உம்... உம்...ஆங்... ஆங்’ என்ற சத்தத்தைக் கேட்டு, தலை திருப்பினார்கள்.

கலாவதி, மீண்டும் குப்புறப்படுத்து, மல்லாந்து புரண்டு பக்கவாட்டில் சாய்ந்து, கால்களை நீட்டி, கைகளை முறுக்கி கசிந்து கொண்டிருந்தாள். உயிரை உருட்டுவது போல், உடம்பை உருட்டிக் கொண்டிருந்தாள். பிறகு, பழைய படியும் அசைவற்றுக் கிடந்தாள்.

திகைத்து நின்ற முத்துலிங்கமும், கையாட்களும், ஒருவரை ஒருவர் பார்த்துப் பயப்படுவது போலவும், பயமுறுத்துவது போலவும் பார்த்துக் கொண்டார்கள். நெடிய மௌனம்! இரவிற்கு மரண முத்திரை குத்திய மௌடீக மெளனம்! ஐந்து நிமிட அராஜக இடை வெளிக்குப் பிறகு, பிள்ளையார், வாயைப் பிராண்டினார்.

“என்னப்பா இது, பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியுது. முத்துலிங்கம்... ஒன்னத்தான். இது, இதோட நிக்காதே... ஒன்னால நாங்களும் முட்டாத்தனமாய்...”

பேச்சிமுத்தும் பேசினார்.

“கடைசில, விதி நம்மை தூக்குல போடப் போகுது பாரு. இதுக்குத்தான் கேட்பார் பேச்சைக் கேட்கக் கூடாது என்கிறது.”

தலையில் கை வைத்தபடி நின்ற முத்துலிங்கம், லேசாய் சுதாரித்தார்.

“எப்படியோ எதிர்பார்த்தது கிடைக்காமல், எதிர் பாராதது நடந்துட்டு, ஒங்க வீட்ல இப்படி ஒருத்தி ஓடிப் போய், ஒங்க தோட்டத்துல இப்படி ஒன்று நடந்திருந்தாலும், அங்கேயும் முன்னால் நிற்கிற ஆளு நான். நான் வேணுமுன்னால்... எல்லாத்துக்கும் பொறுப்பேத்துக்கிறேன். தலைபோனாலும் ஒங்களக் காட்டிக் கொடுக்கல. நீங்க வேணுமுன்னால் போங்க. நான் எக்கேடும் கெட்டுப் போறேன்.”

“சரிப்பா ... இப்போ இவளை என்ன பண்ணலாம்? இவளும் செத்து ரெண்டு கொலையாய் ஆயிடப் போவுது.”

“அப்படிக் கேட்டிங்கன்ன அது முறை. ஒங்கள நான் கைவிட்டுடுவேனா? தாமோதரன் எதுக்கு இருக்கான்? ஒங்க ஒடம்புல ஒரு துரும்பு பட்டாலும், நானே கையைக் காலே கட்டிக்கிட்டு இந்தக் கிணத்துல விழுவேன். மாடக் கண்ணு தலைவிதி கிணத்துல முடிஞ்சால், நீங்களோ நானே என்ன செய்ய முடியும்?”

“இப்போ என்னப்பா செய்யுறது?”

“இவள தூக்கிக்கிட்டுப் போய் என் மயினி மகன் டாக்டர்... டவுன்ல நர்ஸிங் ஹோம் வச்சிருக்கிருன் பாருங்க... அதுல சேர்த்துடுங்க, உம் சரி தூக்குங்க...”

“நீ வர்லயா?”

“வர்ல”

“நாங்க மட்டும் எதுக்காகப் போகணும்?”

“ஏன் இப்படிக் கத்துறீங்க? நாம் எல்லாரும் போயிட்டால், ஊர்ல சந்தேகம் வந்துடும். அதலை ரெண்டு பேரு போனால் போதும். நான் காலையில பணத்தோட வாறேன். வீரபத்திரன் அண்ணனுக்குத்தான், என் மயினி மகனை நல்லாத் தெரியுமே. இவளை அங்கே சேர்க்கிறது, யாருக்கும் தெரியப்படாதுன்னு அவன் கிட்ட சொல்லிடுங்க.”

“ஒருவேள இவளுக்கு வழில ஏதாவது ஆயிட்டால்?”

“சின்னப்பிள்ளை மாதிரி பேசுறது தப்பு. வழியில குழி வெட்டிப் புதைச்சிட்டு வர வேண்டியதுதானே.”

செத்தவள் போல் கிடந்த கலாவதியின் மூக்கில், பேச்சிமுத்து விரல் வைத்துப் பார்த்தார். மூச்சு வந்தது. அவள் உடம்பின் பல இடங்கள், பொசுங்கியும், பிதுங்கியும் கிடந்தன. உடம்பெங்கும் பொசுங்கிப் போன, கருப்புக் கருப்பான கொடுமை முத்திரைகள். சிலவற்றில், வெள்ளைக் கொப்பளங்கள். இன்னும் ஒரு சில உறுப்புக்களில், சதைத்திரள்கள் புகைந்துகொண்டிருந்தன. தொட்ட இடத்திலெல்லாம், அவர்கள் கை சுட்டது. பார்த்த இடத்திலெல்லாம் பாளம் பாளமான கருப்பு. மேடுகள்; பொசுக்கல் காடுகள்.

கலாவதியின் உடம்பில், தனது மேல் துண்டை எடுத்துப் போட்ட பேச்சிமுத்து, அவளைத் தூக்கி, தன் தோளில் போட்டுக் கொண்டார். வீரபத்திரனைப் பார்த்து. “பேய்க்கு வாழ்க்கைப் பட்டால், புளியமரத்தில் ஏறித்தான் ஆகணும். உம் நடடா... ”என்றார்.

கலாவதியைத் தூக்கிக் கொண்டு பேச்சிமுத்துவும், வீரபத்திரனும் சுடுகாட்டுப் பக்கம் போனபோது, நரிகள் ஊளையிட்டன; ஆந்தைகள் ஓலமிட்டன; அண்டங்காக்கைகள் வட்டமடித்தன. சாகாத பிணத்தை வழி மறிக்க, அவை ஆயத்தம் செய்தன.

சரல்மேட்டில் நின்றபடி சுடுகாட்டைப் பார்த்த முத்துலிங்கம், கிணற்றை ஒரு தடவை பார்த்துவிட்டு, கமலைக் கிடங்கிற்கு வந்து, கையாட்களுடன் சேர்ந்து கொண்டார். ஒவ்வொருவரும், நடந்ததையும், நடக்கப் போவதையும், தத்தம் மனோபாவத்திற்கு ஏற்றபடி மனதுக்குள் கற்பனை செய்து, கண்களை ஆட்டாமல், கல்லாய் சமைந்தார்கள். அரை மணி நேரம் இடைவெளிக்கு ஒரு தடவை, ஒவ்வொருவராக, ஊரைப்பார்த்து நடந்தார்கள்.

இறுதியாக எஞ்சிய முத்துலிங்கம், உடம்பாட எழுந்தார். உயிராட பயந்தார். கிணற்றுக்குள் உயிர் பாய்ச்சிய மாடக்கண்ணு, பேயுருவாகி, அவரையும் கிணற்றுக்குள் தூக்கிப் போடுவதுபோல் ஒரு பிரமை;. கலாவதி வழியிலேயே உயிர்போய், மோகினிப் பிசாசாகி, அவர் முன்னால் பாம்பாய் வந்து, உடம்பைச் சுற்றுவது. போன்ற பயப்பிராந்தி. முத்துலிங்கம் எழுந்தார். கால்கள் தரையில் மடங்கின. சுடுகாட்டு நரிகளின் ஊளே, அவர் ஊனை சில்லிட வைத்தது. ‘எய்யோ...எய்யோ...’ என்று கலாவதி, காதில் கத்திக் கொண்டிருந்தாள்.

கிணற்றையும், சுடுகாட்டையும் பார்த்தபடியே, முத்து லிங்கம் குத்துக்காலிட்டு உணர்ச்சியற்றுக் கிடந்தார். பிணக்களையோடு, பேய்க்களை தோன்ற, முகத்தை கால் களுக்குள் மாட்டிக் கொண்டார்.

பகலவன் உதித்து, பறவைகள் ஆர்த்தபோதும், எழாத முத்துலிங்கம், வெயிலின் உறைப்பு உஷ்ணமான போதுதான் எழுந்தார். மீண்டும் கிணற்றுப் பக்கம் போய், கீழே பார்த்தார். எதுவும் தெரியவில்லை. பிணம் மிதக்க எப்படியும், இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். அதற்குள் எதையாவது ஜோடிக்க வேண்டும். எப்படி ஜோடிக்கலாம்? இந்த தமிழரசி என்ன செய்வாளோ?

முத்துலிங்கம் தள்ளாடினார். தள்ளாடித் தள்ளாடி, நடந்தார். வீட்டில் போய் அப்படியே சாய வேண்டும் போலிருந்தது. அதே சமயம், வீட்டிற்குப் போகவே மனமில்லை. ‘கடைசியில், அம்மா–என்னைப் பெற்றவள்– இப்படிப்பட்டவளா? மாடக்கண்ணு, நீ தோற்கல. நான் தான் ஒன் கிட்டே தோற்றுட்டேன்.’

ஆங்காங்கே, உட்கார்ந்து உட்கார்ந்து, எழுந்தெழுந்து நடந்தார் முத்துலிங்கம். வழியில் பார்த்தவர்களிடம் முகம் காட்டாமல், ஒதுங்கியபடியே நடந்தார். ஊர் முனைக்கு வந்ததும், அவர் தலை தானாகக் கவிழ்ந்தது. தொலைவிடத்தைப் பார்க்காமலே, தலை குனிந்தபடியே நடந்தவர்...

“அதோ... வாரான்... அதோ வாரான். பிடியுங்க... பிடியுங்க” என்ற கோரஸ் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தார். எதிரில் பத்துப் பதினைந்து போலீசாருக்கு மத்தியில், கலாவதியைத் தூக்கிச் சென்ற பேச்சிமுத்து, வீரபத்திரன், தோட்டத்தில் இருந்து போன பிள்ளையார் ஆகிய மூவர் கைகளும் ஒன்றுடன் ஒன்று கட்டப்பட்டு, அவர்களை ஒரு சிலர் மாடுகளைப் போல் விரட்டிக் கொண்டிருந்தார்கள்.

போலீசார் அவர்களை அடித்தும், பிடித்துத் தள்ளியும் நடத்திக்கொண்டிருக்க, அவர்கள் பின்னால் ஊரே திரண்டு வந்தது. முத்துலிங்கத்தைப் பார்த்ததும் கையாட்களின் பெண்டு பிள்ளைகள் போலீசாருக்கு முன்னால் ஓடி வந்தார்கள். முத்துலிங்கம் செய்வதறியாது நிலையிழந்து நின்ற இடத்தை நோக்கி, மண்ணை அள்ளி வீசினார்கள். ஒப்பாரிச் சத்தத்துடன், அவரைப் பார்த்து ஓடினார்கள்.

“ஏ...கரிமுடிவான்... இந்த தடிமாட்டு மனுசங்ககிட்டே...கலாவதிய கொடுத்துட்டு தப்பிக்கவாடா பார்த்தே? ஒரு ஏழை மேல, வேற ஏழைங்களை யாடா ஏவி விட்டே? குடிகெடுப்பான். நீ கொலகாரனாய் ஆனது போதாதுன்னு, எங்க குடும்பத்தையும் அப்படி ஆக்கிட்டியேடா, வழியில இவங்கள மடக்குன போலீஸ் ஒன்னை விடாதுடா?”

முத்துலிங்கத்தை நோக்கி போலீசாரும், ஊர்க் கூட்டமும் ஓடியது. லத்திக்கம்புகள் நீளமாக, பெண்களின் கைமண்கள் தூள் பறக்க, கூட்டம் கத்திக்கொண்டே ஓடியது.

முத்துலிங்கமும் ஓடினார். எந்தப் போலீசிடம், சின்னச் சின்ன காரியங்களுக்குப்போய் வெற்றி கண்டாரோ, அவர்களுக்குப் பயந்து ஓடினார். “ஏய்... நில்லு... நில்லு” என்ற போலீஸ் வார்த்தைகளோடு, ஊர்க் கூட்டம் எறிந்த கல்லும் மண்ணும் முதுகில்பட, முத்துலிங்கம் கண்மண் தெரியாமல் ஓடினார். ஊருக்குள் வந்த நரி தப்பித்து ஓடுவதுபோல், சந்து பொந்துகளில் புகுந்து, மேடுகளில் கைகளை ஊன்றி, நான்கு கால் மனிதர்போல் ஓடிக்கொண்டிருந்தார்.