உள்ளடக்கத்துக்குச் செல்

நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 16

விக்கிமூலம் இலிருந்து

16

கேரளம்போல், சாலை நெடுக வீடுகளாகவும், அவற்றின் முன்னாலும், பின்னாலும் முக்கனி மரங்களோடு, ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பாக்கு மரங்களும், தென்னை மரங்களும் மலிந்த பகுதி; நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாலையோர காவல் நிலையம். திருவனந்தபுரத்திலிருந்து, கன்னியா குமரிக்கு அடிக்கடி ‘வி.‘ஐ. பி. க்கள்’ போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருப்பதால், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதைவிட, பொதுமக்களிடமிருந்து ‘தலைவர்களுக்குப்’ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற லட்சியத் துடிப்புடன், மக்களையே சந்தேகப் பேர் வழிகளாய் நினைத்து, செயல்பட வேண்டிய கேந்திர நிலையம்

தனித்திருக்க விரும்பியது போல், பக்கவாட்டில் உள்ள அறையில், எல்லாவற்றையும் இழக்கத் தயாரான ஏகாந்தி போல், தன்னையறியாமலே தலையால், ஆகாய அந்தரத்தில் வட்டமடிதத தாமோதரன், உரத்த சத்தம் கேட்டு, வெளியே உற்றுப்பார்த்தான். யாரோ ஒருவர், ‘ஏட்டு’ பொன்னுச்சாமியிடம், படபடப்பாய்ப் பேசிக் கொண்டிருந்தார். உடனே அவன், தன் இருக்கையில் இருந்து எழுந்து அந்த இடத்திற்குப் போய், பேசியவரை அதட்டலாகக் கேட்டான்:

“என்னய்யா விஷயம்?”

“ஒண்ணுமில்லிங்க. என் வயலுல தண்ணீர் பாயக் கூடாதுன்னு, என் தம்பி வாய்க்காலை அடைச்சுட்டு, கொடுக்கரிவாளோட வாய்க்கால்பக்கம் நிக்கிறான். அவன் பக்கத்துல போகவே பயமாய் இருக்கு. இன்னிக்கு வயலுல. தண்ணீர் போகாட்டால், போட்டபயிரு பொசுங்கிப் போயிடும். அதைத்தான அய்யா கிட்ட , சொன்னேன், அய்யா அதுக்கு, ரத்தக் காயத்தோட வந்தியானால் ஏதாவது ஆக்ஷன் எடுக்கலாம். சும்மா வந்தால் எப்டிய்யான்னு அய்யா சொல்றார்!”

தாமோதரன், பொன்னுச்சாமியை முறைத்தான். ஐம்பதைத் தாண்டிய அவரை, அதற்கு மேல் முறைக்க அவனுக்கு மனம் வரவில்லை. பக்கத்தில் நின்ற இன்னொரு போலீஸ்காரரைப் பார்த்து, “நீங்க அவரோட போங்க. இப்போ நாட்ல தம்பிக்கு முதல் விரோதியே இந்த அண்ணங்கதாய்யா” என்று சொல்லியபடியே, மீண்டும் தன் அறைக்குள் போனான். சிறிதுநேர இடைவெளிக்குப் பிறகு, “மிஸ்டர் பொன்னுச்சாமி! கொஞ்சம் வந்துட்டுப் போ நீங்களா!”' என்றான், வினயமாக.

தாமோதரன் கூப்பிட்டு முடிக்கும் முன்னாலேயே, ஏட்டு பொன்னுச்சாமி, அவன் முன்னால் சலூட் அடித்தபடி நின்றார்.

தாமோதரன் நிதானமாகக் கேட்டான்: “ஒங்களுக்கு எத்தனை வருஷம் சர்வீஸ் ஆகுது சார்?”

அவர் “நீ பிறக்கு முன்னாலயே சர்வீஸ்ல சேர்ந்துட்டேன்” என்று மனதுக்குள் சொல்லியபடியே, தாமோதரனை பயப்பட்டுப் பார்ப்பவர்போல், பாவலா செய்தார். தாமோதரன் நிதானம் இழக்காமல் கேட்டான்:

“சாந்தமாய் பேசுறதுனால நான் கோபப்படலன்னு அர்த்தமில்ல. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.”

“முப்பது வருஷம் சார்.”

“போலீஸ்காரன் டூட்டி, குற்றத்திற்கு ஆக்ஷன் எடுக்கிறது மட்டுமில்ல; குற்றம் ஏற்படாமல் தடுக்கிறதுலயும் இருக்கு. இத்தனை வருஷத்துல இதுகூடவா ஒங்களுக்குத் தெரியல? ரத்தக் காயத்தை சாட்சியா கேட்கிறீங்களாம்.”

“சில்லறை, விஷயமுன்னு...”

“இப்போ நான் கேட்கப் போற விஷயமும் சில்லறையான்னு தயவு செய்து சொல்லிடுங்க. போன வாரம் பூமிநாதன் எஸ்டேட்ல, ஒரு தொழிலாளி தூக்குல தொங்குனாராமே, நீங்கதானே விசாரிக்கப் போனது?”

“ஆமாம் சார். அது தற்கொலைதான் சார்.”

“தற்கொலையோ, வெறுங்கொலையோ? நீங்க, எந்த எஸ்டேட்ல அந்தத் தொழிலாளி தூக்குல தொங்குனாரோ, அந்த எஸ்டேட் முதலாளி அனுப்புன கார்லயே விசாரணைக்குப் போயிருக்கீங்க. இதனால், ஒரு கொலைக்கு போலீசும் உடந்தைன்னு தொழிலாளிங்க நினைக்கிறாங்க. எஸ்டேட் ஒர்க்கர்ஸ் அஸோஷியேஷன் பிரதி நிதிகள் வந்து, என்கிட்ட பேசிட்டுப் போனாங்க. நான் ஏதாவது பண்ணாட்டால் மேலே மேலே போவாங்களாம். இதுக்கு என்ன சொல்றீங்க. இதுவும் சில்லறை விஷயந்தானா?”

அவனை, மனதுக்குள் இளக்காரமாய் நினைத்த கான்ஸ்டேபிள் திகில்பட்டார். இந்த மாதிரி சமாச்சாரங்களில் சிக்கி, காவல் துறை வீரர்கள் சந்திக்கு வந்தது மனசுக்கு வந்தது. அதோடு பத்திரிகைக்காரங்க சந்தி சந்தியாய் எழுதிபெட்டுவானுவ... குழைந்தார்:

“அய்யா தான் அந்த லேபர் விஷயத்தை ...”

“நீங்க மனசில எந்த கல்மிசமும் இல்லாமல் தானே கார்ல போனீங்க. அது ஒங்க விசாரணையைப் பாதிக்கலியே ?”

“ஆமாங்க அய்யா!”

“அப்படின்னா நீங்க பயப்பட வேண்டாம். எது நியாயமோ அதைத்தான் விசாரிச்சு செய்வேன். யூ கேன் கோ.”

போலீஸ்காரர் பொன்னுச்சாமி, தாமோதரனுக்கு ‘கொன்னுடுவேண்டா’ என்பது மாதிரி மீண்டும் ஒரு சலூட்டை அடித்துவிட்டு, வெளியேறினார். தனக்குள்ளே கருவிக்கொண்டார். ‘பொதுமக்களில் ஒருவர் மேல் ஒரு அநியாயம் நடந்தால், அதுக்குக் காரணமான டிபார்ட்மெண்ட் ஆளைக் காட்டிக் கொடுப்பது, டிபார்ட்மெண்டை காட்டிக் கொடுப்பதாய் ஆகாது. ஆகக்கூடாது’ என்று பேசுகிற இவன் கிட்ட என்ன பேச்சு? இருக்கவே இருக்கார் இன்ஸ்பெக்டர் அய்யா.

பொன்னுச்சாமி அகன்றார்.

தாமோதரன், தன் சிந்தனைச் சிறைக்குள், தன்னைத் தானே கைது செய்து காவலிட்டான். வேலைப்பளுவால் ஊர் நிகழ்ச்சிகளை சிறிது நேரம் மறந்திருந்த அவன் மனதுள், வெற்றிடத்தில் வெள்ளம் புகுவதுபோல், ஊரின் நிகழ்ச்சி சுமை, சகோதரச் சுமையாக, அவமானச் சுமையாக, கையாலாகாச் சுமையாக, காதல் சுமையாக அழுத்தின. இறுதியில் எல்லாச் சுமைகளும், மனதின் அதலபாதாளத்திற்குள் ஆழமாய் மூழ்க, மன மேல் மட்டத்தில் காதல் சுமை மட்டும் மிதந்தது. சுவையாக இருக்க வேண்டியது சுமையாக, அவன் மனப்பாரம் தாங்க முடியாமல், தலையை ஆட்டினான். தனக்குள்ளேயே முனங்கிக் கொண்டான். தமிழரசியைப் பார்த்து, இரண்டு நாட்கள் தான் கடந்திருக்கின்றன என்றாலும், அந்த ஒவ்வொரு நாளும், வருடமாய் வடிவெடுத்தது. அவளை எப்போது பார்ப்போமோ என்று நினைத்தபடியே மேஜைப் பரப்பில், பேப்பர் வெயிட்டை உருட்டினான். அது, அவன் கையை விட்டுக் கீழே விழுந்தது. இதே இந்த காவல் நிலையத்திலும், தான் வேலை பார்த்த இதர காவல் நிலையங்களிலும், எத்தனையோ காதல் ஜோடிகள், “விவகாரமாகும் போது” அவர்கள் ‘விவாகம்’ முடிக்கக் காரணமான அவன், இப்போது தனது காதலும், ஒரு ‘லா அண்ட் ஆர்டர்’ பிரச்சனையாகி விட்டதில், கை கால்கள், அராஜகமாக, ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

தாமோதரன் சட்டென்று எழுந்தான். ரைட்டரிடம் வந்து “நான் நாராயண குரு கோவில் வரைக்கும் போயிட்டு வாரேன்” என்றான். ரைட்டர் அவனை விநோதமாகப் பார்த்தார்! கோவில் குளத்திற்கு, டூட்டிக்குப் போகும் போதும், சாமி கும்பிடப் போகாதவன், இப்போது நாராயண குருவிடம் போகிறார் என்றால், ஊரில் ஏதோ நடந்திருக்கும். போலீஸ்காரர்களை, நம்பர் சொல்லிக் கூப்பிடாத இந்த இளைஞருக்கு எதுவும் வரப்படாது. ரைட்டர் தன் பங்குக்கு ஒரு சிபாரிசு செய்தார்.

“அப்படியே குமார கோவிலுக்கும் போயிட்டு வாங்க சார்.”

தாமோதரன் புறப்பட்டான்.

ரைட்டர் ‘மோட்டார் சைக்கிளில் போங்களேன்’ என்று சொல்லப் போனார். அப்படிச் சொன்னால் ‘நான்... டூட்டில போகல ...’ என்று பதில் சொல்வான் என்பதும் அவருக்குத் தெரியும். இவரைப் போல், எத்தனையோ கான்ஸ்டபிள்கள் வாழ்கிறதும் வாழ்ந்து வதங்கிக் கொண்டிருப்பதும் ரைட்டருக்குத் தெரியும். அவரே அப்படித் தான். ஆனாலும், இந்தக் காலத்துப் பையனான தாமோதரனிடம் இந்த நெறிகளை எதிர்பார்க்காதவர் அவர். இப்படியே இருந்தால், இவர் எத்தனை நாளைக்கு இந்த டிபார்ட்மென்டில் குப்பை கொட்ட முடியுமோ!

சாலைக்கு வந்த தாமோதரன், ஸ்தம்பித்து பார்வை நிலைகுத்த நின்றான். அண்ணன் முத்துலிங்கம், எதிர் திசையில் இருந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார். பறட்டைத் தலையோடு வந்தார். கை கால் முழுவதும் ஒரே சேறு. முகத்திலும், கழுத்திலும் பல உராய்ப்புக்கள். தாமோதரன் பதறிப் போய் அண்ணனை நோக்கி, நட்டநடு வீதிக்கு வந்தான்.

“என்னண்ணா ... என்ன கோலம் இது?”

“தெருவுல நின்று பேசாண்டாம். உள்ளே போவலாம்.”

இருவரும் உள்ளே வந்தார்கள். ஏற்கனவே பரிச்சயமான முத்துலிங்கத்தின் பிதுங்கிய விழிகளையும், கூம்பிய முகத்தையும் பார்த்துவிட்டு எல்லாப் போலீஸ்காரர்களும் ஆச்சரியப்பட்டார்கள். முத்துலிங்கம், தாமோதரன் காட்டிய நாற்காலியில் உட்கார்ந்தார்.

“என்னண்ணா திடீர்னு?”

“வினை தீர்த்தானை எப்படியாவது கண்டு பிடிக்கணுமுன்னு நினைச்சு, மாடக்கண்ணுவையும், கலாவதியையும், நம்ம தோட்டத்துக்குக் கொண்டு போனேன். மாடக்கண்ணுவை, லேசா ரெண்டு தட்டுத் தட்டுனேன். உடனே அந்தக் கிழட்டுப் பயல் திடீர்னு நம்ம கிணத்துக்குள்ளேயே விழுந்து... செத்...”

தாமோதரன், நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான். முகம் அதிர்ந்தது. விழிகள் வெளுத்தன. நெற்றி புடைத்தது. வாய், பல் தெரிய விரிந்தது. உதடுகள் துடித்தன. அண்ணனையே, அதிர்ச்சியுறப் பார்த்தான். அவர், அவன் பார்வை தாளமாட்டாது, முகத்தைக் கவிழ்த்துக் கொண்டார். ஐந்து நிமிடம் வரை அண்ணனையே விழியாடாது பார்த்தவன், சோர்ந்து போய் நாற்காலியின் சட்டத்தில் சாய்ந்தான். இரண்டு நிமிடம் சாய்வாய் கிடந்துவிட்டு, மீண்டும் நிமிர்ந்தான். நாற்காலியின் முனைக்கு, உடம்பை நகர்த்திக் கொண்டபடியே, அனல் கக்கப் பேசினான்:

“ஒங்களுக்கு மூளை இருக்கா? அது இல்லாட்டாலும் பரவாயில்ல, கொஞ்சமாவது ஈவு இறக்கம் வேண்டாமா? நீங்க என்ன பெரிய சினிமா வில்லனா? எதுக்காக அந்த அப்பாவிங்களை தோட்டத்துக்குக் கொண்டு போனீங்க? கேழ்வரகுல நெய் ஒழுகுதுண்ணு நீங்க சொன்னால், நான் நம்பணுமா? மாடக் கண்ணு மாமா, சும்மா கிணத்துக்குள்ள விழுந்திருக்க முடியாது. என்னெல்லாம் செய்தீங்க? சொல்லுங்க!”

முத்துலிங்கம், அவனைப் பார்க்காமல், சுவரைப் பார்த்தார். பிறகு, வலுக்கட்டாயமாக வார்த்தைகளை வரவழைத்தார்.

“என்னால இப்போ எதுவுமே பேச முடியல, வேற வழியில்லாமல் தான் ஒன்கிட்ட வந்திருக்கேன், போலீஸ் என்னை துரத்துது. ஊர்ல இப்போ என்ன நடக்குதோ? நம்ம அப்பாவை என்ன பண்ணுறாங்களோ? ஒன் அண்ணியை என்ன பண்ணுறாங்களோ?”

“இந்தப் புத்தி மொதல்லே இருந்திருக்கணும்.”

“நீயும் உதறிட்டால், நான் கன்னியாகுமரி கடலுல விழவேண்டியதுதான்.”

“அப்படிச் செய்யாதீங்க. நீங்க செய்திருக்கிற பாவம், மூன்று கடலுலயும் ஒட்டி... புனித நீராடுறவங்களையும் பிடித்துக்கிடும்... மாடக்கண்ணு விழுந்த கிணத்துலயே போய் விழுங்க. சீ!”

ரைட்டர், தன் இருக்கையில் இருந்து எழுந்தார். தாமோதரன் அறைக்குள், உரிமையோடு நுழைந்தார்.

“என்னோட இன்டர்பியரன்ஸை தப்பா நினைக்கப் படாது. ஒங்கண்ணா இப்போ பேசுற நிலையில இல்ல. ஆயிரம் செய்தாலும் அவரு ஒங்களுக்கு அண்ணா. எதுக்கும் அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு டிரங்கால் போட்டு, மொதல்ல லேட்டஸ்ட் சுட்சுவேஷனைக் கேளுங்க சார்.”

தாமோதரன் பதிலளிக்கவில்லை. அதை சம்மதமாக எடுத்துக் கொண்டு, ரைட்டர் ‘கால்’ போட்டார். டயலைச் சுழற்றினார். ஒரு நம்பர் உருண்ட உடனேயே ‘ஒய்ங்’ என்ற சத்தம். “இந்தக் காலத்துல பிளட்பிரஷ்ஷர் வருறதுக்கு இந்த டெலிபோனும் ஒரு காரணம்” என்று சற்று தொலைவில் உயிர்ப்பில்லாமல் நின்ற போலீஸ்காரர் பொன்னுச்சாமியைப் பார்த்தபடியே சொல்லிக்கொண்டு, மீண்டும் எண்களைச் சுழற்றினார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ‘லைட்னிங்’ கால் கிடைத்தது. ரைட்டர், ரிஸீவரை தாமோதரனிடம் நீட்டினார். அவன், வேண்டா வெறுப்பாகப் பேசினான்.

“ஹலோ சோமசுந்தரமா? தாமோதரன் ஹியர்! என்ன நீங்களே என் கிட்ட பேச நினைத்தீங்களா? எங்கண்ணாவா? இங்கே இல்லியே. சாரி... இங்கேதான் இருக்கார். என்ன... என்ன... ஆ... அய்யய்யோ ... அப்புறம்... அடகடவுளே... பிறகு ஊரு... கொதிக்காமல் என்ன சார் செய்யும்! ஒங்களுக்கு என்ன தோணுதோ அதைச் செய்யுங்க. என் தலைவிதி இப்படிப்பட்ட குடும்பத்துல பிறந்து தொலைச்சிட்டேன். நைட்ல பேசுவீங்களா? தேங்யூ! கலாவதி பிழைச்சுக்குவாளா? என்ன .. இப்போ சொல்ல முடியாதா? அவ்வளவு சீரியஸா... நீங்ககூட ஒண்ணும் செய்ய முடியாதா? செய்ய வேண்டாம். ஓகே.”

டெலிபோன் ரிஸீவரை, தாமோதரன் வீசியெறிந்தான். அது சில்லி சில்லியாய் உடைந்து சிதறியது. ஒரே ஒரு துண்டு மட்டும், எஸ்டேட்டில் தூக்கில் தொங்கிய ஏழைத் தொழிலாளி போல, டெலிபோன் ஒயருடன் ஒட்டிக் கிடந்தது. தாமோதரன் எழுந்தான். கைகளைப் பிசைந்தான். ‘சே...சே’ என்றபடி, கைகளை முதுகிற்குப் பின்புறமாய் கட்டியபடி, குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான். முத்துலிங்கம், அவனைப் பயத்தோடு பார்த்த போது, அவன் பயங்கரமாய் கத்தினான்:

போலீஸ்ல எல்லாம் சொல்லிட்டாங்க. மாடக் கண்ணு மாமாவை கையைக் காலைக் கட்டி கிணத்துக்குள்ளே போட்டிருக்கே. கலாவதிக்கு கண்ட கண்ட இடத்துல எல்லாம் சூடு போட்டிருக்கே, தேவையில்லாமல், கொலைகாரனைக்கூட தொடாதவன் நான். இதுவரைக்கும் நயா பைசா வாங்காமல் யோக்கியமாய் வேலை பார்க்கிறவன். இப்படிப்பட்ட எனக்கு நீ அண்ணன்! சீச்சீ... தமிழரசிகிட்டே என்னை தலை குனியவச்சே! பொறுத்துக்கிட்டேன். என்னைக் காட்டி இது வரைக்கும் ஏழை பாழைகளை மிரட்டிக்கிட்டு இருந்தே. பொறுத்துக்கிட்டேன். ஆனால் இதைப் பொறுக்கமாட்டேன். என்னோட டூட்டி, ஒன்னை கைது செய்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் கிட்ட ஒப்படைக்கணும். ஏனோ மனசு கேட்க மாட்டக்கு, என் மனசு கல்லாகு முன்னால், இங்கே இருந்து ஓடிடு. கெட் அவுட். ரைட்டர் இந்த ஆளைப் பிடித்து வெளில தள்ளுங்க. இவரு எனக்கு அண்ணனும் இல்ல. நான் அவருக்கு தம்பியும் இல்ல”

முத்துலிங்கம் எழுந்தார். கண்களைத் துண்டால் துடைத்தபடி, தழுதழுத்த குரலில், படபடக்கப் பேசினார்:

“எப்போ ஒனக்கு நான் அண்ணன் இல்லன்னு சொன்னீயோ, அப்பவே எனக்கு தூக்குத் தண்டனை சின்னதாய் போயிட்டு. என்னால ஒனக்கு எந்தத் தொந்தரவும் வராது. நான் எப்படியாவது தொலைஞ்சு போறேன். கூடப்பிறந்த ஒரே ஒரு பாவத்துக்காக, எப்போவாவது ஊருக்குப் போய்... அண்ணியையும் பிள்ளைங்களையும் கவனிச்சுக்கோ. அடுத்த பிறவியிலயாவது நான் ஒனக்கு அண்ணனாய் பிறக்கப்படாதுன்னு கடவுளை வேண்டிக்கோ. சத்தியமாய் ஒன்மேல் எனக்குக் கோபம் இல்ல. நான் வாரேன்.”

முத்துலிங்கம், நின்ற இடத்திலேயே சிறிது நேரம் நின்று, தாமோதரனை இனிமேல் பார்க்கப் போகாதவர் போல் பார்த்தார். பிறகு மெள்ள அடியெடுத்து-அப்புறம் வேக வேகமாய் நடந்தார்.

தாமோதரன், தொப்பென்று நாற்காலியில் விழுந்தான். போகிற அண்ணனையே, பாச மயக்கத்தில் பார்த்தான். கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டல் பீஸ் கொண்டு வந்து, தன்னை ‘தம்பி... தம்பி...’ என்று தலையில் தூக்கி வைத்து ஆடாத குறையாக ஆடிய அண்ணன்; ‘ஒங்க தம்பியை... இவ்வளவு ரூபாய் செலவழித்து எதுக்காக படிக்க வைக்கணும்...’ என்று அடிக்கடி நச்சரிப்பு செய்த அண்ணியை அடிக்கப்போன அண்ணன்; சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்ததும், தன்னைக் கட்டியணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டவன். ‘பெரியவங்க பழக்கத்தால, இந்த சின்னவனை மறந்துட மாட்டியேடா...’ என்று கேட்டவன். ஊருக்குப் போகும்போதெல்லாம், ‘செலவுக்குப் பணம் வேணுமாடா’ என்று இப்போகூட கேட்டவன், இவன் உள்ளே போய், நான் வெளியில் இருக்கணுமா? இவனை தற்கொலை செய்ய விட்டுவிட்டு, நான் உடம்பை வைத்துக் கொண்டு இருக்கணுமா?

‘அண்ணா ... அண்ணா’ என்று கூப்பிடப்போனான். அவனையே பார்த்த ரைட்டரைப் பரிதாபமாகப் பார்த்தான். ரைட்டர் புரிந்து கொண்டார். வெளியே ஓடி, முத்துலிங்கத்தின் கையைப் பிடித்தார். அவர் உதறப் போனார். உடனே முத்துலிங்கத்தை, பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு, ரைட்டர் உள்ளே வந்தார். தாமோதரன் அறைக்குள், பக்கவாட்டில் போட்டிருந்த ஒரு ‘பெஞ்சில்’ போட்டார்.

அரைமணிநேரம் சகோதரர்கள் மூச்சு மட்டுமே விட்டார்கள். பிறகு தான் தம்பிக்காரனுக்குப் பிரக்ஞை வந்தது.

தாமோதரன், அண்ணனைப் பார்த்து ‘சாப்பிட்டியா’ என்றான். அப்படிச் சொல்லி முடிப்பதற்குள், அவன் வாய், கண்ணீரைச் சாப்பிட்டது. இதுவரை பதுங்கியபடி இருந்த போலீஸ் பொன்னுச்சாமி, தாமோதரனுக்கு விறைப்பாய் ஒரு சலூட்டை அடித்தபடியே, பேச்சை பணிவாய் துவக்கி, துணிவாய் முடித்தார்.

“முந்திரிக் கொட்டை மாதிரி பேசுறேன்னு நினைக்காதிங்க சார். கொலையோ தற்கொலையோ, நடந்தது நடந்து போச்சு. நடந்ததை மாற்ற முடியாது. நடக்கப் போறதையாவது மாற்றலாம். ஒங்க அண்ணாவை இப்போ நீங்க கை விட்டுட்டால், அப்புறம் நீங்கதான் காலமெல்லாம் நிம்மதியில்லாமல் தவிப்பீங்க. தனக்குப் போகத்தான் தானம். தமையனுக்குப் பிறகு தான் தர்மம். பார்க்க வேண்டிய ஆட்களைப் பார்த்து, முடிக்க வேண்டிய காரியத்தை முடியுங்கள். நாகர்கோவிலுல ஒங்களுக்கு வேண்டிய பெரிய போலீஸ் அதிகாரி .. அது தான் ‘அவரு’ வந்திருக்காரு. போய்ப் பாருங்க சார், அண்ணாவ வாழ வைக்காட்டாலும், சாக வைக்காமலாவது பார்த்துக்கங்க சார்; என்ன யோசிக்கிறீங்க? ஒங்களால இப்போ மோட்டார் பைக்ல... போக முடியாது. நானே காருக்கு ஏற்பாடு செய்யுறேன்.”

கால்மணி நேரத்திற்குள் படகுக் கார் ஒன்று வந்து நின்றது. தாமோதரன் மவுனமாக எழுந்து முத்துலிங்கத்தைப் பார்த்தான். அவரும் எழுந்து பொன்னுச்சாமியைப் பார்த்தார். ரைட்டர், தாமுவைப் பார்த்துக் கண்ணடித்தார். இருமிக் காட்டினார். அவன், அவனைப் பார்க்கவில்லை. கேட்கவில்லை.

படகுக் காருக்குள், மூவரும் ஏறினார்கள். தாமோதரன் குனிந்த தலை நிமிராமல் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தான். போலீஸ்காரர் பொன்னுச்சாமி, டிரைவர் முதுகைத் தட்டவும் கார் சிட்டாய் பறந்தது.

போகிற காரையே, மனம் புகைக்கப் பார்த்த ரைட்டர், திடீரென்று முழங்காலிட்டு, கண்களை மூடி, தலையை லேசாய் உயர்த்தி, பிரார்த்தித்தார்.

“ஆண்டவரே! இந்தக் கார், எந்த எஸ்டேட்ல ஒரு தொழிலாளி தூக்குல தொங்குனானோ, அந்த எஸ்டேட் முதலாளியோட கார் என்பதும், அந்தக் காரை அந்த முதலாளி பூமிநாதன் ஓட்டிவந்தார் என்பதும் தெரியாமல் இந்த போலீஸ் இளைஞன் போகிறானே... சிலந்தி வலையில் விழுகிறானே... இந்த டிபார்ட்மெண்டில் இவன் குப்பை கொட்டவேண்டும் என்று உம்மை தோத்திரம் செய்தது உண்மைதான் கர்த்தரே. இப்போ மறுபடி கேட்கிறேன்... இவன் குப்பை கொட்டுகிறானோ இல்லையோ, குப்பையாகாமல் பார்த்துக் கொள்ளும் பரமபிதாவே!”

“ஏசாண்டவரே! ஒருவன் செய்த பாவத்தில், ஒருவன் பலியாகிறான். இன்னொருவன் பாவியாகிறான். அப்படியானால் பாவம் தொற்று நோயா? பலிகேட்கும் பாசமா? எப்படியோ, என் ஆண்டவரே! இதுவரை நல்வழியில் போன இந்த இளைஞனைக் காப்பாற்றும். சாத்தான் இவனைப் பாவக்குழியில் தள்ளப் போகிறான், தேவகுமாரனான நீர் என்ன செய்யப் போகிறீர்?”