நேரு தந்த பொம்மை/குதிரைச் சவாரி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


குதிரைச் சவாரி

குழந்தை யாக இருந்த போது
ஜவஹர் லாலுடன்
குதிரைக் குட்டி செல்ல மாக
இருந்து வந்தது
அழகு மிக்க குதிரைக் குட்டி
அதனில் ஏறியே.
அலகா பாத்து நகரைச் சுற்றித்
தினமும் வருவாரே.
அன்று மாலை குதிரை மீது
ஜவஹர் ஏறியே
ஆனந் தமாய் ஊரை யெல்லாம்
சுற்றும் போதிலே,
என்ன அந்தக் குதிரைக் குட்டி
நினைத்து விட்டதோ!
என்றும் இல்லா வேகத் தோடே
ஓட லானது!

‘விருட்’ டென் றந்தக் குதிரைக் குட்டி
பாய்ந்து ஓடவே,
விழுந்து விட்டார், ஜவஹர் அங்கே
தரையின் மீதிலே!
திரும்பிக் கூடப் பார்த்தி டாமல்
குதிரைக் குட்டியும்
சென்று ஜவஹர் வீட்டி லேயே
சேர்ந்து விட்டது!

குதிரை மட்டும் திரும்பி வந்த
காட்சி கண்டதும்,
“குழந்தை எங்கே?” என்று பெற்றோர்
திகைக்க லாயினர்.
பதறிக் கொண்டே தந்தை தாயும்
மற்றை யோர்களும்
பலதி சைக்கும் ஓடிச் சென்று
தேட லாயினர்.

தரையில் வீழ்ந்த ஜவஹர் லாலோ
எழுந்து உடைகளைத்
தட்டி விட்டுக் கொண்டு வீடு
நோக்கி வந்தனர்.
குறைகள் எதுவும் இன்றித் திரும்பி
வந்த குழந்தையைக்
கூட்ட மாகத் தேடி வந்தோர்
வழியில் கண்டனர்.


நே . பொ-2

‘கண்ணே!’ என்று அருகில் சென்று
கட்டிக் கொண்டனர்.
“காயம் உண்டோ?” என்று உடலைத்
தடவிப் பார்த்தனர்.
“ஒன்று மில்லை என்றன் குதிரை
வந்து சேர்ந்ததா?”
என்று கேட்டுக் கொண்டே ஜவஹர்
வீடு வந்தனர்.

குதிரை மீது ஜவஹ ருக்குக்
கோபம் வந்ததா?
கொஞ்சம் கூடக் கோபம் இல்லை
அன்பி ருந்தது!
அதிக மான வீரத் தோடு
குதிரை ஏறியே,
அடுத்த நாளும் சுற்ற லானார்
வழக்கம் போலவே!