பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/587

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 57.1 பாடாதது போலவே, அகத்திணைக்கண் இல்லாளின் இல்லறக் கடன்களைக் காமத் தொடர்பு படுத்தாது பாடியதில்லை. கணவனின் வினைக்கடன்களையும் தலைவியின் உள்ளோட்டம் இல்லாது புனைந்ததில்லை. பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்ற உரிப்பொருள்பற்றிய பாடல்கள் யாவும் பசிவழிப்பட்ட தொழில்கள் போலக் காமப் புணர்ச்சியின் அடிப்படையில் எழுந்தனவாகும். புணர்ச்சிக் குறிப்பும் வேட்கையும் காதலி அல்லது காதலன் நினைவு இல்லாத பாலைப் பாடல்களே இல்லை எனலாம். பெருங் கடுங்கோவின் பாலைப் பாடல்கள் யாவற்றிலும் புணர்ச்சி மயக்கம் இழையோடுவதைக் காணலாம். அருகிருக்கும் போதே அல்லல் உறுபவள் பிரிந்தால் உயிர் தரியாள் என்று தலைவன் செலவழுங்கும் பாடலிலும் (அகம்-5), பூவேய்ந்த தலைவியின் கூந்தலில் தூங்கிய துயிலைத் தலைவன் மறந்து உறங்கான் என்று தோழி கூறும் பாடலிலும் (அகம்-223), சுரங் கடந்தோரைப் பழித்தல் ஆகாது, அவரைப் பிணித்துக் கட்டும் ஆற்றல் இல்லாத தோள்களே பழியுடையன என்று தலைவி நொந்து கொள்ளும் பாடலிலும் (அகம்-267) இன்ப உள்ளங்கள் பளிங்கிடுகின்றன. ஆகவே, எல்லா அகப்பாடல்களும் முன்னும் பின்னும் புணர்ச்சியை நோக்கியே அமைகின்றன என்று தெளியலாம். திருவள்ளுவப் பெருமானும் காமத்துப்பால் இறுதிக் குறளில்" கூடி முயங்கப் பெறின் என்று தலைக்கட்டியிருத்தல் இதற்கு ஒரு பெரிய சான்றாக அமைகின்றது. - 92. குறள்-1330