99]
களிற்றியானை நிரை
௨௧௧/211
[உடன் போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.]
வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன
செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தாஅய் மதரெழின்
மாணிழை மகளிர் பூணுடை முலையின்
௫) முகைபிணி அவிழ்ந்த கோங்கமொ டசைஇநனை
அதிரல் பரந்த அந்தண் பாதிரி -
உதிர்வீ அஞ்சினை தாஅய் எதிர்வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
க௦) நன்றே கானம் நயவரும் அம்ம
கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்
பிடிமிடை களிற்றில் தோன்றும்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே.
- பாலைபாடிய பெருங்கடுங்கோ
(சொ - ள்.) கக. குறுமகள் - இளமடவாய், வாழியோ - வாழ்வா யாக ;
க-௩. வாள் வரி வய மான் கோள் உகிர் அன்ன - வாள் போலும் வரிகளையுடைய வலிய புலியினது கொல்லும் தொழிலையுடைய நகம் போன்ற, செம்முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் - சிவந்த முகை விரிந்த முள் நிறைந்த முருக்கமலராகிய, சிதர் ஆர் செம்மல் தாஅய் - வண்டு சூழ்ந்த வாடிய பூக்கள் பரந்து,
௩-௬. மதர் எழில் மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் - கதிர்த்த அழகினையும் மாண்புற்ற அணியினையுமுடைய மகளிரது பூணணிந்த முலையினைப் போன்ற, முகை பிணி அவிழ்ந்த கோங்க மொடு நனை அதிரல் அசைஇ - முகைகள் அலர்ந்த கோங்கம் பூக்க ளோடு கொத்துக்களாய புனலிப்பூ கூடிக் கிடக்க,
௬-எ. பரந்த அம் தண் பாதிரி அஞ்சினை உதிர் வீ தாஅய் - பரவிய அழகிய குளிர்ந்த பாதிரியினது அழகிய சினையினின்றும் உதிர்ந்த பூக்களொடு தாவி,
எ-அ. எதிர் வீ மராஅ மலரொடு விராஅய் - மாறுபட்ட பூக்கள் வெண் கடப்பம் பூக்களொடு விரவித் தாவி,
அ-௯. பராஅம் அணங்கு உடை நகரின் மணந்த பூவின் - பரவுக் கடன் பூண்ட தெய்வமுடைய கோயிலின்கண் கலந்து கிடக்கும் பூக்களைப் போல,
௧௦-க. கானம் நன்றே நயவரும் - இக் காடு பெரிதும் விரும்பத் தக்கதாகின்றது ; கண்டிசின் - காண்பாயாக ;