பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

களிற்றியானை நிரை

௨௧௫/215



தண்கார் ஆலியில் தாவன உதிரும்
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பியாஞ் செய்தன்றோ விலமே.

- மாமூலனார்.

(சொ - ள்.) க. தோழி வாழி -, அம்ம - நான் கூறுவதனைக் கேட்பாயாக!

க-௩. இம்மை நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் - இம் மையில் நன்று செய்யுமிடத்துத் தீது வருவதில்லை என்று கூறப்படும், தொன்று படு பழமொழி - தொன்று தொட்டு வழங்கும் பழமொழி, இன்று பொய்த்தன்று கொல் - இன்று பொய்யாயதோ,

௪--கக. தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த - செம்மறியாட் டுக்கிடாயின் கொம்பினை யொப்பச் சுற்றிக் கடை சுருண்ட, சுவல் மாய் பித்தைச் செங்கண் மழவர் - பிடரியை மறைக்கும் தலைமயிரினையும் சிவந்த கண்ணினையுமுடைய மழவர்கள், வாய்ப் பகை கடியும் மண்ணொடு - வாயினின்றெழும் இருமலாய பகையினை எழாமற் றீர்க்கும் மருந்தாய புற்று மண்ணை வாயில் அடக்கிக்கொண்டனராய், கடும் திறல் தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி - கடிய திறல் வாய்ந்த தீயுண்டாம் சிறிய அம்பினை வில்லோடு கையிற் பற்றி, நுரை தெரி மத்தம் கொளீஇ - வெண்ணெயை வெளிப்படுத்தும் கடையும் மத்தினைக் கவர்ந்துகொண்டு, நிரைப் புறத்து அடி புதை தொடு தோல் பறைய ஏகி - ஆனிரைகள் உள்ளவிடத்துத் தம் அடியை மறைத்துள்ள செருப்புக்கள் தேயச் சென்று, கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர் - பகைவர் காவல் இடத்திலே கவர்ந்த கன்றுகளுடன் கூடிய ஆன் இனத்தை யுடையராய், இனம் தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு - அவ்வினத்தினை அவ் விடத்தினின்று கொண்டுபோகும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டின் கண்ணே ,

கஉ-௬. அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல - அகன்ற பெரிய வானாகிய கடற்கண் ஓடம்போல, பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று - பகலில் வானிடையே நின்ற பல கதிர்களையுடைய ஞாயிற்றின், உருப்பு அவிர்பு ஊரிய சுழன்று வரு கோடை - வெப்பம் விளங்கிப் பரக்கச் சுழன்று வரும் மேல் காற்றினால், புன் கால் முருங்கை ஊழ் கழி பன் மலர் - புல்லிய அடிமரத்தினையுடைய முருங்கையின் முதிர்ந்து கழியும் பல பூக்கள், தண் கார் ஆலியில் தாவன உதிரும் - குளிர்ந்த கார்காலத்து ஆலங் கட்டி போலப் பரந்தனவாய் உதிரும்,

கஎ-அ. பனிபடு பன் மலை இறந்தோர்க்கு - நடுக்கமுண்டாகும் பல மலைகளையும் தாண்டிச் சென்ற நம் தலைவர்க்கு, முனி தகு பண்பு யாம் செய்தன்றோ இலம் - வெறுக்கத்தக்க செயல் யாதும் நாம் செய்திலமே,