௨௩௬(236)
அகநானூறு
[பாட்டு
(இரவுக்குறி வந்த தலைமகனை யெதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லி வரைவு கடாயது.) -
1கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி
சிதலை செய்த செந்நிலைப் புற்றின்
மண்புனை நெடுங்கோ டுடைய வாங்கி
இரைநசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
௫) ஈன்றணி வயவுப்பிணப் பசித்தென மறப்புலி
ஒளிறேந்து மருப்பின் களிறட்டுக் குழுமும்
பனியிருஞ் சோலை யெமியம் என்னாய்
தீங்குசெய் தனையே யீங்குவந் தோயே
நாளிடைப் படினென் றோழி வாழாள்
க0) தோளிடை முயக்கம் நீயும் வெய்யை
2கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ வான்தோய் வெற்ப
கணக்கலை இகுக்கும் கறியிவர் சிலம்பின்
௧௫) மணப்பருங் காமம் புணர்ந்தமை அறியார்
தொன்றியல் மரபின் மன்றல் அயரப்
பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி
நொதுமல் விருந்தினம் போலவிவள்
புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே.
--நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்.
(சொ - ள்.) க௩. வான்தோய் வெற்ப - வானை அளாவும் மலை யையுடைய தலைவனே !
க-௪. கூனல் குறுநடை எண்கின் தொழுதி- கூனிய முதுகினையும் குறுகக்குறுக அடியிட்டு நடக்கும் நடையினையும் உடைய கரடிக் கூட்டம், சிதலை செய்த செந்நிலைப் புற்றின் - கறையான் எடுத்த சிவந்த நிலையினையுடைய புற்றினது, மண்புனை நெடுங்கோடு உடைய வாங்கி - மண்ணாற் புனைந்த நீண்ட உச்சி உடைந்திடப் பெயர்த்து, இரை நசைஇப் பரிக்கும் அரைநாள் கங்குல் - புற்றாஞ்சோறாய இரையினை விரும்பிச் சூழ்ந்துகொண்டிருக்கும் நடுநாள் இரவில்,
ரு-அ. ஈன்ற அணி வயவு பிண பசித்தென - குட்டியை ஈன்ற அண்மையினையுடைய வேட்கையையுடைய பெண்புலி பசித்ததாக, மறப்புலி - தறுகண்மையையுடைய ஆண்புலி, ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் - ஒளி வீசுகின்ற ஏந்திய கோட்டினையுடைய ஆண் யானையைக் கொன்று முழங்குகின்ற, பனி இரும்
(பாடம்) 1. கூரல் எண்கின், கூருகிர் எண்கின். 2. கழிபெருங்காதலர், கழியாக் காதலர்.