உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௩௨அகநானூறு[பாட்டு

(சொ - ள்.) ௧-௭. வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் = வானில் ஊர்ந்தேகும் விளங்கும் ஒளியினதாகிய ஞாயிற்று மண்டிலம், நெருப்பெனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு = தீ யெனச் சினந்தெரித்த வெப்பம் விளங்கும் காட்டகத்தே, இலைஇல மலர்ந்த முகைஇல் இலவம் = இலையிலவாய் மலர்ந்துள அரும்பில்லாத இலவம் பூக்கள், கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த = ஆரவாரத்தைக் கொண்ட மகளிர் கூட்டம் மகிழ்ந்து கூடி எடுத்த, அம் சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி = அழகிய கார்த்திகை விளக்கின் நெடிய ஒழுங்குபோலத் தோன்ற, கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் = குளங்கள் நீரற்றுத் துகள்பட்டிருக்கும் வளம் தப்பிய காட்டில், கம்மென எம்மொடு கழிந்தனராயின் = நம் தலைவர் விரைவாக நம்மை உடன்கொண்டு கழிந்தனராயின்,

௮-௧௧. வம்பு விரித்த அன்ன பொங்கு மணல் கான்யாற்று = கச்சினை விரித்துப் பரப்பி வைத்தாலன்ன விளங்கும் மணல்மிக்க காட்டாற்றினது, பயில் இணர்படு சினை தாழ்ந்த எக்கர் = மிக்க பூங் கொத்துகளையுடைய பெரிய கிளைகள் தாழ்ந்துள மணல் மேட்டில், மெய் புகுவு அன்ன = மெய்கள் ஒன்றின் ஒன்று புகுவதை ஒத்த, கை கவர் முயக்கம் = கைவிரும்பும் முயக்கத்தினை, நயவர அவரும் பெறுகுவர்மன் = அன்பு தோன்ற அவரும் அடைவர்;

௧௨-௫. பழி தீர் கண்ணும் = எமது குற்றமற்ற கண்களும், நீர் வார் நிகர் மலர் கடுப்ப = நீர் சொரியும் ஒளி பொருந்திய மலரையொப்ப, ஓ மறந்து = ஒழிதலின்றி, அறுகுளம் நிறைக்குந போல = நீரற்ற குளத்தினைப் பெருக்கும் மடை போல, அல்கலும் அழுதல் மேவல ஆகிப் படுகுவ மன் = நாளும் அழுதலைப் பொருந்தாவாகித் துயிலப்பெறும்.

(முடிபு) (நம் தலைவர்) கானம் எம்மொடு கழிந்தனராயின், முயக்கம் அவரும் பெறுகுவர்; (நம்) கண்ணும் படுகுவ.

(வி - ரை.) இலவம் - இலவம் பூ. தோன்றி - தோன்ற எனத் திரிக்க. கம்மென - விரைய, தேய வழக்கு; 'கம்மென வெழுதரும் பெரும் படை' என்பதூஉங் காண்க. கார்த்திகைத் திங்களின் கார்த்திகை நாளில் இல்லந்தோறும் வரிசையாக விளக்குகளை ஏற்றிவைத்து விழா அயர்தல், சங்கச் செய்யுட்கள் பலவற்றிற் கூறப்பெறுதலின், தமிழ்நாட்டில் பண்டு தொட்டு இவ்வழக்கம் இருந்து வருவதென்பது பெற்றாம்: "அம்ம வாழி தோழி கைம்மிக" என்னும் பாட்டினுள் கார்த்திகை விழாக் கொண்டாடும் முறைமையும், "எல்வளை ஞெகிழச் சாஅய்" என்னும் பாட்டினுள், "பெருவிழா விளக்கம் போலப் பலவுடன், இலையில மலர்ந்த இலவமொடு" என இவ்வுவமையும் இந்நூலுட் பின்னர் வருவதுங் காண்க. எம்மொடு கழிந்தனராயின், கண்ணும் அழுதல் மேவலவாகிப் படுகுவ என எதிர்வு பற்றிக் கூறலின் ஆற்றுவல் என்பது படச் சொல்லிய தென்னும்


1. புறம். ௨௯௨. 2. அகம். ௧௪௧. 3. அகம். ௧௮௫.