பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அகநானூறு - களிற்றியானை நிரை



வினை முடிந்தது; கார்காலமும் தொடங்கிற்று. மாலையிலே பசுக்கள் வீடு திரும்பும் வேளையிலே என் காதலி என் வரவு பார்த்து ஏங்கி நிற்பாள். எனவே, தேரை விரைந்து செலுத்துக, பாகனே! எனக் கூட்டுக.

பண்ணனது பண்பைத் 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’ என்றனன், அவ்வாறே தன் காதலியும் 'தனக்கென வாழாளாய்த் தன் தலைவனுக்கென வாழ்பவள்' என்றற்கு.

55. போதல் செல்லா உயிர்!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை, துறை: புணர்ந்து உடன்போன தலைமகட்கு இரங்கிய தாய், தெருட்டும் அயலிலாட்டியர்க்கு உரைத்தது. சிறப்பு: கரிகாலனோடு, வெண்ணிப் பறந்தலையிலே பொருது புண்பட்டு வடக்கிருந்து உயிர் துறந்த சேரலாதன்.

(தன் மகள் தன் காதலனுடன் போய்விட்டதறிந்து தாய் புலம்புகிறாள். பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் அவளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். 'யான் இன்னமும் உயிரோடு வாழ்கின்றேனே" என, அவள் பெரிதும் உள்ளம் வெதும்புகின்றாள்.)

          காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்,
          ஈந்துகுருகு உருகும் என்றுழ் நீள்இடை,
          உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்,
          விளிமுறை அறியா வேய்கரி கானம்,
          வயக்களிற்று அன்ன காளையொடு என்மகள் 5

          கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே ஒழிந்துயாம்
          ஊதுஉலைக் குருகின் உள்உயிர்த்து, அசைஇ,
          வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
          கண்படை பெறேன், கனவ - ஒண்படைக்
          கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் 10

          பொருதுபுண் நாணிய சேர லாதன்
          அழிகள மருங்கின் வான்வடக் கிருந்தென,
          இன்னா இன்உரை கேட்ட சான்றோர்
          அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
          பெரும்பிறிது ஆகியாங்குப், பிரிந்து இவண் 15

          காதல் வேண்டி, எற்றுறந்து
          போதல் செல்லாஎன் உயிரொடு புலந்தே!

எவ்விடத்தும் காய்ந்து கொண்டே செல்லுகின்ற ஞாயிறானது மலைகளும் வெடிக்குமாறு காய்ந்தது.