பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 111


நிறையத் தின்றது. அதன்பின், கரையிலேயுள்ள காஞ்சிமரத்து நிழலில், ஈரமான தன் உடற் புறத்திலே காஞ்சியின் நுண்தாது சிந்தக் கிடந்து அசையிடும் வாயினை உடையதுமாயிற்று. அதன்பின், கொட்டிலிலே சென்று அது புகுந்தது. அத்தகைய குளிர்ந்த நீர்த்துறைகளைக் கொண்ட ஊரன், நம் தலைவனாகிய அவன்! திண்ணென்ற, தாரினை அணிந்த அவனுடைய மார்பிலே, வதுவைக் காலத்து ஒப்பனையையுடைய பரத்தையரைப் புணர்க்க வேண்டும் என்று, மிக்க பரிவோடும் வருகின்ற பாணனும் வந்தான்.

ஈன்ற அணிமையை உடையதோர் பசுவானது, தெருவிலே தன்னைப் பாய்ந்தமையாற் கலங்கித் தன் யாழினையும் கீழே போட்டுவிட்டவனாக, எம் வீட்டுள்ளும் புகுந்தான்.

அதனைக் கண்டு, என் உடல் புளகிக்க எழுந்த உவகையினை மறைத்துக் கொண்டேன். அவன் எதிரே சென்றேன். 'உங்கள் மனை இந்த மனையன்று; அஃது அப்பரத்தையர் மனையாகும்’ என்றும் கூறினேன். அவன் என்னையும் தன்னையும் நோக்கினான். மயங்கிய நெஞ்சம் உடைய வனானான். என்னைத் தொழுது நின்றான். அதனை நினைக்க நினைக்க எனக்குச் சிரிப்புத்தான் விளைகின்றது, தோழி! -

சொற்பொருள்: 1. நெருதல் - நேற்றைப்பொழுது. 2 மணி - பளிங்கு 4: அடை - இலை. 5. கூம்புதல் - குவிதல். மாந்துதல் - நிறையத் தின்றல். 7. மெல்கிடல் - அசைபோடுதல், 9. வதுவை நாளணி - மணநாளிற்போடும் அழகுக் கோலம்; அது பரத்தையுடன் கூடும் முதல்நாள் என்றலால். 21. புனிற்றா ஈன்ற அணிமையுடைய பசு.

விளக்கம்: "இரும்பு போன்ற கோட்டினையுடைய எருமை, காயம் கலங்க, ஆம்பல் மெல்லடை கிழியக், குவளை மலரை மாந்திக், காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப, மெல்கிடு கவுளதாய்த் தங்கு நிலைக்கட் புகுதரும். இரும்பு போன்ற மார்பினையுடையவரான பரத்தையர் ஊர் முழுதுங் கலங்கத், தான் முன்கூடின பரத்தையரின் தாய்மார் கலங்க, அவர் ஆம்பற் பூப்போலக் குவியக், குவிதல்விட்ட குவளை மலர்போலும் பூப்பெய்து கொள்ளப்பட்ட பரத்தையரை நுகர்ந்து வருகின்ற காலத்து, வழியிலகப்பட்ட சேடியர் முதலாயினாரை நுகர்ந்து, பின்னுஞ் சிலரைக் கூடக் கொடி நாக்கு எறிந்துகொண்டு, நம் மனையிலே தங்குதற்பொருட்டுவருகின்றான்” என்று,தோழிக்கு வாயின் மறுத்ததும் ஆம்.