பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

அகநானூறு -களிற்றியானை நிரை

          நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
          ஆகம் அடைதந் தோளே - வென்வேற்
          களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
          ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
          கடவுள் எழுதிய பாவையின், 15

          மடவது மாண்ட மாஅ யோளே!

வெற்றிதரும் வேலினை உடையவன்; போர் யானைகள் மிகுதியான படையினையும் உடையவன்; பொறையனான சேரன். அவனுடைய கொல்லி மலையானது, விளங்கும் அருவி நீரினையுடைய பக்கமலைகளுடன் அகன்று கிடப்பது. அது அழகுறுமாறு, அதன்கண், அவன் கடவுள் வடிவம் எழுதிக் கொல்லிப் பாவையினை அமைத்தான். அந்தப் பாவை போன்று மடப்பத்தால் சிறப்புற்ற கருமேனி வண்ணத்தள் என் காதலி.

அவள், நீர்க்கரையிலே வளரும் பைஞ்சாய்க் கோரையின் குருத்தினைப் போன்று ஒளிசிறந்து விளங்கும் பற்கள் பொருந்திய சிவந்த வாயினள். மார்பிடத்தே அரும்பி விளங்கும் இளைய முலையினள். பணைத்த தோள்களையுடையவள். கரிய இமைகளை உடையனவும், கருந்தாளினை உடையவுமான குவளையின் மலர்களை இணையாகப் பிணைத்து வைத்தாற் போன்ற, குளிர்ந்த கருங்கண்களையும் உடையவள்.

அவளோடு, பேயும் அறியவியலாத மறைவினை உடைய களவுப் புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். அப் புணர்ச்சியானது ஆரவாரிக்கும் துடியினைப் போலக் கூடலும் பிரிதலுமாக ஊரவரால் அலர் உரைக்கவும் படுவதாயிற்று. அதனால், இதுவரை நாம் மறைந்த மறைப்புடனே, இனியும் சென்று கொண்டிருப்பதும் அருமையாயிற்று. அதனாற் போலும்,

விரைந்தோடும் வெள்ளம் பெருகியிருக்கும் காவிரிப் பேராற்றிலே, நெடுஞ்சுழிகளையுடைய வெள்ளப் பகுதியிலே மூழ்கி மூழ்கிக் குளிப்பவளே போலத், தன்னை நடுக்கும் அலரால் விளைந்த துயரம் தீருமாறு, அவள் என்னை நேற்றுத் தழுவித் தழுவி மகிழ்ந்தனள்! என் மார்பினை விடாது பொருந்தியும் கிடந்தனள்!

சொற்பொருள்: 1.முருந்து-வேரின் மேற்றண்டு.2.நகை-ஒளி, 3. பேயு மறியா மறையமை புணர்ச்சி - பேய்கள் இரவிலே நடமாடுவன; அவையும் அறியாமல் யாம் கூடிய இரவுக்குக் குறியிலே ஏற்பட்ட புணர்ச்சி. அல்லது பேயும் நடமாட்டம் ஒழிந்த நள்ளிரவுப் புணர்ச்சியுமாம். 7. புணர்வு பிரிந்திசைப்ப கூடிய காலத்து அவள்மேனிஅழகுறலாலும், பிரிந்த காலத்து வாடுதலாலும் உரவர் பிரிந்து பிரிந்து அலர் உரைப்பர் என்க.