பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

அகநானூறு - களிற்றியானை நிரை



ஈழத்துப் பூதன் தேவனார் (88)

இவர் ஈழத்திலிருந்து வந்து மதுரையிலே தங்கியிருந்தவர். அதனால், மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் எனவும் குறிப்பிடப் பெறுவர். பசும்பூட் பாண்டியன் இவரால் பாடப் பெற்றவன். "வடபுல வாடைக்குப் பிரிவோர் ம்டவர் வாழி இவ்வுலகத் தானே! என்பன போன்ற செறிவுள்ள தொடர்கள், இவருடைய புலமையைக் காட்டுவன. அகநானூற்றுள் மூன்று பாடல்களும், குறுந்தொகையுள் மூன்று பாடல்களும், நற்றிணையுள் ஒன்றும் இவர் பாடியனவாக உள்ளன. பல்லி சொல்லுவதிலே பலன் கருதும் நம்பிக்கை (அ.க. 88), மூங்கிலிலே குருவி கூடு கட்டியிருப் பது (நற். 366) ஆகியவற்றையும் இவர் பாடல்களாற் காணலாம்.

உமட்டுர்க்கிழார் மகனார் பரங்கொற்றனார் (69)

இவர் பாடியது இந்த ஒரே செய்யுள். இதன்கண், மோரியர் தமிழகத்துப் படையெடுத்து வந்தபோது, மலைச் சாரல்களிலே, தேர்கள் செல்லுவதற்கு இயலாத இடங்களில் பாறைகளைப் பிளந்து தடங்களமைத்த செய்தி கூறப் பெற்றுள்ளது. 'ஆஅய்' வள்ளலின் கானத்துச் சிறப்பையும் இதன்கண் பாடியுள்ளனர். இவர் தந்தையார் பெயர் உமட்டுர்க் கிழார். இவர் உமட்டுர் என்ற ஊரினர். பரங்கொற்றனார் இவரது பெயர். கொற்றனார் என்ற பெயருடையார் பலருள் இவரும் ஒருவர். உமட்டியர் - உமணச் சாதிப் பெண்கள். அதனால், இவ்வூர் நெய்தலைச் சார்ந்ததாயிருக்கலாம். மோகூர்ப் பழையன் மாறனுடன் மோரியர் படை போரிட்டசெய்தியே இவர் குறிப்பதுமாகலாம் 'ஆ அய் அண்டிரனின்' சிறப்பைப் பாடியமையால், அவனுடைய ஆதரவு பெற்றவரும் ஆகலாம்.

உரோடகத்துக் கந்தரத்தனார் (23, 95)

அகத்துள் 3, குறுந்தொகையுள் 1, நற்றிணையுள் 4, ஆக எட்டுப் பாடல்களைப் பாடியவர். செங்கற்பட்டு மாவட்டத்து ஒரகடம் இவரது ஊர் என்பர். 'கடனறி மன்னர் குடை நிழல்போலப், பெருந்தண் ஏன்ற மர நிழல்' என்றும் (நற். 146), 'தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாமறிந்துணர்க' என்றும் (நற். 166) சிறந்த அறநெறிகளைச் சிறப்பாகக் கூறியவர் இவர். கந்தரத்தனார் என்பது இவருடைய பெயர்; சிவனின் பெயர். கந்தரின் அத்தனாகிய பெருமானார் என்க. காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனாரினும், வண்ணப்புறக் கந்தரத் தனாரினும் வேறுபடுத்துக் காட்ட, இவர் உரோடகத்துக் கந்தரத்தனார் எனப் பெற்றனர். இந்நூலுள், தலைவன் காட்டிய அடையாளத்தைச் சுட்டித் தலைவி கலங்குவதும் (23)', 'நம் உணர்ந்து ஆறிய கொள்கை அன்னை (95)' என, அன்னையரின் மனப்பாங்கும் நயமுடன் கூறப்பெற்றுள்ளன.