பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

அகநானூறு -களிற்றியானை நிரை


யாரும் சிறந்த புலவரே. இவர் பாடியவை அகநானூற்றுள் 9ம், குறுந்தொகையுள் ஒன்றும், நற்றிணையுள் 6-ம் ஆகப் பதினாறு பாடல்களாகும். இவர் பாடல்களுள் குறுந்தொகைப்பாடல் 16 மட்டுமே குறிஞ்சி. பிறவெல்லாம் பாலைத் திணைப் பாடல்களே. இவர் பாடல்களுள் உதியன், பொறையன் ஆகிய சேரர்களைப் பாடியிருக்கக் காண்கின்றோம். சிறுவர்கள் நெல்லி வட்டாடும் வழக்கம் இவரால் (நற்.3) குறிக்கப் பெற்றுள்ளது. 'திலகந்தைஇய தேங்கமழ் திருநுதல்' (நற். 62) எனப் பெண்கள் நெற்றிக்குத் திலகமிடும் வழக்கமும் இவராற் பாடப் பெற்றள்ளது. ‘உதியன்’ என்பான் இவராற் சிறப்பிக்கப் பெற்றிருப்பது கொண்டு, ‘வெளியன் வேண்மான் ஆய் எயினன்' நாட்டைச் சேர்ந்தவர் இவர் எனக் கருதலாம். பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதலின் மனைவியார் வெளியன் வேண்மாள் நல்லினியாராவர் என்பதும் நினைக்க. இதனால், இவர் நற்றிணைப் பாடலுள் (14) குறிப்பிடும் உதியனின் போர்ச் செயலும், பெருஞ்சோற்று உதியனையே குறிப்பதாகலாம்.கொல்லிப்பொறையன் (நற்346) கருவூரிலிருந்து ஆண்ட இரும்பொறை மரபினருள் ஒருவனைக் குறித்ததாம்.

எருமை வெளியனார் (73)

இத்துடன், புறநானூற்றுள் 273, 303 பாடல்களையும் பாடியவர் இவர் எருமையூர் நாட்டைச் (மைசூர் நாடு) சேர்ந்தவர். வெளியனார் இவர் பெயர். இவர் மகன் கடலனார். புறநானூற்றுள் குதிரை மறம் துறையில் இவர் பாடிய பாடல்கள் மிக்க நயம் உடையனவாகும். வீரை வெளியனாரினும் வேறுபடுத்திக் காட்ட, இவர் எருமை வெளியனார் எனப் பெற்றனர். 'எருமையூரன் வடுகர் பெருமகன்’ எனக் குறிக்கப் பெறுகின்றான். 'வெருகு இருள் நோக்கியன்ன ஒரு காழ் முத்தம் (அகம். 73) என்ற உவமையின் நயத்தைக் காண்க

எருமை வெளியனார் மகனார் கடல்னார் (72)

அகநானூற்று 73, புறநானூற்று 273,303-வது பாடல்களைப் பாடிய எருமை வெளியனாரின் மகனார் இவர். இவர் பாடியது இந்த ஒரு பாடலே. தலைவன், தலைவி, தோழி ஆகியோருக்கு இடையிலே நிலவுகிற அன்புப் பிணிப்பை இது உணர்த்தும். குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்புசெய் கொல் எனத் தோன்றும். 'நாம நல்லராக்கதிர்பட உமிழ்ந்த மேய்மணி விளக்கு: "வாள் நடந்தன்ன வழக்கருங் கவலை, உள்ளுநர் உட்கும் கல்லடர்ச்சிறுநெறி' என வரும் காட்டியல்புகள் இன்புறத் தக்கன.

ஒக்கூர் மாசாத்தனார் (14)

இவர் பாடியவை அகம் 14, புறம் 284 ஆகியவை. ஒக்கூர் பாண்டி நாட்டுத் திருக்கோட்டியூருக்கு அண்மையிலுள்ள ஒரூர்.