பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

அகநானூறு -களிற்றியானைநிரை


முடங்கிக் கிடந்த சேரலாதன் (30)

இவனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பர். இப் பாடல் நெய்தல் திணையைச் சார்ந்தது. பரதவர்கள் மீன்வளங் கொணரும் செயலை மிகவும் நயமாக இவர் பாடியுள்ளார். 'வண்ணம் எவனோ என்றணிர் செலினே பெருமை என்பது கெடுமோ?’ என்று, தோழி, தலைவனைக் கேட்கும் கேள்வி, நம்மால் என்றுமே மறக்க முடியாததாகும்.

வண்ணப்புறக் கந்தரத்தனார் (49)

வண்ணப்புறக் கல்லாடனார் எனவும் வழங்கப் பெறுவர். இவர் பாடியவை அகநானூற்றுள் இந்தப் பாடலும், நற்றிணையுள் 71-வது பாடலும் ஆகும். இரண்டும் பாலைத் திணை பாடல்கள். நற்றிணைப் பாடலுள், வண்ணப்புறவின் செங்காற் சேவல் என்று இவர் கூறிய உவமை கொண்டு, இப்பெயர் பெற்றனர் எனக் கருதலாம். சுந்தரத்தனார், காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் ஆகியோரினும் வேறுபடுத்த, இவருக்கு இவ்வடைமொழியிட்டு வழங்கினர் போலும். தாயின் மனநிலை இதன்கண் நன்றாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. ‘செல்வமகள் அவள்' என ஒவ்வொரு சொல்லும் சுட்டிக் காட்டுவதறிந்து மகிழலாம்.

விற்றூற்று மூதெயினனார் (37)

அகத்துள் 3, குறுந்தொகையுள் 1, ஆக 4 பாடல்கள் இவர் பாடியவை. இவர் வேடர் மரபினர். 'விற்றூற்று' என்பது ஊரின் பெயர். அகநானூற்று 136-வது பாடலுள் இவர் திருமண நாளினை மிகவும் நயம்பட வருணித்துள்ளார். இவ்வூரவராக, 'விற்றூற்று' வண்ணக்கண் தத்தனார் என்றொரு புலவரும் உள்ளனர். கள்ளைக் குடிப்பதைக் 'கயம் மண்டு பகட்டின் பருகி’ என்று எள்ளலுடன் உவமிக்கும் நயம் காண்க. வேனில் ‘காமர் வேனில் ஆகிய சிறப்பும் இப்பாடலுள் காணலாம்.

வெள்ளாடியனார் (29)

இப்பாடல் ஒன்றே இவர் பாடியதாக உள்ளது. இதன் கண் 'கிடந்து உயிர் மறுகுவதாயினும் இடம்படின் வீழ்களிறு மிசையாப் புலி’ என்று புலியினது இயல்பை இவர் கூறுகின்றார். 'எஃகுற்று இருவேறாகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போல’ எனக் கண்களுக்கு இவர் கூறும் உவமை நயமுடையதாகும். மதுரை மாவட்டத்துள் வெள்ளோடு என்னும் ஊர் ஒன்று உளது. அவ்வூரவராக இவர் இருந்திருக்கவும் கூடும். அதனால், பெயர் இங்ஙனம் அமைத்திருக்கலாம் என்பதும் கருதுதற்குரியது. 'உடம்பு ஆண்டு ஒழிந்தனம் அல்லதை, மடங்கெழு நெஞ்சம் நின்னுழையதுவே' என்னும் காதற்பாசத்து மிகுதியையும் இச்செய்யுளுட் காண்க.