பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 123


வல்லே வருவர் போலும்-வென்வேல்
இலைநிறம் பெயர ஒச்சி, மாற்றோர்
மலைமருள் யானை மண்டுஅமர் ஒழித்த 15

கழற்கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற்கயம் தழிஇய நெடுங்கால் மாவின்
தளிர்ஏர் ஆகம் தகைபெற முகைந்த
அணங்குடை வனமுலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. 20


தோழி! காட்சிக்கு இனியவாக மூங்கில்கள் செறிந்திருக்கின்ற பக்கமலைகளிலே, அவ்விடத்துச் சுரபுன்னையின் உச்சியெல்லாம் வாடிப் போகும்படியாக, ஞாயிற்றின் கதிர்கள் சினத்தைப் பயின்றனவாக எரித்துக் கொண்டிருக்கும். பெரியகற்கள் விளங்கும் அத்தகைய காட்டுவழியிலே, பசுமையான பாகற்கொடியிலேயுள்ள சிவந்த பாகற்பழங்களைத்தின்பதற்கு விரும்பிய, நிறைசூல் கொண்ட காட்டுமயிற் பெடையானது, அயிரியாற்றின் அடைகரையிலேயுள்ள ஊதுகொம்பினைப்போல, ஒலியுடன் அகவிக்கொண்டிருக்கும். அத்தகைய சுரநெறியினையும் கடந்துசென்றவரான நம் தலைவர், குறித்த பருவங் கடந்து போகக் காலம் நீட்டித்தனரேனும் விரைவிலே வந்துவிடுவார்.

சிறுத்த கண்களையுடைய பெரிய பிடியானையின் பெரிய துதிக்கையினைப் போல விளங்குவதும், ஒருங்கே சேர்த்து முடித்ததும்,நெய் பூசப்பெற்று நறுமணம் உடையதாயிருப்பதும், ஐவகையாக முடித்தற்கு உரியதுமான நின்னுடைய கூந்தலினிடத்தே, நறுமணமலர்களைப் பெய்தலையும் அவர் நினைப்பர்.

தன் வெற்றிவேலின் முனைநிறம் மாறுபட்டுச் சிவப்பு நிறம் அடையுமாறு, அதனை உயர்த்து, மண்டிவரும்பகைப் படைகளின் போர் யானைகளை அழித்துப் போரினை வென்றவன் பண்ணன். வீரக்கழல் விளங்கும் காலினனான அவனுக்கு உரிய, காவிரியின் வடகரையிலேயுள்ள குளிர்ந்த குளத்தினை அடுத்திருக்கின்ற, நெடிய அடிமரத்தினை உடைய மாவின் தளிரைப் போன்றதாக, நினது மார்பு வனப்புடன் காணப்படும். அதன்பால், தகைமைபெற அரும்பியிருக்கும், வருத்தும் இயல்பினை உடையவான அழகிய முலைகளிலே அவர் பிரிவினாற் பரந்திருக்கும் தேமல்கள் மறையுமாறு தொய்யில் எழுதுதலையும் அவர் நினைப்பார். ஆதலினாலே விரைந்து வந்து விடுவார்.